2025 மே 15, வியாழக்கிழமை

சாலாவ ஆர்ப்பாட்டங்களும் தமிழரின் பொறுமையும்

Thipaan   / 2016 ஜூன் 16 , பி.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாலாவயிலுள்ள இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தினால், பாதிக்கப்பட்டவர்கள், அடிக்கடி அவிசாவளை- கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். வெடிவிபத்தினால், நூற்றுக்கணக்கான வீடுகளும் கடைகளும் சேதமடைந்துள்ள நிலையில், விரைவாக அவற்றைத் திருத்தித் தருமாறு கோரியே அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர், அமைச்சர்கள், அதிகாரிகள் அடிக்கடி அங்கு சென்று பேச்சுக்களை நடத்துகின்றனர், வாக்குறுதிகளைக் கொடுக்கின்றனர். ஆனாலும், அப்பகுதி மக்கள் அவ்வப்போது போராட்டங்களை நடத்திக் கொண்டு தான் இருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும், அவர்களின் இழப்புகள் முழுமையாக ஈடு செய்யப்படும் என்ற அரசாங்கத்தின் வாக்குறுதியை அவர்கள் முழுமையாக நம்பத் தயாராக இல்லை என்பதையே இந்தப் போராட்டங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தி விடுவதற்கு சில தரப்பினர் முயற்சிப்பதாக, நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சாலாவ பகுதியில் பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களுக்குப் பின்னால், சில அரசியல்வாதிகள் இருப்பதாக தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

குட்டையைக் குழப்பி விடுவதில் மாத்திரமன்றி, குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதும் கூட எல்லா அரசியல்வாதிகளுக்கும் கைவந்த கலை. எனவே, அரசாங்கத்துக்கும், இராணுவத்துக்கும் எதிராக பொதுமக்களைத் தூண்டிவிடுவதற்கு எதிரணியில் உள்ள அரசியல்வாதிகள் தாராளமாகவே முயற்சி செய்வார்கள் என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. இத்தகைய நிலையில் தான், அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் எதிரான போராட்டங்களை அடக்குவதற்காகவே, சாலாவயில் வீடுகளை இழந்தோருக்கு, அவர்களின் வீடுகளைத் திருத்திக் கொடுக்கும் வரை, 3 மாதங்களுக்குத் தலா 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. அந்த அறிவிப்புக்குப் பின்னரும் கூட, சாலாவ மக்கள் போராட்டங்களை நிறுத்தவில்லை.

இந்த வெடிவிபத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், இராணுவத்தினருடனும் அரசாங்கத்துடனும் முரண்படும் அளவுக்குச் சென்றிருக்கின்றனர். இந்தளவுக்கும் அரசாங்கமும் இராணுவமும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வசதிகளைச் செய்து கொடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றன.

வடக்கு, கிழக்கில் போர் நடந்த காலங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுபோன்ற உதவிகள் ஒருபோதும் அளிக்கப்பட்டதுமில்லை. வசதிகள் கிடைத்ததுமில்லை. நிவாரணம் என்ற பெயரில் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களும், தொண்டு நிறுவனங்கள் அளித்த சில தற்காலிக தங்குமிட வசதிகளையும் தவிர வேறெந்த உதவிகளும் தமிழ் மக்களுக்கு கிடைத்ததில்லை. 27 ஆண்டுகளாக வடக்கிலுள்ள மக்கள் முகாம்களில் வாழ்கின்றனர், உங்களால் அப்படி வாழ முடியுமா என்று சிங்கள மக்களைப் பார்த்து அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரது அந்தக் கேள்வியின் அர்த்தம் சிங்கள மக்களுக்குப் புரிந்திருக்கவில்லை. ஏனென்றால், சாலாவ வெடிவிபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களால் சில நாட்களுக்குக் கூட முகாம்களில் வாழ முடியவில்லை. தமது வீடுகளைத் திருத்தித் தருமாறு கோரி அவர்கள் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கி விட்டார்கள். வெடிவிபத்து சமூகத்தின் எல்லா மட்டங்களைச் சேர்ந்தவர்களையும் தான் நிர்க்கதி நிலைக்குக் கொண்டு வந்தது. அதுபோலத் தான், போரும் தமிழ்மக்களை ஏழைகள் என்றோ வசதியானவர்கள் என்றோ தராதரம் பாராமல் தான் பாதிப்பை ஏற்படுத்தியது. மாட மாளிகைகளில் வசித்தவர்களையும் அடுத்தவேளை உணவுக்கு என்னசெய்வதென்று தெரியாத நிலைக்கு- இரவில் எங்கே தூங்குவது என்று புரியாத நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியது. சாலாவவையில் மட்டும் தான் அந்த நிலை என்றில்லை. வடக்கு, கிழக்கில் வானில் இருந்து வீசப்பட்ட குண்டுகள், எத்தனையோ பேரின் வீடுகளை தரைமட்டமாக்கி, ஒரே நொடியில் அவர்களை ஒன்றுமில்லாதவர்களாக வீதிக்கு அனுப்பியதை மறந்து விட முடியாது.

சாலாவயில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பொறுமையில்லை. நூற்றுக்கணக்கான வீடுகளை எப்படி ஒரே வேளையில் திருத்தியமைக்க முடியும் என்று சிந்திக்கவும் அவர்கள் தயாராக இல்லை. 27 ஆண்டுகளாக இன்னமும் நலன்புரி முகாம்களின் வாழும் மக்களின் பொறுமை சிங்கள மக்களுக்குத் தெரியாததால் தான், சாலாவயில் வீடுகளை இழந்தவர்களுக்கு இத்தனை அவசரம். வடக்கு, கிழக்கிலும் போரின் போது, இதைவிட அதிகளமானளவு வீடுகள் அழிக்கப்பட்டன. சாலாவயில் நிகழ்ந்தது ஒரு விபத்து மட்டும் தான். ஆனால் போர் என்ற பெயரில், வடக்கிலும், கிழக்கிலும் வீடுகளும் சொத்துக்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்ட வரலாறு சிங்கள மக்களுக்குத் தெரியாது.

தமிழருக்கு எதிராக திட்டமிட்ட வன்முறைகள், தாக்குதல்கள் நிகழ்த்தப்படவில்லை என்று சாதிக்கும் அரசாங்கமும் படைகளும், ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலையானதையும் அவர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டதையும், போரின் போது தவறுதலாக ஏற்பட்ட இழப்புகளாகவே காட்ட முனைகின்றன. ஆனால் உண்மை அத்தகையதல்ல.  புலிகளின் முகாம்களே இல்லாத எத்தனையோ பகுதிகள், வீடுகள் தாக்கப்பட்டிருக்கின்றன அழிக்கப்பட்டிருக்கின்றன. விமானக் குண்டுவீச்சுக்கள், பீரங்கித் தாக்குதல்கள் மூலம் அழிக்கப்பட்ட வீடுகளில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களில் எத்தனை பேருக்கு அரசாங்கம் நிவாரணம் கொடுத்திருக்கிறது, எத்தனை வீடுகளை திருத்தியமைத்துக் கொடுத்திருக்கிறது?

சாலாவயில் வீடுகளை இழந்தவர்களுக்கு இப்போதைய அரசாங்கம் 50ஆயிரம் ரூபாயை மாதாந்தம் வழங்க முன்வந்திருக்கிறது. ஆனால் வடக்கிலும் கிழக்கிலும், சில நூறு ரூபாய் உலர் உணவு நிவாரணப் பொருட்களுக்கு அப்பால் எதுவுமே கிடைத்ததில்லை. அதற்குக் கூட அவர்கள் கால்கடுக்கக் காத்திருக்கவும், அங்குமிங்கும் அலையவும் வேண்டியிருந்தது. அப்போது வேறு அரசாங்கம் இப்போது வேறு அரசாங்கம் என்றில்லை. ஐ.தே.க ஆட்சிக்காலத்திலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்காலத்திலும் ஒரே நிலையைத் தான் தமிழர்கள் எதிர்கொண்டனர். இப்போதும் அந்த இரண்டு கட்சிகளும் தான் ஆட்சியில் இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாக இருந்தால் ஒரு வகையிலும் சிங்களவர்களாக இருந்தால் இன்னொரு வகையிலும் தான், அணுகப்படுவார்கள், அணுகப்படுகிறார்கள் என்பதற்கு இதுவொன்றே சான்று.

சாலாவயில் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு உரிய வசதிகளும் நிவாரணங்களும் அளிக்கப்பட வேண்டும். அதற்கான பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது, ஏனென்றால் அரசாங்கத்தின் ஒரு கருவியான இராணுவத்தின் பொறுப்பீனத்தினால் தான் இந்த விபத்து நேரிட்டது. இதற்கான காரணங்கள் இன்னமும் கண்டறியப்படாது போனாலும், அந்தக் காரணம் ஒருவேளை சதிச்செயலாகவே இருந்தாலும் கூட, அதற்கு இராணுவத்தின் அசட்டை மற்றும் பொறுப்பின்மை தான் காரணம் என்பதை மறுக்க முடியாது.

எனவே, பாதிக்கப்பட்டவர்கள், மீண்டும் தமது வாழ்க்கையை மீள ஆரம்பிக்கும் வகையில் அரசாங்கம் உதவியே ஆக வேண்டும். ஆனால், அதேவேளை, இதேபோன்று எல்லா மக்களுக்கும் அரசாங்கம் உதவக் கடமைப்பட்டுள்ளது என்பதே முக்கியம். தமிழ் மக்கள் அவ்வாறு நடத்தப்படவில்லை. அவர்களுக்கு உதவும் கடப்பாட்டை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. பாதிக்கப்பட்ட தமது பிரச்சினையை விரைவாகத் தீர்க்க வேண்டும் என்பதற்காக, சிங்கள மக்களே இராணுவத்துக்கு எதிராகவும் கை உயர்த்தத் தொடங்கியிருக்கின்றனர்.

வடக்கில் புலிகளை அழித்தபோது, யாரை கதாநாயகர்களாக- வெற்றிவீரர்களாக தூக்கி மகிழ்ந்தார்களோ, அவர்களுக்கு எதிராகவே போராட்டம் நடத்துகின்றனர். இதனைத் தமிழர்களால் முன்பு செய்ய முடியவில்லை. இராணுவத்தினருக்கு எதிரான போராட்டம் நடத்திய தமிழர்கள் பல தடவைகள் உயிரைத் தான் இழக்க நேரிட்டது. அவர்கள் அனைவருமே புலிகளாக சித்திரிக்கப்பட்டனர். பயங்கரவாதிகளாகப் பட்டம் கட்டப்பட்டனர். அவர்கள் நடத்திய போராட்டங்கள் பயங்கரவாதப் போராட்டங்களாக வெளிப்படுத்தப்பட்டு நசுக்கப்பட்டன. ஆனால் சிங்கள மக்களின் போராட்டங்களை அவ்வாறு நசுக்க முடியாது. ஏற்கெனவே, முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், வெலிவேரியவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய சிங்கள மக்களை இராணுவம் கண்மூடித்தனமாகத் தாக்கிய சம்பவம் மிகப்பெரிய அரசியல் விளைவுகளை ஏற்படுத்தியது. இதுபோன்ற போராட்டங்களை வடக்கில் தமிழ் மக்கள் நடத்தினால், அதனையும் பொறுமையுடன் எதிர்கொள்ளும் நிலையில் இராணுவமும் அரசாங்கமும் இருக்குமா என்பது சந்தேகம் தான்.

எவ்வாறாயினும் சிங்கள மக்களைப் பொறுத்தவரையில், கூடுதல் சுதந்திரமும், உரிமைகளும் உள்ளன என்பதையே இத்தகைய போராட்டங்கள் காட்டி நிற்கின்றன. சாலாவ அனர்த்தம் என்பது, ஒரு போர்க்களத்தின் அழிவுகளை சிங்கள மக்களின் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. தமிழர்களுக்கு வடக்கிலும் கிழக்கிலும் ஏற்பட்ட பாதிப்புகளின் தாக்கத்தைப் புரிய வைத்திருக்கிறது. எனினும், தமிழர்கள் அளவுக்குத் தாம் பொறுமைசாலிகள் அல்ல என்பதை சிங்கள மக்கள் தமது போராட்டங்களின் மூலம் நிரூபித்திருக்கின்றனர். அவர்களுக்கு இருக்கும் சுதந்திரமும் உரிமைகளும் அவர்களைப் போராடும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. அந்தப் போராட்டத்துக்கு செவிகொடுக்க வேண்டிய கட்டாயத்தையும் அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், தமிழர்கள் காட்டும் பொறுமை தான் அவர்களை மூன்று தசாப்தங்களின் பின்னரும் முகாம்களில் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளியிருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .