2025 நவம்பர் 24, திங்கட்கிழமை

சிதறாமல் இருப்பதற்காக வேண்டா வெறுப்பில் ஆதரித்த மலையக கட்சிகள்  

R.Tharaniya   / 2025 நவம்பர் 20 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான அரசு 2026ற்காக  சமர்ப்பித்த வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்க்கான வாக்கெடுப்பு கடந்த வெள்ளிக்கிழமை (14) அன்று நடைபெற்றது. அதற்கு ஆதரவாக 
160 வாக்குகளும், எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், 118 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் அதாவது 
159 எம்.பிக்களுடன் இருக்கும் அரசுக்கு இந்த வரவு-செலவுத் திட்டத்தை பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றுவது கடினமானதல்ல. ஆனால், பிரதான எதிர்க்கட்சியை பிளவுபடுத்தி அவர்களின் ஒரு சாராரின் ஆதரவைப்பெற்று நிறைவேற்றியமைத்தான் அனுரகுமார அரசின் அரசியல் தந்திரமாகப் பார்க்கப்படுகின்றது. 

அதாவது, ஒரு ‘200 ரூபா’ வை வைத்து பிரதான எதிர்க்கட்சியைப் பொறியில் சிக்க வைத்தது மட்டுமன்றி, பிரதான எதிர்க்கட்சியின் பங்காளிகளான  மனோகணேசன் எம்.பி. தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, பழனி திகாம்பரம் எம்.பி.தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், இராதாகிருஷ்ணன் எம்.பி.தலைமையிலான மலையக மக்கள் முன்னணி மற்றும் எதிர்க்கட்சியாகவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களையும் கட்சிகளையும் ‘திரிசங்கு’ நிலைக்குக் கொண்டு வந்து அவர்களின் ஆதரவையும் பெற்றமைதான் அனுரகுமார அரசின்  பெரு வெற்றியாக அமைந்துள்ளது. 

இவ்வாறாகப்  பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிகளாக இருந்து கொண்டும் ஐக்கிய  மக்கள் சக்தி வரவு- செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்த போதும், இந்த மலையகத்  தலைவர்களினால் வரவு- செலவுத் திட்டத்தை  எதிர்த்து வாக்களிக்க முடியாமல் வேண்டா வெறுப்பாக ஆதரவளிக்க வேண்டிய நிலைக்கு இவர்களை   ‘மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு  நாளொன்றுக்கு அரசினால் 200 ரூபாய் சம்பள  அதிகரிப்பும் தோட்டக் கம்பெனிகளினால் 200 ரூபாய் சம்பள அதிகரிப்புமாக மாதமொன்றுக்கு 10,000 ரூபாய்  சம்பள  அதிகரிப்பு’  என்ற ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அனுரகுமார திசாநாயக்கவின் வரவு- செலவுத் திட்ட உரை  தான் தள்ளியது.

 ஜனாதிபதியின் இந்த மலையகத் தோட்டத் தொழிலாளருக்கான இந்த சம்பள  அதிகரிப்பை முதலில் எதிர்க்கட்சியினர் கண்மூடித்தனமாக எதிர்த்தனர். ‘தனியார் துறை தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு எப்படி சம்பள அதிகரிப்பை வழங்க முடியும்? அதற்குச் சட்டத்தில் இடமில்லை. இந்த சாம்பல் அதிகரிப்பிற்காக அரசினால் ஒதுக்கப்பட்ட 5,000 மில்லியன் ரூபா எத்தனை மாதங்களுக்கு போதும்? இவ்வாறுதான் முன்னைய அரசும் அறிவித்தபோதும் எதுவும் நடைபெறவில்லை. ஒரு மாதத்தில் 25 நாட்கள் வேலைக்கு சென்றால்தான் இந்த அதிகரிப்பு கிடைக்கும்.

ஆனால், எந்த தோட்டக் கம்பனியும் 25 நாட்களுக்கு வேலை வழங்காது,  இந்த 200 ரூபாய் அதிகரிப்பை  வழங்க தோட்டக் கம்பெனிகள் சம்மதிக்கவில்லை, நாம் கோரியது அடிப்படை சம்பள உயர்வையே என்றவாறாக  வரவு- செலவுத் திட்ட உரைகளில் தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர். இதில் சில மலையகத் தலைவர்களும் அடக்கம்

எதிர்க்கட்சியினரும் மலையகத் தலைவர்களும் அரசியலை முதன்மைப்படுத்தி மலையக மக்களின் உணர்வுகளை, எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்ளாமல் தாம் ஏதோ மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டும் தாம் மட்டுமே அந்த மக்களின் தலைவர்கள், பாதுகாவலர்கள், ஆபத்பாந்தவர்கள், பிரதிநிதிகள்  என்ற நினைப்பில்  ஜனாதிபதியின் ‘மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் சம்பள அதிகரிப்பு’ என்ற அறிவிப்புக்குக்  காட்டிய எதிர்ப்பை  எதிர்க்கட்சியினர்க்கு, மலையகத் தலைவர்களுக்கு, கட்சிகளுக்கு எதிரான மலையக மக்களின் எதிர்ப்பாக மாற்றியதே அனுரகுமார அரசின் வெற்றியாக அமைந்தது.

ஜனாதிபதியின் ‘மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் சம்பள அதிகரிப்பு’ என்ற அறிவிப்பைப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி விமர்சிக்கத் தொடங்கியவுடனேயே அதன் பங்காளிகளான மலையக் கட்சிகளின் தலைவர்களுக்கு ஏழரைச்சனி பிடித்து விட்டது. மலையகக் காட்சிகளின் தலைவர்கள் அந்த அறிவிப்பை  மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறத் தொடங்கி. விட்டனர்.

இது போதாதென்று அரசிலுள்ள மலையக மக்களின் பிரதிநிதிகளும் தமது பங்கிற்கு இவர்களை வறுத்தெடுக்கத்தொடங்கி விட்டனர். அவர்களின் கருத்துக்களை எதிர்த்தால் மலையக தோட்டத்தொழிலாளர்களுக்கான  200 ரூபாய் சம்பள  அதிகரிப்பை எதிர்த்ததாக அமைந்து விடும் என்பதனால் பிரேத எதிர்க்கட்சியின் பங்காளிகள் இருதலைக்கொள்ளி எறும்பாகினர்.

இதற்கிடையில் மலையக மக்களின் மனநிலையை அறியாது முந்திரிக் கொட்டைகளாக  200 ரூபாய்  அதிகரிப்புக்கு  எதிராக எதிர்க்கட்சியின் சில எம்.பிக்கள் அரசை, அரசின் வரவு-செலவுத் திட்டத்தை  எதிர்க்கின்றோம் என்ற பெயரில் வெளியிட்ட கருத்துக்கள், விமர்சனங்கள் எதிர்க்கட்சிக்கும் அதன் பங்காளிகளான மலையக கட்சித் தலைவர்களுக்கும் எதிரான எதிர்ப்பாக உருவெடுத்த நிலையில், நிலைமையின் பாரதூரத் தன்மையைத் தாமதமாக விளங்கிக் கொண்ட மலையக கட்சிகளின்  தலைவர்கள், தலைவர்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கான அரசின் 
200 ரூபாய் சம்பள அதிகரிப்பை எதிர்க்கட்சிகள் எதிர்க்கவில்லை.

அதனை வழங்குவதில் உள்ள சட்டச் சிக்கலைத்தான் தெரிவித்தார்கள் . “200 ரூபாய் அல்ல, 400 ரூபாவை அரசு வழங்க வேண்டும்”  என சப்பைக் கட்டுக்கட்டத் தொடங்கினார்கள்.ஆனால், அதற்குள் நிலைமை கை மீறிப்போயிருந்தது. மலையக தலைவர்களுக்கும், மலையகக் கட்சிகளுக்கும் 200 ரூபாய் சம்பள அதிகரிப்பை எதிர்ப்போர், விமர்சிப்போருக்கும் எதிராக மலையகத்தில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின.

கோயில்களில் தேங்காய்கள் உடைக்கப்பட்டன. சாபங்கள் போடப்பட்டன. இதனால் ஆடிப்போன மலையக தலைவர்களும், மலையகக் கட்சிகளும் தமது தொனியை மாற்றி ஜனாதிபதியின் “மலையகத் தோட்டம் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 200 ரூபா சம்பள அதிகரிப்பு” என்ற அறிவிப்பை ஆதரிப்பதாகக் காட்டிக் கொள்ளத் தொடங்கினர். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவரான சஜித் பிரேமதாசவும் 200 ரூபாய் சம்பள அதிகரிப்பை  வரவேற்று நீண்டதொரு விளக்கத்தை வெளியிட்டார்.

ஜனாதிபதி அறிவித்த ‘200 ரூபாய் அதிகரிப்பு’  எதிர்க்கட்சிகளுக்கு பெரும் கண்ணிவெடியாக மாறிய நிலையில்தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இலத்திரனியல் முறையில் இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் 2026ஆம் ஆண்டுக்கான  வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக அரசிடன் இணைந்து மலையக கட்சிகளான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி ஆகியவை வாக்களித்தன.

இதனால் அரசின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 160வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில்,   118 மேலதிக வாக்குகளினால் அது நிறைவேற்றப்பட்டது.
 இந்த வாக்கெடுப்பில் இன்னொரு சம்பவமும் நடந்தது. அதாவது, இலத்திரனியல் முறையில் வாக்களிப்பு  இடம்பெற்ற நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரான ஜீவன் தொண்டமான் எம்.பி. ஆதரவாக வாக்களித்த நிலையில், அந்த வாக்கு இலத்திரனியல் முறையில் பதிவானது. ஆனால், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரான மனோகணேசன் எம்.பி., தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரான பழனி திகாம்பரம் எம்.பி., மலையக மக்கள் முன்னணியின் தலைவரான இராதாகிருஷ்ணன் எம்.பி. ஆகியோர் 
தமது    வாக்குகளை இலத்திரனியல் முறையில் பதிவு செய்யவில்லை.

இந்நிலையில், சபைக்குத் தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன  வாக்களிப்பு நடைமுறைக்கு ஏற்ப, “இலத்திரனியல் முறையில் தமது வாக்குகளைப் பதிவு செய்ய முடியாதவர்கள் யாராவது இருக்கின்றீர்களா? அவ்வாறிருந்தால் எழுந்து நின்று நீங்கள் ஆதரவா அல்லது எதிர்ப்பா என்பதனை வெளிப்படுத்துங்கள்’’ என்று கூறியபோது, எழுந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான மனோகணேசன் எம்.பி. “ஜனவரி முதல், தோட்டத் தொழிலாளருக்கு நாள் ஒன்றுக்கு  1,750 ரூபாய் வேதனம் வழங்க, ஏற்பாடு செய்வேன் என்ற ஜனாதிபதியின் உறுதியின் மீதான எம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம். 
12 மாவட்டங்களில் அமைந்துள்ளன. 

3 அரச தோட்ட நிறுவனங்கள், 22 பிராந்திய தோட்ட நிறுவனங்கள், சிறு தோட்ட உடைமையாளரது தனியார் தோட்டங்கள் ஆகிய அனைத்திலும் தொழில் புரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி ஒரு நாளைக்கு  1,750 ரூபாய் கிடைக்க வேண்டும். இந்த சம்பளத் தொகை எப்படி வழங்கப்படுகிறது என்பதை ஆராய்வது நமது கட்சியின் வேலை இல்லை. அது அரசாங்கத்தின் பொறுப்பும், பணியும் ஆகும்’’ என்று கூறி இதனைத் தானும் திகாம்பரம் எம்.பியும் ஆதரிப்பதாக கூறினார். இதனையடுத்து, எழுந்த இராதாகிருஷ்ணன் எம்.பியும் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

ஆக. இந்த வரவு-செலவுத் திட்டத்தில் எதிர்க்கட்சிகளுக்கு “மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு  நாளொன்றுக்கு அரசினால் 200 ரூபாய் சம்பள  அதிகரிப்பும் தோட்டக் கம்பனிகளினால் 200 ரூபாய் சம்பள அதிகரிப்புமாக மாதமொன்றுக்கு 10,000 ரூபாய்  சம்பள  அதிகரிப்பு’’ என்ற கண்ணி  வெடியை  அனுரகுமார அரசு வைத்த நிலையில், எதிர்ப்பு என்ற ரீதியில் அதில் கால் வைத்துச்  சிக்கி சின்னாபின்னமாகச் சிதறாமல் இருக்க அரசின் முழு வரவு-செலவுத் திட்டத்தையும் வேண்டா வெறுப்பாக ஆதரிக்க வேண்டிய நிலை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிகளான மலையக கட்சிகளுக்கும் அதன்  தலைவர்களுக்கும் ஏற்பட்டு விட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X