2025 மே 16, வெள்ளிக்கிழமை

சட்டப்படி குற்றம்

George   / 2016 ஜனவரி 06 , பி.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

புதிய ஆண்டில் கால்பதித்து ஏழு நாட்களே ஆகின்றன. கடந்து வந்த வருடத்தில் இடம்பெற்ற சில முக்கிய சம்பவங்களை சற்று பின்னோக்கிப் பார்க்கலாம் என்று நினைத்தால், முழு நாட்டையும் உலுக்கிய முக்கி சம்பவங்களை இலங்கை ஊடகங்கள் வெளியிட்ட விதம் தொடர்பில் நாம் சற்று வெட்கப்படவேண்டிய நிலையில் உள்ளோம். அதனை வைத்துப் பார்க்கும் போது ஊடக தர்மத்தைக் காத்து, சமூதாய நலன் நோக்கி செற்பட்டோமா என்;பது கேள்விக்குறி ஒன்றாகவே தொக்கி நிற்கின்றது. இந்த வருடம், இலங்கை அரசியலிலும் சரி மக்கள் மனங்களிலும் சரி, மாற்றங்களை ஏற்படுத்தியது மட்டுமின்றி ஊடகங்களின் போக்கிலும் பெரிதும் மாற்றங்களை காணக்கூடியதாகவே இருந்தது.

புதுவருடம் ஆரம்பமாகி சுமார் 7 நாட்களில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுடன் மக்களின் மனதளவிலும் பெரும் மாற்றங்களை பார்க்கக்கூடியதாகவே இருந்தது. ஆட்சி மாற்றம், முன்னாள் ஜனாதிபதியின் தோல்வி, ராஜபக்ஷ குடும்ப ஆட்சியின் முடிவு, புதிதாக உருவான நல்லாட்சியின் செயற்பாடுகள் என நாடே பரபரப்பாகிய நிலையில், திடீரென முழு நாட்டையும் உலுக்கிய ஒரு சம்பவம் வட மாகாணத்தில் பதிவாகியது.

புங்குடுதீவு பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியான வித்யாவின் கொலைச் சம்பவம் அது. அச்சம்பவம் கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி இடம்பெற்றது. புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த வித்தியா எனும் மாணவி  பாடசாலைக்குச் சென்ற பின்னர் வீடு திரும்பாததை அடுத்து, அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகிலுள்ள பற்றைக்குள் இருந்து கைகள் கட்டப்பட்டு, கொலை செய்யப்பட்ட நிலையில் அம்மாணவி சடலமாக மீட்கப்பட்டார். மாணவியின் இரண்டு கால்களும் அரலி மரத்தில் கட்டிய நிலையில் வாய்க்குள் துணி அடைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டார்.

சடலத்தை மீட்ட ஊர்காவற்றுறை  பொலிஸார், யாழ். போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்தனர். பிரேத பரிசோதனைகளில் வாய்க்குள் துணி அடைந்தமையால், மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதுடன்  தலை, கல்லில் அடிபட்டதில் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

முதலில், காணாமல் போன மாணவி சடலமாக மீட்கப்பட்டமை சாதாரண செய்தியாகவே பார்க்கப்பட்ட போதும் பின்னர், அது கொலை என்றும் கூட்டு வன்புணர்வு என்றும் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட கடந்த வருடத்தின் இறுதியில் இருந்து (2014), அது தொடர்பான பரபரப்பான செய்திகளையும் கலந்துரையாடல்களையும் கட்டுரைகளையும் நேர்காணல்களையும் வெளியிட்டுக் களைத்திருந்த ஊடகங்கள், வித்தியாவின் சம்பவத்தையடுத்து திடீரென விழித்துக் கொண்டன. அதனால்தான் என்னவோ சில ஊடகங்கள் வித்தியாவின் நிர்வாணப் படங்களையும் வெளியிட்டு தங்களது விழிப்பை உலகுக்குக் காட்டிக்கொண்டன.

இது இவ்வாறு இருக்க, சில மாதங்கள் கழித்து இதேபோன்ற மற்றுமொரு சம்பவம் தென்னிலங்கையில் பதிவாகிய போது உண்மையில் முழு நாடும், நாட்டு மக்களும் அதிர்ந்து தான் போய்விட்டனர். கம்பஹா, கொட்டதெனியாவ, அகரங்கஹ பகுதியில் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி  இரவு, வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை காணாமல் போன 5 வயது சிறுமி அடுத்த நாள் காலை சடலமாக மீட்கப்பட்டார்.

இதுவும் சாதாரணமான ஒரு செய்தியாகவே பார்க்கப்பட்ட போதும் குறித்த சிறுமியும் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையின் பின்னர் தெரியவந்ததையடுத்து, ஊடகங்கள் சில தமது மறுபக்கத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டன.

அதனைப் போலவே ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி அநுராதபுரம், முதித்தா மாவத்தையில் உள்ள பிரபல்யமான இரவு விடுதியொன்றின் உரிமையாளரும் கராத்தே சாம்பியனுமான வசந்த சொய்சாவின் படுகொலைச் சம்பவமும் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாகவே மாறியிருந்தன.

நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த இந்த மூன்று சம்பவங்கள் தொடர்பில் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்ட விதம் குறித்து பெரும்பாலானோருக்கு திருப்தியற்ற நிலை அல்லது விரும்பத்தகாத  ஒன்றாகவே அமைந்திருந்ததை மறுக்க முடியாது.

ஒரு நாட்டில் நடக்கும் முக்கிய மாற்றங்களில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஜனநாயகத்தின் மூன்றாவது தூணாக ஊடகங்களை குறிப்பிடுகின்றனர். ஜனநாயகத்தின் முக்கிய பண்பாகவும் ஊடக சுதந்திரம் விளங்குகின்றது. ஒரு நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லாத போது அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையும் உரிமைகளும் கேள்விக்குட்படுகின்ற நிலையும் இல்லாமல் இல்லை.

உண்மையில், கடந்த ஆட்சி மாற்றத்துக்கும் அது தொடர்பான கருத்துக்களையும் தெளிவினையும் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் ஊடகங்களுக்கு முக்கிய வகிபாகம் உள்ளது. உண்மையான செய்திகளை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த முயன்று, அதற்காக தமது உயிரையும் அர்ப்பணித்த ஊடகவியலாளர்களுக்கு உரிய மண் இது. யுத்த காலத்தில் தமது உயிரையும் பணயம் வைத்து செய்திகளை வழங்கி அதற்காக தமது உயிர், உடமைகளை இழந்தவர்களும் உள்ளனர். ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்ட வரலாறுகளும் நிறையவே உள்ளன.  

ஆனால், இவ்வாறு பலரின் முயற்சியில் பல வருடங்களாக இலங்கை ஊடகங்கள் சேர்த்து வைத்திருந்த நற்பெயர், அண்மைய காலங்களில் இடம்பெற்ற சில சம்பவங்களின் அறிக்கையிடலில் சற்று பின்னடைவை சந்தித்தையும் மறுக்க முடியாது.

செய்திகளை அறிக்கையிடுதலும் குற்றச் செய்திகளை அறிக்கையிடுதலும் ஒரே ரீதியில் அமைந்துவிடுவதில்லை. இரண்டுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. வித்தியா மற்றும் சேயா சந்தவ்மி ஆகியோர் மீதான வன்புணர்வு மற்றும் கொலைச் சம்பவங்களை இலங்கையின் சகல ஊடகங்களும் வெளியிட்ட விதம் தொடர்பில் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. 

இன்றைய நாட்களில் இலங்கையில் ஊடகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அவற்றுக்கு இடையிலான வர்த்தகப் போட்டிகளும் அதிகமாக காணப்படுவதால் செய்திகளை முந்தித் தரவேண்டும் அல்லது சுவாரஷ்யமான செய்திகளைத் தரவேண்டும் என்றே ஊடகங்கள் தங்களுக்குள் போட்டிபோட்டுக்கொண்டு இருக்கின்றன. இதன் விளைவு, வித்தியா மற்றும் சேயா சந்தவ்மி ஆகிய இருவரின் நிர்வாணப் புகைப்படங்கள் வெளியாகும் அளவுக்கு மாறியிருந்தது.
அன்றைய நாட்களில் அனைத்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வித்தியா மற்றும் சேயா சந்தவ்மியின் புகைப்படங்கள் தான் அதிகமாக காட்சிப்படுத்தப்பட்டன. அத்துடன், இவை தொடர்பான பரபரப்புச் செய்திகள் அடிக்கொரு தடவை வெளியிடப்பட்டன. எனினும், இணையதளங்களுடன் ஒப்பிடுகையில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் நாகரிகமாகவே  செய்தி வெளியிட்டதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

புற்றீசல்கள் போல திடீர் திடீரென்று தோற்றம் பெற்றுள்ள இணையதளங்களுக்கு இந்தச் செய்தி, „வெறும் வாயை மெல்லுகின்றவனுக்கு அவல் கிடைத்தது போல... மாறியிருந்தது. சாதாரண செய்தியையே பரபரப்பான தலைப்புகளில் வெளியிட்டு வரும் இணையதளங்களுக்கு இவ்வாறான பரபரப்பான செய்தியை வெளியிட சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை அல்லவா?

இவ்வாறான பாலியல் தொடர்பான வன்முறைகளுடன் தொடர்புடைய புகைப்படங்களை பிரசுரிக்கும் போது அல்லது ஒளிபரப்பும் போது, பாதிக்கப்பட்ட நபரின் சமூக அந்தஸ்து கேள்விக்குறியாகும் என்பது தொடர்பில் ஊடகங்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஊடகங்களின் இவ்வாறான அறிக்கையிடல் தொடர்பில் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவினால் இது தொடர்பான அறிவுறுத்தல் அறிக்கையொன்று சகல ஊடகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

இருப்பினும், இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தமை காரணமாக பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் விளக்கமளிக்கும் செயலமர்வு ஒன்று கடந்த டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்றது. அதில் பொலிஸ் ஊடகபேச்சாளர் மற்றும் சட்டத்தரணி பிரியந்த கமகே ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஊடகங்களில் செயற்பாடுகள் தொடர்பில் தமது திருப்தியின்மையை வெளிப்படுத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர, 'குறித்த சம்பவங்களின் போது சம்பவ இடத்தில் ஊடகங்கள் நடந்துகொண்ட விதம் காரணமாக முக்கியமான சாட்சிகள் அழிவடைந்தன' எனக் கூறினார்.

'அநுராதபுர இரவு விடுதி உரிமையாளர் கொலை தொடர்பாக கிடைக்கப்பெற்ற முக்கிய சாட்சியமான காணொளிகளை ஊடகங்கள் உடனடியாக வெளியிட்டமை தொடர்பில் பொலிஸார் அதிருப்தி வெளியிட்டிருந்தனர். குறித்த இடத்திலிருந்து காணொளிகள் கிடைக்கப்பெற்றால் அதனை உடனடியான ஒளிபரப்பு செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்த போதும் சில தொலைக்காட்சிகளில் அவை அவசர செய்தியாகக் காண்பிக்கப்பட்டன' எனவும் அவர் கூறினார்.

அதன்காரணமாக சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். ஊடகங்களின் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக முக்கியமான சாட்சியங்கள் அழியும் நிலை ஏற்படுவதுடன் குற்றவாளிகள் தப்பிச்செல்ல அல்லது உஷாரடையும் நிலை ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு சாட்சியங்களை அழிக்கும் செயற்பாடுகள் „சட்டப்படி குற்றம் என்பதுடன் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். எனினும், ஊடகங்களுடனான சுமூகத் தன்மை காரணமாக பொலிஸார் அவ்வாறு செய்வதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் ஒருசில ஊடகங்களின் இவ்வாறான பொறுப்பற்ற செயல்களினால் குற்றவாளிகள் தப்பிச் செல்ல அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதில் தாமதம் அல்லது பாதிப்பு ஏறு;படும் என்றால் அது ஊடகத்துறை மீதான நம்பிக்கை மற்றும் மரியாதையில் பங்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

மேலைத்தேய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை ஊடகங்கள் பாரிய எழுச்சி பெறவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எனினும் இந்தியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் சிறந்த நிலையில் தான் உள்ளோம். இந்திய ஊடகங்கள், சில செய்திகளை பரபரப்புக்காக வெளியிடுவது போல நாம் வெளியிடுவதில்லை. பாலியல் ரீதியான வன்முறைச் செய்திகளை நேரில் பார்த்ததைப்போல வர்ணிக்கும் இந்திய ஊடகங்களும் உள்ளன. 

சர்வதேச ரீதியில், 2015ஆம் ஆண்டில் சுமார் 110 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்புத் தெரிவித்திருந்ததுடன் 110 பேரில் 49 பேர், அவர்களது பணிக்காக அல்லது வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 18 பேர், அவர்களது பணியின்போது கொல்லப்பட்டுள்ளதுடன் மீதி 43 பேர், தெளிவற்ற காரணங்களால் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தது.

ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் முறையே 11, 10 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் இந்தியாவில் 9, பிரான்ஸில் 8, யேமனில் 8, மெக்ஸிக்கோவில் 8, தென் சூடானில் 7, பிலிப்பைன்ஸில் 7, ஹொன்டூரஸில் 7 என இந்த எண்ணிக்கை நீள்கிறது.

இந்தியாவில் கொல்லப்பட்ட 9 பேரில் 5 பேர், ஊடகவியல் பணிகளுக்காகக் கொல்லப்பட்டதோடு, 4 பேர், வெளிப்படுத்தப்படாத காரணங்களுக்காகக் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கையில் ஓர் ஊடகவியலாளரே உயிரிழந்துள்ளார். அவர், தனது ஊடகப் பயணத்தின்போது, யானையால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதேவேளை, சர்வதேச அளவில் 54 ஊடகவியலாளர்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டார்கள் எனவும், 153 ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரை அர்பணித்து ஊடகத்துறையை உறுதிப்படுத்திய எத்தனையோ ஊடகவியலாளர்கள் இருந்தாலும், மேற்கண்டவாறான சில அறிக்கையிடல்கள் காரணமாக அவை மழுங்கடிக்கப்படக் கூடிய நிலையும் ஏற்படக்கூடும். புதிதாக மலர்ந்துள்ள இந்த ஆண்டிலாவது இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அறிக்கையிடும் போது சிந்தித்து செயற்படுவது காலத்தின் தேவை என்றால் மிகையாகாது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .