Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Thipaan / 2016 ஜூன் 04 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
வார்த்தை தவறிவிட்டதால், கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு வந்த வினை, அவரே எதிர்பாராத விடயமாகும். இது ஒரு பெரிய விவகாரமாக ஆக்கப்பட்டுள்ளமை சிறுபான்மை மக்களுக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு நல்லதொரு பாடமென்று கூறலாம். முதலமைச்சர் நஸீர், பகிரங்கமாக கடற்படை அதிகாரியொருவரை ஏசியமை, நாகரிகத்தின்படி தவறு என்று இப்பகுதியில் வெளியான கடந்தவார கட்டுரை சுட்டிக்காட்டியிருந்தது. இதில் சம்பந்தப்பட்டுள்ள எல்லாத் தரப்பினரும் விசாரிக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென அதில் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், ஒவ்வொரு தரப்பினரும், இவ்விடயத்தைத் தங்களுடைய வேறு வேறு காரணங்களுக்காகத் தமது கையில் எடுத்திருக்கின்றமை, தனித்தனியே அலசப்பட வேண்டிய விடயங்களாகத் தெரிகின்றன.
முதலமைச்சர் நஸீர் அஹமட், கடற்படைத் அதிகாரியை மேடையில் வைத்து மோசமான வார்த்தைகளால் ஏசியது மிகவும் தவறானதாகும். மானிடவியல் பண்புகளின் பிரகாரமும் மேடை ஒழுங்கின் அடிப்படையிலும், இது மிகவும் அசிங்கமான நடத்தை என்பதை மறுப்பதற்கில்லை. 'ஒழுங்குமுறை (Protocol) தெரியுமா' என்று கேட்டு அறிவுரை வழங்க முயற்சித்த ஒரு மாகாணத்தின்; முதல்வர், 'ஒழுங்கில்லாமல்' நடந்து கொள்வதைப் பெரிய தைரியம் என்றோ, புத்திசாலித்தனம் என்றோ வரையறுப்பது சிரமமான காரியமாகும்.
கிழக்கு ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான திரைமறைவு முறுகல்கள், அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதில் நிலவுகின்ற பரஸ்பர அதிமேதாவித் தனங்கள் பற்றிய நஸீரின் மனக் கொந்தளிப்பு, இச்சம்பவத்தில் கடுமையாக வெளிப்பட்டுள்ளது. ஆளுநருக்கு ஏச முடியாத முதலமைச்சர், அதற்கு பதிலாக கடற்படை அதிகாரியை போட்டுத் தாக்கியுள்ளார். நஸீர் அஹமட், உச்ச ஸ்தாயியில் ஏசிக் கொண்டிந்த வேளையில், சிரித்துக் கொண்டிருந்ததன் மூலம் அவரை விடத் தாங்கள் நல்லவர்கள் என்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை. ஆளுநரும் கடற்படை அதிகாரியும் ஏற்படுத்தியுள்ளனர். இது முதலமைச்சருக்கு 'மைனஸ் பொயின்டாக' ஆகியுள்ளது.
தனக்கு உரிய இடம் அல்லது கௌரவம் கொடுக்கப்படவில்லை என்றால், அதனை வெளிப்படுத்துவதற்கு ஒரு முறை இருக்கின்றது. 'ஆளுநர் மேடைக்கு அழைத்ததற்கு இணங்க, நான் மேடையில் ஏற முற்பட்ட வேளையில் கடற்படை அதிகாரி, தன்னைத் தடுத்ததாக' முதலமைச்சர் கூறுகின்றார். ஆனால், இதை மற்றைய தரப்பு மறுக்கின்றது. அந்தச் சம்பவத்தின் பின்புலம் என்ன என்பது பற்றி இங்கு யாரும் பேசவில்லை. கமராவில் என்ன பதிவாகி இருக்கின்றது என்பது பற்றியே விவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கிழக்கின் முதலமைச்சர் என்பவர், இம்மாநிலத்தில் வாழும் முஸ்லிம்களை மட்டுமன்றி, கணிசமான தமிழர்களையும் ஒரு சில சிங்கள மக்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்றவர். ஆகையால், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரால் நியமிக்கப்பட்டவர் என்று கருதாமல், தான் ஒரு மக்கள் பிரதிநிதி என்ற எண்ணத்துடன் நஸீர் செயற்பட்டிருக்க வேண்டும்.
கிழக்கில், அரச நிர்வாகப் பொறிமுறையின் ஆட்சி இவ்வாறுதான் போய்க் கொண்டிருக்கின்றது என்பதற்கு, சம்பூரில் இடம்பெற்ற இச்சம்பவம் நல்லதொரு அத்தாட்சியாகும். அதுமட்டுமன்றி, முதலமைச்சருக்கு இது ஒரு பாடமாகவும் அமைந்திருக்கின்றது. எவ்வாறென்றால், கிழக்குக்கான முதலமைச்சை தமக்குத் தரவேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் ஒற்றைக்காலில் நின்று, அதனைப் பெற்றுக் கொண்டாலும் அளப்பரிய சாதனைகள் எதனையும் நிகழ்த்தியிருக்கவில்லை. ஆனால், நஸீர் அஹமட், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தனக்குண்டான கௌரவத்தை எதிர்பார்க்கின்றவர். தனக்கு முதலிடம் அளிக்கப்பட வேண்டுமென நினைப்பவர். இது பலரதும் கருத்தாகும். ஓர் அரச அதிகாரியோ, யாரோ ஒருவர் தனது கதையைக் கேட்கவில்லை என்றால், கடுந்தொனியில் ஏசுவதில் அவர் பின்னிற்பதில்லை என்று, அவரைப் பற்றி அறிந்தவர்கள் சொல்கின்றனர். அது உண்மையாக இருக்குமாக இருந்தால், அவரது செயற்பாட்டின் பாரதூரத்தை, காலம் அவருக்கு ஒரு பகிரங்க மேடையில் உணர்த்தியிருக்கின்றது என்று மக்கள் பேச, காதில் விழுந்த கதைகளையும் பரிசீலிக்க வேண்டியுள்ளது.
இச்சம்பவம் நடைபெற்ற பிற்பாடு, முதலமைச்சரைச் சிலர் 'தைரியசாலி' என்று போற்றினர். சிலர் 'அநாகரிகமானவர்' என்று தூற்றினர். அவரவர் பார்வையில் இது சரியானதும் கூட. ஆனால், மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், மூன்று நான்கு நாட்களாக மௌனம் காத்தார். இதற்கிடையில், முப்படைகளும் முதலமைச்சர் மீது தடையை விதித்திருந்தன. முதலமைச்சர் இவ்வாறு நடந்து கொண்டது தவறு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதற்கு பிராயச்சித்தமாக அவர் என்ன செய்ய வேண்டும் என்று எந்தக் கோரிக்கையையும் முன்வைக்காது, முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி, நாட்டில் இல்லாத ஒரு நேரத்தில் திடுதிடுப்பென தடை ஒன்றை அறிவித்தமை, பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது.
இந்நிலையில், 'கிழக்கு முதலமைச்சர், நிபந்தனையற்ற விதத்தில் மன்னிப்புக் கோர வேண்டும்' என்று மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்தார். ஏற்கெனவே, மன்னிப்புக் கேட்கும் தொனியில் கருத்து வெளியிட்டிருந்த நஸீர் அஹமட், பின்னர் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டார். இதனை நோக்கும்போது, மேற்படி தடை, ஹக்கீமின் அறிவிப்பு, தடைநீக்கம், மன்னிப்பு கேட்டமை எல்லாம் ஒரு திரைப்படக் காட்சி போல அல்லது சொல்லி வைத்தாற்போல நடந்திருக்கின்றது.
இதற்கிடையில், பேரினவாதச் சக்திகள் இதை வேறு ஒரு கண்கொண்டு பார்க்க ஆரம்பித்து விட்டன. கிழக்கு முதலமைச்சர், ஆளுநரையும் கடற்படை அதிகாரியையும் மதிக்கவில்லை என்பதை ஒரு சர்வதேசப் பிரச்சினையாக்கி, அந்தத் தீயில் குளிர்காய்வதற்கு இனவாதம் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டது.
மட்டக்களப்பில் பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சில நியாயங்கள் இருந்ததாக நினைத்துக் கொண்டிருந்த வேளையில், சிங்கள அமைப்புக்களும் வேறு சிலரும் முதலமைச்சரை விமர்சிக்கத் தலைப்பட்டனர். கிழக்குக்கு வெளியில் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக, நுவரெலியாவிலும் சீனிகமவிலும் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன. இது தெளிவான இனவாதத்தை தூண்டும் செயற்பாடாகவே தெரிகின்றது.
முதலமைச்சரைக் கடற்படை அதிகாரி அவமதித்திருப்பது உறுதி செய்யப்பட்டால், அது சட்டப்படியாக அணுகப்பட வேண்டும். அதைவிடுத்து, சிங்கள கடும்போக்கு சக்திகளும் காவியுடைதாரிகள் சிலரும் வீதிக்குக் குதிப்பது, மஹிந்த ஆட்சியில் ஏற்பட்டது போன்ற இனவாத முறுகல் ஒன்று உருவாகும் நிலைமைக்கே இட்டுச் செல்லும். பல சிங்கள அரசியல்வாதிகள் இந்நிலைமையை சரியாகக் கணிப்பிட்டுள்ளனர். நஸீர்
அஹமட், ஒரு சிறுபான்மையின முதலமைச்சர் என்பதற்காகவே இவ்விடயம் பூதாகரமாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளமை நூறுவீதம் உண்மையானதாகும். ஏனெனில், அரச அதிகாரிகள் அல்லது படை அதிகாரிகள் அவமானப்படுத்தப்படுவது இலங்கையின் அனுபவத்தில் இது முதல் முறையல்ல. பொலிஸ் அதிகாரியின் தொப்பியை களற்றியது தொடக்கம், இராணுவத் அதிகாரியொருவரைச் சிறையில் அடைத்தது வரை எத்தனையோ சம்பவங்கள் இந்த நாட்டில் இடம்பெற்றிருக்கின்றன.
அப்போதெல்லாம் வீதிக்கு வராத சில சக்திகள் இன்று, ஆர்ப்பாட்டம் நடத்துவது அபத்தமானதாகும். அதற்காக, கிழக்கு முதலமைச்சர் செய்தது சரியென்று கூறவரவில்லை. முன்னர் பலர் செய்தார்கள் என்பதற்காக முதல்வரும் செய்யலாம் என்றுமில்லை. மாறாக, அவரது தவறு சட்டத்தின் அடிப்படையில் கையாளப்பட வேண்டும் என்பதையே வலிறுத்த விரும்புகின்றோம். நிலைமை இவ்வாறிருக்க, மு.கா தலைவர் ஹக்கீம், 'நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும்' என்று அறிவித்தார். இனவாதிகள் இவ்விடயத்தை கையில் எடுப்பதால், நாட்டில் ஓர் இனமுறுகல் வந்து விடக் கூடாது என்பதற்காகவே ஹக்கீம் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டார்.
இது உண்மையில் பாராட்டப்பட வேண்டியது. ஆனால் கிழக்கு முதலமைச்சர் என்பவர், கிழக்கில் வாழும் மக்களின் குறிப்பாக முஸ்லிம்களின் பிரதிநிதியாவார். எனவே, அவரைப் பற்றிய விவகாரத்தை பகிரங்கமாக, தீர ஆராயமல் மன்னிப்பு கேட்குமாறு திடுதிடுப்பென பணிப்புரை விடுத்தமை, பல்வேறு உள்ளர்த்தங்களைக் கொண்ட சாணக்கியம் என்றே சொல்ல முடியும்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சம்பூர் நிகழ்வுக்குச் சென்றிருக்கின்றார். ஒழுங்குமுறை (Pசழவழஉழட) அடிப்படையில் தூதுவருக்கு மேலுள்ள ஸ்தானத்தில் இருக்கும் முதலமைச்சருக்கு மேடையில் ஆசனம் ஒதுக்காதது ஏன் என்பது குறித்து விழா ஏற்பாட்டாளர்களிடம் விசாரிக்க வேண்டும். மேடையில் ஏற முயன்ற ஆளுநர் தடுக்கப்பட்டதாக கூறப்படுவதன் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டிருக்க வேண்டும்.
மறுபக்கமாக, கடற்படை அதிகாரி ஏதாவது அடிப்படையில் தவறிழைத்திருப்பாராயின் அது குறித்தும் உள்ளக விசாரணைகள் நடாத்தப்பட்டிருக்க வேண்டும். இவ்விவகாரத்தில் ஆளுநரின் பங்கு என்ன என்பதையும் ஆராய்ந்திருக்க வேண்டும். இதையெல்லாம் செய்த பின்பே மன்னிப்பு கேட்பதா என்ற முடிவுக்கு வந்திருக்க வேண்டும். மார்க்கம் படித்த முதல்வர் நடந்து கொண்டவிதம் மக்களை முகம்சுழிக்க வைத்தது என்னவோ உண்மைதான். அதற்காக அவர் பேசியதற்கே ஆதாரம் இருக்கின்றது என்பதால் அவரை மட்டுமே தண்டிக்க நினைப்பது கூடாது.
எனவே, 'கிழக்கு முதலமைச்சர் நடந்து கொண்ட முறை மிகவும் அநாகரிகமானதாகும். அதற்காக நாம் மனம் வருந்துகின்றோம். எனவே, இருதரப்பிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதால், அது குறித்துத் தீர விசாரிக்க வேண்டும். இது விடயத்தில் நஸீர் அஹமட் மட்டுமே முற்றுமுழுதாக தவறு செய்திருப்பாராயின், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறே, ஒருவேளை மற்றைய தரப்பும் ஏதாவது தவறு செய்திருக்குமாயின் அது தொடர்பிலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்' என்பது போன்ற ஓர் அறிக்கையையே மு.கா தலைவர் வெளியிடுவார் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அது நடக்கவில்லை. இருப்பினும், தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், கிழக்கு முதலமைச்சருக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டுள்ளமை கவனிப்புக்குரியது.
உதாரணமாக, வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர், இவ்வாறான ஒரு சர்ச்சைக்குள் சிக்கிக் கொண்டால், (அவர் இவ்வாறு ஒழுங்கீனமாக பேசியிருக்க மாட்டார் என்பது வேறு விடயம்) தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருமாறு அறிவித்திருப்பாரா, அதை தமிழ் சமூகம் ஏற்றுக் கொண்டிருக்குமா, என்று இங்கு சிந்திக்க வேண்டியுள்ளது. மு.கா தலைவர் ஹக்கீம், எப்போதுமே தன்னை ஒரு தேசிய நல்லிணக்க அரசியல்வாதியாக காண்பிக்கவே முனைகின்றார். முஸ்லிம்களுக்கு சார்பான நிலைப்பாட்டை எடுத்தால் சிங்களவர்கள் கிளர்ந்தெழுந்து விடுவார்கள் என்ற கருத்தையே அவர் முன்வைத்து வருகின்றார்.
கிழக்கு மக்களுக்குச் சார்பாக உறுதிமிக்க ஒரு நிலைப்பாட்டை எடுத்தால், கலகெதர தொகுதி மற்றுமுள்ள சிங்கள மக்களின் வாக்குகளை இழக்க நேர்வதுடன், தேசிய ரீதியாக தனது இமேஜும் சிதைந்து விடுமோ என்று ஹக்கீம் அச்சப்படுகின்றாரோ என்ற நியாயமான சந்தேகம் மு.கா உயர் பீட உறுப்பினர்களிடையே ஏற்பட்டிருக்கின்றது. யார் என்ன செய்தாலும் ஜனாதிபதியும் பிரதமரும் இது விடயத்தில் எல்லாப் பக்கங்களிலும் சம நீதியை நிலைநாட்ட வேண்டும். கிழக்கின் ஆட்சிக் கட்டமைப்பில் உள்ள, அதிகாரப் பகிர்ந்தளிப்பு சார்ந்த நடைமுறைச் சிக்கல்களை மறுசீரமைக்கவும் வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
40 minute ago