Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Administrator / 2017 மார்ச் 03 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
- மொஹமட் பாதுஷா
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு கட்டத்துக்கு வந்திருக்கின்றது.
கட்சியின் முக்கிய தூண்களான தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் செயலாளர் நாயகமாக பதவி வகித்த எம்.ரி.ஹசன்அலி மற்றும் தவிசாளராக இருந்த பஷீர்சேகுதாவூத் ஆகியோருக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதன் காரணமாக, மு.காவுக்குள் கிட்டத்தட்ட இன்னுமொரு அணிசார் பிளவு ஏற்பட்டிருக்கின்றது.
முன்னதாகப் பகிரங்கமாகவே தலைவருக்கு எதிராக பஷீர்சேகுதாவூத் செயற்படத் தொடங்கியிருக்கின்ற ஒரு சூழ்நிலையில், ஹசன்அலியும் இப்போது களத்தில் இறங்கியிருக்கின்றார்.
புனித பயணம் ஒன்றை மேற்கொண்டு விட்டு நாடு திரும்பியிருந்த ஹசன்அலி, தனது சொந்த ஊரான நிந்தவூருக்குத் திரும்பி, மக்கள் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, முஸ்லிம் காங்கிரஸை மறுசீரமைத்து அஷ்ரபின் கொள்கைகளுடனான கட்சியாக அதை மாற்றியமைப்பது தொடர்பான மக்கள் விருப்பத்தைக் கேட்டறிந்துள்ளார்.
இந்நிலையில், அநியாயங்களுக்கு எதிராகப் போராடும் தனது நிலைப்பாடு பற்றி மக்களுக்கு அவர் விளக்கமளிக்கும் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை நிந்தவூரில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
பஷீரும் ஹசன் அலியும் தலைவருடன் முரண்படத் தொடங்கிய பிறகு, மு.காவுக்குள்ளான அரசியல் களச்சூழல் என்பது கடுமையான மாற்றங்களைச் சந்தித்து, இன்று சவால்களை எதிர்நோக்கியுள்ளது.
“முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த இலக்குகளை நோக்கி அல்லாமல், வேறு இலக்குகளை நோக்கிப் பயணிக்கின்றது.” இவ்வாறான விமர்சனம், தலைவர் ஹக்கீமை எதிர்க்கும் அணியினரால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறிருக்கையில்,அண்மைக்காலத்தில் மு.கா தலைமை மேற்கொண்ட நடவடிக்கைகள் கிழக்கு முஸ்லிம்களைப் பெரும்பாலும் முகம்சுழிக்கச் செய்துள்ளது எனலாம்.
தலைவர் ஹக்கீமின் சபையில் இராஜதந்திரியாக இருந்த பஷீர்சேகுதாவூதை தவிசாளர் பதவியில் இருந்து நீக்கியது ஒருபுறமிருக்க, நீண்டகாலமாகத் தலைவரின் வாக்குறுதியை நம்பியிருந்த ஹசன் அலிக்குச் செயலாளர் பதவியையும் தலைவர் கொடுக்கவில்லை.
இதற்கு ரவூப் ஹக்கீம் பக்கத்திலும் நிறையக் காரணங்கள் இருக்கின்றன. அக்காரணங்கள் அவருக்கு நியாயமானவையாகும். வேறு சிலருக்கு அடிப்படை அற்றவைகளாகவும் தோன்றலாம்.
ஆனால்,மு.காவின் தாய்வீடான கிழக்கின் முக்கிய இரு உறுப்பினர்களைத் தந்திரோபாயமான முறையில் தூரவிலக்கி இருக்கின்றமையும், தற்போது செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பவருக்கும் பூரண அதிகாரம் வழங்கவில்லை என்று கூறப்படுகின்றமையும் மு.கா விடயத்தில் கிழக்கு மக்களுக்கு இருந்த அதிகாரம் குறைந்து செல்கின்றதா என்ற நியாயமான கேள்வி எழுந்திருக்கின்றது.
அத்துடன், ஏதோ நியாயங்களின் பேரில் எதையோ நோக்கி அவ்வதிகாரங்கள் இழுத்தெடுக்கப்படுகின்றதோ என்ற மனக் குழப்பத்தையும் பரவலாகக் கட்சி ஆதரவாளர்களிடையே தோற்றுவித்திருக்கின்றது எனலாம்.
இத்தனை விமர்சனங்கள் எழுந்த பிறகும், பஷீர், தலைவருக்கு எதிராகச் செயற்படத் தொடங்கிய பிறகும், தலைவர் ரவூப் ஹக்கீமின் வார்த்தைகளில் ஹசன்அலி நம்பிக்கை கொண்டிருந்தார்.
கட்சிக்குள் முழு அதிகாரமுள்ள பதவி தனக்குத் தரப்பட வேண்டும் என்றும், அவ்வாறில்லாவிடின் அம்பாறையைச் சேர்ந்த ஒருவருக்கு முழு அதிகாரத்துடன் அதை வழங்குங்கள் என்றும் கோரினார். தலைமையும் உயர்பீடமும் அதைச் செய்யவில்லை.
அதுமாத்திரமன்றி, தலைவர் இரண்டு ரக்அத் தொழுதுவிட்டுவந்து, கொடுத்ததாக ஹசன் அலி சொல்கின்ற வாக்குறுதியும் காப்பாற்றப்படவில்லை. ஆனால், அண்மையில் நடந்துமுடிந்த, கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் தலைவரைத் தெரிவு செய்வதற்காக அவரது பெயரை முன்மொழிந்தபோது, ஹசன் அலிக்கு இருந்த நம்பிக்கை, கூட்டம் நிறைவடைந்தபோது, வேறு ஓர் உருவம் எடுத்திருந்தது. அதுதான் இன்று அவர் மக்கள் முன் வருவதற்கு காரணமாகியுள்ளது.
அந்த உயர்பீடக் கூட்டத்தின் பின்னர், சமய யாத்திரைக்காக மக்கா நகருக்கு சென்று திரும்பியிருந்த முன்னாள் செயலாளர் நாயகம், மறைந்த தலைவர் அஷ்ரபின் அடக்க ஸ்தலத்துக்குச் சென்று, துஆப் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
இதற்கிடையில் மீண்டும் சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனபோதும் ஹசன் அலி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை (01) தனது சொந்த ஊரான நிந்தவூருக்குத் திரும்பியிருந்த அவர், அன்றிரவு நிந்தவூர் ஜூம்ஆ பள்ளிவாசலில் மக்களைச் சந்தித்துள்ளார்.
தனக்கு தனிப்பட்ட ரீதியிலும் இந்தச் சமூகத்துக்கு பொதுவாகவும் இழைக்கப்பட்டுள்ள அநியாயங்கள் பற்றி அவர் அங்கு எடுத்தியம்பியுள்ளார். இந்தக் கட்சி எதற்காக மறைந்த தலைவரினால் ஆரம்பிக்கப்பட்டதோ, அந்தப் பாதையில் செல்வதற்கு யார் கட்சிக்குள் தடையாக இருக்கின்றனர் என்பதையும் அவர் கூறினார்.
நிலைமை இவ்வாறிருக்கையில், மு.காவை அஷ்ரபின் கொள்கைகளுடனான கட்சியாகப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கான போராட்டத்தைத்தான் ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறிய ஹசன் அலி, அதற்கான மக்களின் கருத்தையும் வேண்டிநின்றார்.
இதற்கு மக்கள் பூரண ஆதரவை வழங்கியதாக அச்சந்திப்பில் கலந்துகொண்ட கட்சி முக்கியஸ்தர் ஒருவர் கூறினார். ஆனால், புதிதாக ஒரு கட்சி அமைப்பது பற்றியோ வேறு கட்சியுடன் இணைவது பற்றியோ அங்கு பிரஸ்தாபிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இப்பின்னணியில் இன்று விளக்கமளிக்கும் பொதுக் கூட்டம் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இன்றைய போக்குகளுக்கு பிரதான காரணம் எனப் பொதுவாக விமர்சனங்களுக்கு உள்ளாகும் நபர் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் என்பது பட்டவர்த்தனமானது.
அவர் மீதான குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மு.காவின் வாக்குவங்கியில் அங்குமிங்கும் சில சரிவுகளும் அதிகரிப்புகளும் ஏற்பட்டிருந்தாலும் எம்.பிக்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தாலும் முற்றுமுழுதாக ஹக்கீமின் தலைமைத்துவத்தை மாற்ற முடியவில்லை.
பல முஸ்லிம் கட்சிகள் உருவாகி இருந்தாலும் தேசிய அரசியலில் பிரதான முஸ்லிம் கட்சி என்ற இடத்தை இன்னும் மு.கா இழந்து விடவில்லை. அத்தோடு, வெளிப்படையாகப் பார்க்கையில் இதற்கு முன்னர் ஹக்கீமுடன் முரண்பட்டு அரசியல் செய்தவர்களின் நடவடிக்கையால் ஹக்கீம் தோல்வியடைந்ததாகத் தெரியவும் இல்லை.
இதற்கு, மு.கா என்ற கட்சி தன்னளவில் கொண்டிருக்கின்ற பலம், உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கின்றன. களநிலைவரம் இவ்வாறிருக்கும் போதே, பஷீரும் ஹசன் அலியும் இன்று நேரடியாகவோ மறைமுகமாகவோ மு.கா தலைவர் மற்றும் அவரோடு உடன்படுவோருக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளுக்கு துணிந்திருக்கின்றனர்.
ஒருவேளை, பஷீருக்கோ ஹசன் அலிக்கோ தேசியப்பட்டியலும் அவர்கள் எதிர்பார்த்த பதவியும் கிடைத்திருந்தால் இந்தப் போராட்டமெல்லாம் ஏற்பட்டிருக்குமா என்பது நியாயமான கேள்விதான்.
கடந்த 16 வருடங்களாக இவ்விருவரும் தலைவருடன் தேனிலவு கொண்டாடியவர்கள். மற்றவர்கள் பிரிந்து சென்றபோது, ஹக்கீமுக்கு எதிராக இதே மாதிரியான குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைத்த வேளையில் அவர்களுக்கு எதிராகவும் தலைமைக்கு பக்கபலமாகவும் நின்று கட்சியை காப்பாற்றியோரில் இவ்விருவரும் முக்கிய இடத்தைப் பெறுகின்றார்கள். இன்று அவர்களே அதேபாணியில் விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள் என்பது காலவிநோதம் என்றே சொல்ல வேண்டும்.
முஸ்லிம் கட்சிகள் ஒன்றுபட வேண்டுமென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இன்று மு.கா என்ற கட்சிக்குள்ளேயே இன்னுமொரு முரண்பாடு ஏற்பட்டு, அணிகளாகப் பிளவுபடும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.
இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சம்பந்தப்பட்டவர்களைச் சமரசம் செய்ய முயற்சிக்காமல், இன்னும் பழிவாங்கலை மேற்கொள்ள நினைத்ததால் இன்று இந்நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. தனிப்பட்ட, சமூகம் சார் ஆத்திரங்களோடு பஷீரும் ஹசன் அலியும் இன்று விமர்சன அரசியலுக்குத் தம்மை முன்னிறுத்தியுள்ளனர்.
மு.காவின் அடிப்படை நோக்கத்தை அடைந்து கொள்வதில், மக்கள் சார்ந்த அரசியலில் அக்கட்சி பாரிய தவறுகளை இழைத்திருக்கின்றது அல்லது தன் கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்பது பொதுவான அபிப்பிராயமாகும்.
குறிப்பிட்டுச் சொல்வது என்றால், இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களுக்கு என்ன வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்லவில்லை.
அரசியலமைப்பு மறுசீரமைப்பில், எல்லை மீள்நிர்ணயத்தில் முஸ்லிம்களின் அபிலாஷைகளை உறுதிப்படுத்துவதற்காக முன்னிற்கவில்லை. வடக்கு, கிழக்கில் முஸ்லிம்கள் இழந்துள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை மீட்டெடுக்க எந்த அடிப்படையிலான போராட்டத்தையும் மேற்கொள்ளவில்லை. குறைந்தபட்சம்,கட்சிக்குள் இருக்கின்ற பிரச்சினைகளையாவது திறம்பட கையாளவில்லை என்ற விசனப் பார்வைகள் இருக்கவே செய்கின்றன.
ஆனால், இதற்கெல்லாம் தலைவர் ஹக்கீம் மட்டுமே காரணமல்ல. ஹக்கீம் இந்த அதிகாரங்களைத் தம்வசப்படுத்திக் கொண்டபோது, அவர் தவறிழைத்த போது, பொறுத்துக் கொண்டிருந்த ஹசன்அலி, பஷீர் உள்ளிட்ட எல்லோருமே இதற்குக் காரணமாகின்றனர். அதற்கு அப்போது நியாயங்கள் இருந்திருக்கலாம்.
ஆனால், அப்போது சரிகண்டுவிட்டு, இப்போது அவையெல்லாம் பிழை என்று சொல்வதால் மக்கள் எல்லோரும் ஹக்கீமுக்கு எதிராக அணி திரள்வார்கள் என்று எடுத்த எடுப்பில் கூற முடியாது.
“இவர்களும் சேர்ந்துதானே அவரோட இருந்து இதெல்லாம் செய்த...” என்ற தொனி கடுமையாக இருக்கும். அத்தோடு, “பதவிகள் கிடைக்காததாலேயே இதைச் செய்கின்றார்கள்” என்ற விமர்சனத்தையும் தடுக்கவியலாது. அதேநேரத்தில், ‘தலைமை எதிர்ப்பு’ அரசியலைச் செய்யும் போது, மு.கா என்ற கட்சிக்கு இயல்பாகவே இருக்கின்ற பலம், ஹசன் அலி மற்றும் பஷீர் போன்றோருக்கு பாரிய சவாலாக இருக்கும். மறுபுறமாக, கட்சியும் தலைவரும் செய்யத் தவறிய காரியங்கள் பெரும் பலமான பேசுபொருளாக அமையும்.
எது எவ்வாறிருப்பினும், முஸ்லிம்களின் அரசியல் களம் என்பதும் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் என்பதும் குறிப்பாக கிழக்கில் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன.
இந்தக் களமாறுதல்களைக் கவனத்தில் கொள்ளாமல் ஹக்கீம் ஆதரவுத் தரப்பினர் செயற்படுவார்களேயானால் அது எதிர் அணியினருக்குச் சாதகமான களத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பிருக்கின்றது.
முன்னாள் தவிசாளர் பஷீர்சேகுதாவூத் நுட்ப ரீதியான சிக்கல்களுக்குள் தலைமையையும் வேறு சிலரையும் சிக்கவைப்பதற்கான நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்றார் என்று எடுத்துக் கொண்டால், முன்னாள் செயலாளர் நாயகம் தனிவழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார் எனலாம்.
அதாவது கட்சிக்குள் இருந்து கொண்டு தலைமையினதும் கட்சியினதும் முறையற்ற போக்குகளுக்கு எதிராகப் போராடுவதாகும். கட்சியை அஷ்ரபின் வழிக்குக் கொண்டுவரும் வெகுஜன செயற்பாடாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் உட்பட முஸ்லிம் கட்சிகள் எதுவும் தமது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவில்லை என்ற எண்ணத்தோடு மக்கள் இருக்கின்ற இன்றைய சூழலில், மு.காவில் கிழக்கு மாகாணத்தவர்கள் இருவர் பதவி இறக்கப்பட்டுள்ள சூழலில், இன்னுமொரு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில்.. இந்த முயற்சிக்கான மக்கள் ஆதரவு அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது.
ஏற்கெனவே பல ஆண்டுகாலமாக மு.காவுக்கும் தலைவருக்கும் எதிரான அரசியலில் ஈடுபட்டு வருகின்ற ஆரம்பகால மு.கா போராளிகள் எல்லோரும், ஒரு கூட்டணியாகச் சேர்ந்து செயற்படுவதற்கு மேலதிகமாக,தலைமையின் செயற்பாடுகளுக்கு எதிராக ஹசன் அலியும் மக்களைத் திரட்டிப் போராடுவாராயின், கிழக்கில் நிலைமைகள் மாறுவதற்கு இடமிருக்கின்றது.
மு.கா உடனடியாகத் தன்னை மீள்வாசிப்புச் செய்து, அடிப்படைக் கொள்கைகளுக்கு திரும்பாவிடின், கட்சி மறுசீரமைக்கப்படாவிடின், புதிய கூட்டணியோ ஹசன் அலி அணியோ பலம் பெறுவதற்கும் சாத்தியங்கள் இல்லாமலில்லை.
இவ்வாறான ஒரு கட்டம் வருகின்றபோது, இதனைப் பெருந்தேசியக் கட்சிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளும். அதனை நாம் இதற்கு முன்னரே அனுபவ ரீதியாக கண்டுமிருக்கின்றோம்.
ஹசன் அலியும் பஷீரும் வேறு ஒரு கட்சியைத் தொடங்காதிருந்தால், அன்றேல் மு.காவுக்குள் இருந்து அவ்விருவரும் தலைமையால் வெளியேற்றப்படாவிட்டால் இந்தப் போராட்டம் ஒருவிதமான வடிவத்தை எடுத்திருக்கும். மேற்சொன்ன இரண்டில் ஒன்று நடந்தால், இப்போராட்டம் இன்னுமொரு வடிவத்தையும் எடுக்கும். அவர்களும் அதே தவறான வழியில் பயணித்தால் மக்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.
எனவே, இவ்விருவரது முயற்சிகளும் வெற்றியளிக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
8 hours ago