2025 மே 17, சனிக்கிழமை

சுவையான இறைச்சியோடு சேர்ந்துவரும் கொடிய புற்றுநோய்

Thipaan   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளால் புற்றுநோய் ஏற்படுகின்றது எனவும், சிவப்பு இறைச்சிகளால் கூட புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன எனவும், உலக சுகாதார நிறுவனத்தின் புற்றுநோய் முகவராண்மை வெளிப்படுத்திய ஆய்வறிக்கையின் காரணமாக, ஓரளவு பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளில் இது தொடர்பாக 'பதற்றம்' எனக்கூறக்கூடிய அளவுக்கு நிலைமை ஏற்படவில்லை என்ற போதிலும், மேலைத்தேய நாடுகளில் அதிகளவிலான கலந்துரையாடல்கள் ஏற்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

உதாரணமாக, கூகிளின் தேடுதல் வரலாற்றிலேயே, புற்றுநோய் அதிகளவில் தேடப்பட்ட 24 மணிநேரங்களாக, திங்கள் மாலை (இலங்கை நேரப்படி) முதல் செவ்வாய் மாலை வரையிலான காலப்பகுதி அமைந்தது. அதேபோல் தான், உலக சுகாதார நிறுவனம் பற்றி அதிகமாகத் தேடப்பட்டதும், குறித்த காலப்பகுதியில் தான். இவ்வாறு, அதிக தேடல்களையும் கவனத்தையும் கவலையையும் குழப்பத்தையும் இது ஏற்படுத்தியிருப்பது, இது தொடர்பான பல்வேறுபட்ட விடயங்களை ஆராய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகின்றது.

முதலில், உலக சுகாதார நிறுவனத்தின் செய்தியின் தெளிவான விளக்கம் அவசியமானது.

இறைச்சியின் சுவையை அதிகரிக்கவும் நீண்டகாலம் பாதுகாக்கவும், உப்பிடுதல், அதிக வெப்பநிலையில் சமைத்தல் உள்ளிட்டவை மூலமாகச் சமைக்கப்படும் ஹம், சொசேஜ், பேக்கன், சலாமி, பெப்பரோணி போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளால் புற்றுநோய் உருவாக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ள அந்நிறுவனம், ஆடு, செம்மறி ஆட்டுக் குட்டி, மாடு, கன்று, பன்றி, குதிரை உள்ளிட்ட இறைச்சிகள், புற்றுநோய் ஏற்படுத்துவதில் தாக்கம் செலுத்துவதாகக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ள போதிலும், அதனுடைய மேலும் உறுதியான தரவுகளையோ தகவல்களையோ வெளியிட்டிருக்கவில்லை.

மனிதர்களுக்குப் புற்றுநோயை ஏற்படுத்தும் பதார்த்தங்களின் குழு 1இல், புகைத்தல், அஸ்பெட்டஸ் ஆகியவற்றோடு இணைந்து தற்போது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. எனினும், புகைத்தல், அஸ்பெட்டஸ் போன்று பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளும் சமனான அளவான விளைவைத் தரவில்லை என அவ்வமைப்புத் தெரிவிக்கின்றது.

ஆகவே, இறைச்சியைக் கைவிட வேண்டுமா? ஏனெனில், சிவப்பு இறைச்சிகளல்லாத ஏனைய வகை இறைச்சிகளில் கோழி இறைச்சியைத் தவிர, பிரபலமான எந்தவொரு வகையையும் காணவில்லை. (இதில் குறிப்பிடத்தக்கது, மீன்களையும் வெள்ளை இறைச்சி எனத் தான் வரையறுக்கிறார்கள். அதை இறைச்சி எனச் சொல்வது விநோதமானது எனத் தோன்றினாலும், வகைப்படுத்தலில் அதுவும் இறைச்சி தான்). பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளும், மனிதர்களின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறியிருக்கின்றது. சொசேஜ்கள், பேக்கன்கள் இன்றிய வாழ்க்கையை, பலரால் நினைத்துப் பார்க்க முடியாத நிலையே காணப்படுகின்றது.

தரவுகளின்படி, உலகில் அதிகமாக உண்ணப்படும் இறைச்சியாக பன்றி இறைச்சி காணப்படுகிறது. ஏறத்தாழ 36 சதவீதமானவை பன்றி இறைச்சி எனவும் 33 சதவீதமானவை கோழி இறைச்சி அல்லது அதனோடு இணைந்த வான்கோழி உள்ளிட்ட சில வகையிலானவற்றின் இறைச்சிகள் எனவும் 24 சதவீதம் மாட்டிறைச்சி எனவும் அறிவிக்கப்படுகின்றது. ஆகவே, 93 சதவீதமான இறைச்சி உள்ளெடுப்பில் 60 சதவீதமானவற்றை உண்பதில் கவனம் காட்ட வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது.

ஆகவே தான், இறைச்சி உண்பதை மனிதர்கள் தவிர்க்க வேண்டுமா, இவ்வாறு பெரும்பான்மையான இறைச்சியே மனிதர்களுக்குத் தீங்காக அமையலாம் என்ற நிலை காணப்படும் நிலையில், நாம் இறைச்சி உண்ண ஆரம்பித்ததென்பது தவறானதா, மரக்கறி உணவுகளை உண்பது தான் எமது உடலுக்குப் பொருத்தமானதா போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

சமயங்களுக்கு இடையிலும் சமயங்களுக்கும் நாத்திகக் கொள்கையாளர்களுக்கு இடையிலும் இடம்பெற்ற விவாதங்களுக்கு அடுத்ததாக, உலகில் அதிகம் விவாதிக்கப்பட்ட மற்றொரு கருப்பொருளாக, மரக்கறி உணவு நல்லதா, இறைச்சி உணவு நல்லதா என்பதே காணப்படும் எனத் தெரிவிக்குமளவுக்கு, இவ்விடயம் தொடர்பாக அதிகளவு கலந்துரையாடல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறான விவாதங்களில், இறைச்சி உண்பது உணர்வுகள் ரீதியாக சரியானதா என்பதுவும் இறைச்சியை நாம் உண்ணத்தான் வேண்டுமா, அவ்வாறான தேவையுள்ளதா என்பதுவுமே இரண்டு பிரதான காரணங்களாக அமைந்திருக்கும்.

உறுதியான முடிவுகள் கிடைக்கப்பெறாத விஞ்ஞான அம்சங்கள் போல, மனிதர்கள் தாவரவுண்ணிகளா அல்லது இறைச்சி உண்ணிகளா (அல்லது அனைத்துமுண்ணிகளா) என்ற விவாதம், இருதரப்புக்கும் மாறி மாறி அனுகூலங்களை வழங்குகின்றதாகக் காணப்படுகின்றது. சில ஆய்வுகளின்படி மனிதர்கள் தாவரவுண்ணிகள் எனவும், சிலவற்றின் முடிவுகள், அவற்றுக்கு எதிராகவும் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஆனால், கூர்ப்பின்படி, மனிதர்களின் உயிருள்ள நெருங்கிய உறவினர்களாக குரங்குகள், தாவரவுண்ணிகளாக மாத்திரம் இருப்பதால், மனிதர்களுக்கும் தாவரவுண்ணிகளாக இருந்து, தெரிவின் அடிப்படையிலேயே இறைச்சி உண்ணிகளாக மாறியிருக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அத்தோடு, ஏராளமான மனிதர்கள், தாவர உணவுடன் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் வாழ்ந்த, வாழும் நிலையில், ஒரு சில விசேட தேவைகளைக் கொண்டோரைத் தவிர ஏனையோரால், தாவர உணவுகளை மாத்திரம் உண்டு உயிர்வாழ முடியும் என்ற விவாதம் முன்வைக்கப்படலாம். ஆனால் இங்கு தான், மனிதர்களின் இறைச்சி உண்ணும் பழக்கத்தில் உணவுச் சங்கிலிகளும் உணவு வலைகளும் பாதிக்கப்படுவதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில், இந்த உலகின் ஆதிக்க இனமாக மனிதர்கள் காணப்படும் நிலையில், தமக்கு விரும்பிய உணவை உண்பதில் என்ன சிக்கல் என்ற மறு கேள்வி, கேட்கப்படலாம்.

அதற்குத் தான், ஏனைய உயிர்களைக் கொன்று உண்ணுதல் எந்தளவில் சரியானது, எந்தளவில் 'உணர்வுகளை மதிக்கும்' அளவிலானது என்ற கேள்விகள் முன்வைக்கப்படும். நாகரிகமடைந்த, முன்னேற்றமடைந்த, பகுத்தறிவு கொண்ட நாம், உயிருள்ள, உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய விலங்குகளைக் கொன்று உண்ணுதல் எந்தளவில் சரியானது என்ற வினா முன்வைக்கப்படும். தாவரவுண்ணிகளும் கூட தாவரங்கள் என்ற உயிரினங்களைக் கொல்கிறார்கள் தானே, ஆகவே எல்லோரும் ஒருவகையில் உயிர்களைக் கொல்கிறார்கள் என்ற பதிலடி வைக்கப்படுவது பொருத்தமானது.

ஆனால், தாவரங்களும் விலங்குகளும் உயிரைக் கொண்டுள்ளவை என்ற போதிலும், அடிப்படையிலேயே தாவரங்களுக்கும் விலங்குகளுக்குமிடையில் உயிரியல் ரீதியாக ஏராளமான வித்தியாசம் காணப்படுகின்றது. விலங்குகளைப் போன்று தாவரங்களுக்கு, மத்திய நரம்பியல் கட்டமைப்புகளோ அல்லது ஏனைய உறுப்புகளோ காணப்படுவதில்லை. ஆனால் இந்த விவாதத்துக்கு, எப்போதுமே உறுதியான முடிவு கிடைப்பதில்லை.

இவ்வாறு, மனிதர்களின் உணவுப் பழக்கம் தொடர்பான விஞ்ஞான ரீதியான விவாதங்களுக்கும் அறிவியல் ரீதியான விவாதங்களுக்கும் விடைகள் எட்டப்படாத நிலையிலேயே, தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கை முக்கியம் பெறுகின்றது. ஏனெனில், வருடந்தோறும் வெளியாகும் அறிக்கைகளின்படி, மனிதர்களின் உணவானது அதிக இறைச்சியைக் கொண்டிருப்பது உறுதியாகின்றது. கடந்தாண்டு வெளியான அறிக்கையின்படி, நாளொன்றுக்கு அமெரிக்கர்களால் உள்ளெடுக்கப்படும் கலோரியின் அளவு, 3,770ஆகக் காணப்படுகின்றது. ஆண்களுக்கு அதிகபட்சமாக 2,400 கலோரிகளும் பெண்களுக்கு 2,000 கலோரிகளுமே சராசரியாகப் பரிந்துரைக்கப்படும் அளவாகும்.

அதற்கு மேல் உண்பதைத் தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கப்படுகின்றது. 1965ஆம் ஆண்டில் உள்ளெடுக்கப்பட்ட உணவின் சராசரியாக 3,100 கலோரிகள் காணப்பட்டன. நவீன மாற்றங்கள் ஏற்பட, மனிதர்களின் இயக்க நிலை குறைவடைந்துள்ள நிலையில், நாம் குறைவாக உண்ண வேண்டிய நிலையிலேயே, தற்போது அதிகமாக உண்டுகொண்டிருக்கின்றோம். அதில், இறைச்சிகளின் பங்களிப்பு அதிகமானது, அதில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளின் பங்களிப்பு அதிகமானது.

ஆகவே தான், இந்த புற்றுநோய் எச்சரிக்கையானது, ஒருவகையில், எமது உணவுப் பழக்கவழக்கத்தைச் சரிபார்த்துக் கொள்வதற்கான சிறப்பான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது என்பது தான் உண்மையானது. திடீரென இறைச்சியை உண்பதை நிறுத்திவிடத் தேவையில்லை, ஏனெனில், அவற்றின் உருசிக்கு நாம் பழகிவிட்டோம், அத்தோடு, பல்தேசிய நிறுவனங்களையும் தேசிய ரீதியில் பாரிய நிறுவனங்களையும் விட, இறைச்சி விற்பனையின் மூலம் உழைக்கும் ஏராளமான சிறு விற்பனையாளர்களின் வாழ்வாதாரமும் இதில் தங்கியுள்ளது.

தவிர, மனிதர்களுக்குப் புற்றுநோயை ஏற்படுத்தவல்ல பொருட்களின் குழு 1 பட்டியலில், மரத்தூசியும் காணப்படுகின்றது. ஆனால் அதற்காக, தச்சுத் தொழிலாளிகளுக்கெல்லாம் புற்றுநோய் வந்திருப்பதாக வரலாறு கிடையாது. அந்த வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு, உருசிக்கும் ஆரோக்கியத்துக்குமிடையிலான ஒரு சமநிலையைக் கண்டுபிடிப்பதில் தான், மகிழ்ச்சியான வாழ்வு தங்கியிருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .