2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கொடுத்து கெடு(த்)தலும் எடுத்துக் கெடுதலும்

Thipaan   / 2017 ஓகஸ்ட் 18 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டமாற்று என்ற பதம், எமக்கு மிகவும் பரிட்சியமானது. பண்டைய கால மக்கள், தமது தேவைகளுக்கான பொருளொன்றைப் பெற்றுக்கொள்ள, இன்னொரு பொருளைக் கொடுப்பது பண்டமாற்று எனப்படுகிறது. இது ஒரு பழங்கால செலாவணியாகக் காணப்படுகிறது.   

அதன்பின்னர், பொருட்கள், சேவைகளைப் பெற்றுக்கொள்ள உருவாக்கப்பட்ட அலகாகப் பணம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாடுகளுக்கு நாடு, மதிப்பு, வடிவங்கள் என்பன வேறுபட்டாலும், அந்தந்த அரசுகளால் உறுதிப்படுத்தப்பட்ட அலகுகளாகக் காணப்படும் பணம், அதன் பெறுமதிக்குரிய பொருட்களைப் பெறவும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளவும் உதவிவருகிறது.   

மேற்குறித்த விடயங்கள் பலரும் அறிந்திருக்கக் கூடியவையாக இருக்கலாம். எனினும்,இதைப் பற்றிக் கூறியதற்கான நோக்கம், இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான விடயங்களைப் பற்றிப் பேசுவதற்கேயாகும்.   

தேவையொன்றைப் பூர்த்திசெய்வதற்காகவே, இவையும் இடம்பெறுகின்றன. இலஞ்சம் எனும் போது, தேவையொன்றைப் பூர்த்தி செய்ய, ஒருவர் கொடுக்கிறார்; இன்னுமொருவர் கேட்கிறார். ஆனால், இவை சட்டரீதியற்றவை.   

கோழியிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா என்பதைப்போல, இலஞ்சம், முதலில் கொடுக்கப்பட்டதா அல்லது கேட்கப்பட்டதா என்பதும் புதிராகக் காணப்படுகிறது.  

அரச ஊழியர் ஒருவர், தனக்கு நன்மை ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக அல்லது வேறொருவருக்கு நன்மை ஒன்றைப் பெற்றுக்கொடுப்பதற்காக அல்லது அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்துவதற்காக அல்லது வேறுயாருக்கும் நட்டத்தை ஏற்படுத்துவதற்காக தனது பதவி நிலையை அல்லது அதிகாரத்தைப் பிரயோகித்தல் ஊழல் எனப்படுகிறது.   

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், மாகாண அமைச்சர்கள், சபை உறுப்பினர்கள், அரச திணைக்களங்கள் அல்லது அலுவலகங்களின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், அரசாங்கக் கூட்டுத்தாபனம, அதிகாரசபை ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள், 50 சதவீதம் அரச பங்குடைமை கொண்ட கம்பனிகளின் உத்தியோகத்தர்கள் ஆகியோர், இலஞ்சச் சட்டத்தின் கீழ், அரச ஊழியர் என விளக்கப்பட்டுள்ளனர்.  

ஊழல் என்பது சிறு அளவிலோ அல்லது பாரிய அளவிலோ இடம்பெறக் கூடும். பாரிய ஊழல் என்பது அரசாங்கத்தைப் பாதிக்கக் கூடியதாகவும் இருக்கலாம்.   

உதாரணமாக, நாட்டின் அபிவிருத்திக்காகச் செலவிடப்படும் நிதி, தனிப்பட்ட மனிதனின் அபிவிருத்திக்காகச் செலவிடப்படும்போது, நாட்டின் அபிவிருத்தி தாமதப்படும். அடிப்படைத் தேவைகளான உணவு, வதிவிடம், தொழில் வாய்ப்புகள் என்பவற்றை வழங்குவதற்கு, அரசுக்கு இடர்பாடுகள் ஏற்படும்.   

அரச வருவாய் இழக்கப்படுவதன் மூலம், வரி விதிப்பதற்கு அரசு நிர்ப்பந்திக்கப்படுவதால், பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு அவமதிப்பு ஏற்படுவதுடன், வெளிநாட்டு முதலீடுகள் குறையும். அதுமட்டுமின்றி, சட்டத்தை மதிக்கும் பண்பு குறைந்து, நாட்டில் அராஜகங்கள் அதிகளவில் ஏற்படும்.  

இவை, அனைத்தும் ஊழலின் காரணமாக நாடொன்றுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளாகக் காணப்படுகின்றன. மேலே குறிப்பிட்டதைப் போன்று, வருவாய் இழப்பால் வரி விதித்து, பொருட்களின் விலை அதிகரித்தல் என்பது சாதாரண மக்களையே அதிகளவில் பாதிக்கும்.   
ஊழல் என்பதன் மற்றொரு அங்கம்தான் இலஞ்சம். அரசாங்க ஊழியர் ஒருவராலேயோ அல்லது அவரின் சார்பிலேயோ சட்ட விரோதமான முறையில், ஒரு தேவையைக் கேட்டல் அல்லது ஏற்றுக்கொள்ளுதல், அரசாங்க ஊழியர் ஒருவருக்கு அல்லது அவரின் சார்பாக ஒரு தேவையை வழங்குதல் அல்லது வழங்க எத்தனித்தல் இலஞ்சம் எனப்படுகிறது.   

இங்கு, தேவை எனப்படுவது, பணமாகவோ, பரிசுப் பொருளாகவோ அல்லது வேறொன்றாகவோ இருக்கலாம்.   

வேறொன்று எனும்போது, பணத்தால் மதிப்பிட முடியாத வேறு நன்மைகளாக இருக்கலாம். உதாரணமாக, பெண்களிடம் தகாத உறவை வேண்டி நிற்றல், வெளிநாட்டுப் பயணத்துக்கு அனுசரணை வழங்கல் என்பன அடங்கும்.  

கடமையை நிறைவேற்றுவதற்குத் தூண்டுவதற்காக, கொடுத்தல் அல்லது கொடுக்க எத்தனித்தல், கடமையை செய்வதற்காகத் தேவையொன்றைக் கேட்டல் அல்லது பெற்றுக்கொள்ளல் என்பன இலஞ்சச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது.   

கேட்டல், பெறுதல், கொடுத்தல், கொடுக்க எத்தனித்தல் என்பன, தனது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு, ஒருவருடத்துக்கு முன்பாகவோ அல்லது பின்னரோ அல்லது ஒருவருடத்துக்கு உள்ளேயோ இடம்பெறின், அதுவும் இலஞ்சச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது.   

தங்களுடைய வேலையை இலகுபடுத்துவதற்காக ஒருவர் கொடுத்ததும், தன்னுடைய வேலைக்கு ஊதியம் வழங்கப்பட்டபோதும், தன்னுடைய ஆடம்பர வாழ்க்கையைக் கருதி, ஒருவர் கேட்டதுமே இதற்கெல்லாம் அடிப்படையாகக் காணப்படுகிறது. இறுதியில் இருவருமே இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.   

சில அரச நிறுவனங்களில் செய்யப்படும் வேலைகளுக்கு ஓரிரு நாட்கள் அல்லது ஓரிரு வாரங்கள் எடுக்கும், அவற்றின் பலனைப் பெறவேண்டுமாயின் பொறுமையாக இருக்கவேண்டியது அவசியமே. எனினும், தங்களுடைய அவசரத்துக்காக, பலரும் கொடுக்கவே முயல்கின்றனர். இது அவர்கள் திருந்தினாலேயே ஒழியும்.   

மற்றொருபுறம், குறுகிய காலத்தில் முடிக்கக் கூடிய வேலை, கொடுக்கப்படாததால் நீட்டிக்கப்படுகிறது. வாங்கிப் பழக்கப்பட்டால், அவர்கள் மேலும் கேட்கவே முயல்கின்றனர்.   

இலங்கையிலுள்ள அரச நிறுவனங்களைப் பொறுத்தவரை, இலஞ்சம் பெறுவதும் கொடுப்பதும், கொடுக்க எத்தனிப்பதும் இடம்பெற்றுக்கொண்டே இருக்கிறது. 

இவை தொடர்பில், முறைப்பாடு பதிவுசெய்தால் அல்லது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்குத் தகவல் வழங்கினால், கைதுசெய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன. 

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய தெளிவான சாட்சியங்கள் இல்லாத போதும் ஆதனச் சட்டத்தின் கீழ், ஒருவரைச் சந்தேகித்து வழக்குத்தாக்கல் செய்யமுடியும்.   

ஒருவர், அறியப்பட்ட வருமானத்தால் பெற்றுக்கொள்ளக்கூடியதைவிட, கூடுதலான சொத்துகளைத் திரட்டுவாராயின் அல்லது செலவு செய்வாராயின் அந்தச் சொத்துகளைத் திரட்டுவதற்கான பணம் இலஞ்சத்தின் மூலம் பெறப்பட்டதாக இருக்கலாம்.  

1954ஆம் ஆண்டு மார்ச் 01ஆம் திகதிக்கு அல்லது அதற்குப் பின்னர், தனதாக்கிக் கொண்ட பணம் அல்லது சொத்துகள் அந்த நபரின் அறிந்து கொள்ளப்பட்ட வருமானத்தால் பெறப்பட்டவையல்ல அல்லது பெறப்பட்டிருக்கமுடியாது எனச் சந்தேகிக்குமிடத்து, அது, இலஞ்சத்தின் மூலம் பெறப்பட்டதாக (நிரூபிக்கப்படும் வரை) கருதப்படும்.  

அந்தநபர், தன்னுடைய மனைவி அல்லது 18 வயதுக்கு மேற்படாத திருணமாகாத பிள்ளைகளின் பெயரில் திரட்டப்பட்ட பணம் அல்லது ஆதனம்/சொத்து (நிரூபிக்கப்படும் வரை) அந்த நபரால் திரட்டப்பட்டவையாகவே கருதப்படும்.  

இந்தச் சட்டத்தின் மூலம், அரச ஊழியரை மாத்திரம் ஆளுகைக்கு உட்படுத்தாது, தனது சட்டபூர்வமான வருமானத்தில் செய்யக்கூடிய செலவுகளைவிட, மேலதிகமான செலவு அல்லது சொத்து சேகரித்துள்ள போது, அந்த சொத்துச் சேர்த்தல், தொடர்பாகச் சட்டத்தின் 23(அ) பிரிவு செயற்படுத்தப்படும். அந்த நபர் அரச ஊழியரா, இல்லையா என்பது கருத்திலெடுக்கப்பட மாட்டாது.  

பணம், சொத்துகள் என்பதைத் தாண்டி, கடன், கட்டணம் அல்லது பணிக்கொடை ஒன்றைப் பெறுவதாக, தொழில் அல்லது பதவியொன்றைப் பெற்றுக்கொள்வதாக, தொழில் அல்லது பிணையிலிருந்து விடுவிப்பதாக, வழக்குத் தொடர்வதிலிருந்து அல்லது ஒழுக்காற்று நடவடிக்கையிலிருந்து தப்பித்துக் கொள்வதாக, உரிமையை அல்லது உத்தியோகபூர்வ அதிகாரத்தைச் செயற்படுத்துவதிலிருந்து விலகியிருப்பதாக, ஏதேனும் ஒருவகைக்குள் அடங்கும். பிறசேவைகள், உதவிகள் நன்மைகளைப் பெற்றுக்கொள்வதாக இருத்தல் இலஞ்சமாகக் கருதப்படக் கூடும்.  

பிற சேவைகள், நன்மைகள் எனும் போது, பாலியல் திருப்தியைப் பெற்றுக்கொள்வதனூடாக, உடல் ரீதியில் பெற்றுக்கொள்ளும் சேவை, பிரசித்திபெற்ற பாடசாலையில் பிள்ளையொன்றைச் சேர்ப்பதற்காக பெற்றுக்கொள்ளும் உதவி, வெளிநாட்டுப் புலமைப் பரிசில் ஒன்றைப் பெற்று, உள ரீதியாகப் பெற்றுக்கொள்ளும் திருப்தி என்பன இலஞ்சமாகக் கருதப்படும்.   

1954ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி, அப்போதைய ஜனாதிபதி சேர் ஜோன் கொத்தலாவலவால் சமர்ப்பிக்கப்பட்ட இலஞ்சச் சட்டமூலம், சட்டமாக்கப்பட்டது. அந்தச் சட்டத்தின் அடிப்படையிலும் 1994ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சட்டத்தின் அடிப்படையிலும், இவ்வாறான குற்றங்களைப் புரிந்தோர் என்று சந்தேகிக்கப்படுகின்ற அல்லது குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.  

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு, 2013ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில், மொத்தம் 14,293 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.  

முறைப்பாட்டாளர்களால் செய்யப்பட்ட 8,668 முறைப்பாடுகளும் 5,625அநாமதேய முறைப்பாடுகளும் அடங்கலாகவே, 14,293 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றில், 6,871 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள், அந்த ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.    

இவ்வருடம் ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் ஜூலை 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் 19 வழக்குகளும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 23 வழக்குகளுமாக, 42 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  \

இக்காலப்பகுதிக்குள், 15 திடீர்ச் சோதனைகளும் 06 திறந்த விசாரணைகளும் சொத்துகள் தொடர்பாக 02 விசாரணைகளும், அவ்வாணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் திகதியிலிருந்து ஜூலை 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 23 திடீர்ச் சோதனைகள் வெற்றிகரமாகவே அமைந்துள்ளன.   

இதில், வைத்திய அதிகாரி, அதிபர், பிரதி அதிபர், பிரதேச சபை செயலாளர், பிரதேசசபைக்கு இணைக்கப்பட்ட அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர், மதுவரித் திணைக்கள அதிகாரி, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி, முகாமைத்துவ உதவியாளர் மற்றும் சிற்றூழியர்கள் ஆகிய அரச ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.  

2017ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் திகதி வரை, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் 118 வழக்குகள் நிலுவையில் உள்ளதுடன், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 312 வழக்குகள் நிலுவையிலுள்ளன. 

இலஞ்சத்தைப் பரிந்து கேட்டல், ஏற்றுக்கொள்ளல், கொடுத்தல், அல்லது இதில் ஏதும் ஒன்றைச் செய்வதற்கு எத்தனிக்கும்போது அல்லது சூழ்ச்சி செய்யும்போது அல்லது அனுசரணை வழங்கும் போது, 7 ஆண்டுகளுக்கு மேற்படாத கடூழியச் சிறைத்தண்டனையும் 5,000 ரூபாய்க்கு மேற்படாத அபராதமும் விதிக்கப்படும். 

மேற்குறிப்பிட்ட தண்டனைக்கு மேலதிகமாக, இலஞ்சத்துக்காகப் பரிமாற்றம் செய்யப்பட்ட இலஞ்சத்தின் பெறுமதிக்குச் சமனான தொகையை அபராதமாக அறவிடல்.  
ஏதேனும் ஆதனமொன்று இலஞ்சத்தினூடாகப் பெறப்பட்டதாக, நிரூபிக்கப்படும்போது, மேற்குறித்த தண்டனைக்கு மேலதிகமாக, ஆதனத்தின் பெறுமதிக்குக் குறையாத, ஆதனத்தின் மும்மடங்கை விஞ்சாத தொகையை தண்டப்பணமாக நியமித்தல் அல்லது ஆதனத்தை அரசுடமையாக்கல்.  

இதேபோன்று, ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்படின், 10 வருடத்துக்குக் குறையாத சிறைத்தண்டனையும் ஓர் இலட்சம் ரூபாயை விஞ்சாத தண்டப்பணமும் அல்லது அவை இரண்டும் விதிக்கப்படலாம்.  

எனினும், இலஞ்சச் சட்டத்துடன், வேறு சில சட்டங்களின் கீழ் வழக்குத் தொடரப்படுமாயின் அவற்றுக்கான தண்டனைகள் மாறுபடலாம்.   

இந்தத் தண்டனைக்கு மேலதிகமாக, பதவி அல்லது தொழிலை இழத்தலுடன் ஓய்வூதியம், பணிக்கொடைக்கான உரித்து இரத்துச் செய்யப்படலாம்.   

நாடாளுமன்றத் தேர்தல் எனின் 7 ஆண்டுகளும் உள்ளூராட்சித் தேர்தல் எனின் 5 ஆண்டுகளுக்கும் வாக்காளராகப் பதிவு செய்வதற்கு, வாக்களிப்பதற்கு அல்லது தெரிவு செய்யப்படுவதற்கு, தகைமை அற்றிருத்தல். அரசின் அல்லது இலஞ்சச் சட்டத்தின் கீழ், பட்டியல் படுத்தப்பட்டுள்ள நிறுவனங்களில் தொழில் ஒன்றை அல்லது பதவியொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை முற்றுமுழுதாக இழத்தல் என்பன வழங்கப்படலாம்.  

இலஞ்சம், கேட்டல், பெறுதல், கொடுத்தல் என்பன 7 ஆண்டுகால கடூழியச் சிறைத்தண்டனைக்கான குற்றம் என்பதுடன் அபராதமும் வழங்கப்படும், இது கொடுப்பவருக்கும் என்பதை கொடுப்பவர்கள் மறந்து விடக்கூடாது.   

கொடுப்பவர், தன்னலம் கருதிக் கொடுக்கிறார். அவர் கொடுத்துக் கெடுத்தமையால், வாங்குபவரும் தன்னலம் கருதி வாங்கி, தன்னலத்தை மட்டுமே கருதி, வாங்கிக் கொண்டே இருக்கிறார். அதே போல, ஊழலில் ஈடுபடுபவரும், தனது பையை நிரப்புவதற்காக, அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தி, நாட்டின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறார்.   

இவற்றைத் தடுப்பதற்கான வழியெனப் பார்க்கும்போது, அவரவர் திருந்த வேண்டும். இல்லையேல், சட்டப்படி திருத்தப்பட வேண்டும்.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X