Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக தொழில் வளர்ச்சியை மனதில் வைத்து, செப்டெம்பர் 9,10 ஆகிய திகதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளைக் குறி வைத்து நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இறுதி நாளில் முதலமைச்சர் ஜெயலலிதா பிரகடனம் செய்திருக்கிறார்.
தொழில் வளர்ச்சிக்கான முதலீடு என்பதை மையப்படுத்தி தமிழகத்தில் நடத்தப்பட்ட முதல் மாநாடு என்பதால், இந்த மாநாடு ஏகப்பட்ட வரவேற்பை தொழிலதிபர்களிடம் பெற்றிருக்கிறது. இனிமேல், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இந்த மாநாடு நடைபெறும் என்று அறிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, 2017இல் அடுத்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று கூறியிருக்கிறார்.
தொழில் வளர்ச்சி தமிழகத்துக்கு மிகவும் முக்கியம் என்ற கோரிக்கை அனைத்து எதிர்க்கட்சிகளாலும் எழுப்பப் படுகிறது. குறிப்பாக ஓர் உட்கட்டமைப்புத் திட்டத்தைக் கூட அ,தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை என்று பிரதான எதிர்கட்சியான தி.மு.க. கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது. 'ஒரு புதிய மின்திட்டம் நிறைவேற்றவில்லை', 'ஒரு தொழிற்சாலை கொண்டு வரவில்லை', 'தொழில் வளர்ச்சி இல்லை', 'முதலீட்டாளர்களை முதல்வர் சந்திப்பதில்லை' இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துவரும் தி.மு.க.வுக்கு அ.தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட பதிலடிதான் இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு.
அதனால்தானோ என்னவோ, இந்த 2.42 லட்சம் கோடி முதலீட்டில் எரிசக்தி தொடர்பாக ஈர்க்கப்பட்டுள்ள முதலீடுகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாகும். ஆனால், தொழில் நுட்பப் பிரிவுக்கு எதிர்பார்த்த அளவு முதலீடு கிடைக்கவில்லை. விவசாயத்துறைக்கும் கூட அதே நிலைமைதான். அதே நேரத்தில் 'உற்பத்தித் துறை' (ஆயரெகயஉவரசiபெ ளநஉவழச) இலும் ஒரு லட்சம் கோடி ருபாய்க்கு மேல் ஈர்க்கப்பட்டுள்ளது. இந்த 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதில் 2 லட்சம் கோடி முதலீடுகள் எரிசக்தி, மற்றும் உற்பத்தி துறை சம்பந்தப்பட்டது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டை மாநில அரசு நடத்தினாலும், இந்திய அரசின் சார்பில் வர்த்தக இலாகாவின் இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அவருடன் தமிழகத்திலிருந்து பா.ஜ.க.சார்பில் மத்தியில் அமைச்சராக இருக்கும் பொன். ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். இந்த இரு மத்திய அமைச்சர்கள் தவிர அமைச்சரவை அந்தஸ்தில் மத்திய அமைச்சர்கள் யாரும் வரவில்லை என்றாலும், மாநில அரசு எதிர்பார்த்த ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு என்பது இரண்டு லட்சம் கோடிக்கும் மேற்பட்ட முதலீடுகளை கவர்ந்திழுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கத்தில் இப்படியொரு மாநாட்டை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நடத்திய போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியே அந்த மாநாட்டில் பங்கேற்றார். ஆனால், பிரதமர் நரேந்திரமோடியே, முதல்வர் ஜெயலலிதாவை தமிழகத்துக்கு வந்து சந்தித்து விட்டுப் போன பின்னர் கூட, மத்திய அரசில் உள்ள அமைச்சரவை அமைச்சர்கள் அந்தஸ்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளாதமை புதிதாக தொழில் தொடங்க வருவரோக்கு சற்று ஏமாற்றமான விஷயமே.
இந்த மாநாட்டில் முதல்வரின் துவக்கவுரையும் சரி, நிறைவுரையும் சரி சற்று வித்தியாசமாக இருந்தன. வழக்கம் போல் முந்தைய தி.மு.க. அரசை கடுமையாக விமர்சிக்கவில்லை. தி.மு.க. தொழில் வளர்ச்சியைக் கெடுத்து விட்டது என்றெல்லாம் குறிப்பிடவில்லை. தொழில் வளர்ச்சிக்கு அ.தி.மு.க. அரசு என்ன செய்யப் போகிறது, அதை விட தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பதை முன்னிலைப்படுத்தும் விதத்திலேயே அவருடையை இரு உரைகளும் இருந்தன. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், உள்நாட்டு முதலீட்டாளர்கள் குறிப்பாக சிறு குறு தொழில் முனைவோர் வந்திருந்தனர்.
அதில் சிறு குறு தொழில் முனைவோருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பளித்தது சிறப்பம்சம்.
அப்படி வந்தவர்களில் சிறு குறு தொழில் செய்ய விரும்பும் தன்ஞ்செயன் என்பவர் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திடீர் சர்ச்சையை எழுப்பினார். 'நான் இரு வருடங்களாக சிறு தொழில் தொடங்க அலைகிறேன். அனைத்துத் தகுதிகள் இருந்தும் எனக்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை' என்றார்.
அந்த மாநாட்டில் நடைபெற்ற சிறுகுறு தொழில் கருத்தரங்கத்தில் சிறு தொழில் அமைச்சர் மோகனை வைத்துக் கொண்டே இப்படிப் பேசியது ஏகப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. ஆனால் அதை மிகவும் லாவகமாக சமாளித்த அமைச்சர் மோகன், 'சில தவறுகள் முன் நடந்திருக்கலாம்.
ஆனால், இனி அப்படி நடக்காது. விண்ணப்பித்தவுடன் அனுமதி வழங்கப்படும்' என்று உறுதியளித்தார். அதேபோல் இதற்கு முன்பு இருந்த தி.மு.க. அரசுக்கும் இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பாராட்டு கிடைத்தது. போர்ட் இந்தியா கார் தொழிற்சாலை தலைவர் பேசும் போது, 'தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும் தொழிற்கொள்கையில் தொடர்ச்சி இருக்கிறது' என்று கூறி, 'நாங்கள் அனுபவபூர்வமாக அதை உணர்ந்துள்ளோம்' என்றார்.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போர்ட் கார் தொழிற்சாலை சென்னை அருகில் உள்ள மறைமலை நகரில் துவங்க அனுமதிக்கப்பட்டு, தி.மு.க. ஆட்சியில்தான் தொழிற்சாலை கார் உற்பத்தி செய்யும் தொழிலைத் தொடங்கியது. அ.தி.மு.க. அறிவித்த கார் தொழிற்சாலை என்பதற்காக தி.மு.க. அதை தடுக்கவில்லை என்பதை மறைமுகமாக உணர்த்தும் விதத்தில் இருந்தது. போர்டு இந்தியா கார் தொழிற்சாலை தலைவரின் பேச்சு.
இது தவிர உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் ஹைலைட்ஸ் என்பது இரு தினங்களும் முதல்வர் ஜெயலலிதா தவறாமல் வந்திருந்தமை, முதலீட்டாளர்களுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் உரையாற்றியதுதான். குறிப்பாக அவருடைய நிறைவுரைப் பேச்சில் 'அ.தி.மு.க. அரசு' என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. 'தமிழக அரசு' என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்தினார். 'உங்கள் முதலீடு தமிழகத்தில் பத்திரமாக இருக்கும்' என்ற உறுதிமொழியைக் கொடுத்தார்.
தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வருகை தந்த முதல்வர் ஜெயலலிதாவை சுமார் 8 கிலோமீற்றர் தொலைவுக்கு சாலையின் இருபுறத்திலும் நின்று அ.தி.மு.க.வினர் வரவேற்றாலும், மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க. அரசு என்ற ரீதியில் பேசாமல் தமிழக அரசு என்பதையே முன்னிறுத்திப் பேசியதை தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் அனைவருமே வரவேற்றார்கள்.
தொழில் வளர்ச்சிக்கு வித்திடுவதுதான் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் பிரதான நோக்கம். மரத்துக்கு விட்ட நீர் விழுதுக்கும் போகட்டும் என்பது போல் இந்த மாநாட்டால் 'செயற்படாத அரசு' என்று அ.தி.மு.க. அரசின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லப்பட்டுள்ளது.
அதன்மூலம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்குகள் கிடைக்கும் என்றாலோ, அல்லது தொழில் வளர்ச்சிக்காக பாடுபடும் முதல்வர் ஜெயலலிதா, என்ற இமேஜ் கிடைத்தாலோ அது இந்த மாநாட்டின் மூலம் கிடைத்த தேர்தல் இலாபமாக இருக்க முடியும். இப்படித் தேர்தலையும் மனதில் வைத்து மாநாடு நடத்துவது தமிழகத்துக்கு ஒன்றும் புதிதல்ல. சென்றமுறை தி.மு.க. ஆட்சி இருந்த போது 2010ல் கோவையில் உலக செம்மொழி மாநாடு நடைபெற்றது. ஒட்டுமொத்த தி.மு.க. அரசாங்கமே கோவையில் தங்கி நடத்திய அந்த மாநாடு மக்களுக்கு அலர்ஜியைக் கொடுத்தது. 'தேர்தல் லாபம்' கிடைக்கும் என்று முன்னிறுத்தப்பட்ட அந்த செம்மொழி மாநாட்டால் பிறகு தி.மு.க.வுக்கு வாக்கு இழப்புதான் ஏற்பட்டது.
ஆனால், இப்போது அ.தி.மு.க.தலைமையிலான அரசு நடத்தியுள்ளது உலக தமிழ் மாநாடு அல்ல. உலக முதலீட்டாளர்கள் மாநாடு. இன்றைக்கு தொழில் வளர்ச்சி வேண்டும் என்று இளைஞர்களும், தமிழகத்தில் வேலை இல்லாமல் காத்திருக்கும் 85 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களும் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டை ஒரு வரப்பிரசாதம் என்றே கருதுகிறார்கள். அதனால்தானோ என்னவோ, 'தமிழகத்தின் சொர்க்கம்' இந்த மாநாடு என்று முதல்வர் ஜெயலலிதாவே மாநாடு பற்றி பாராட்டியுள்ளார்.
இனி இந்த மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்ன ஆகும்? எப்போது இந்த ஒப்பந்தங்களின் படி முதலீடு தமிழகத்துக்கு வரும் என்பதை வைத்துத்தான் இந்த மாநாடு வெற்றியா, தோல்வியா என்பது தெரிய வரும். அதனால்தான் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் 'உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தம், ஒவ்வொரு கம்பெனியும் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட தொகை உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் பற்றியும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என்று கோரிக்கை வைத்துள்ளார்.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான ஜி. ராமகிருஷ்ணனும் 'புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து சட்டமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார். ஆகவே தொழில் வளர்ச்சிக்கான முயற்சியில் இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல். அது சாதனையாக மாறுமா என்பது சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago