Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Administrator / 2017 ஏப்ரல் 13 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
இந்தியாவும் இலங்கையும், ஒரே பிராந்தியத்தில் இருப்பதனால் என்னவோ, சில நேரங்களில், இரு நாடுகளில் நடக்கும் விடயங்களையும் ஒப்பிட்டுப் பேசுவதற்கு இயலுமாக இருக்கிறது. அவ்வாறு தான், இந்தியாவிலும் இலங்கையிலும் அண்மையில் இடம்பெற்ற இரு சம்பவங்கள், சில கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆள்வார் மாவட்டத்தின் ஆள்வார் என்ற நகரப் பகுதியில், இம்மாதம் முதலாம் திகதி, முஸ்லிமொருவர் கொல்லப்பட்டார். இந்தப் பந்தியில், அவரது இனக் குழுமம் குறிப்பிடப்படுவதற்குக் காரணம், அவரது மரணத்துக்கு, அவரது இனம் காரணமாக அமைந்தது என்பதனாலேயே ஆகும்.
பெஹ்லு கான் என்ற குறித்த நபர், பசுக்களை இறைச்சியாக்குவதற்காகக் கொண்டு சென்றார் என்ற குற்றச்சாட்டில், குழுவொன்றால் தாக்கப்பட்டு, உயிரிழந்தார். ஆனால் உண்மையில் அவர், பால் விற்பனை செய்யும் ஒருவர் ஆவார். ஆனால், இவை அனைத்தும், அவரின் உயிர் பிரிந்த பின்னரே, தெரிய வந்தன. போன உயிரைத் தான் இனியும் கொண்டுவர முடியுமா?
இந்துத் தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி, இந்தியாவில் ஆட்சிக்கு வந்த பின்னர், தீவிரக் கொள்கைகளைக் கொண்ட இந்துக்கள் குழு, சட்டத்துக்கு அப்பாற்பட்டுச் செயற்பட முடியுமென எண்ணுகின்றது என்ற நிலை உருவாகியுள்ளது போல் தோன்றுகின்றது. அதற்கு முன்னைய ஆட்சிகளிலும், இந்நிலை இருந்த போதிலும், பா.ஜ.க ஆட்சியில், இந்நிலைமை, வெளிப்படையாக இடம்பெறுகின்றன போன்றதொரு நிலை காணப்படுகிறது.
குறித்த நபர், பசுவை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்காகக் கொண்டு சென்றார் என்றே வைத்துக் கொள்வோம். அதில் என்ன தவறு இருக்கிறது? பல ஆண்டுகளாகத் தன்னுடைய பசுவைப் பேணிப் பாதுகாத்துவந்த ஒருவர், அது முதுமையடைந்த பின்னர், அதைவைத்து என்ன செய்ய முடியும்? விற்பனை செய்யாமல், அதைத் தொடர்ந்தும் வைத்துப் பராமரிப்பதில் என்ன நன்மை இருக்கிறது? அவருக்கான செலவு தான் அதிகரிக்குமே?
இவற்றுக்கு மத்தியில் கருத்துத் தெரிவித்துள்ள இந்துத் தேசியவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பக்வத், பசுவதையை நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் இவ்வாறான தாக்குதல்கள், தங்களுடைய நோக்கத்தைச் சிதைப்பதாகவும், இவற்றை நிறுத்துமாறு தெரிவித்திருப்பதோடு, நாடு முழுவதும், மாடுகளை அறுப்பதைத் தடை செய்ய வேண்டுமெனவும் கோரியிருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்புக் கோருகின்ற ஒரு கொள்கைக்காக, பல உயிர்கள், இதுவரை எடுக்கப்பட்டிருக்கின்றன. அதைப் பற்றிய வருத்தம், கொஞ்சம் கூட இல்லாமல், தங்களுடைய நோக்கத்தை, இக்கொலைகள் சிதைக்கின்றன என்று இரக்கமின்றிச் சொல்ல, இவரைப் போன்ற கடும்போக்குவாதிகளால் தான் முடியுமாக இருக்கிறது.
இதில், மரக்கறி உண்பதென்பது, இந்துக்களில் ஒரு தரப்பினரின் தெரிவு. அந்தத் தெரிவை மதிக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் அந்தத் தெரிவை, ஏனையோரிடம் திணிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
மரக்கறி மாத்திரம் உண்பவர்கள், தங்களுடைய உணவுப் பழக்கத்தை ஏனையோரிடம் திணிக்க முற்படுவது போன்று, புலால் உண்பவர்கள், தங்கள் உணவுப் பழக்கத்தைத் திணிப்பதில்லை. விரத நாளில், மாட்டிறைச்சி தான் சாப்பிட வேண்டுமென்று, எங்குமே வற்புறுத்தப்படுவதில்லை. இந்தத் தெரிவை, இந்துத் தேசியவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
இத்தனைக்கும், உலகில், அதிகளவு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில், இந்தியா, முதலிடத்தில் காணப்படுகிறது. அந்நாட்டிலிருந்து, கடந்தாண்டில் 1,850,000 மெற்றிக் தொன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. அதன்மூலம், ஏராளமான வருமானத்தை, இந்திய அரசாங்கம் பெற்றுக் கொள்கிறது.
இந்தியாவின் நிலைமை இவ்வாறு என்றால், இலங்கையின் யாழ்ப்பாணத்தின் நல்லூரில், மாடு திருடிய குற்றச்சாட்டில், இளைஞரொருவர் அண்மையில் நையப்புடைக்கப்பட்டார்.
யாழ்ப்பாணத்தின் புனிதமான இடங்களுள் ஒன்றாக நல்லூர் கருதப்படுகின்ற போதிலும், அந்தப் புனிதத்துக்கும் அந்தத் தாக்குதலுக்கும் இடையில் தொடர்பு இருந்ததாகத் தெரியவில்லை. மாறாக, திருடனுக்கு நீதி வழங்கும் செயற்பாடாகத் தான் அது இடம்பெற்றிருக்கின்றது.
மாடு திருடியவரைப் பொலிஸில் ஒப்படைப்பதற்கு முன்பாக, அந்தத் தவறைச் செய்தவருக்கு, அந்தத் தவறுக்கான விளைவுகளைச் சந்திக்கச் செய்ய வேண்டுமென்று அவர்கள் எண்ணியிருக்கிறார்கள்.
அங்கு நடந்த விடயம் என்னவென, உறுதிப்படுத்தப்பட்ட வகையில் தகவல்கள் வெளியாகவில்லை. அங்கிருந்தவர்களை, அச்சந்தேகநபரும் அவரின் மனைவியும் தவறான வார்த்தைகளால் திட்டியதாகவும் கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்தத் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.
ஆனால், அவ்வாறு நடந்திருந்தாலும் கூட, ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சப்படும் அளவுக்கு, தாக்குதல் நடத்தப்படுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?
இந்தச் சம்பவம், பல வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. “மாடு களவெடுத்தவனுக்கு எல்லாம் பரிந்து பேசாதீர்கள்” என்பது, அந்த வன்முறையை நியாயப்படுத்துபவர்களின் கருத்தாக இருந்தது. ஆனால், களவெடுப்பதென்பது சட்டத்தின்படி குற்றமாக இருப்பதைப் போல், வன்முறையைப் பயன்படுத்துவதும் குற்றம் தானே? ஒருவரைத் தாக்குவதை, எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?
இந்த இடத்தில் தான், மேலே குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும், ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவையாக மாறுகின்றன. பொதுமக்கள், தமது கையில் சட்டத்தை எடுப்பது தான் அது.
செப்டெம்பர் 11 தாக்குதல், ஐக்கிய அமெரிக்காவின் உலக வர்த்தக மையக் கட்டடங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஈராக் மீது படையெடுப்பதற்கு, அப்போதைய ஐ.அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் முயன்றார். அப்போது, அந்தப் போரை எதிர்த்தோர் மீது, “ஒன்றில் எங்கள் பக்கம், இல்லாவிட்டால் அவர்கள் (தீவிரப் போக்குடையவர்கள் அல்லது ஆயுததாரிகள்) பக்கம்” என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
அதைப் போன்றே, மாடு திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று கூறுவது, மாடு திருடுவதை நியாயப்படுத்துவதாகவும் என்று கூறுவது ஆகும். இரண்டு விடயங்களையும் எதிர்ப்பது சாத்தியமாகும் என்பதை, “அதில்லை என்றால் இது” என்று கூறுவோர் புரிந்துகொள்வதில்லை.
பசுவதைக்கெதிராக இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம், அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களையும் பறித்துக் கொண்டிருக்கின்றது.
அதேபோன்று, மாடு திருடிய குற்றத்துக்காக இன்றைக்கு நையப்புடைக்கப்பட்டுள்ள நிலையில், நாளைய தினம், இன்னொருவர், இன்னொரு பிரச்சினைக்காக நையப்புடைக்கப்படுவார், மறுநாள் இன்னொருவர். இவ்வாறு, சட்டத்தை மீறிய சமூகமொன்று உருவாக்கப்படுவதை எவ்வாறு அனுமதிக்க முடியும்?
அதேபோன்று, யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் கோஷ்டிச் சண்டைகள், வாள்வெட்டுகள் போன்றவற்றுக்குப் பதிலாக, “திருட முயன்றார்” எனக்கூறப்பட்டு, நபர்கள் கொல்லப்படுவதற்கான வாய்ப்புகளும் இல்லையென்று கூற முடியுமா? யாரையாவது கொன்றுவிட்டு, காரணத்தைக் கூற முடியும். இல்லாவிடில், மக்களோடு மக்களாக இணைந்து, இவ்வாறான குற்றங்களைப் புரிய முடியும். இதனால் தான், பொதுமக்களே தண்டனை வழங்குதல் என்ற நடைமுறை, ஆபத்தானது.
ஒரு வகையில், பொதுமக்களின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு, சட்ட அமுலாக்கப் பிரிவினரில் அவர்களுக்குக் காணப்படும் அவநம்பிக்கை, முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எனவே, சட்ட அமுலாக்கத்தில் சம்பந்தப்படும் அனைத்துத் தரப்பினரிலும், வெளிப்படைத்தன்மையையும் ஊழலற்ற தன்மையையும் ஊக்குவிக்க வேண்டும்.
சல்லிக்கட்டுக்கெதிரான போராட்டம், ரஜினிகாந்த் வரவிடாமல் தடுக்கப்பட்டமைக்கெதிராகப் போராட்டம் என, இந்தியாவின் பாணியில் சிறிது சிறிதாக மாற்றமடைந்துவரும் யாழ்ப்பாணம், பசுவதை தொடர்பாகக் காணப்படும் பாணியையும் பின்பற்றக்கூடாது என்ற கரிசனை, அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.
இது, தனித்தே நடக்கும் சம்பவங்கள் கிடையாது. மாறாக, அடுத்தடுத்த சந்ததிகளின் வாழ்க்கைமுறைகளைத் தீர்மானிக்கும் சம்பவங்களாகும். இந்த விடயத்தில், புத்திஜீவிகளின் செயற்பாடுகள், அதிகமாகத் தேவைப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை கிடையாது என்பதே எதிர்பார்ப்பாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago
7 hours ago