Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மப்றூக்
அரசியலை உணர்வுபூர்வமாக அணுகும் வாக்காளர்களைத்தான் அரசியல்வாதிகளில் அதிகமானோர் விரும்புகின்றனர். அறிவார்ந்த ரீதியில் அரசியலை விளங்கி வைத்துள்ள வாக்காளர்கள் ஆபத்தானவர்கள் என்பது கணிசமான அரசியல்வாதிகளின் எண்ணமாகும். ஆயுதப் போராட்ட இயங்கங்களின் பெரும்பாலான தலைமைகளும் இவ்வாறான மனநிலையில்தான் இருந்தன. இயக்க உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் இவ்வாறுதான் கட்டமைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர் சமூகம் அரசியல் மயப்படுத்தப்பட்டதைப் போல், முஸ்லிம்கள் இன்னும் அரசியல் மயப்படவில்லை. தமிழர்கள் தமது அரசியல் வரலாற்றினை அறிந்து வைத்துள்ள அளவுக்கு, முஸ்லிம்களுக்கு அவர்களின் அரசியல் வரலாறு தெரியாது என்பது மிகவும் கசப்பான உண்மையாகும்.
ஆனால், முஸ்லிம் சமூகத்தின் இந்த நிலைவரம் குறித்து, அவர்களின் அரசியல் கட்சிகளோ, தலைவர்களோ இதுவரை அலட்டிக் கொண்டதாகக் தெரியவில்லை. மக்கள் மந்தைகளாக இருக்கும் வரைதான் தலைவர்களுக்குப் பாதுகாப்பு என்கின்ற புளித்துப் போன நம்பிக்கை இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனாலும், முஸ்லிம் சமூகத்தை அரசியல் மயப்படுத்தும் காத்திரமான ஒரு சில நடவடிக்கைகள் ஆங்காங்கே சமூக அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினையும் குறிப்பிட்டாக வேண்டும். ஆனால், அவை போதுமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றவையாக இல்லை.
இலங்கையில் புதிய அரசியலமைப்பு ஒன்றை ஏற்படுத்துவற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. புதிய அரசியலமைப்பு தொடர்பான மக்கள் கருத்தறியும் நடவடிக்கைகள், நாடு முழுவதும் இடம்பெற்று வருகின்றன. ஆனால், இது தொடர்பில் முஸ்லிம் மக்களை போதுமான வகையில் வழிநடத்தும் செயற்பாடுகளில், எந்தவொரு முஸ்லிம் அரசியல் கட்சியும் செயற்பாட்டு ரீதியாக களமிறங்கவில்லை.
தேர்தல்லொன்று வரும்போது, முஸ்லிம் அரசியல் கட்சிகள் காட்டும் அக்கறையில் ஆயிரத்தில் ஒரு பங்கினையேனும், புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் அந்தக் கட்சிகள் காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அங்கத்தவர்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் என்று மக்கள் பிரதிநிதிகளுக்குக் கூட, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில், எவ்வித அறிவூட்டல் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என்கிற விவகாரமானது, சமூக ஊடகங்களில் ஒரு விமர்சனமாக முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது.
வழமைபோல், முஸ்லிம் கட்சிகளும் அதன் தலைமைகளும் இந்த விமர்சனங்களையும், கண்டும் காணாமல் இருந்து விடக்கூடாது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பது, சிறுபான்மை சமூகத்தினருக்குக் கிடைத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பாகும். இதனை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ளத் தவறும் சமூகங்கள் அரசியல் ரீதியாக நஷ்டமடைந்து விடும்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தினை அறிவுறுத்தும் செயற்பாடுகள் நாடு தழுவிய ரீதியில் பரவலாகவும், வேகமாகவும் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதனை, முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மை அங்கிகாரத்தினைப் பெற்றுள்ள அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கையிலெடுத்துச் செயற்படுத்துவதுதான் மிகவும் பொருத்தமாக அமையும்.
நாட்டின் தாய்ச் சட்டம் என்று கூறப்படுகிற, நடைமுறை அரசியலமைப்புப் பற்றிய ஆகக்குறைந்தளவு அறிவுகூட, முஸ்லிம் மக்களில் அதிகமானோரிடம் இல்லை. தொண்டர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் சாப்பாட்டுப் பொதிகளையும், கட்சிச் சின்னம் பதிக்கப்பட்ட தொப்பிகள், ரி - சேட்களையும் இலவசமாக வழங்குகின்ற முஸ்லிம் அரசியல் கட்சிகள், இவற்றுக்கு மாற்றீடாக - நடைமுறை அரசியலமைப்பின் அச்சுப் பிரதியொன்றினை அவர்களுக்கு வழங்கலாமா என்று சும்மாவேனும் சிந்தித்தது கிடையாது. அரசியலமைப்பு அச்சிடப்பட்ட புத்தகமொன்றின் விலை வெறும் 390 ரூபாய் மட்டும்தான்.
ஒவ்வொரு வீட்டிலும் அவர்களின் மொழியில் அரசியலமைப்பின் அச்சுப் பிரதியொன்று இருக்க வேண்டும். அதற்கான வழி வகைகளை அரசியல் கட்சிகள் மேற்கொள்தல் அவசியாகும். ஒவ்வொரு பிரதேசத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அறிவுபூர்வமாக அரசியலைக் கற்றுக் கொடுக்கக் கூடிய பயிற்சிப் பட்டறைகளை நடத்துதல் அவசியாகும். ஒவ்வொரு சமூகத்திலுமுள்ள பிரதான அரசியல் கட்சிகள் - இதற்காக முன்னின்று உழைக்க வேண்டும்.
சுதந்திர தினத்தில் தேசிய கீதத்தை தமிழில் பாடியதால், தமிழ் பேசும் சமூகத்துக்கான உரிமைகள் கிடைக்கத் தொடங்கி விட்டதாக, நம்மில் பாவப்பட்ட ஒரு கூட்டம் நம்பிக் கொண்டிருக்கிறது. இது, அரசியலை உணர்வுபூர்வமாக விளங்கி வைத்துள்ளவர்களின் பலவீனமாகும். அரசியலை அறிவார்ந்த ரீதியில் விளக்கி வைத்துள்ளவர்கள் இதனை வேறொரு கோணத்தில் நின்று யோசிக்கத் தலைப்படுகின்றனர்.
முஸ்லிம் சமூகம் - அறிவு ரீதியாக அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்குமாயின், புதிய அரசியலமைப்பு தொடர்பில் காத்திரம் நிறைந்த ஏராளமான கருத்துக்களைப் பெறுவதற்கு வாய்ப்பாக இருந்திருக்கும். ஆனால், உத்தேச அரசியலமைப்பு தொடர்பான மக்கள் கருத்தறியும் விடயம் குறித்து, முஸ்லிம் சமூகத்துக்குள் பெரிதாக அக்கறைகள் எவையும் இருப்பதாகவும் தெரியவில்லை. இவை ஒருபுறமிருக்க, முஸ்லிம் கட்சிகள் தங்களுக்குள்ளேயே இவை தொடர்பில் இன்னும் காத்திரமான நடவடிக்கைகள் எவற்றினையும் ஆரம்பித்ததாகவும் அறியக் கிடைக்கவில்லை. முஸ்லிம் சமூகத்துக்குள் இருக்கின்ற புத்தி ஜீவிகளை ஒன்றிணைத்து, உத்தேச அரசியலமைப்பு தொடர்பான யோசனைகளை வரைவதற்கான நடவடிக்கைகள் எவற்றினையும் முஸ்லிம் கட்சிகள் இதுவரை தொடங்கியதாகத் தெரியவுமில்லை.
இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை தொடர்பில், முஸ்லிம்கள் சார்பாக முன்வைக்கப்படக்கூடிய தீர்வுப் பொதிகள் எதனையும், இதுவரை எந்வொரு முஸ்லிம் கட்சிகளும் ஆவண ரீதியாக உருவாக்கி இருக்கவில்லை என்பது இன்னுமொரு கசப்பான உண்மையாகும். 'தமிழர் தரப்புக்கு என்ன கொடுக்கிறீர்களோ அதுபோல் எங்களுக்கும் தாருங்கள்' என்பதற்கு ஒப்பான கோசங்கள்தான் முஸ்லிம் கட்சிகளிடம் இன்னமும் உள்ளன.
இவ்வாறானதொரு இலட்சணத்தில், புதிய அரசியலமைப்புத் தொடர்பில் முஸ்லிம் கட்சிகள் எதைத்தான் செய்து விடக்கூடும் என்கிற அவநம்பிக்கைகள் பரவலாக உள்ளன. இந்த அவநம்பிக்கைகளில் நியாயங்கள் இல்லாமலுமில்லை.
முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்தவரையில், முஸ்லிம் காங்கிரஸுக்குள் கணிசமான சட்டத்தரணிகளும், சட்ட முதுமானிகளும் உள்ளனர். மு.காங்கிரஸ் தலைவரே ஒரு சட்ட முதுமானியாவார். அந்தக் கட்சியின் பிரதிச் செயலாளர் நிஸாம் காரியப்பர் மற்றுமொரு சட்ட முதுமானி. கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் அரசியல் சட்ட நுணுக்கங்களில் புலமை பெற்ற ஒரு சட்டத்தரணியாவார். இப்படி நீண்ட பட்டியலொன்றினை எழுத முடியும். எனவே, தீர்வுத் திட்டப் பொதியொன்றினையோ அல்லது உத்தேச அரசியலமைப்புத் தொடர்பான யோசனைகளையோ உருவாக்குவதென்பது மு.காங்சிஸுக்கு கடினமானதொரு காரியமாக இருக்கப் போவதில்லை.
இந்த நிலையில், புதிய அரசியலமைப்புத் தொடர்பான யோசனைகளை உருவாக்கும் முயற்சிகளை, கட்சி அரசியல் சார்ந்ததொரு விடயமாக குறுக்கி விடக்கூடாது என்பதிலும் அக்கறை செலுத்துதல் வேண்டும். இதில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் கவனமாகவும், பெருமனதோடும் இருந்து செயற்படுதல் வேண்டும். இந்த விடயத்தில் எந்தக் கட்சி 'ஸ்கோர்' பெறுவது என்பது முக்கியமல்ல. முஸ்லிம் சமூகத்துக்கு அதிகபட்ச நன்மைகள் கிடைக்க வேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருக்க வேண்டும்.
ஆனால், மேற்சொன்ன வகையில் பெருமனதோடு செயற்படுவதற்கான உள விசாலமும், பக்குவமும் முஸ்லிம் கட்சிகளிடம் இருக்கின்றனவா என்பது சந்தேகம்தான். கிடைக்கின்ற இடைவெளியில் கடா வெட்டுவதற்குத்தான் முஸ்லிம் கட்சிகள் காத்திருக்கின்றன. அவ்வாறானதொரு சந்தர்ப்பமாக, புதிய அரசியலமைப்பு விவகாரத்தினையும் முஸ்லிம் கட்சிகள் பயன்படுத்தி விடுமோ என்கிற பயம், முஸ்லிம் சமூகத்திலுள்ள புத்திஜீவிகளிடம் உள்ளது.
இன்னொருபுறம், கடந்த வாரக் கட்டுரையில் நமது பேசுபொருளாக இருந்த முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவும், இந்த விடயத்தில் அவசியமாக உள்ளது. புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கலந்துரையாடல்களை நிகழ்த்துவதன் மூலம், பொதுவான முடிவுகள் சிலவற்றினை எட்ட முடியும். அந்த முடிவுகள், ஒன்றினைந்த முஸ்லிம் கட்சிகளின் முடிவாகவே பார்க்கப்படுமாகையினால், தனித்து விளையாடும் - கட்சி அரசியல் இங்கு இல்லாமல் போய்விடும்.
எனவே, தேர்தல் கூட்டுக்களையும் சுயநல அரசியலயும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் முஸ்லிம் கட்சிகளின் கூட்டிணைவுகளுக்கு அப்பால், புதிய அரசியலமைப்பு தொடர்பான யோசனைகளை கண்டடையும் பொருட்டு, முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற அவா, முஸ்லிம் சமூகத்துக்குள் உள்ளது. இது குறித்து, முஸ்லிம் அரசியல் கட்சிகள் உடனடியாகக் கவனம் செலுத்துதல் வேண்டும்.
இதற்குள் இன்னும் சில சந்தேகங்களும் இங்கு உள்ளன. முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமது சொந்த விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்தும் பொருட்டு, புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் முஸ்லிம் சமூகத்துக்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தும் சில விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்ளக் கூடும் என்கிற பேச்சுக்களும் உள்ளன. இவை வெறும் அனுமானங்கள் அல்ல. கடந்த காலங்களில் இவ்வாறான விட்டுக்கொடுப்புகளை முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் செய்திருக்கின்றார்கள். ஆனால், புதிய அரசியலமைப்பு விடயத்தில் இந்த விளையாட்டுக்கள் மேற்கொள்ளப்படுமாயின், ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் துரோகிகளாகவே குறித்த முஸ்லிம் கட்சித் தலைவர்கள் வரலாறு நெடுகிலும் பார்க்கப்படுவார்கள் என்பது மட்டும் உறுதியாகும்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொதுமக்களின் கருத்தறியும் குழுவினர் அண்மையில் வவுனியாவில் கூடினார்கள். இதன்போது தமிழ் மக்கள் காட்டிய ஆர்வமும் அக்கறையும் சிலாகித்துப் பேசப்பட்டன. இலங்கையின் தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தின் உருவத்தினை அகற்ற வேண்டும் என்கிற யோசனையொன்றினை பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் சிலர் முன்வைத்து விவாதித்தனர் என்பதை, ஆங்கில ஊடகங்களும் முக்கியத்துவமளித்து செய்தியாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால், முஸ்லிம் சமூகத்திலுள்ள பெண்கள் அமைப்புக்கள், குறிப்பாக, வடக்கு, கிழக்கு பகுதியிலுள்ள அமைப்புக்கள், புதிய அரசியலமைப்பு தொடர்பில் இவ்வாறான அக்கறைகளைக் கொண்டிருக்குமா என்பது சந்தேகம்தான். இத்தனைக்கும், அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் ஆகக்குறைந்தது 25 சதவீதம் இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கது. அரசியலில் 25 சதவீதமான பெண்கள் பிரதிநிதித்துவம் எனும் விடயத்தை, முஸ்லிம் அரசியல் கட்சிகள் எவ்வாறு முகம் கொள்ளப் போகின்றன என்பது இன்னுமொரு பிரச்சினையாகும். அது குறித்து வேறொரு கட்டுரையில் பேச வேண்டியுள்ளது.
இலங்கை முஸ்லிம்கள், அறிவு ரீதியாக அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தால், மேலே பேசிய சந்தேகங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் அந்த சமூகம் முகம் கொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்பதை மீளவும் இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது.
மக்களை அரசியலில் உணர்வுபூர்வமானவர்களாக வைத்திருக்க நினைத்ததன், வினையினை, முஸ்லிம் சமூகம் இப்போது பாரதூரமாக அனுபவிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த அனுபவத்திலிருந்தாவது ஒரு பாடத்தினைக் கற்றுக் கொள்வதற்கு முஸ்லிம் சமூகம் தயாராக வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago