2025 மே 17, சனிக்கிழமை

சோபை இழந்துள்ள மயிலாட்டம்

Thipaan   / 2015 நவம்பர் 12 , பி.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

மிகக் கிட்டிய காலத்தில் இடம்பெற்ற தேர்தல்களில், மிகப் பிரபலமாக பேசப்பட்டதும், கிடுகிடுவென வளர்ச்சியடைந்த ஒரு கட்சியுமான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தற்போது தலைவர் - செயலாளர் அதிகாரப் போட்டிக்குள் சிக்குண்டுள்ளதால், அக்கட்சியின் செயற்பாட்டு தளம் கடுமையாக சோபை இழந்திருக்கின்றது. திரைக்கு வந்து சில வருடங்களேயான ஒரு புத்தம்புதிய திரைப்படத்தின் இறுவெட்டில் கீறல்கள் விழுந்தது போல், காட்சிகளில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், மக்கள் மயப்படுவதற்கு அல்லது அவருக்கான மக்களின ஆதரவு அதிகரிப்பதற்கு பல சம்பவங்கள் அண்மைக்காலத்தில் காரணமாக இருந்தன. குறிப்பிட்டுச் சொல்வதென்றால், மஹிந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து கொண்டே அளுத்கம கலவரங்களுக்கு எதிராக கொஞ்சம் குரல் கொடுத்தார். வில்பத்து விவகாரத்தில் ரிஷாட்டுக்கு தனிப்பட்ட நலன்கள் இருக்கின்றன என்று கூறப்பட்டாலும் அதை முற்றுமுழுதாக மக்களின் பிரச்சினையாக கையாள்வதில் ஓரளவுக்கு வெற்றி கண்டார். அதேபோல், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தரப்புக்கான ஆதரவை விலக்கிக் கொண்டு முதன்முதலாக பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்த, முக்கிய முஸ்லிம் கட்சியொன்றின் தலைவராகவும் அவர் திகழ்கின்றார்.

தன்னுடைய கட்சியைச் சேர்ந்த ஹுனைஸ் பாறுக், பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க முன்வந்தமையால் ஏற்பட்ட மக்கள் அலையே, ரிஷாட் பதியுதீன், மைத்திரிக்கு ஆதரவளிக்கும் முடிவுக்கு உடனடிக் காரணம் என்பது நாடறிந்த விடயம். என்றாலும், மு.கா.தலைவரின் விடாப்பிடியால் தபால்மூல வாக்களிப்பு முடியும் வரை முஸ்லிம் காங்கிரஸ், மஹிந்த பக்கம் இருந்தது போல, மக்கள் காங்கிரஸ் கட்சி கடைசித்தருணம் வரைக்கும் மதில்மேல் பூனையாக இருக்கவில்லை. ஒப்பீட்டளவில் முன்கூட்டியே மக்கள் காங்கிரஸ் கட்சி மைத்திரிபால சிறிசேனவுக்கான ஆதரவை அறிவித்து விட்டிருந்தது.

மைத்திரிக்கு ஆதரவளிப்பதற்கான

'தூண்டல்' ஒன்று ஆரம்பம்தொட்டு காணப்பட்ட போதும் ஹக்கீமுக்கு அதற்கான 'துலங்கல்' சில நாட்கள் பின்னராகவே ஏற்பட்டது. தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவுக்கு 'தூண்டல்' கடைசி மட்டும் ஏற்படவே இல்லை. எனவே, மக்கள் எடுத்த நிலைப்பாட்டுடன் (அதாவது தூண்டலுடன்) ஆரம்பத்திலேயே 'துலங்கலை' வெளிப்படுத்தியவர்களுள் ஒருவர் என்ற அடிப்படையில்

ரிஷாட்டுக்கு மக்கள் மத்தியில் அதிக புள்ளிகள் போடப்பட்டன. ஆனால், அரசியலில் போடப்படும் புள்ளிகள் தற்காலிகமானவை மட்டுமே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தேர்தல் காலத்தில் ஹக்கீமுக்கும்

ரிஷாட்டுக்கும் இடையில் எல்லா விதத்திலும் போட்டா போட்டி அரசியல் இருந்தது. திரை மறைவில் இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்து கொண்டு மக்களை ஏமாற்றுவதற்காக இப்படி செய்கின்றார்கள் என்று புலனாய்வுத் திறன் கொண்ட போராளிகள் பேசிக் கொண்டாலும். வெளியில் பகைமை பாராட்டிக் கொண்டார்கள். ஹெலிகொப்டர் பயணங்களில் கூட ஒருவித 'கலர்ஸ் காட்டுதலையும்' மீறிய, போட்டாபோட்டி அரசியல் இருந்ததாக சொல்லலாம். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் மக்கள் காங்கிரஸ் தலைமையும் ஒருவிடயத்தில் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுத்தன. அது என்னவென்றால், வெற்றியை பெற்றுக் கொள்வதற்காக, மக்களையும் உறுப்பினர்களையும் பராக்குக் காட்டும் ஒன்றாக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பயன்படுத்தினார்கள்.

ஹக்கீமும் ரிஷாட்டும் செய்த மிகப் பெரும் தவறாக இது இருந்தது என்பது பின்னரே அவர்களுக்குக் கூட தெரியவந்தது. முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் தேசியப் பட்டியல் சர்ச்சைகள் ஒருபுறமிருக்க

ரிஷாட் பதியுதீனின் மக்கள் காங்கிரஸ் கட்சியும் தேசியப் பட்டியல் சர்ச்சைகளை எதிர்கொள்ள நேரிட்டது. தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கும் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட்டுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு முற்றுமுழுதாக தேசியப் பட்டியல் சார்ந்தது என்று கருத முடியாது எனினும், இவ்விவகாரத்துக்கு தேசியப்பட்டிலுக்கும் சின்னதாக ஒரு தொடர்பு இருக்கின்றமை ஆழமாக நோக்குகின்றவர்களுக்கு புரியும். அதன்படி தேசியப் பட்டிலை ஹமீட்டுக்கு வழங்கியிருந்தால் தலைவருக்கும் செயலாளருக்கும் இடையிலான பிணக்கை சற்று தணித்திருக்கலாம் என்று கருத இடமுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் தனித்து மயில் சின்னத்திலும் போட்டியிட்டது.

ஒரு கட்சி என்ற அடிப்படையில் அதன் முக்கிய உறுப்பினர்கள் சிலருக்கு தேசியப் பட்டியல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக, மு.கா.வில் இருந்து கட்சி தாவிவந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல், செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட், முன்னாள் கல்முனை மேயர் சிராஸ் ஆகியோர் இதற்கான ஆசையை வளர்த்தவர்கள் என்று குறிப்பிடலாம். அது மட்டுமன்றி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் உப வேந்தர் இஸ்மாயில், அப்துல் மஜீட் போன்றோரும், 'ஒருவேளை நாம் வெற்றியடையாவிட்டால் தமக்கு தேசியப் பட்டியலை தலைவர் தருவார்' என்று ஒரு நம்பிக்கையில் இருந்திருக்கலாம்.

இவ்வாறான நிலையில், தேர்தல் முடிவடைந்த பிறகு தமக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியலை யாருக்கு வழங்குவது என்பதை தீர்மானிப்பதில் ரிஷாட் கடுமையான சிக்கல்களுக்கு முகம் கொடுத்தார். அதன் பின்னர் புத்தளத்தைச் சேர்ந்த நவவிக்கு அப்பதவியை, சுழற்சிமுறை ஒப்பந்தத்துக்கு அமைவாக கட்சித் தலைவர் வழங்கியுள்ளார். தேசியப் பட்டியல் விவகாரத்தை, மு.கா. தலைவர் போல இழுபறியாகச் செல்ல விடாமல் ரிஷாட் பதியுதீன் உடனடியாக தீர்த்து வைத்தார் என்றாலும், அப்பிரச்சினை அத்தோடு தீர்ந்துவிடவில்லை.

இதற்கிடையில் மக்கள் காங்கிரஸ் தலைவர் பற்றி கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்ததாக சில காட்டமான கருத்துக்கள் இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியிருந்தன. 'தலைவர் பற்றிய இரகசியங்களை வெளியிடப்போவதாக' அச்சுறுத்தும் தோரணையிலேயே இத்தகவல்கள் அமைந்திருந்தன. ஆனால், செயலாளர் இதனை உடனடியாக மறுத்து அறிக்கை விடவில்லை. இதனை வைத்துப் பார்க்கின்ற போது அவ்விருவருக்கும் இடையில் உட்பூசல் இருப்பது நன்றாக புலனாகியது. அதற்குப் பிறகு கட்சித் தலைவர் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பு அந்த நிலைப்பாட்டை அம்பலத்துக்கு கொண்டுவந்தது.

தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர், அதாவது ஓகஸ்ட்

22ஆம் திகதி கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டை நடாத்திய தலைவர்

ரிஷாட், கட்சியின் செயலாளர் ஹமீட்டை அப்பதவியில் இருந்து விலக்குவதாக அறிவித்தார். அதிலிருந்து சில தினங்களுக்குப் பிறகே தேசியப் பட்டியல் நியமனமும் இடம்பெற்றது. இவ்விரண்டும் ஹமீட்டுக்கு பாரிய ஏமாற்றத்தையும் புறக்கணிக்கப்படும் உணர்வையும் ஏற்படுத்தியது எனலாம். உண்மையில், ஹமீட் செயலாளராக இருந்த போதிலும் மக்கள் காங்கிரஸின் அரசியலை அவர் அம்பாறை மாவட்டத்தில் விருத்தி செய்யவில்லை. தேர்தல் என்று வந்தபோது எல்லாவற்றையும் பூச்சியத்தியத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலையில் இருந்ததாக

ரிஷாட் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாக அறியமுடிகின்றது. இப் பின்னணியிலேயே தேசியப் பட்டியலுக்காக பரிசீலிக்கப்படாத நபர்களின் பட்டியலுக்குள் ஹமீட் உள்ளடக்கப்பட்டிருக்கலாம். ஆனால், ஹமீட் விடவில்லை. தனது கௌரவத்தை சட்ட ரீதியாக நிலைநாட்ட வேண்டுமென்று எண்ணிய அவர், 'என்னை தலைவர் கட்சியில் இருந்து நீக்க முடியாது. நான் விரும்பினால் அவரை நீக்கலாம்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்விடயம் தேர்தல்கள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. கடந்த இரு வாரங்களுக்குள் இரு தரப்பையும் ஆணையாளர் இரு தடவைகள் சந்தித்து இவ்விடயமாக பேசியிருக்கின்றார். இச்சந்திப்பின் முடிவில் தேர்தல்கள் ஆணையாளர் ஓர் அறிவிப்பை விடுத்திருக்கின்றார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாப்பின் பிரகாரம் செயலாளராக தொடர்ந்தும் ஹமீட் செயற்பட முடியும் என்று அறிவித்துள்ள அவர், இரண்டு பேரையும் இணைந்து பணியாற்றுமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைமை போன்று சில கட்சிகளின் தலைவர்கள் அதிகப்படியான அதிகாரங்களை வைத்துக்கொண்டு தான்தோன்றித்தனமான தீர்மானங்களை எடுத்து வருவது போல் தமது கட்சிக்குள் நடந்துவிடக் கூடாது என்று எண்ணியோ என்னவோ, கட்சியின் செயலாளருக்கு அதிகாரம் அதிகமாக காணப்படும் விதத்திலமைந்த யாப்பு ஒன்றை மிக நுட்பமான முறையில் ஹமீட் உருவாக்கியிருக்கின்றாரோ என்று இதன்மூலம் எண்ணத் தோன்றுகின்றது. அதுவே இன்று இவ்வாறான நிலைமைக்குள் தலைமையை தள்ளிவிட்டுள்ளது மட்டுமன்றி, இவ்விருவரும் ஒருமித்து செயற்படாதவிடத்து மக்கள் காங்கிரஸின் சட்ட ரீதியான இயங்குதளம் தேர்தல்கள் திணைக்களத்தால் சவாலுக்குட்படுத்தப்படக்; கூடிய அபாயம் கூட ஏற்படலாம்

தேசியப் பட்டியல் வழங்கப்பட்டிருந்தால் ஹமீட்டின் எதிர் செயற்பாடுகளை தடுத்திருக்கலாம். ஆனால் அதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. 'தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றுவோம்' என்று தனது வீட்டுக்கு முன்னால் சுவரொட்டியில் ஒட்டிவைத்திருந்த ஹமீட்டுக்கு, எம்.பி. பதவி கிடைக்காமல் போனது மட்டுமன்றி, இஸ்மாயில் அல்லது ஜெமீலுக்கு கிடைத்தது போன்று கூட்டுத்தாபன தலைமை பதவிகளுக்காகவும் தனது பெயர் பரிசீலிக்கப்படாது போய்விட்டமை அவரது எதிர்ப்பியக்கத்துக்கு விசை பூட்டியுள்ளது.

மறுபக்கத்தில், ஹமீட்டை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்ற - தலைவர்களுக்கே உரித்தான நிலைப்பாட்டில் தலைவர் ரிஷாட் இருக்கின்றார். ஹமீட்டை வைத்துக் கொண்டுதான் கட்சியை கொண்டு செல்ல வேண்டுமென்ற நிலை தலைவருக்கு இல்லை. இப்போது வேறு பலரின் பக்கபலம் உள்ளதாக அவர் கருதலாம். 

எது எப்படியோ, மிகக் குறுகிய காலத்தில் வளர்ச்சியடைந்த ஒரு கட்சிக்கு கண்பட்டது போலாகிவிட்டது. மக்கள் காங்கிரஸ் கட்சியானது முஸ்லிம் காங்கிரஸை விஞ்சிவிடுமோ என்று எண்ணுமளவுக்கு அதனது செயற்பாடுகள் விறுவிறுப்பாக அமைந்திருந்தன. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு பெரிதாக ஒன்றும் நடந்த மாதிரி தெரியவில்லை. பாடசாலை விடுமுறையில் சுற்றுலா செல்லும் குடும்பத்தை போல கட்சித் தலைவர் தனது பரிவாரங்களுடன் அவ்வப்போது வாக்காளர்களுள்ள பிரதேசங்களுக்கு வந்து செல்கின்ற போதும் தேர்தல்கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக எந்தத் தகவலும் கிட்டவில்லை.

இதற்கிடையில்தான் தலைவருக்கும் செயலாளருக்கும் இடையிலான அதிகாரப் போட்டி உருவெடுத்துள்ளது. இது

அடிப்படையில் கௌரவம் அல்லது தாழ்வுச்சிக்கல் சார்ந்த அரசியலாக இருக்கின்றது. வளர்ந்துவரும் ஒரு கட்சிக்கு இது ஆரோக்கியமான ஒரு நிலைமை அல்ல. உள்ளூராட்சி  மன்ற தேர்தல் ஒன்றை நாடு எதிர்கொண்டுள்ள ஒரு  காலகட்டத்தில் கட்சியின் ஒட்டுமொத்தமான செயற்பாட்டுத்தளமும் செயலிழந்து முடங்கிப் போயுள்ளது, இந்நிலையில் வெளியாகியுள்ள 'ஹமீட் மீண்டும் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்' என்ற செய்தி வெறும்

செய்தியாக இருந்தால் மட்டும் போதாது. இருவரது உறவும் நிஜத்தில் பலப்பட வேண்டும். தனிப்பட்ட நலன்கள், கௌரவம், தாழ்வுச் சிக்கல்களுக்கு அப்பால்...... மக்களுக்காக கட்சி உறுப்பினர்கள் ஒன்றுபட்டு செயற்படவேண்டும். இல்லையென்றால், சூனியத்துக்குள் அரசியல் எதிர்காலத்தை தேட வேண்டியிருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .