Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
அமெரிக்காவின் 58ஆவது ஜனாதிபதித் தேர்தல், நவம்பர் 8, 2016இல் இடம்பெறவுள்ள நிலையில், அத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான பிரசாரங்களும் போட்டிகளும் சூடுபிடித்து வருகின்றன.
இப்போதைக்கு, ஜனநாயகக் கட்சியினதும் குடியரசுக் கட்சியினதும் வேட்பாளர்கள், தங்களுக்கிடையில் மோதி வருகின்றார்கள். ஆனால், குறித்த இரண்டு கட்சிகளினதும் வேட்புமனு கிடைத்தாவர்களில் சிலர், சுயாதீன வேட்பாளர்களாகப் போட்டியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனநாயகக் கட்சி சார்பான வேட்பாளராகத் தெரிவாகுவதற்கான முதலாவது விவாதத்திலும் கூட பங்குபற்றிய ஜிம் வெப், அப்போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்துள்ளதோடு மாத்திரமல்லாமல், சுயாதீன வேட்பாளராகப் போட்டியிடுவது பற்றி ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிடுகிறார். இதுவரை, அது தொடர்பான உத்தியோகபூர்வமான தகவல் வெளியிடப்படவில்லை.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் இதுவரை 5 பேர் போட்டியிட முயற்சிக்கின்றனர். அவர்களில் ஹிலாரி கிளின்டனும் பேர்ணி சான்டர்ஸும் முக்கியமானவர்களாகக் காணப்படுகின்றனர். குடியரசுக் கட்சி சார்பில் இதுவரை 15 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிட முயற்சிக்கின்றனர். அதில், டொனால்ட் ட்ரம்ப், பென் கார்ஸன், ஜெப் புஷ், மார்க்கோ றூபியோ, மைக் ஹக்கபீ, ரான்ட் போல், கார்லி ‡பியோரினா, கிறிஸ் கிறிஸ்டி, டெட் குரூஸ் என, அவர்களது பட்டியல் நீள்கின்றது.
குடியரசுக் கட்சி சார்பாக 2 உத்தியோகபூர்வ விவாதங்களும் ஜனநாயகக் கட்சி சார்பாக ஓர் உத்தியோகபூர்வ விவாதமும் இதுவரை இடம்பெற்றுள்ளன.
குடியரசுக் கட்சியைப் பொறுத்தவரை, உச்சபட்சமான பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. முதலிடத்தில், டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து காணப்படுகின்ற போதிலும், ஓய்வுபெற்ற நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் பென் கார்ஸன் முன்னேறி வருகின்றார். குறிப்பாக, அண்மைய வாரங்களாக அவரது முன்னேற்றம் அதிகரித்து, டொனால்ட் ட்ரம்புக்கும் அவருக்குமிடையிலான ஆதரவில் 5 சதவீதம் மாத்திரமே வேறுபாடு (27, 22 சதவீதங்கள்) காணப்படுகின்றது.
இதில் குறிப்பிடத்தக்க விடயம், முதலிடத்தில் காணப்படும் இருவருமே, பல விடயங்களில் கடும்போக்கானவர்களாகக் காணப்படுவதோடு, அவர்களின் கடும்போக்குத் தன்மை அதிகரிக்க அதிகரிக்க, அவர்களுக்கான ஆதரவு அதிகரிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. மெக்ஸிக்கர்களுக்கெதிரான கருத்துக்கள் (அவர்களைக் குற்றவாளிகள் தொடக்கம் வன்புணர்வாளர்கள் என அழைத்திருந்தார்) மூலம் பிரபலத் தன்மையைப் பெற்ற டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவை முஸ்லிம் என வர்ணித்து, 'இந்நாட்டில் முஸ்லிம்கள் ஒரு பிரச்சினை' எனத் தன் மீது தொடுக்கப்பட்ட வினாவை வரவேற்று, 'அது குறித்து ஆராய்வோம்' எனத் தெரிவித்திருந்தார். அதன் காரணமாக எதிர்ப்புகள் ஏற்பட்டிருந்த போதிலும், அவருக்கான ஆதரவில் குறைந்த நிலை காணப்பட்டிருக்கவில்லை, மாறாக, அதிகரித்த அல்லது நிலையான நிலையே காணப்பட்டது.
அமெரிக்காவில் அதிகரித்துவரும் துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட வன்முறைகளுக்கு மத்தியிலும், துப்பாக்கிகளைக் கட்டுப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ட்ரம்ப், காலநிலை மாற்றத்தையும் நம்புவதில்லை.
அமெரிக்காவின் மேர்வின் சில்வா என்றழைப்பது கூட பொருத்தமாகவிருக்கும். பல வினாக்களுக்கான அவரது பதில்கள், அமெரிக்கா போன்றதொரு நாட்டின் ஜனாதிபதியாகப் பொருத்தமானவரா என்ற வினாக்களை எழுப்பக்கூடியன. 'இராணுவம் தொடர்பில் நான் மிகவும் சிறப்பாக இருப்பேன், அதன் காரணமாக உங்கள் தலை சுழலும்', 'அமெரிக்க இராணுவத்தை நான் மிகச் சிறப்பாக மாற்றுவேன், அதனால் எம்மோடு எவரும் சேட்டை செய்ய மாட்டார்கள்', 'தெரிவுசெய்யப்பட்ட முதல்நாளில் அமெரிக்க எல்லைகளை நான் மூடுவேன்', 'செப்டெம்பர் 11 தாக்குதலை நான் தடுத்திருப்பேன்' என அவரது ஒரு வரிச் செய்திகள் நீள்கின்றன.
மறுபுறத்தில் பென் கார்ஸன், நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணராக இருந்தும் கூட, பல நேரங்களில் அதை உறுதிப்படுத்துவது போன்ற செயற்பாடுகளை அவர் மேற்கொள்வதில்லை.
ட்ரம்பைப் போன்றே, துப்பாக்கிகளின் கட்டுப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்காத இவர், ஒரு வாரத்துக்கு முன்னர், துப்பாக்கிதாரியொருவரால் ஒரிகனில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குப் பின்னர் கருத்துத் தெரிவித்த அவர், 'நான் அங்கே சாதாரணமாக துப்பாக்கிதாரி என்னைச் சுடுவதற்கு அனுமதிக்க மாட்டேன்.
'எல்லோரும் அவரைத் தாக்குங்கள். அவர் என்னைச் சுடலாம், ஆனால் எங்களெல்லோரையும் தாக்க முடியாது' என ஏனையோரையும் அழைப்பேன்' எனத் தெரிவித்த பின்னர், புன்னகைத்ததோடு, அதன் பின்னர் சத்தமாகச் சிரித்திருந்தார். இது, பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு முன்னரும் கூட, முஸ்லிமொருவர் அமெரிக்க ஜனாதிபதியாகக்கூடாது என நினைப்பதாகத் தெரிவித்து, சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தார். ஏற்கெனவே சொல்லப்பட்டது போன்று, இவ்வாறான சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில், அவருக்கான ஆதரவு தொடர்ந்தும் அதிகரித்தே வருகின்றது.
குடியரசுக் கட்சியின் நிலை இவ்வாறிருக்க, ஜனநாயகக் கட்சியானது ஓரளவு முன்னேற்றகரமான கருத்துக்களைக் கொண்டதாதகக் காணப்படுவது போன்ற தோற்றம் காணப்படுகின்றது. அதற்கு, அண்மையில் இடம்பெற்ற ஜனநாயகக் கட்சியின் முதலாவது விவாதமே சான்றாக அமைந்தது.
குடியரசுக் கட்சியின் விவாதங்கள் இரண்டிலும், கொள்கைகளுக்கான மோதல்களை விட, தனிப்பட்ட தாக்குதல்களும் கோபங்களும் அதிகமாக வெளிப்பட்டதோடு, ஒருவகையான மோதல் மனநிலையே வெளிப்படுத்தப்பட்டிருந்தது. மாறாக, ஜனநாயகக் கட்சியின் விவாதத்தில் கொள்கைகள் அதிகமாகக் கவனம் செலுத்தப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
அந்த விவாதத்தின் முக்கிய தருணமாக, ஹிலாரி கிளின்டனுக்கு முக்கிய சவாலாகத் திகழும் பேர்ணி சான்டர்ஸ், ஹிலாரியின் பலவீனமான புள்ளியாகக் கருதப்படும் மின்னஞ்சல் விவகாரத்தில் பகிரங்கமான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.
ஹிலாரியின் மின்னஞ்சல் பற்றிய விடயங்கள் குறித்து மக்கள் எரிச்சலடைந்துள்ளதாகத் தெரிவித்த சான்டர்ஸ், கொள்கைகள் குறித்தே அமெரிக்க மக்கள் அறிந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். இதன் மூலம், ஹிலாரி கிளின்டனின் முக்கிய பலவீனப் புள்ளியை இல்லாது செய்து, தனக்குக் கிடைக்கவிருந்த மிகப்பெரிய அனுகூலத்தை அவர் இல்லாது செய்து கொண்ட போதிலும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களுக்கிடையில் காணப்படும் இந்த நிலைமை, கொள்கைகள் மீதான விமர்சனங்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றது. அதன்மூலம், அறியப்பட்ட தெரிவுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றது.
தன்னை ஒரு 'ஜனநாயகச் சமூகவுடைமைவாதி' என அழைத்துக் கொள்ளும் பேர்ணி சான்டர்ஸ், அரச கல்லூரிகள் மூலமான இலவசக் கல்வி, அனைவருக்கும் சுகாதார வசதி, பணக்காரர்களுக்கான அதிக வரிகள் என, அவரது பெரும்பாலான கொள்கைகளை அமெரிக்க மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், 18 சதவீதமான அமெரிக்கர்கள் மாத்திரமே சமூகவுடைமை என்பதை நல்லதொன்றாகக் கருதும் நிலையில், 'ஜனநாயகச் சமூகவுடைமைவாதி' என்பதை ஏற்றுக் கொள்ளச் செய்வது தான், சான்டர்ஸுக்கு இருக்கின்ற முக்கிய சவால்.
தற்போது 74 வயதான பேர்ணி சான்டர்ஸ், அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவானால், அதிக வயதுடைய அமெரிக்க ஜனாதிபதி என்ற பெயரைப் பெறுவார். அத்தோடு, சமய நம்பிக்கைகளற்ற (சிலர் அவரை நாத்திகவாதி எனவும் குறிப்பிடுகின்றனர்) பேர்ணி சான்டர்ஸ், வெளிப்படையாகவே சமய நம்பிக்கையற்றவர் என வெளிப்படுத்திய முதலாவது அமெரிக்க ஜனாதிபதியாக மாறுவார்.
சான்டர்ஸுக்கு இருக்கின்ற ஒரே ஆறுதல், தற்போது 68 வயதான ஹிலாரி கிளின்டன் ஜனாதிபதியாகத் தெரிவானால், அமெரிக்காவின் இரண்டாவது அதிகூடிய வயதான ஜனாதிபதியாகத் தெரிவாவார். மறுபுறத்தில், இத்தேர்தலில் போட்டியிடுவார் என சமிக்ஞைகளைப் பலமாக வெளிப்படுத்திவரும் ஜோ பைடனுக்குத் தற்போது 72 வயதென்பதால், அவர் தெரிவானால் கூட, அமெரிக்காவின் வயதான ஜனாதிபதி என்ற பெயரை அவர் பெறுவார். எனினும், அவரது வேட்புமனு குறித்த உத்தியோகபூர்வ தகவலேதும், இப்பத்தி அச்சுக்குப் போகும்வரை வெளியாகியிருக்கவில்லை.
குடியரசுக் கட்சியின் சார்பில் தெரிவாகவுள்ள டொனால்ட் ட்ரம்ப் அல்லது பென் கார்ஸனுக்கு எதிரான தேர்தலில், ஹிலாரி கிளின்டனோ அல்லது பேர்ணி சான்டர்ஸோ போட்டியிட்டால், இவர்களால் வெற்றிபெற முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே, அமெரிக்காவின் முதலாவது பெண் ஜனாதிபதி, அமெரிக்காவின் வயதான ஜனாதிபதி, அமெரிக்காவின் முதலாவது 'வெளிப்படையாகவே சமயத்தைத் துறந்த ஜனாதிபதி', வெளிப்படையான சமூகவுடைமைக் கொள்கைகளைக் கொண்ட முதலாவது ஜனாதிபதி என, பல்வேறுபட்ட 'முதல்' சந்தர்ப்பங்களை ஏற்படுத்தக்கூடிய இந்தத் தேர்தல், சுவாரசியத்தை அதிகரிக்கச் செய்திருக்கின்றது என்பதென்னவோ உண்மை தான்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
17 minute ago
2 hours ago