2025 மே 15, வியாழக்கிழமை

கரைபுரண்டு ஓடும் காவிரி அரசியல்

Thipaan   / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்பார்த்தது நடந்து விட்டது. நீண்ட காலமாக அண்டை மாநிலமான கர்நாடகாவுடன் இருந்த நட்புறவு, காவிரி நதி நீர்ப் பிரச்சினையால் மீண்டும் பிரச்சினைக்குள்ளாகி இருக்கிறது. தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடப்படுவதை எதிர்த்து, கர்நாடகாவில் செப்டெம்பர் ஒன்பதாம் திகதி ஹர்த்தால் நடைபெற்றுள்ளது.

தமிழகத்திலிருந்து எந்தப் போக்குவரத்தும் கர்நாடக மாநிலத்துக்குள் செல்லவில்லை. கர்நாடகாவிலிருந்து எந்தப் பேருந்தும் தமிழகத்துக்குள் வரவில்லை. கர்நாடக மாநில எல்லைக்குள் தென்பட்ட தமிழகப் பதிவு எண் கொண்ட சரக்கு லொரிகள் கல் வீசித் தாக்கப்பட்டுள்ளன. கொடும்பாவி எரிப்பு, தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்காதே என்ற கோஷங்கள் முழங்க, கர்நாடக - தமிழக உறவில் திடீர் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

செப்டெம்பர் ஐந்தாம் திகதி இந்தியாவின் உச்சநீதிமன்றம் ஓர் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது. 'பத்து நாளைக்கு தினமும் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வீதம் கர்நாடக திறந்து விட வேண்டும். வழக்கு மறு விசாரணைக்கு செப்டெம்பர் 16 ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படும்' என்று தமிழக அரசாங்கம் தாக்கல் செய்த மனு மீது அந்த உத்தரவை பிறப்பித்தது. கர்நாடக தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அவர்களின் கருத்தைக் கேட்டு இறுதியில் 'உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீர் திறந்து விடுவது' என்று முடிவு எடுத்தார் அம்மாநில முதலமைச்சர் சீத்தாரமைய்யா. செப்டெம்பர் ஏழாம் திகதி திறந்து விட்ட காவிரி நீர் ஒன்பதாம் திகதி தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணையை வந்து சேர்ந்தது.

மேட்டூர் அணைக்கு நீர் வரும் முன்பே தமிழக விவசாயிகளிடமிருந்து 'விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை உடனடியாக மேட்டூரிலிருந்து தமிழக அரசாங்கம் திறந்து விட வேண்டும்' என்ற கோரிக்கைகள் கிளம்பத் தொடங்கி விட்டன. 'காவிரியில் தண்ணீர் அதிகம் திறக்க வேண்டும்' என்று கர்நாடக மாநில அரசாங்கத்தை வலியுறுத்தியும் 'மாநிலங்களுக்கு இடையில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும்' என்று கோரியும் திருச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் கழுத்தளவுக்கு மண்ணிற்குள் புதைந்து நின்று போராடினார்கள்.

காவிரி நீர் பிரச்சினை இரு மாநிலத்துக்கு இடையில் இப்படி புகைந்து, போராட்டமாக வெடித்துக் கொண்டிருக்கின்ற பரபரப்பான சூழ்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி செப்டெம்பர் 12 ஆம் திகதி டெல்லியில் காவிரி மேற்பார்வைக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த மேற்பார்வைக்குழு என்பது தமிழகம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் உறுப்பினர்களாகவும் இந்திய அரசாங்கத்தின் நீர்வளம் மற்றும் பாசனத்துறை செயலாளர் தலைவராகவும் இருக்கிறார். இவர்கள் தவிர மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரும், அந்த ஆணையகத்தின் தலைமைப் பொறியியளாளரும் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த மேற்பார்வைக்குழு மொத்தம் ஏழு உறுப்பினர்கள் குழு என்பதால், இந்தக் குழுவின் முன்பு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்களின் தண்ணீர் தேவையை எடுத்து வைக்கும். அதே சமயத்தில் கர்நாடக மாநிலம் தங்களால் எவ்வளவு தண்ணீர் தர முடியும் என்ற  விவரத்தை தாக்கல் செய்யும். அனைத்து மாநிலங்களின் கருத்துக்களையும் அலசி ஆராய்ந்து இந்த மேற்பார்வைக்குழு காவிரியில் எத்தனை டி.எம்.சி தண்ணீர் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை அல்லது உத்தரவை பிறப்பிக்கும். அடுத்து நடக்கும் உச்சநீதிமன்ற விசாரணை, மேற்பார்வைக்குழு உத்தரவு போன்றவை ஒரு புறமிருக்க, தண்ணீர் அரசியல் காவிரி விவகாரத்தில் கரை புரண்டு ஓடுகிறது.

காவிரி இறுதித் தீர்ப்பை அரசிதழில் 2013 இல் வெளியிட்ட போதே உச்சநீதிமன்றம் இந்த மேற்பார்வைக் குழுவை அமைத்து விட்டது. காவிரி இறுதித் தீர்ப்பின் படி, 'காவிரி மேலாண்மை வாரியம்' அமைக்கும் வரை இந்த காவிரி மேற்பார்வைக் குழு தற்காலிக அமைப்பாக விளங்கும். நீர் பகிர்வு குறித்த அனைத்து விடயங்களையும் இந்தக் குழுவிடம் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் முறையிடலாம். காவிரி இறுதித் தீர்ப்பில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவினை பாதிக்காத வகையில் இந்த மேற்பார்வைக்குழு முடிவு எடுக்கலாம் என்று தெளிவாகக் கூறியிருக்கிறது.

தமிழகத்தின் சார்பில் கடந்த மூன்று மாதங்களாகவே 'எங்களுக்குரிய தண்ணீரை திறந்து விடுங்கள்' என்று கர்நாடக மாநிலத்துக்கு கோரிக்கை வைத்துள்ளது. மத்திய அரசாங்கத்துக்கும் கோரிக்கை வைத்துள்ளது. முதலமைச்சரே பல கடிதங்களை பிரதமருக்கு எழுதியிருக்கிறார். ஜூலையிலிருந்து ஓகஸ்ட் வரை தமிழகத்துக்கு காவிரி இறுதித் தீரப்பின்படி கர்நாடக மாநிலம் தர வேண்டிய தண்ணீர் 94 டி.எம்.சி என்பதால் 60 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் மேற்பார்வைக் குழுவை சுட்டிக்காட்டும் வரை தமிழகத்தின் சார்பிலும் இந்த குழுவை கூட்டச் சொல்லி மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. தமிழக அரசாங்கம் அடிக்கடி கடிதம் எழுதியும் அந்த கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் மத்திய அரசாங்கம் அந்தக் குழுவை கூட்ட உத்தரவு போடவில்லை. கர்நாடக மாநிலம் கூட 'எங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கிறது. இந்தக் குழுவைக் கூட்டுங்கள். முடிவு எடுக்க வேண்டும்' என்று கூறவில்லை. இப்படி தமிழகம், கர்நாடகம், மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பேருமே காவிரி மேற்பார்வைக் குழுவை புறக்கணித்தன. அதில்தான் அரசியல் இருக்கிறது.

பா.ஜ.கவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள மாநிலம் கர்நாடகம். அதனால் மத்திய அரசாங்கத்தின் உத்தரவின் கீழ் காவிரி மேற்பார்வைக்குழு கூடி, அந்தக் குழு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக மாநிலத்துக்கு உத்தரவு போட்டால் தேர்தல் ரீதியாக பா.ஜ.கவுக்கு அம்மாநிலத்தில் பெரிய  பாதிப்பு ஏற்படும். 'விவசாயிகளின் துரோகி' என்ற பட்டத்தை சுமக்க வேண்டியிருக்கும். அதனால் மத்திய அரரசாங்கத்துடன் அமைதி காத்தது, கர்நாடக மாநிலத்தில் ஆளும் கட்சி காங்கிரஸ். இக்குழுவை கூட்டச் சொன்னால் அக்கட்சிக்கும் தலைவலி. ஆகவே பா.ஜ.கவும் காங்கிரஸும் தேர்தல் அரசியலை மனதில் வைத்து காவிரி அரசியல் செய்தார்கள். உச்சநீதிமன்றமே அமைத்த மேற்பார்வைக்குழுவைக் கூட்டாமல் இருந்தார்கள். அதேநேரத்தில் தமிழக அரசாங்கம் இந்த கமிட்டியைக் கூட்டுங்கள் என்று கோரிக்கை விடுத்து மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கத்துடன் மோத வேண்டாம் என்று தமிழக அரசாங்கம் ஒதுங்கி நின்றது. இப்படி எல்லோருமே தங்களுக்குள் உள்ள அரசியல் நிர்பந்தத்தால் 'காவிரி' பிரச்சினையை உச்சநீதிமன்றத்திற்கே  மீண்டும் கொண்டு போய் விட்டார்கள். அதனால் அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டிய பிரச்சினையில் உச்சநீதிமன்றமே தலையிட்டு தீர்ப்பு சொல்ல வேண்டிய நிலையை உருவாக்கினார்கள்.

இந்த முறை மட்டுமல்ல - பல நேரங்களில் அரசியல் கட்சிகளுக்கு எப்போதெல்லாம் தர்மசங்கடம் வருகிறதோ அப்போதெல்லாம் காவிரிப் பிரச்சினையை உச்சநீதிமன்றத்திடம் விட்டு விட்டு ஒதுங்கி நிற்கின்றன. அதனால் சுமூகமாக அண்டை மாநிலங்களுக்குள் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் எல்லாவற்றையுமே இந்த மூன்று மாநிலங்களுமே உச்சநீதிமன்றம் மூலமே தீர்த்துக் கொள்ள நினைக்கின்றன. அந்த வகையில் 'தண்ணீர் திறந்து விடுங்கள்' என்று இப்போது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றுகின்ற நேரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையில் ஏகப்பட்ட பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

வருகின்ற செப்டெம்பர் 16 ஆம் திகதி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் செப்டம்பர் 12 ஆம் திகதி காவிரி மேற்பார்வைக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு உச்சநீதிமன்றத்திடம் தெரிவிக்கப்படும். அதன்  பிறகு காவிரி அரசியலில் என்னவெல்லாம் அரங்கேரப் போகிறது என்பது பற்றிய பரபரப்பு காவிரி நீரைப் பகிர்ந்து கொள்ளும் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களிலும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக கர்நாடகா, தமிழகத்திடம் அதிகமாகவே தென்படுகிறது. நதி நீர் பிரச்சினையில் கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களையும் நம்பி தமிழகம் இருக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. ஆனால் மத்திய அரசாங்கமோ தமிழகத்தின் உரிமைகளைக் காப்பாற்ற முன் வர மறுக்கிறது என்ற எண்ணம் முன்பு காங்கிரஸ் மீது ஏற்பட்டது போல், இப்போது வேகமாக பாரதிய ஜனதா கட்சி மீது ஏற்பட்டிருக்கிறது. ஆனால் திருவாளர் விவசாயிகளோ நதிநீர் இணைப்பு ஒன்றே தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .