2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சமாதானம் சமர்ப்பித்த தானங்கள்

Administrator   / 2017 மே 02 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

- காரை துர்க்கா

கொழும்பு மற்றும் அதன் நகர்ப் புறங்களில் முப்படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பில், சந்தேகத்தின் பேரில் 52 தமிழ் இளைஞர்கள் கைது;

முகமாலையில் இராணுவத்தினரின் பாரிய எடுப்பிலான முன்னேற்ற முயற்சி புலிகளால் முறியடிப்பு;

கப்பல் மூலமாகத் தென்பகுதிக்கு வர யாழ்பாணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருப்பு;

மட்டக்களப்பில் வயல் வேலை செய்து விட்டு வீடு திரும்பிய விவசாயியைக் காணவில்லை;

புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப் பகுதியில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தொடர்ந்தும் தட்டுப்பாடு;

கஞ்சிக்குடிச்சாறு முகாமிலிருந்து படையினர் தொடர் எறிகணைத் தாக்குதல் - என்பனவாக, யுத்தம் முடிந்ததாகக் கூறப்படும் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதியில் இலங்கையிலிருந்து வெளிவரும் தினசரிப் பத்திரிகைகளின் செய்திகளைக் காணலாம்.  

ஆனால், யுத்தம் நிறைவுற்று, தமிழ் மக்களுக்கு விடியல் கிடைத்து விட்டது என்று அரசாங்கத்தால் சொல்லப்படும் இக்காலப் பகுதியில் வெளிவரும் தினசரிப் பத்திரிகைகளில் பொதுவாக இடம்பெற்றிருக்கும் செய்திகள் பின்வருமாறு காணப்படுகின்றன.   

வல்வெட்டித்துறை மற்றும் மாதகலில் நூறு கிலோ கிராம் கஞ்சா, பொலிஸாரினால்  மீட்பு;

வவுனியா மற்றும் கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்;

முல்லைத்தீவில் தமிழ் மகனுக்கு சொந்தமான காணியில் பௌத்த பிக்கு அடாத்தாக விகாரை அமைப்பு;

வடக்கு, கிழக்கு பகுதிகளில் மது மற்றும் போதைப்பொருள் பாவனை சடுதியான அதிகரிப்பு;

வடக்கு, கிழக்கில் தமது வாழ்விடங்களிலிருந்து படையினரை வெளியேறுமாறு கோரி தமிழ் மக்கள் தொடர் அறவழிப் போராட்டம்;  

 பல்வேறு நாடுகளின் அளப்பரிய பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புடன் ஆயுத மோதல் 2009 மே 19 ஆம் திகதியுடன் முள்ளிவாய்க்காலில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னராவது, இலங்கையில் அமைதிப் பூ பூத்துக் குலுங்கும், சமாதானத் தென்றல் வீசும் என எண்ணியிருந்த அனைத்து தரப்பினரது நம்பிக்கைகள் யாவுமே வீணடிக்கப்பட்டு விடுமோ என ஐயம் குடிகொள்ள ஆரம்பித்து விட்டது.  

இலங்கை போன்ற பல்லினம் பலமொழிகள், பலமதங்களைக் கொண்ட நாடுகள் பல, தமக்குள் விட்டுக் கொடுப்புடனும் நட்புறவுடனும் உறவாடி, தமது நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்றிச் செல்கின்றன.   
ஆனால், நம் நாட்டு நிலைவரமோ சிறுபான்மை இனத்தவரை சந்தேகத்துடனும் பகைமை உணர்வுடனும் நோக்கும் ஒட்டாத உறவாகவே இன்னமும் இருக்கின்றது. அதையே ஜனாதிபதி, அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, சிங்கள இனமும் தமிழ் இனமும் உள்ளத்தால் ஒன்றுபடவில்லை எனத் தெரிவித்திருந்தார்.   

இது முற்றிலும் உண்மையான கூற்று எனக் கூறலாம். உண்மையில் இரு இனமும் உள்ளத்தால் ஒன்றுபடுவதற்காக இன்னமும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பதே கள நிலைவரமாக உள்ளது.   

அத்துடன், அந்தப் பயணம் கடினமானதாகவும் முட்கள் நிறைந்ததாகவும் இருக்கின்றது. மேலும், அந்தப் பாதையைச் சீர்செய்வதற்கான தார்மீக கடமையும் பொறுப்பும் கொழும்பிடம் மிகவும் அதிகப்படியாக உள்ளது. ஏனெனில்,  

சொந்த மண் நிர்வாகத்தில் மண்ணுக்குச் சொந்தம் அற்றவரின் தலையீடுகள்  

வவுனியா, வடக்குப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வெடிவைத்த கல், மருதோடை, பட்டிக்குடியிருப்பு போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள், போர் அனர்த்தம் இடம்பெற்ற வேளையில் குடிபெயர்ந்திருந்தனர். 

தற்போது அவர்கள், தங்கள் பிரதேசங்களுக்கு மீளத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் நிர்வாக செயற்பாடுகளை முல்லைத்தீவு மாவட்டம், மணலாறு (தற்போது வெலிஒயா) பிரதேசத்துடன் பேணி வந்த சுமார் 3,000 சிங்கள வாக்காளர்கள் பட்டிக்குடியிருப்பு கிராமசேவகர் பிரிவினுள் உள்வாங்கப்பட்டு உள்ளனர். 

இவ்வாறான நடவடிக்கையால் சிங்கள மக்களே இல்லாத, வவுனியா வடக்கு பிரதேச சபையில் நான்கு சிங்கள உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.  

இந்த நிலையில், ஏற்கெனவே இருந்த எல்லை நிர்ணயம் பிழையாக உள்ளது எனக் கூறிய நல்லாட்சி அரசாங்கம், அதன் எல்லையை மீளவும் நிர்ணயம் செய்துள்ளது. இவ்வேளை நூறு சதவீத தமிழ்க் கிராமமான வெடிவைத்த கல் கிராம சேவையாளர் பிரிவில் மேலும் 750 சிங்கள வாக்காளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.   

இதன் மூலம், மேலும் இரண்டு சிங்களப் பிரதிநிதிகள் தெரிவாகக் கூடிய வாய்ப்புகள் நிறையவே உள்ளன. இதனால் 13 உறுப்பினர்களைக் கொண்ட வவுனியா வடக்கு (நெடுங்கேணி) பிரதேச சபையில் ஆறு சிங்கள உறுப்பினரை தெரிவு செய்யக் கூடிய ஏது நிலைகள் ஏற்பட்டுள்ளன.   

தமிழ்த் தரப்பு பிரிந்து நின்று தேர்தலில் போட்டியிட்டால் சிங்களப் பிரதிநிதிகள் எண்ணிக்கை கூடி அவர்களே அங்கு ஆட்சி அமைப்பர். அத்துடன், ஏற்கெனவே வவுனியாவில் காலத்துக்குக் காலம் சிங்கள மக்களைக் குடியேற்றி, நிலத் தொடர்பு அற்ற முறையில், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை எனத் தனியான சிங்கள பிரதேச சபை இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.  

பிரதேச சபை என்பது மக்களால் மக்களுக்காக நிர்வகிக்கப்படும் அடிமட்டக் கட்டமைப்பு ஆகும். கிராமத்தின் ஒரு குட்டி நாடாளுமன்றம் என்று அழைத்தால் கூடத் தவறு இல்லை. ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் இவ்வாறான அடிமட்ட அமைப்பின் அர்த்தமே அஸ்தமித்து விடும்.   

மணலாறில், தமிழ் மக்களை ஓர் இரவில் குடியகற்றி சிங்கள மக்களைக் குடியேற்றியது ஆயுதப் போர் துளிர் விட்ட 1984 களில் ஆகும். ஆனால், அண்மைய சம்பவங்கள், அனைவரும் வாய் முழுக்க சமாதானம் பேசும் காலப்பகுதியில், அதாவது 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஆட்சி அமைத்தவர்களால், போரால் ஒடிந்து போன தமிழ் மக்களுக்கு அளித்த வெகுமதிகள், சன்மானங்கள் ஆகும்.  

ஆகவே, ஒட்டு மொத்தத்தில் பார்ப்போமாயின் போர்க் காலமோ, சமாதான காலமோ தமிழ் மக்களுக்கு எல்லாக் காலமுமே கெட்ட காலம் மட்டுமே.  

 சொந்த நிலத்தில், கடலில் சொந்தம் கொண்டாட முடியாத பேரவலம் 

தங்களது நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த வயலும் வாழ்வும் (மருதம்) என வாழ்ந்து, ஆழக்கடல் (நெய்தல்) சென்று செல்வம் அள்ளி வந்து, ‘திரைகடல் ஓடித் திரவியம் தேடு’ என வணிகம் செய்து, பெரும் செல்வச் செழிப்போடு, தானும் வாழ்ந்து பிறருக்காகவும் வாழ்ந்து, சொந்தமாக மாடி மனைகளுடனும் உற்றார் உறவினர்களுடன் சிறப்பாக வாழ்ந்த தமிழ் இனம், இன்று நிர்க்கதியான நிலையில் அடுத்த வேளை உணவுக்கு அல்லல்படும் நிலையில் உள்ளது.  

போர் முடிவுறுத்தப்பட்டு, எட்டு வருடங்கள் கடந்தோடிவிட்டன. நல்லாட்சி ஆட்சிக்கட்டிலேறி, இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் நாட்டின் ஒரு பிரதேசத்தின் குடிமக்களோ இன்னமும் அகதி முகாமில் அவலஅவதி வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.   

பலரிடம் காணி, நிலத்தை விடுவிக்க கோரிக்கை விண்ணப்பம் கொடுத்தும் எல்லாவற்றையும் தேசிய பாதுகாப்பு, தேசிய இறைமை என்ற விடயம் தடுக்கின்றது என தட்டிக்கழிக்கப்படுகின்றது. வேடிக்கை என்ன என்றால், யுத்தம் நடைபெற்றபோது, குண்டு விழுந்தபோது சொந்தக் காணியில் வீட்டில் வசித்தவர்கள், சமாதானம் மலர்ந்தபோது மற்றவர்கள் நிழலில் (உறவினர்கள் வீடு, வாடகை வீடு) வீட்டில் வாழ்கின்றார்கள். முரண்பாடான உண்மை; ஆசியாவின் அதிசயம்.  

மேலும், பாதுகாப்பு அமைச்சு பெரிய தடல்புடலான ஏற்பாடுகளுடன் 100 ஏக்கர் காணியை வடக்கில் கேப்பாபுலவில் விடுவிக்கும். இது பத்திரிகையின் தலைப்புச் செய்தியாகப் பிரசுரிக்கப்படும்.   

ஆனால், வனபரிபாலனத் திணைக்களம் கிழக்கில், திருகோணமலையில் கங்குவேலி, அகஸ்தியர் ஸ்தாபனப் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் 800 ஏக்கர் காணியைக் காதும் காதும் வைத்தால் போல சுவீகரிக்கும்.   

அதாவது, கங்குவேலி, அகஸ்தியர் ஸ்தாபனப் பகுதியில் பூர்வீகமாகத் தமிழ் மக்களே விவசாயம் செய்து வருகின்றனர். யுத்த காலத்தில் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை நிலவியது. அக்காலப் பகுதியில் அயல் கிராமமான நிலாப்பொல கிராமத்து பெரும்பான்மை இனத்தவர்கள் சாகுபடி செய்தனர்.   

இந்நிலையில், வெருகல் பிரதேச செயலகப் பிரிவினுள் வரும் இப்பிரதேசத்தை சேருவில பிரதேச செயலகப் பிரிவினுள் தங்களது அதி கூடிய அரசியல் செல்வாக்கைக் கையாண்டு உள்வாங்க முயற்சிகள் மேற்கொள்கின்றனர். காலப்போக்கில் தங்களது உடைமையாக்க உள்ளனர் என அங்குள்ள தமிழ் விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.   

கடந்த காலங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மூலம் உருவாக்கப்பட்ட சேருவெல பிரதேச செயலர் பிரிவு, 311 சதுர கி.மீ பரப்பளவாக இருக்க, வெருகல் பிரதேச செயலர் பிரிவோ வெறும் 71 சதுர கி.மீ என இருப்பதோடு இரு பிரதேச செயலர் பிரிவிலும் அண்ணளவாக சம அளவில் மக்கள் வசிக்கின்றனர்.   

இந்நிலையில், மேலும் 800 ஏக்கர் விவசாயக் காணியை அபகரிக்க முயற்சிப்பது, நல்லிணக்கத்தை வேரோடு பிடுங்கும் பாரதூரமான செயற்பாடு ஆகும்.  

ஆகவே, இவர்களின் வலது கையால் கொடுத்து இடது கையால் பறிக்கும் கைங்கரியம் இன்னமும் இவர்கள், மனதில் கால் நீட்டிப் படுத்திருக்கிறது. இந்நிலையில் ஜனாதிபதி எதிர்பார்ப்பதுபோல், எப்படி உள்ளம் ஒன்று பட முடியும்?   

ஆகவே, போரில் பறி கொடுத்த விவசாயக் காணியைப் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், சமாதானத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியவில்லை; மீட்க முடியவில்லை. ஆகவே, இதனைச் சமாதானம் என எந்த அடிப்படையில் கூறுவது?   

தமிழ் பேசும் மக்களது காணி நில அபகரிப்பு என்பது வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் எரியும் பிரச்சினையாகத் தற்போது உள்ளது. நாளாந்த செய்திகளில், காணி அபகரிப்பு இல்லாத செய்தி இல்லை எனும் அளவுக்கு விஸ்வரூபம் கொண்டுள்ளது. அதனை அணைக்க, ஆக்கபூர்வமாக, உளப்பூர்வமாக உள்ளம் இன்னமும் பக்குவப்படவில்லை; தயாரில்லை.   

தற்போது நடைபெறும் காணி விடுவிடுப்பு என்பது, சர்வதேசம் மற்றும் மக்களது தொடர் அறப் போராட்டங்கள் என்பவற்றுக்காக விரும்பம், ஈடுபாடு இல்லாமல் ஏனோதானோ என நடைபெறும் செயற்பாடுகளாகும்.  

காணி நில விடுவிப்பும் வீடு உடைப்பும் மரம் தறிப்பும்  

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மக்கள் தமது வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி, தொடர் போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். அப்போராட்டம், உள்நாட்டில் மட்டுமல்லாது வெளி நாட்டிலும் பெரும் ஆதரவு அலையை உருவாக்கி இருந்தது.   

ஜெனீவா மனித உரிமைகள் கூட்டம் நடைபெற்று வருவதையிட்டு கேப்பாப்புலவு விடயம், அங்கு பெரிய பேசு பொருளாகி விடும் என எண்ணியே ஒரு பகுதி விடுவிக்கப்பட்டது. அத்துடன் புதுக்குடியிருப்பிலும் ஒரு பகுதி மக்களின் காணிகள், வீடுகள் விடுவிக்கப்பட்டன.   

ஆனால், விடுவிக்க முன்னர் படையினர் பயன்படுத்திய நல்ல நிலையிலிருந்த பல வீடுகள் இடிக்கப்பட்டிருந்தன. வீடுகளின் யன்னல் கதவு, நிலைகள் கூட பிடுங்கி அகற்றப்பட்டிருந்தன. சில வீடுகளின் அத்திவாரத்தையும் பெயர்த்து அகற்றி உள்ளனர்.   

இவ்வாறான சம்பவங்கள் முன்னர் வலி. வடக்கிலும் இடம்பெற்றிருந்தது. அதாவது, போர் இடிக்காத வீட்டை, தென்னை மரங்களை, சமாதானம் அகற்றி விட்டது என மீண்டும் கூறலாம்.   

பொருளாதார அதிகரிப்பு இன்மை  

கடந்த எட்டு ஆண்டு காலப்பகுதியில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக வடக்கு, கிழக்கில் பாரிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படவில்லை. யுத்தம் நடைபெற்ற காலப்பகுதிகளில் இயங்கிய சிறு தொழிற்சாலைகள் கூட அதிகப்படியான தொழிற்படு மூலதன பற்றாக்குறையாலும் பல பக்க போட்டிகளாலும் பல இடர்பாடுகளை எதிர் நோக்குகின்றன.தனியார் துறை வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்படவில்லை.   

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு, வடக்கு மாகாணப் பங்களிப்பு, ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அதிகரித்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வருகை அங்கு வதியும் மக்களின் சேமிப்பை, முதலீட்டை உறுஞ்சுவதாகவும் அவை தெற்கில் வேறு பயன் உள்ள வடிவங்களில் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.   

மத்திய வங்கியில் பதிவு செய்த 46 நிதி நிறுவனங்களில் 30 நிறுவனங்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைக் குறிவைத்துச் செயற்படுகின்றன. 

மேலும் இவற்றின் குத்தகை அடிப்படையிலான கடன் வசதி, பலரை விரக்தி மற்றும் தற்கொலைகள் வரை கொண்டு சென்றுள்ளது. யுத்தத்தால் கணவனை இழந்த பெண் தலைமைத்துவ குடும்பங்களது சிறுகச் சிறுகச் சேமித்த சேமிப்பைக் கூட இவர்கள் கரைத்து விட்டு செல்கின்றனர்.  

மேலும், தென்பகுதிச் சிறு வியாபாரிகள் தொடக்கம் பெரிய நிறுவனங்கள் எல்லாமே வடக்கு, கிழக்கின் மாவட்டங்கள் தோறும் அம்மக்களின் வீட்டு வாசல் வரை சென்று கணிசமான பொருட்களை விற்று விட்டுச் செல்கின்றனர். பண்டிகைக் காலங்களில் பெரும் எடுப்பில் முகாமிடுகின்றனர். இதனால் அங்குள்ள வியாபாரிகள் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் கையேந்துகின்றனர்.   

ஆயுத மோதல் முடிவுறுத்தப்பட்டு சமாதானம் பிறந்துள்ளது எனக் கூறப்படும் இந்நாட்களில் கூட, தமிழ் மக்கள் சோகம், இயலாமை, தோல்வி எனப் பல பாவ மூட்டைகளுடனேயே, பெரும் சிலுவைகளை சுமந்து நாட்களை நகர்த்துகின்றனர்.   

இவர்களுக்கான அமைதியான, நிறைவான வாழ்வு இன்னமும் நிலுவையாகவே இருக்கின்றது. இன முறுகல், யுத்தம் ஆகியவற்றுக்கு முற்பட்ட அந்நாட்களில் தங்கள் பிரதேசங்களில் மன நிறைவான வாழ்க்கை வாழ்ந்த மக்கள், இன்று நிர்க்கதியான, விரும்பாத வாழ்வுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.  

நான் உத்தமன், நல்லவன், வல்லவன் என அவரே சொல்வது தம்பட்டம் அல்லது தற்பெருமை; அதேபோல எமது நாட்டு நீதித் துறை சுதந்திரமாக இயங்குகின்றது. இங்கு சிறுபான்மை இனம் கௌரவமாக வாழ்கின்றது என நாட்டின் தலைவர்கள் கூறக் கூடாது; மாறாக பாதிப்புக்கு உள்ளான மக்கள் கூற வேண்டும். எனவே, சிறு கதைகள், நாவல்கள் முடியும் தறுவாயில் ‘யாவும் கற்பனை’ என எழுத்தாளர் குறிப்பிடுவது போலவே உள்ளது, நாட்டின் உண்மையான கள நிலைவரம்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X