Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 செப்டெம்பர் 09 , பி.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ
உலக வரலாற்றில் சில நாட்கள் பிறவற்றிலும் முக்கியமானவை. அதன் பொருள் பிற நாட்கள் முக்கியமற்றவை என்பதல்ல. மாறாகச் சில நாட்கள் உலக வரலாற்றின் திசைவழியையே மாற்றியதால், அவை காலங்கடந்தும் தமது பெறுமதியை இழக்காது உயிர்ப்புடன் இருக்கின்றன.
செப்டெம்பர் 11 அல்லது 9/11 என்றவுடன், 2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அனைவரதும் நினைவுக்கு வரும். புதிய உலக ஒழுங்கைக் கட்டமைக்க அமெரிக்கா தோற்றுவித்த 'பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தம்' என்ற கோட்பாட்டுருவாக் கத்துக்கான சாட்டாக அந் நிகழ்வு அமைந்தது.
'ஒன்றில் நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள், அல்லது பயங்கரவாதிகளோடு இருக்கிறீர்கள்' என்ற புகழ்பெற்ற பிரகடனத்தோடு, அமெரிக்காவுடன் உடன்படாத எல்லோரையும் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்- பயங்கரவாதிகளாக அறிவித்துத் தன்னைத் தந்தைக்கேற்ற தனயனாக நிரூபித்தார்.
ஆனால், செப்டெம்பர் 11இன் முக்கியத்துவம் இரட்டைக் கோபுரங்களின் மீதான தாக்குதலுக்கு வரையறுக்கப்பட்டதல்ல. அதற்கு முந்திய பல 9/11களின் பிரதான குற்றவாளியாக அமெரிக்கா இருந்திருக்கிறது. பேசப்படும் உலக வரலாற்றில் அதிகம் கவனத்தை ஈர்க்காத கோர நிகழ்வுகள் அவை.
இளைய ஜோர்ஜ் புஷ்ஷின் தந்தை ஜோர்ஜ் புஷ் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவேளை 1990 செப்டெம்பர் 11ஆம் திகதி அமெரிக்க காங்கிரஸின் இணைந்த கூட்டத்தில் உரையாற்றும்போது சதாம் ஒரு குற்றவாளியென்றும் உலக நலனுக்காக அமெரிக்கா ஈராக்கைத் தாக்கப் போகிறது என்றும் தெரிவித்தார். அதன் பின்னர் அமெரிக்கா, ஈராக் மீது தொடுத்த பாலைவனப் புயல் நடவடிக்கை (Operation Desert Fox) எனும் தாக்குதலில் ஏராளமான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1970ஆம் ஆண்டு, மருத்துவரும் இடதுசாரிச் சிந்தனையாளருமான சல்வடோர் அலன்டே- மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தென்னமெரிக்க நாடான சிலியின் ஜனாதிபதியாகத் தெரிவானவர். வறுமைக்குட்பட்ட சிலியை மக்கள் நல அரசுக் கொள்கைகளின் மூலம் உய்விக்க அவர் முனைந்தார். பல சமூக நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். தனியார்வசமிருந்த செப்புச் சுரங்கங்களைத் தேசியமயமாக்கினார்.
அலன்டேயின் இந் நடவடிக்கையை அமெரிக்கா கண்டித்தது. அதற்குப் பதிலளித்த அலன்டே 'ஒரு நாடு அதன் சுயவிருப்பின் அடிப்படையில் தனது பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்குகிறதே தவிரப் பிற நாடுகளின் விருப்பிற்கமைய அல்ல' என்றார். அமெரிக்காவின் கொல்லைப்புற நாடொன்றில் இடதுசாரிக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை.
சிலியின் செப்புச் சுரங்கங்களின் உரிமையாளர்களான அமெரிக்கக் நிறுவனங்கள், தேசியமயமாக்கலால் தாங்கள் நட்டமடைந்ததாகவும் அலன்டேயின் ஆட்சியை அகற்றுமாறும் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சட் நிக்சனிடம் கோரின. அலன்டேயின் நம்பிக்கைக்குரிய இராணுவத் தளபதி ஜெனரல் ரெனி ஷ்னைடர் இருக்கும்வரை ஆட்சி மாற்றம் சாத்தியமல்ல என்பதை உணர்ந்த அமெரிக்கா அவரைக் கொன்றது. அவருடைய இடத்துக்கு அமெரிக்கச் சார்புடைய ஒகஸ்ட்டோ பினோஷே நியமிக்கப்பட்டார்.
1973ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி சிலியின் இராணுவச் சதி அரங்கேறியது. அதனை இராணுவத் தளபதி ஒகஸ்ட்டோ பினோஷே முன்னின்று நடாத்தினார். ஜனாதிபதி மாளிகை மீது விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் சல்வ டோர் அலன்டே இறந்து கிடந்தார்.
அதனைத் தொடர்ந்து உருவான ஒகஸ்டோ பினோஷேயின் இராணுவ ஆட்சியில் மாற்றுக் கருத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காணாமற் போயினர். பினோஷே தனது அரசியல் எதிரிகளைக் கொல்ல 'ஒபரேசன் கொலம்போ' (ழுpநசயவழைn ஊழடழஅடிழ) என்ற நடவடிக்கையைச் செயற்படுத்தினார். அதற்கமைய, சிலிக்கு வெளியே அரசியற் தஞ்சங்கோரி வசித்துவந்த பலர் சிலிய இரகசியப் பொலிஸாரால் கொல்லப்பட்டனர்.
பினோஷே, 17 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்து பின்பு 1998 வரை சிலியின் இராணுவக் கட்டளைத் தளபதியாயும் ஆயுட் கால மூதவை உறுப்பினராயும் இருந்தார். மனித உரிமை மீறல்கட்காக ஸ்பானிய நீதிமன்றமொன்று குற்றவாளியாகக் கண்டதன் அடிப்படையில், மருத்துவத்துக்காகப் பிரித்தானியாவுக்குப் போயிருந்த அவரை 1998ஆம் ஆண்டு ஒக்டோபரில் பிரித்தானியப் பொலிஸ் கைதுசெய்தது.
எனினும் பிரித்தானியத் தொழிற் கட்சி அரசாங்கம், வழக்கு விசாரணைக்காக அவரை ஸ்பெயினுக்கு அனுப்ப மறுத்ததுடன் 2000ஆம் ஆண்டு அவரை நிபந்தனையின்றி விடுவித்து, சிலிக்கு மீள அனுமதித்தது. அங்கு அவர், முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில் குற்ற விசாரணைகளிலிருந்து பெற்ற விலக்கை நீதிமன்றம் நிராகரித்ததால், அவர் விசாரிக்கப்பட்டார்.
எனினும் வழக்கு முடியுமுன்பே அவர் காலமானார். அவர் விசாரணையை எதிர்நோக்கியிருந்த வேளை, அவருக்கு இரக்கங் காட்டும்படியும் அவரை விடுதலை செய்யும்படியும் பாப்பரசர் 2ஆம் ஜோன் போல் கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வரலாற்றில் மேலும் பின்நோக்கிப் போனால், 1917இல், முதலாம் உலக யுத்தம் நடைபெறுகையில், பிரித்தானிய வெளியுறவுச் செயலாளராக இருந்த ஆதர் ஜேம்ஸ் பல்‡பர், ஜேர்மனியில் இருந்த யூதர்கள் ஜேர்மனிக்கு எதிராக பிரித்தானியாவையும் நேச நாடுகளையும் ஆதரிப்பதோடு இரகசியத் தகவல்களையும் பெற்றுத் தருவார்களாயின், யூதர்களுக்கென்ற தனிநாடு ஒன்றை பிரித்தானியா உருவாக்கிக் கொடுக்கும் என உறுதியளித்த நாள் 1917ஆம் ஆண்டு செப்டெம்பர் 11. இன்றுவரை மத்திய கிழக்கு தொடர்ந்தும் எரிந்து கொண்டிருப்பதற்கும் இலட்சக்கணக்கான உயிர்களைக் காவுகொள்வதற்குமான அத்திபாரம் அன்றுதான் இடப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனை உலகப் பிரபலமாக்கியவர் மொனிக்கா லுவின்ஸ்கி. தன்மீது லுவின்ஸ்கி சுமத்திய குற்றத்தாற் பொது அபிப்பிராயம் தனக்கெதிராக மாறுவதைத் தடுக்கும் நோக்கில் 'பாலைவன நரி நடவடிக்கை' எனும் ஈராக் மீதான தாக்குதல் மூலம் கிளின்டன் கவனத்தைத் திசைதிருப்பினார். கிளின்டன் மீதான விசாரணைகளை மேற்கொண்ட அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கென்னத் ஸ்டார், கிளின்டனைக் குற்றவாளியாகக் கண்டு செனட் சபைக்கு அறிக்கை சமர்ப்பித்த தினம் 1998 செப்டெம்பர் 11.
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதல் நிகழ்ந்து 14 ஆண்டுகளின் பின், சமகால உலக அரசியலை எவ்வாறு விளங்குவதென்பது முக்கியமான ஒரு கேள்வியாகும். அந் நிகழ்வு கடந்த ஒன்றரைத் தசாப்தமாக உலக நிகழ்வுகளின் போக்கில் செலுத்திய தாக்கத்தை மீள்நோக்குவது பயனுள்ளது. இன்றும் அது உலக அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கின்றமை நோக்கற்பாலது.
9ஃ11ஐ எவ்வாறு விளங்கலாம் என்பதைச் சிந்தனையாளர் பியே பூர்டியோ (Pநைசசந டீழரசனநைர) பின்வருமாறு அழகாகக் கூறினார்: 'ஆட்டச்சீட்டுக்கள் எல்லாவற்றையும் தன்னிடமே வைத்துக்கொண்டு ஆட நினைக்கும் ஒருவனுடன் விதிகளை மாற்றி விளையாட வேண்டிய கட்டாயத்துக்கு மறுதரப்பு உள்ளாகிறது. விதிகளை மாற்றி ஆட வேண்டிய கட்டாயத்தின் கீழும் விதிகளை நியாயமாக மாற்றி விளையாட முடியாத நிலையில், நியாயமற்ற விதிகளைப் பின்பற்றும் நிலைக்கு மறுதரப்புத் தள்ளப்படுகிறது'.
9ஃ11 நிகழ்வை அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் இணைந்து திட்டமிட்டு நடத்தின என்ற வலுவான ஐயம் பலரிடையே உள்ளது. 1990இல் சோவியத் யூனியனின் உடைவின் பின்னணியில் அமெரிக்காவின் பொது எதிரி இல்லாமற் போனதைத் தொடர்ந்து தனது அலுவல்களை நிறைவேற்றவும் நியாயப்படுத்தவும் வாய்ப்பான ஒரு பொது எதிரியின்மையின் சிக்கலை அமெரிக்கா எதிர்கொண்ட நிலையில் இஸ்லாமும் முஸ்லிம்களும் புதிய பொது எதிரி உருவாக்கத்துக்காகப் பயன்படுமாறு அமெரிக்கா திட்டமிட்டு அரங்கேற்றிய நிகழ்வே 9ஃ11 என்ற வாதம் இப்போது வலுக்கிறது.
9/11 என்பது, கெடுபிடிப் போரின் முடிவின் பின்பான ஒற்றைப் பரிமாண உலக ஒழுங்கை முற்றுமுழுதாக உலுக்கிய ஒரு நிகழ்வெனலாம். எனவே, 9/11ஐ அந்த ஒற்றைப் பரிமாண உலக ஒழுங்கின் விளைவாகவும் பார்க்கலாம். இன்னொருவகையில் 1990களில் தீவிரமாகித் துரிதமடைந்த உலகமயமாக்கலின் எதிர்வினையாகவும் 9ஃ11ஐ விளங்கலாம். 9/11இன் விளைவாக உருவான 'பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்' இன்று வேறு திசைகளைத் தேடுகிறது. அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி, மூலதனமும் இலாபமும் மட்டுமன்றிப் பயங்கரவாதமும் உலகமயமாகலாம் என்ற உண்மை பலருக்கு உறைக்கின்றது. உலகமயமாக்கல் தனது தவிர்க்கவியலாத நெருக்கடியை எதிர்நோக்குகிறது.
பொருளாதாரமே சந்தையைத் தீர்மானிப்பது போல தேசியப் பாதுகாப்பே பூகோள அரசியலைத் தீர்மானிக்கிறது. அவ்வகையிற் பொருளாதார நெருக்கடியின் விளைவான சிக்கல்களைத் தவிர்க்கவும் திசைதிருப்பவும் ஈராக்கிலிருந்தும் ஆப்கானிஸ்தானிலிருந்தும் படைகளை விலக்க நேர்கிறது. ஒன்றரைத் தசாப்த காலத்தின் பின், வெல்லவே முடியாத போரில் வெளியேறுவதே வழி என அமெரிக்கா உணருகிறது.
இன்று பொருளாதார வீழ்ச்சி குறித்த பயங்கள் பயங்கரவாதம் குறித்த பயத்தைக் கீழ்த்தள்ளி முக்கியமற்றவையாக்குகின்றன. இன்று பயங்கரவாதம் குறித்த சவால்களை விட ஐரோப்பியப் பொருளாதார நெருக்கடி, அமெரிக்கப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி, சீனாவின் துரித வளர்ச்சியைத் தொடர்ந்த சரிவு என்பன பாரிய சவால்களாகவும் நெருக்கடிகளாகவும் தெரிகின்றன.
காற்றிற் கத்திவீசமுடியாதென அமெரிக்கா நன்கறியும். அதனாலேயே தொடர்ச்சியாக ஒரு பொது எதிரியை உருவாக்கித் தக்க வைக்கிறது. அப் பொது எதிரியின் பயன் ஒழியும்போது புது எதிரி உருவாகிறது. இன்று ரஷ்யாவும் சீனாவும் புது எதிரிகளாகத் தெரிந்தாலும் பூகோள அரசியல் அதை வெளிப்படையாக அறிவியாமல் மறிக்கிறது.
புது எதிரி உருவாக்கத்தில் அமெரிக்கா சிக்கல்களை இன்னமும் எதிர்கொள்வதால், இஸ்லாம்- தொடர்ந்தும் பொது எதிரியாக நிலைக்கிறது. அரபுலகில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிகள் அமெரிக்காவின் 9/11க்குப் பிந்திய நிகழ்ச்சிநிரலுக்குப் புதிய பரிமாணத்தை அளித்தன.
அதேவேளை, தென் அமெரிக்க நாடுகளில் நிகழ்ந்த ஆட்சி மாற்றங்கள், அப் பிராந்தியத்தில் அமெரிக்க எதிர்ப்பு அதிகரித்ததைக் குறிப்பதால், கியூபாவில் நல்முகங்காட்ட அமெரிக்கா முனைகிறது. சீனாவினதும் ரஷ்யாவினதும் எழுச்சி அமெரிக்க மேலாதிக்க நலன்களுக்கு முட்டுக்கட்டையாகிறது. 'பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்' என்பதை அமெரிக்கா தொடர்ச்சியாகத் தக்கவைக்க வேண்டிய தேவையை உணர்த்துவதுடன் இவை புதிய போக்கில் உலகைத் திருப்புகின்றன.
பக்தாத்தில் தன்னை நோக்கி ஈராக்கியனொருவன் நடந்துவரும் போது, ஓர் அமெரிக்கப் படைவீரனின் மனதில் அச்ச உணர்வே ஓங்குகிறது. அவன் ஒரு தற்கொலைக் குண்டுதாரியாக இருப்பானோ என்ற எண்ணம் அமெரிக்கப் படைவீரர்களை நிரந்தரமாக ஆட்கொண்டுள்ளது.
எந்த அச்ச உணர்வை ஆயுதமாகக் கொண்டு அமெரிக்கா உலகை ஆள நினைக்கிறதோ, அதே அச்ச உணர்வு அமெரிக்காவின் தோல்விக்கும் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் தோல்விக்கும் காரணமாகிறது. ஒரு நாட்டு மக்களின் ஜனநாயகத்தையோ சுதந்திரத்தையோ தீர்மானிக்கும் உரிமை அந் நாட்டு மக்களைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது என்ற பாடத்தைக் கடந்த ஒன்றரைத் தசாப்தங்களில் அமெரிக்கா கற்றிருக்க வேண்டும். கற்றிராவிடின், அமெரிக்க அதிகார வெறிக்கு அமெரிக்க மக்கள் பலியாவதைத் தவிர்க்க இயலாது.
9/11இன் படிமம் வெறுமனே இரட்டைக் கோபுரங்களில் விமானங்கள் மோதுவது மட்டுமல்ல. மொனிக்கா லுவின்ஸ்கி, சல்வடோர் அலன்டே, கல்லெறியும் பலஸ்தீனச் சிறுவன், கொலையுண்ட பல்லாயிரக்கணக்கான ஈராக்கியக் குழந்தைகள் என ஏராளமானவற்றை உட்பொதிந்துள்ளது. உலகின் எசமானர்கள் எங்களுக்குச் சொல்லும் வரலாறுகளை விடச் சொல்லாத வரலாறுகள் முக்கியமானவை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago