2025 ஒக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை

குடியேற்றத் திட்டங்களின் பலாபலன்கள்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 24 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ

1966ஆம் ஆண்டு நீர்ப்பாசனத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய நாட்டிற்கு வருகை தந்த உலக வங்கி மற்றும் உலக உணவு நிறுவகம் ஆகியன இணைந்த ஆய்வுக் குழுவானது,  “புதிய பெரிய மூலதன மேம்பாட்டுப் பணிகளை நிர்மாணித்தல் மற்றும் புதிய நிலங்களைப் பயன்பாட்டுக்குத் தயார்ப்படுத்துவதற்குப் பதிலாக தற்போதுள்ள நீர்ப்பாசனத் திட்டங்களை மறுசீரமைக்க வடிவமைக்கப்பட்ட நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்” என்று பரிந்துரைத்தது.

அதன்படி, நீர்ப்பாசன “மறுசீரமைப்புத் திட்டம்” மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அக்குழு முன்மொழிந்தது. சிறிய துணை நதிகளுடன் கூடிய பிரதான கால்வாய்களின் குறுக்கு வெட்டுகளில் கசிவுப் பாதைகள் மற்றும் கரையோர வாய்க்கால்களை அமைப்பதன் மூலம் பாசன நீரைக் கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள முறைகளை இது வலியுறுத்தியது.

நீர் விநியோகத்தை மேம்படுத்துவதற்காக நிரம்பி வழியும் வடிகால்கள் கட்டுதல் மற்றும் விநியோக கால்வாயிலிருந்து சிறிது தொலைவில் உள்ள பகுதிகளை அடைய, பண்ணைகளின் தொகுதிகளுக்கு விவசாய நீர் திருப்புமுனைகளை உருவாக்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள வயல்களில் கால்வாய்களைத் தோண்டுதல் அல்லது சுத்தம் செய்தல் ஆகிய இந்தப் பரிந்துரைகளின் பகுதியாக இருந்தன.

நிலத்தின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக, 1966-70ஆம் ஆண்டு விவசாய அபிவிருத்தித் திட்டங்களில் பரிந்துரைக்கப்பட்ட உள்ளீடுகளின் தொகுப்பை இந்த முன்மொழிவுத் திட்டம் நம்பியிருந்தது.

நீர்ப்பாசன நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான இத்தகைய திட்டம் நீண்ட காலமாகவே தேவைப்பட்ட ஆனால், இல்லாத ஒன்றாக இருந்தது. கொலனித்துவ (குடியேற்ற) திட்டங்களில் இதுவரை பயனுள்ள நீர் மேலாண்மை இல்லை.

கொலனித்துவ விவசாயிகள் தேவையானதை விட எட்டு மடங்கு அதிக தண்ணீரைப் பயன்படுத்துவதற்குப் பெயர் பெற்றவர்களாவர். மேலும் விவசாயம் செய்யப்பட்ட வறண்ட மண்டலப் பகுதிகளில் சிறந்த நீர் மேலாண்மை மூலம் உற்பத்தியை இரட்டிப்பாக்க முடியும்.

1963-64ஆம் ஆண்டு மகா காலப் பயிரச்செய்கையின் போது, பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் 75,000 ஏக்கர் அல்லது 20% நிலத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவில்லை.

1967-68 ஆம் ஆண்டு மகா காலப் பயிர்ச்செய்கையின் போது, 68,000 ஏக்கர் அல்லது அத்தகைய நிலத்தில் 16.5% பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவில்லை. 1968ஆம் ஆண்டு யால காலப் பயிர்ச்செய்கையின் போது, இந்த பரப்பளவு 176,000 ஏக்கர் அல்லது பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் மொத்த பரப்பளவில் 42% ஆகும்.

(உண்மையில் பெரிய, சிறு மற்றும் மானாவாரிப் பகுதிகளுக்கான பயிர்ச்செய்கை செய்யப்படாத மொத்தப் பரப்பளவு 1967-68ஆம் ஆண்டில் 202,000 ஏக்கர் ஆகும்). இவ்வளவு பெரிய அளவிலான நிலங்கள் பயிரிடப்படாததற்கு மிகவும் பொதுவான காரணம் தண்ணீர் பற்றாக்குறைதான். 

உண்மையில், வருடத்தின் அந்த பகுதியில் தண்ணீர் கிடைக்கும் போது அதை நிர்வகிக்காததே தண்ணீர் பற்றாக்குறைக்கு உண்மையான காரணம்.
இலங்கையின் உற்பத்தித்திறனைப் பொறுத்தவரை, கொலனித்துவ திட்டங்களிலிருந்து கிடைக்கும் வருமானம், அதிக மூலதன முதலீடுகள் செய்யப்பட்டதற்கு ஏற்ப ஒருபோதும் இருந்ததில்லை.

இருப்பினும், நீர்ப்பாசனத்தின் கீழ் உள்ள இந்த பகுதிகள் உற்பத்தித்திறனில் விரைவான மற்றும் நிலையான அதிகரிப்புக்கான ஆற்றலைக் கொண்டுள்ளன. விஜயம் மேற்கொண்ட ஆய்வுக்குழு, ஐந்து வருட காலப்பகுதியில் பல்வேறு கொலனித்துவ திட்டங்களில் மீள் திட்டமிடலைப் பரிந்துரைத்தது. 1967-68ஆம் ஆண்டு மகா பயிர்ச்செய்கை காலப்பகுதியில், அரசாங்கம் எலஹெரா காலனித்துவ திட்டத்தில் 5,000 ஏக்கர் பரப்பளவை ஒரு சிறப்புத் திட்டமாக ஒரு மாதிரி அடிப்படையில் எடுத்துக் கொண்டது.

மீள்திட்டமிடல் திட்டத்தைச் செயல்படுத்திய பிறகு, ஒரு ஏக்கருக்கு சராசரி நெல் விளைச்சல் 86.37 புஷல்களாக இருந்தது, இது தேசிய சராசரியான 
47.49 புஷல்களாகவும், எலஹெரா கொலனித்துவ திட்டம் அமைந்துள்ள பொலன்னறுவ மாவட்டத்திற்கு 68.27 புஷல்களாகவும் இருந்தது. இந்த முன்னோடித் திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு அதிக மகசூல் பெறப்பட்டது.

கொலனித்துவ திட்டப் பகுதிகள் உற்பத்தித்திறனில் விரைவான 
அதிகரிப்புக்கு சிறந்த ஆற்றலைக் கொண்டுள்ளன என்பதை இது காட்டுகிறது.
இந்த வெற்றியால் ஊக்கமடைந்த அரசாங்கம், சிறப்புத் திட்டங்களின் கீழ் உள்ள பரப்பளவை 1968-69 மகா காலப்பகுதியில் 46,000 ஏக்கராகவும், 1969-70 மகாசபையில் 68,500 ஏக்கராகவும் விரிவுபடுத்தியது.

இறுதியில் இது 9 கொலனித்துவத் திட்டங்களை உள்ளடக்கியது. இந்த சிறப்புத் திட்டப் பகுதிகள் அனைத்தும் பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தால் ஆய்வு செய்யப்பட்டு, முன்னேற்றத்தை மதிப்பிடப்பட்டன. இந்த ஆய்வு அறிக்கைகளின் படி, சிறப்புத் திட்டங்களின் மைய நோக்கமான விவசாய நீரை திறம்பட நிர்வகிப்பதில் ஒட்டுமொத்த வெற்றி எட்டப்படவில்லை..

சிறுபோகப் பருவத்தில் பயிரிடப்பட்ட நிலப்பரப்பு சிறுபோகப் பருவத்தின் பாதிக்கும் குறைவாகவே உள்ளது என்றும், நீர் விநியோகப் பற்றாக்குறை இன்னும் பெரிய பிரச்சினைகளாக இருப்பதாகவும் ஆய்வுகள் கண்டறிந்தன. சிறுபோகப் பருவத்தில் விநியோகிக்க அதிக நீர் கிடைக்க அனுமதிக்கும் வகையில், சிறுபோகப் பருவத்தில் நீர் பயன்பாட்டைச் சிக்கனப்படுத்த நடவடிக்கைகள் குறிப்பாகத் தேவைப்பட்டன.

நெல் விளைச்சலைப் பொறுத்தவரை, எலஹெரா பகுதியின் விளைச்சல் குறித்த மறு கணக்கெடுப்பு, அதிகரிப்புகள் குறிப்பிடத்தக்கவை அல்ல என்றும், பொலன்னறுவை மாவட்டத்தை விட அதிகமாக இல்லை என்றும் காட்டியது.

ஒட்டுமொத்த ஒன்பது காலனித்துவ திட்டங்களிலும், மகசூல் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது, குறிப்பாக யாலாவில், முக்கியமாக போதுமான நீர் மற்றும் திறமையற்ற விநியோகம் காரணமாக.

இதனால், முன்னோடித் திட்டத்தில் மறுவாழ்வுத் திட்டத்தின் மூலம் நிரூபிக்கப்பட்ட வெற்றி, திட்டம் நீட்டிக்கப்பட்டபோது சாத்தியமாகவில்லை. உண்மையில், குறித்த திட்டத்தின் நீட்டிப்பு ஆய்வுக்குழு பரிந்துரைத்த கொலனித்துவ திட்டங்களுக்கு அல்ல, மாறாக சில புதிய திட்டங்களுக்கே என்பது பின்னர் தெரிய வந்தது.  

1965 முதல் வேலையில்லாத படித்த இளைஞர்களை நிலத்தில் குடியமர்த்துவதற்கான கொள்கை பின்பற்றப்பட்டது. இளைஞர் குடியேற்றம் இரண்டு வடிவங்களை எடுத்தது.

முதலாவதாக, பெரிய குடியேற்றத் திட்டங்களில், 10மூ ஒதுக்கீடுகள் எஸ்.எஸ்.சி. நிலையை எட்டிய பண்ணைப் பள்ளிகளின் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. இரண்டாவதாக, இதேபோல் படித்த இளைஞர்களுக்கு, தேயிலை, ரப்பர், தேங்காய் மற்றும் பிற பணப்பயிர்களை வளர்ப்பதற்காக சிறு நீர்ப்பாசனப் பணிகள் மீட்டெடுக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு இளைஞர் திட்டங்கள் நிறுவப்பட்டன.

ஒதுக்கீடு திட்டம் வெற்றிகரமாக செயல்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் நிலத்தில் வாழ்க்கை நடத்துவதில் ஆர்வம் காட்டத் தவறிவிட்டனர். மேலும், அவர்களில் பலர் பிற வேலைவாய்ப்பைப் பெறுவதில் தங்கள் ஒதுக்கீடுகளைக் கைவிட்டனர்.

சிறப்பு இளைஞர் குடியேற்றத் திட்டங்களைப் பொறுத்தவரை, இளைஞர்கள் மற்றும் விரிவாக்க அதிகாரிகளுக்குத் தேவையான விவசாயத் திறன்கள் இல்லாததால் ஒரு சில மட்டுமே வெற்றி பெற்றன.

ஆனால் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட ஒரு திட்டம் முத்தையன்கட்டுத் திட்டம், அங்கு யாழ்ப்பாண தீபகற்பத்தைச் சேர்ந்த விவசாய குடும்பங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் சிவப்பு வெங்காயம், மிளகாய் மற்றும் பச்சைப் பயறு பயிரிடுவதன் மூலம் கணிசமான வருமானத்தை ஈட்டினர்.

மூன்று இளைஞர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மூன்று ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து தலா ரூ.20,000க்கு மேல் சம்பாதித்தனர், மேலும் பதினெட்டு பேர் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை சம்பாதித்தனர்.

பின்னர் இந்த இளைஞர்கள் எட்டு புதிய டிராக்டர்களை வாங்கினார்கள். இது, ஒற்றைப் பயிர் நெல் சாகுபடியுடன் ஒப்பிடும்போது, உள்@ர் சந்தைக்குப் பணப் பயிர்களைப் பயிரிடுவதில் அதிக ஆற்றல் இருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

இந்தத் திட்டத்தில் (300 இளைஞர்களை உள்ளடக்கியது) ஒவ்வொரு இளைஞரும் பெற்ற சராசரி ஆண்டு வருமானம், அரச அலுவல வேலைவாய்ப்பிலிருந்து அவர்களில் எவரும் பெறக்கூடியதை விட கணிசமாளனவு அதிகமாகும்.

1965ஆம் ஆண்டில், துணை உணவுப் பொருட்களைப் பயிரிடுவதற்கும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவதற்கும் உலர் மண்டலத்தில் 25 ஆண்டு குத்தகைக்கு நிறுவனங்களுக்கு நிலத்தை வழங்க அரசாங்கம் முடிவு செய்தது.

விவசாயத்தில் ஈடுபட அவர்களைத் தூண்டுவதற்காக அவர்களுக்கு வரிச் சலுகைகள், வாகன அனுமதிகள் போன்றவை வழங்கப்பட்டன. 1966-70 விவசாய மேம்பாட்டுத் திட்டங்கள் இந்த அடிப்படையில் 30,000 ஏக்கர் வருடாந்திர குத்தகைக்கு வழங்கப்பட்டன.

இந்தக் காலகட்டத்தில் அண்ணளவாக 60,000 ஏக்கர் உண்மையில் குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால், கால்நடை வளர்ப்பிற்காகக் குத்தகைக்கு விடப்பட்ட 16,000 ஏக்கர் நிலத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதும், துணை உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மிகக் குறைவாகவே செய்யப்பட்டுள்ளதும் விரைவில் கண்டறியப்பட்டது. 1970இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது இந்த சிறப்பு குத்தகைகள் ரத்து செய்யப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .