Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 செப்டெம்பர் 05 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியும் அவர் உத்தியோகப்பற்றற்ற முறையில் தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் ஒரு மில்லியன் மக்களை, கொழும்புக்கு, இன்று கொண்டு வருவார்களா?
அதன் மூலம், அவர்கள் கூறுவது போல், கொழும்பு நகர் இன்று ஸ்தம்பிதமடைந்துவிடுமா?
மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ‘ஜனபலய கொலம்பட்ட’ (கொழும்புக்கு மக்கள் பலம்) என்ற தொனிபொருளில், இன்று கொழும்பில் நடத்தப்படவிருக்கும் பேரணியில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், கலந்து கொள்வார்கள் என அவ்வணியினர் கூறுகின்றனர்.
அரசாங்கம் அதற்கு இடையுறு விளைவிக்கும் என்பதால், பேரணி எங்கே இடம்பெறப் போகிறது என்பதை, முன்கூட்டியே அறிவிப்பதில்லை என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.
தேசிய சொத்துகளை விற்பனை செய்கின்றனர் என்று குற்றம்சாட்டியும் விலைவாசி அதிகரிப்புக்கும் மக்கள் மீது வரிச் சுமையை சுமத்துவதாகக் குறிப்பிட்டும், மேலும், இது போன்ற அரசாங்கத்தின் பல நடவடிக்கைகளுக்கும் எதிராகவே, இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்படுவதாக, ஒன்றிணைந்த எதிரணியினர் கூறுகின்றனர்.
அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முதலாவது வேட்டு இதுவாகும் எனவும் மஹிந்த அணியினரில் பலர் கூறுகின்றனர். ஆனால், அவர்கள் இதற்கு முன்னர் நடத்திய, ‘மஹிந்தவுடன் எழுவோம்’ என்ற தொனிபொருளிலான கூட்டங்கள், கண்டியிலிருந்து கொழும்புக்கு நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஆகியவற்றின் போதும், அவை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முதல் வேட்டு என்றே கூறப்பட்டது. எவ்வாறாயினும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள், இன்றைய பேரணியில் கலந்து கொள்வார்கள் என நம்பலாம்.
ஏனெனில், இப்போது தென்பகுதியில் அரசியல் அலை, மஹிந்தவின் பக்கம் திரும்பியிருக்கிறது. அது, ஜனாதிபதித் தேர்தலொன்றில் வெற்றி பெறுவதற்கு இன்னமும் போதுமானதா என்ற சந்தேகம் எழுகின்ற போதிலும், மாகாண சபை, நாடாளுமன்றத் தேர்தல்களில் அவர்கள் முதலிடத்துக்கு வரும் சாத்தியம் இருக்கிறது. இவ்வாண்டின், பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் அதையே, கோடிட்டுக் காட்டுகின்றன.
மக்கள், இன்றைய பேரணியில் பெருமளவில் கலந்து கொள்வதற்கு, முக்கியமானதொரு காரணம் என்னவென்றால், மஹிந்தவின் ஆட்சிக் காலத்தைப் போல், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு எதிராக, அரச அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படாது என்ற நம்பிக்கையாகும்.
மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில், நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து, ஆர்ப்பாட்டம் செய்த தொழிலாளர்கள், மீனவர்கள், சாதாரண மக்கள் மீது, துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது.
அக்காலத்தில், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது, நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், ரொஷேன் சானக்க என்ற தொழிலாளர் உயிரிழந்தார். சிலாபத்தில், மீனவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, மீனவர் ஒருவர் கொல்லப்பட்டார். வெலிவேரியவில், சுத்தமான தண்ணீர் கேட்டுப் போராடிய சாதாரண மக்கள் மீது, நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் கொல்லப்பட்டனர். அது போன்றதொரு நிலைமை, 2015ஆம் ஆண்டு, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், உருவாகவில்லை.
அடுத்ததாக, மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையை, வெகுவாக இழந்துவிட்டனர். கடந்த மூன்றரை ஆண்டுகளில், அபிவிருத்தி என்று கூறக்கூடிய, அதேவேளை, மக்கள் உணரக் கூடிய எதையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை என்றதோர் அபிப்பிராயம், மக்கள் மத்தியில் நிலவுகிறது.
பாரியதொரு திட்டமான மொரகஹகந்த-களுகங்கைத் திட்டம், ஹம்பாந்தோட்டை கைத்தொழில் பேட்டைக்கான திட்டம் போன்றவை, தற்போதைய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டாலும், அவற்றை மக்கள் மனதில் பதியும் வகையில், மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல, அரசாங்கம் தவறிவிட்டது.
கடந்த அரசாங்க காலத்தில், நாட்டில் அரசியல் பிரக்ஞையுள்ள புத்திஜீவிகள், நாட்டில் இடம்பெறும் ஊழல், மோசடி, வீண்விரயம் ஆகியவற்றால் விரக்தியடைந்து இருந்தனர்.
எனவே, ‘நாம் ஊழலை ஒழிப்போம்’ என்று, தற்போதைய ஆட்சியாளர்கள் கடந்த ஜனாதிபதி, பொதுத் தேர்தல்களின் போது கூறியபோது, அந்தப் புத்திஜீவிகள் அந்தக் கூற்றுகளை நம்பி, அவர்கள் பதவிக்கு வர உதவி செய்தனர்.
ஆனால், அவ்வாறு இந்த ஆட்சியாளர்களை நம்பியோருக்குக் கிடைத்தது வெறும் ஏமாற்றமே. கடற்படைக்கு வருமானம் ஈட்டித் தந்த கடற்பாதுகாப்புப் பணியை, ‘அவன்ட் காட்’ என்ற தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதில் ஏற்பட்டதாகக் கூறப்படும், ஊழல் தொடர்பாகக் கிடைத்த முறைப்பாடுகளை விசாரிக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
ஆயினும், அதே ‘அவன்ட் காட்’ நிறுவனத்தின் சட்டத்தரணிகளாகக் கடமையாற்றிய இருவரை, சட்டமும் ஒழுங்கும் நீதி அமைச்சர்களாக நியமித்தமை, அவர்களில் ஒருவர், “நான் அந்த விவகாரம் தொடர்பாக, கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்ய இடமளியேன்” எனப் பகிரங்கமாகவே கூறியிருந்தமை, அரசாங்கம் ஊழல்வாதிகள் எனக் குற்றச்சாட்டுக்கு உள்ளானோர் மீது, எவ்வளவு தூரம் நம்பகத்தன்மையுடன் நடவடிக்கையை மேற்கொண்டது என்பதற்கு உதாரணமாகும்.
அவ்வாறிருக்க, ராஜபக்ஷக்களின் கீழ் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் தொடர்பிலான விசாரணைகளில், முன்னேற்றம் காணப்படாமை, ஆச்சரியத்துக்குரிய விடயம் அல்ல.
போதாக்குறைக்கு, இந்த அரசாங்கத்தின் தலைவர்களின் நண்பர்கள், மத்திய வங்கிப் பிணைமுறி விற்பனையில் மோசடி செய்து, அந்த வங்கியைச் சூறையாடினர், என்ற குற்றச்சாட்டுக் காணப்படுகிறது. இது, நாட்டிலுள்ள புத்திஜீவிகளை, இந்த அரசாங்கத்தின் மீது விரக்தியடையத் தூண்டியது. இந்த நிலையிலேயே, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. அதன் போது, ஆளும் கூட்டணியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு பிரதான கட்சிகளும் படுதோல்வியடைந்தன.
ஆனால், அரசாங்கத்தின் மீது விரக்தியடைந்த மக்கள், மஹிந்த அணியின் பக்கம் சார்ந்ததாகவும் கூற முடியாது. ஏனெனில், ஐ.தே.க கடந்த பொதுத் தேர்தலின் போது பெற்ற வாக்குகளில், 15 இலட்சத்தை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இழந்த போதிலும், மஹிந்த அணியினரின் வாக்குகள், அந்தக் காலகட்டத்தில், வெறும் இரண்டு இலட்சத்தாலேயே அதிகரித்து இருந்தன. ஐ.தே.க வாக்குகள், பெரும்பாலும் ஜனாதிபதியின் தலைமையிலான ஸ்ரீ ல.சு.கவிடமே சென்றிருந்தன.
உறங்கிக் கொண்டிருந்த அரசாங்கம், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின், ஓரளவு கண்ணைத் திறந்தது. அதன் பின்னர், நாட்டு மக்களை வென்றெடுக்க, திட்டங்களைத் தயாரிக்கத் தற்போது முயல்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், அண்மையில் வரட்சியால் பாதிக்கப்பட்ட, வடமேல் மாகாணத்துக்கு நீர் வழங்குவதற்காக ‘வயம்பட்ட ஜலய’ (வடமேல் மாகாணத்துக்குத் தண்ணீர்) என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்காக, 230 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அரசாங்கம் கூறுகிறது. வருடாந்த
வரவு - செலவுத் திட்டத்தின் மூலம், முழு நாட்டினதும் அனைத்துச் செலவுகளுக்கும் ஒதுக்கப்படும் சுமார் 1,500 பில்லியன் ரூபாயோடு ஒப்பிடும் போது, இது பாரியதொரு நிதி ஒதுக்கீடாகும்.
இதற்குப் புறம்பாக பிரதமரின் தலைமையில், ‘என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா’ என்றதொரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், சிறிய, மத்திய அளவிலான கைத்தொழில்களையும் விவசாய முயற்சிகளையும் ஆரம்பிப்பதற்காக, வட்டியில்லாக் கடன் வழங்கும் திட்டமொன்றை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், கடன் பெறுவோரது வட்டியை, அரசாங்கமே செலுத்தும்.
இவை, வாக்குவேட்டைக்காகவே ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் என்பது மிகவும் தெளிவாக இருந்த போதிலும், எந்தவோர் எதிர்க்கட்சியும் அவற்றை எதிர்க்கவில்லை; விமர்சிக்கவும் இல்லை.
ஏனெனில், அவற்றை எதிர்த்தால், மக்கள் தம்மை எதிர்ப்பார்கள் என்று, அவர்கள் பயப்படுகிறார்கள். இவற்றில், ஜனாதிபதியின் திட்டம், வாக்கு வேட்டைக்காக ஆரம்பிக்கப்பட்டாலும், அது நீண்ட காலப் பயன் தரக்கூடியதே.
‘என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா’ திட்டத்தின் கீழ் கடன் பெற்று, சிறிய, மத்திய அளவிலான கைத்தொழில்களை ஆரம்பிக்க, மக்கள் முன்வருவார்களா என்பதில் சில சந்தேகங்கள் இருக்கின்றன.
ஏனெனில், தமது உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகள் இருக்குமா என்ற பயம், அவர்களுக்கு இருக்கிறது. அரசாங்கம், அதற்கான திட்டமொன்றை ஆரம்பித்தால், தேர்தலில் வெற்றிபெற்றாலும், இல்லாவிட்டாலும், மக்கள் அதனால் பயன் பெறுவார்கள்.
மக்கள் அவற்றால் பயனடைந்தாலும், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர், அவ்வாறான பயன் எதையும் பெறும் வாய்ப்பு இல்லை. எனவே, அந்தத் தேர்தலின் போது, இந்தத் திட்டங்களால், அரசாங்கம் பயன்பெறுவது கடினமாகும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது இடம்பெற்றதைப் போல், மாகாணசபைத் தேர்தலிலும் ‘மஹிந்த அலை’ வீசினால், இந்தப் பொருளாதாரத் திட்டங்களால், பொதுத் தேர்தலின் போதும், ஜனாதிபதித் தேர்தலின் போதும் அரசாங்கம் பயன்பெறுவது மேலும் கடினமாகிவிடும்.
இவ்வாறு, அரசாங்கம் தாமதித்து, மக்களை வென்றெடுக்க முயலும் அதேநேரத்தில், மஹிந்த அணியினர், மக்களை ஈர்த்தெடுக்க, ஆர்ப்பாட்டங்களைத் திட்டமிட்டுள்ளனர். அதன் ஓர்ரங்கமாகவே, இன்றைய பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பேரணிக்காக, பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும், சுமார் 3,750 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் ஒரு பஸ் வண்டி வீதம், ஆட்களைக் கொழும்புக்குக் கொண்டு வரவேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளதாக, அம்முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருந்தார்.
உண்மையிலேயே, பொதுஜன பெரமுனவின் ஒவ்வோர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினரும், அவ்வாறு மக்களை ஏற்றி வந்தாலும், ஒரு பஸ் வண்டியில் 100 பேர் வீதம் கொண்டு வரப்பட்டாலும், நான்கு இலட்சம் பேருக்கு மேல், கொழும்புக்குக் கொண்டு வர முடியாது. அவ்வாறாயின், அவர்கள் ஒரு மில்லியன் மக்கள் தொகையினரை எவ்வாறு கொழும்புக்கு அழைத்து வரப் போகிறார்கள்?
நாட்டின் சனத்தொகை, சுமார் 21 மில்லியன் ஆகும். அதில் 25க்கும் 30க்கும் இடைப்பட்ட சதவீதமானோர் சிறுபான்மையினராவர். சிறுபான்மையினரில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டுமே, மஹிந்த அணியின் பேரணியில் கலந்து கொள்ளக் கூடும். அதாவது, மிகுதியாக இருக்கும் சுமார் 15 மில்லியன் மக்களில், ஒரு மில்லியன் மக்களை, அவர்கள் கொழும்புக்கு அழைத்து வர முடியுமா?
இந்த 15 மில்லியன் மக்களிலும் சிறுவர்கள், மாணவர்கள், முதியோர்கள், நோயாளர்கள் போன்றவர்களைக் கழித்துப் பார்த்தால், 10 மில்லியன் மக்களே எஞ்சியிருப்பர். அவர்களில் பத்தில் ஒரு பகுதியினரை, கொழும்புக்கு அழைத்து வருவார்களா?
ஆனால், பேரணியைப் பார்க்க வருபவர்கள் உட்பட, பெரும் எண்ணிக்கையில் மக்கள் இன்று கொழும்புக்கு வரலாம். அவர்கள் அனைவரும், மஹிந்த ஆதரவாளர்கள் அல்லர். எனினும், அவர்கள் அனைவரும் மஹிந்த ஆதரவாளர்களாகவே ஊடகங்களுக்குத் தென்படுவர். அதேவேளை, கூட்டங்களில் கலந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கையை அளந்தறிய, மக்களிடமோ ஊடகங்களிடமோ எவ்வித அளவுகோலும் இல்லை.
எனவேதான், மூன்றாண்டுகளுக்கு முன்னர், நுகேகொடையில் நடைபெற்ற மஹிந்த அணியின் கூட்டத்தில், ஐந்து இலட்சம் பேர் கலந்து கொண்டனர் எனக் கூறப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் ஐம்பதாயிரம் பேர் குழுமியிருக்கவும் வசதியில்லை. இருந்தபோதும், இந்தப் பேரணிக்கு, மக்கள் வருவதைத் தடுக்க, அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொள்வதை உணர முடிகிறது.
மேல்மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் பஸ்கள், இந்த வாரத்துக்குள் வீதி அனுமதிப் பத்திரத்தின் படியே, கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் விசேட பயணங்களுக்காக, வாடகைக்கு விடப்படக் கூடாது என்றும், ஏற்கெனவே பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
மஹிந்த அணியினரின் பேரணி, வெற்றிகரமாக நடைபெறலாம். ஆனால், பேரணியில் பாவிக்கப்படப் போகும் அவர்களது சுலோகங்கள், அவர்களுக்கு எதிராக பாவிக்கக்கூடியவையே.
தேசிய வளங்கள் விற்பனைக்கும், வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கும், இன ஐக்கியத்தைச் சிதைப்பதற்கும் எதிராக, இந்தப் பேரணியை நடத்துவதாக, அவர்களது போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை, அவர்களுக்கு எதிராகவும் பாவிக்கலாம். ஏனெனில், இவை அனைத்தும் மஹிந்த ஆட்சியிலும் இடம்பெற்றவையே.
இதில், முக்கியமான இன்னொரு விடயமும் இருக்கின்றது. பணத்தைச் செலவழித்தால், மக்களைத் திரட்டலாம். ஆனால், பதவிக்கு வந்தால், பழைய ஆட்சியை நடத்த மாட்டார்கள் என்பதற்கு, உறுதியான உத்தரவாதத்தை அவர்களால் வழங்க முடியுமா?
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago