Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Thipaan / 2016 ஜூன் 06 , மு.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய கையோடு, இந்திய உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையொன்று ஏகப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 'பொது ஊழியர்கள் சொத்துக்குவிப்பது குற்றம் அல்ல. சட்டவிரோதமான வருமானம் மூலம் சொத்துக் குவிக்கப்பட்டிருந்தால் மட்டுமே குற்றம்' என்று இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்த கருத்து, தமிழகத்தின் பல தொலைக்காட்சிகளின் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. முதல்வர் ஜெயலலிதாவின் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு விசாரணையின் போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சி.கோஷ் மற்றும் அமித்தவ் ராய் அடங்கிய அமர்வு கூறிய இந்தக் கருத்து, 'ஊழல் எதிர்ப்பாளர்கள்' மத்தியில் அனல் பறக்கும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கில், முதலில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தண்டனை அளித்தது. அதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. தண்டனையை இரத்துச் செய்த கர்நாடக உயர்நீதிமன்றம் 'கணக்கில்' கோட்டை விட்டு விட்டது என்று, கர்நாடக அரசாங்கம் குற்றச்சாட்டை முன் வைத்தது. இதன் அடிப்படையில் கர்நாடக அரசாங்கம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டின் இறுதி நாள் விசாரணையில்தான், நீதிபதிகள் இந்தக் கருத்தைத் தெரிவிக்க இப்போது பரபரப்பாகி விட்டது.
ஆனால், மூத்த வழக்கறிஞர்கள், நீதிபதிகளின் கருத்து இவ்வளவு பரபரப்பாக வேண்டிய அவசியமே இல்லை என்று கூறுகின்றனர். அவர்கள், இந்திய இலஞ்ச, ஊழல் சட்டத்திலேயே, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்தையொட்டித்தான் பல்வேறு பிரிவுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு பொது ஊழியர் (அதாவது அரச அதிகாரி, அமைச்சர், முதலமைச்சர் உள்ளிட்டோர்) வருமானத்துக்கு மீறி சொத்துக் குவித்திருந்தால், அவர் மீது வழக்குத் தொடரப்படுகிறது.
அந்தச் சொத்தை அவர் சட்டபூர்வமான வருமானத்திலிருந்து பெற்றால், சம்பந்தப்பட்ட பொது ஊழியரைத் தண்டிக்க முடியாது. இந்திய இலஞ்ச, ஊழல் சட்டத்தில் இதெல்லாம் சட்டபூர்வமான வருமானம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 'ஊழல் பணம், நிச்சயம் சட்டபூர்வமான வருமானம் அல்ல' என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. ஆகவே, பொது ஊழியர் ஒருவர் சட்டவிரோதமான வருமானம் மூலம் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார் என்று இலஞ்ச, ஊழல் தடுப்புத் துறை முடிவு செய்யுமேயானால், அந்தப் பொது ஊழியருக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும்.
அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி 'நான் வாங்கியுள்ள சொத்துக்கள் சட்டபூர்வ வருமானத்தின் மூலம் வாங்கப்பட்டவை' என்பதை சம்பந்தப்பட்ட பொது ஊழியர் நிரூபித்து விட்டால், அவருக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர முடியாது. இந்த அடிப்படையில்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 'சொத்துக் குவிப்பது மட்டுமே குற்றம் அல்ல என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர். இது இந்தியாவில் உள்ள இலஞ்ச, ஊழல் தடுப்புச்சட்டப்படி உள்ள நிலைப்பாடு மட்டுமின்றி, ஏற்கெனவே பல்வேறு ஊழல் வழக்குகளில் சுட்டிக்காட்டப்பட்ட விடயமே தவிர, புதிய விடயமோ அல்லது புதுவிதமான கருத்தோ அல்ல' என்பதுதான் மூத்த வழக்கறிஞர்களின் வாதமாக இருக்கிறது.
ஜூன் 1ஆம் திகதியுடன் விசாரணை முடிந்து விட்டது, முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்களும், கர்நாடக அரசாங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களான பி.வி. ஆச்சார்யா மற்றும் துஷ்யந்த் தவே ஆகியோரும் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்து விட்டனர். இதே சொத்துக் குவிப்பு வழக்கிலுள்ள கம்பெனி விவகாரங்கள் குறித்த விவாதத்தை ஜூன் 7ஆம் திகதி, உச்சநீதிமன்றம் தொடங்குகிறது.
சொத்துக் குவிப்புப் பற்றி உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கு, இந்த அளவுக்குக் காரசாரமான விவாதங்கள் ஏற்பட்டமைக்கு இந்த வழக்கில் எங்கள் முன்பு உள்ள வழிகள் என்னென்ன என்றும் நீதிபதிகள் முன் கூட்டியே பட்டியலிட்டதுதான். மூன்று வழிகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள நீதிபதிகள், முதல் வழி, சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்து அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். இரண்டாவது வழி, அந்தத் தீர்ப்பு தவறு என்று இரத்துச் செய்ய வேண்டும். மூன்றாவது, மறுபடியும் இந்த வழக்கில் தீவிர மறு விசாரணை நடத்தக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கே திருப்பி அனுப்ப வேண்டும். இந்த மூன்று வழிகளே இருப்பதாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
இந்த மூன்று வழிகளும் ஒரு வழக்கில் கடைப்பிடிக்கப்படும் வழிகள்தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதில் ஒரேயொரு விடயம் என்னவென்றால், வழக்கின் தீர்ப்பை வெளியிடும் முன்னரே, அந்த வழக்கில் தங்கள் முன்பு இருக்கும் வழிகள் என்ன என்பது பற்றி விசாரணையின் போது சொன்னதுதான். இப்படிப் பல பரபரப்புக்கு இடையில் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு இந்திய உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பு என்னவாக இருக்கப் போகிறது என்று அனைத்து அரசியல் கட்சிகளுமே ஆர்வம் காட்டுகின்றன என்பதுதான் இன்றைய நிலை. 'சொத்துக் குவிப்பு' வழக்கு மேல்முறையீட்டு தீர்ப்புதான், இப்போதைக்கு தமிழகத்தில் அனைவரும் எதிர்பார்க்கும் அடுத்தகட்ட அரசியல.!
திசை மாறும் திராவிடக் கட்சி அரசியல்
அடுத்த கட்ட பரபரப்பு - திடீரென்று, தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்குமிடையில் நெருங்கி வரும் 'அரசியல் நாகரிகம'! இரு கட்சிகளும், எலியும் பூனையுமாகவே இதுவரை சண்டை போட்டுள்ளன. சட்டமன்றத்துக்கு உள்ளும் சரி வெளியிலும் சரி, இரு கட்சிகளின் பிரமுகர்களும் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பர். திருமண நிகழ்ச்சிகளில் கூட, இரு கட்சியினரும் தோள் மேல் கை போட்டுப் பேசிக் கொள்ள மாட்டார்கள். தலைமை நடவடிக்கை எடுத்து விடும் என்ற அச்சம் அ.தி.மு.கவினருக்கு அதிகமாகவே இருக்கும்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ஸ்டாலின் சென்றார். அவரது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி போட்டார். பதவியேற்பு விழாவுக்குச் சென்ற ஸ்டாலினுக்கு மரியாதைக்குரிய இருக்கை வசதி முதல் வரிசைகளில் ஒதுக்கவில்லை. அப்படி ஒதுக்காமல் விட்டது பற்றிய சர்ச்சை கிளம்பியவுடன், 'ஸ்டாலினையோ, தி.மு.கவையோ அவமதிக்கும் நோக்கில் நடந்தது அல்ல. அதிகாரிகள் என்னிடம் ஸ்டாலின் வருகிறார் என்பதை முன்கூட்டியே தெரிவித்திருந்தால், அவருக்குரிய இருக்கை வசதி செய்யச் சொல்லி உத்தரவிட்டிருப்பேன்' என்று முதல்வர் ஜெயலலிதா பதில் அறிக்கை பலரையும் வியக்க வைத்தது. தமிழகத்தில் 'என்னப்பா நடக்கிறது' என்று அனைவரையும் கேள்வி கேட்க வைத்தது. அதையும் தாண்டி, 93ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் தி.மு.க தலைவர் கருணாநிதி, தன் சக்கரக் கதிரையுடன் சட்டமன்றத்துக்குச் சென்று அமர்வதற்கு வசதி செய்து தர ஏற்பாடுகள் நடப்பது அனைத்துக் கட்சியினரையுமே சற்று யோசிக்க வைத்துள்ளது. இதற்காக, சென்ற முறையே கருணாநிதி கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த இணக்கமான அரசியல், மற்ற அரசியல் கட்சிகளை தடுமாற வைத்திருக்கிறது. தங்களின் அடுத்தகட்டப் பயணத்தை எப்படி அமைத்துக் கொள்வது என்று தீவிர யோசனையில் இறங்கி விட்டார்கள். ம.தி.முக, பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள், தே.மு.தி.க ஆகிய கட்சிகள் எல்லாமே, தங்கள் தேர்தல் தோல்வியை ஆய்வு செய்து விட்டன. ஆனால், அடுத்த கட்டப் பயணம் என்ன என்பதை இன்னும் முடிவு செய்ய முடியாமல் தவிக்கின்றன. ஏனென்றால் 'மாற்று அரசியல்' என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கி உருவாக்கிய விஜயகாந்த் அணி, தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு மாற்று அல்ல என்பது நிரூபணமாகி விட்டது. பா.ம.கவும் பா.ஜ.கவும் கூட மாற்று அல்ல என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
இந்தச் சூழ்நிலையில், 'எங்களுக்குள் நாகரிகமாக நடந்து கொள்ள முடியும்' என்பதை அரங்கேற்றும் வகையில், தி.மு.கவும் அ.தி.மு.கவும் களத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன. உதாரணமாக, ராஜ்ய சபைக்கு, தமிழகத்திலிருந்து ஆறு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய முடியும். அந்த ஆறு உறுப்பினர்களில் நான்கு பேர் அ.தி.மு.க சார்பிலும், 2 பேர் தி.மு.க சார்பிலும் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். அவர்கள், போட்டியின்றியே தெரிவு செய்யப்பட்டு விட்டனர். அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் தி.மு.கவுடன் போட்டி போடாமல் நடத்தி முடித்த முதல் ராஜ்ய சபை தேர்தல் இது.
இதைச் சமாளிக்க ஒரு வியூகத்தை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்தக் கட்சிகள் யாருக்குமே தி.மு.க மற்றும் அ.தி.மு.கவை எதிர்கொள்ளும் வாக்கு வங்கி இல்லை. இதைப் புரிந்து கொண்டு 'திராவிட இயக்க அரசியல்' 'திராவிட கட்சிகளால் கெட்டது' என்ற இமேஜ், இனி தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்குமே ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தி.மு.க தலைவர் கருணாநிதியும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். தமிழகத் தேர்தல் முடிவுக்குப் பின்னர், இந்த இரு தலைவர்களின் செயற்பாடுகள் தமிழக அரசியலில் மிக முக்கிய திருப்புமுனை. அடுத்து வரும் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே நடத்தப்படும் ஒத்திகையோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
51 minute ago