Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
எம். காசிநாதன் / 2017 ஜூன் 12 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.வி.தினகரனின் விடுதலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடியப்பச் சிக்கலைத் தோற்றுவித்திருக்கிறது, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த தினகரன், முடக்கப்பட்ட இரட்டை இலையை திரும்பப் பெற, இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் பேரம் பேச முயன்றார் என்று பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த வழக்கில் பிணை அளிக்கப்பட்டுள்ள தினகரன், சென்னை திரும்பியதும் “நான் துணைப் பொது செயலாளராகவே தொடருகிறேன். கட்சிப் பணிகளைத் தொடங்குவேன்” என்று அறிவித்தார்.
இது, அ.தி.மு.கவில் உள்ள இரு அணிகளில் எடப்பாடி அணிக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. “கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கியிருக்கிறேன்” என்று அறிவித்த தினகரன் ஏன் திடீரென்று கட்சிப் பணி செய்வேன் என்று கூறுகிறார் என்பது தெரியாமல் தவித்தார்கள்.
முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் தன் சக அமைச்சர்களுடன் விவாதித்தார். இந்த ஆலோசனை நடந்து கொண்டிருக்கும் போதே, பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்கச் சென்றார் தினகரன்.
செல்லும் முன்பு, “அடுத்த கட்ட கட்சி பணிகள் குறித்துப் பொதுச் செயலாளரிடம் கலந்து பேசுவேன்” என்றார். சசிகலாவை சந்தித்த பிறகு, “60 நாட்கள் அமைதியாக இருக்கச் சொல்லியிருக்கிறார்” என்று தினகரன் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.
இந்தப் பேட்டி பெங்களூரிலிருந்து கொடுத்துக் கொண்டிருக்க, 17 அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய நிதியமைச்சர் ஜெயக்குமார், “தினகரனுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. கட்சியையும் ஆட்சியையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கவனித்துக் கொள்கிறார். ஒரு கிளைச் செயலாளர் கூட, தினகரனைச் சந்திக்க மாட்டார்” என்று கூறினார்.
இங்குதான் தினகரனுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கௌரவப் போர் தொடங்கியது.
சென்னைக்கு தினகரன் திரும்பியவுடன் ஒவ்வொரு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களாக அவரை சென்று சந்தித்தார்கள். “அவர்தான் துணை பொதுச் செயலாளர்.
அவரை யாரும் நீக்கவில்லை.” என்று பதிலடி கொடுத்து பேட்டி கொடுத்தார்கள்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளித்த 122 சட்டமன்ற உறுப்பினர்களில் ஏறக்குறைய 32 சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலா அணி மீது நம்பிக்கை வைத்து, தினகரனைச் சந்தித்ததால் அமைச்சர்கள் பீதியடைந்தார்கள்.
முதலமைச்சரின் ஆதரவாளர்களும் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்று கவலையடைந்தார்கள். நிதியமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டி கௌரவப் போருக்கு வித்திட்டது என்றாலும், முதலமைச்சர் தன் படங்களை அனைத்து அமைச்சர்களின் அறைகளிலும் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டதும் அந்த உத்தரவை தினகரன் சிறையிலிருந்து வெளியே வந்த நேரத்தில் பிறப்பித்ததும் ‘தினகரனா’ அல்லது ‘எடப்பாடி பழனிச்சாமியா’ என்ற நிழல் யுத்தத்தை தொடக்கி விட்டது.
ஆகவே, நிதியமைச்சர் ஜெயக்குமாரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் தொடக்கி வைத்த அந்த நிழல் யுத்தம், சட்டமன்ற உறுப்பினர்களைத் தினகரன் பக்கம் போக வைத்தது.
ஏற்கெனவே முதலமைச்சருடன் முரண்பட்டுக் கொண்டிருந்த தோப்பு வெங்கடாசலம் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் தினகரனைச் சந்தித்து விட்டார்கள். இதைத் தடுக்க சட்டமன்ற உறுப்பினர்களை மாவட்ட வாரியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். ஆனாலும் தினகரனைப் பார்ப்போரின் வைபவம் நிறைவாகவில்லை.
தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், “ஆட்சியைக் கவிழ்க்கக் கூடாது. ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே பேச வேண்டும். அங்குள்ள ஜெயக்குமார் உள்ளிட்ட ஒவ்வொருவரும் தனித்தனியாக அறிக்கைகள் கொடுக்கக் கூடாது. ஆட்சியை எடப்பாடி கவனித்துக் கொள்ளட்டும். கட்சியை தினகரன் பார்த்துக் கொள்வார். அதில் தலையீடு கூடாது” என்ற கருத்துகள் கூறப்பட்டன.
அதை விட முக்கியமாகச் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தலையீடு செய்யக்கூடாது என்ற ஒரு நிபந்தனையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்திருக்கக் கூடும் என்ற கருத்து நிலவுகிறது.
ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாது என்பது அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்தாக இருந்தாலும், தங்களின் நலன்கள் காப்பாற்றப் பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அதே நேரத்தில் தினகரனை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் டி.டி.வி. தினகரனின் ஆலோசனைகளைக் கேட்டு ஆட்சி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
‘எனக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது’ என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்குத் தெரிவிக்கவே டி.டி.வி. தினகரன், இந்த யுக்தியை கடைப்பிடித்ததாகத் தெரிகிறது.
ஆகவே, இன்றைக்கு அ.தி.மு.கவுக்குள் மூன்று அணிகள் உருவாகி விட்டன. எடப்பாடி தலைமையிலான அணிக்கு 90 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தினகரனுக்கு 32 சட்டமன்ற உறுப்பினர்களும் ஓ. பன்னீர்செல்வத்துக்கு 11 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் இருக்கிறது.
2006-2011 வரையில் இருந்த தி.மு.க அரசாங்கத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ‘சிறுபான்மை ஆட்சி’ என்று கூறினார். ஆனால், இன்றைக்கு மூன்று அணிகள் உருவாகியிருப்பதால் ‘சிறுபான்மை ஆட்சி’ என்ற பெயரைப் பெற்றுள்ளது அ.தி.மு.க.
இது ஒருபுறமிருக்க, அ.தி.மு.கவுக்குள் ஏற்பட்டுள்ள இந்த அடுத்த ‘ரவுண்ட்’ குழப்பம் ஜூலை மாதம் நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், அ.தி.மு.கவின் மூன்று அணிகளின் சார்பில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் தேர்தலைப் பொறுத்தமட்டில் பா.ஜ.கவின் வேட்பாளரை ஆதரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்தக் குழப்பங்கள் அ.தி.மு.கவுக்கு இருந்த மக்கள் ஆதரவை மேலும் கெடுத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை.
மாநிலத்தைப் பாதிக்கும் எந்தப் பிரச்சினைகளிலும் முதலமைச்சரால் உறுதியாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலையை இந்த அரசியல் குழப்பங்கள் தோற்றுவித்துள்ளன.
ஆனால், இதில் ‘ஆட்சியை இழந்தால் அரசியல் இல்லை’ என்று அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நினைப்பதால், இப்போதைக்கு .அ.தி.மு.க ஆட்சிக்குத் தலைவலி இல்லாமல் போகிறது. ஆனால் நடக்கவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி “குழப்பங்கள் மிகுந்த அணியின்” தலைவராக இருந்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளின் வியூகத்தை சமாளிக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகியிருக்கிறது.
முதலமைச்சருக்கு மத்திய அரசின் ஆதரவு இருக்கிறது என்ற தோற்றம் மட்டுமே இப்போதைக்கு அதிமுக ஆட்சிக்கு பலம். ஆகவே குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த பிறகு இதே குழப்பத்துடன் அதிமுக ஆட்சி நீடிக்குமா என்ற கேள்வியும் பிறக்காமல் இல்லை. ஏனென்றால் “என் ஆலோசனைகளைக் கேட்டு ஆட்சி நடத்த வேண்டும்” என்று டிடிவி தினகரனும், “அப்படி நான் செய்தால் மத்திய அரசின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் கருதுவதால் “கவுரவ போர்” ஒரு கட்டத்தில் “ஆட்சி கவிழ்ப்பு” மூலம்தான் முடிவுக்கு வர வேண்டிய நிலை உருவாகும்.
அந்த முடிவை முதலில் தினகரன் எடுப்பாரா அல்லது எடப்பாடி பழனிச்சாமி எடுப்பாரா என்பதைப் பொறுத்தே அதிமுகவின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.
ஆட்சியிலிருந்து விலகும் சூழ்நிலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்பட்டால், அவரும், ஓ. பன்னீர்செல்வமும் ஓரணியில் இணைவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால் இருவருமே முதலமைச்சர் பதவியில் இருந்தவர்கள் என்ற நிலையில், யார் கட்சிக்கு தலைமை தாங்குவது, யார் யாருக்கு கீழ் பணியாற்றுவது என்ற பிரச்சினை துவங்கும்.
“நாங்கள் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்” என்று ஓ. பன்னீர்செல்வம் தரப்பு கூறினாலும், தினகரனிடம் உள்ள 32 சட்டமன்ற உறுப்பினர்கள் விலகினால், ஓ. பன்னீர்செல்வத்தாலும் எடப்பாடி அரசாங்கத்தைக் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை. ஆகவே, எடப்பாடி அணியும், ஓ. பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்தால், தினகரன் அணி என்ன செய்யும் என்ற கேள்வியும் இருக்கிறது.
எது எப்படிப் பார்த்தாலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்த அதி.மு.கவுக்கு மிகப்பெரிய சோதனையும் ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் தற்போதையை உண்மை.
நாம் ஆட்சியை விட்டால் அடுத்து தி.மு.க வந்து விடும் என்பது மட்டுமே இப்போதைக்கு அ.தி.மு.க அணிகளுக்குள் ஒரு விதமான ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனாலும், தமிழக அரசில் ஏற்பட்டுள்ள இந்தக் குழப்பம் தமிழகத்துக்கு நன்மை பயக்கும் விதத்தில் இல்லை.
இன்றைக்கு மக்கள் விரைவில் தேர்தல் வந்தால் பரவாயில்லை என்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள். கடந்த ஒரு வருடமாக நடைபெறும் அ.தி.மு.க அரசாங்கத்தால் தமிழக மக்களின் நலன்களைக் காப்பாற்ற முடியவில்லை, மத்திய அரசிடம் மாநில உரிமைகளைப் பெற முடியவில்லை என்ற கோபம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
அந்த கோபத்தின் விளைவுகளை அ.தி.மு.க, அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறது. எதிரில் உள்ள தி.மு.கவும் புதிதாக அரசியல் களத்துக்கு வர வேண்டும் என்று வியூகம் அமைக்கும் நடிகர் ரஜினி போன்றவர்களும் “அதிமுக ஆட்சி எப்போது கவிழும். எப்போது தேர்தல் வரும்” என்று “வழி மேல் விழி வைத்து” காத்திருக்கிறார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
37 minute ago
43 minute ago