Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 செப்டெம்பர் 03 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
இலங்கையில் உண்மையிலேயே எத்தனை தேசிய இனங்கள் வாழ்கின்றன? முஸ்லிம்களும்; மலையக மக்களும் தனித்தனியான தேசிய இனங்கள் இல்லையா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையைத் தொடர்ந்தே இந்த கேள்விக்கான விடையைத் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
சபையில் உரையாற்றிய சிறிதரன் எம்.பி. ‘சபாநாயகர் அவர்களே, இந்த நாட்டில் இரு தேசிய இனங்கள் உள்ளன. ஒன்று தமிழ் பேசும் மக்கள் தமிழ்த் தேசிய இனம் மற்றையது சிங்கள தேசிய தினம் ஆகியவையாகும்’ என்று கூறி, தொடர்ச்சியாக உரையாற்றினார்.
பெருந்தேசிய அரசியலில் தற்போதைய ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்க ஒரு எம்.பியாக எவ்வாறு கனகச்சிதமாக உரையாற்றினாரோ, அவ்வாறு உரையாற்றுகின்ற ஒரு தமிழ் அரசியல்வாதியாகவே சிறிதரன் எம்.பியைச் சொல்ல முடியும். இவர் உரையாற்றுகின்ற பாணிக்கு முஸ்லிம் சமூகத்திடையேயும் ஒரு வரவேற்பிருந்தது எனலாம்.
இலங்கையில் சிங்கள மக்கள், தமிழ் மக்கள் மட்டுமன்றி, முஸ்லிம் மக்களும் மலையக மக்களும் கூட தனியான தேசிய இனங்களாக வாழ்கின்றனர். ஏன்? கத்தோலிக்க மக்களும், பூர்வீகக் குடியைச் சேர்ந்த (வேடுவ) மக்களும் தங்களைத் தேசிய இனங்களாக முன்னிறுத்த முடியும் என்பதுதான் யதார்த்தமாகும்.
இதுவெல்லாம் தெரியாத ஒரு அரசியல்வாதி என சிறிதரனை குறிப்பிட முடியாது. அத்துடன், அவர் தவறுதலாக உரையாற்றியதாகக் குறிப்பிடவும் முடியாது. அப்படிச் செய்திருந்தால் அந்த 20 நிமிட உரையில் எங்காவது ஒரு இடத்தில் அவர் அதனைத் திருத்தியிருப்பார் அல்லது வெளியில் வந்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பார்.
எனவே, அவர் இதனைத் தெளிவாக, திட்டமிட்டே உரையாற்றியிருக்கின்றார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சிறிதரனுக்குப் பிறகு பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் எம்.பிக்களும் இவ்விடயத்தைச் சரிப்படுத்தவோ சமாளிக்கவோ முற்படவில்லை என்பது இங்கு கவனிப்பிற்குரியது.
இந்த நாட்டில் இரண்டு தேசிய இனங்கள் மட்டும்தான் வாழ்கின்றன என்ற தொனியில் உரையாற்றியதன் மூலம், அபத்தமானதும் பிற்போக்குத்தனமானதுமான கருத்தொன்றை மேற்படி தமிழ் எம்.பி. முன்வைத்திருக்கின்றார். இப்படியொரு கருத்தை சிறிதரன் போன்றவர்களிடமிருந்து முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கவில்லை.
வரைவிலக்கண அடிப்படையில் நோக்கினால், இனம் என்பது வேறு, தேசிய இனம் என்பது வேறு. ஒரு மக்கள் கூட்டம் வாழுகின்ற நிலப்பகுதி, கலாசாரம், பண்பாட்டு நடைமுறைகள், இன மரபு வரலாறு, மதம், மொழி என்பவற்றின் அடிப்படையிலேயே தேசிய இனங்கள் வரையறை செய்யப்படுகின்றன.
இதன் அடிப்படையில் முஸ்லிம்கள் நூற்றாண்டு காலமாக இலங்கையில் ஒரு தேசிய இனமாக ஆகிவிட்டனர். இது, தமிழ்த் தேசியமோ சிங்கள தேசியமோ நிராகரிக்க முடியாத நிதர்சனமாகும்.அதனையும் மீறி யாராவது, இரண்டு தேசிய இனங்கள்தான் இந்த நாட்டில் உள்ளன என்று கூறுவார்களாயின் அதன் பின்னால் ஒரு கருத்தியல் ரீதியான நிகழ்ச்சிநிரல் இருக்கின்றது என்றுதான் கருத வேண்டியுள்ளது.
ஆரம்பக் காலங்களில் மொழியைப் பிரதான காரணியாக வைத்து தேசிய இனங்கள் தீர்மானிக்கப்பட்டாலும் அப்படி மொழியை மட்டும் கொண்டு தேசிய இனங்களைத் தீர்மானிக்கும் காலம் இப்போது மலையேறிப் போய்விட்டது.
இப்போது மொழி என்பது, ஒரு தேசிய இனத்தை அடையாளப்படுத்துவதற்கான ஏகப்பட்ட காரணிகளுள் ஒரேயொரு காரணி மட்டுமே என்பதைக் கவனிக்க வேண்டும்.
முஸ்லிம்கள் மொழியால் ஒன்றுபட்டாலும் ஏனைய காரணிகளால் வேறுபடுகின்றார்கள். கலாசாரம், மதம், பண்பாடு, மரபினம், ஆட்புல எல்லை, பொருளாதார அம்சங்கள் என ஏனைய எல்லா விதத்திலும் பிரத்தியேகமான அடையாளங்களை முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கின்றது.
அத்துடன், தெற்கில் பல பகுதிகளில் முஸ்லிம்கள் தங்களது தாய் மொழியாக சிங்களத்தையே பேசுகின்றனர் என்பதையும் சிறிதரன் போன்றோர்
மறந்து விடக் கூடாது.
அவர் சொல்வது போல, வடக்கு, கிழக்கில் மொழியை அடிப்படையாக வைத்து முஸ்லிம்களைத் தமிழ் பேசும் தேசிய இனமாகக் கருதுவதாயின், தெற்கில் முஸ்லிம்கள் சிங்களத்தைப் பிரதானமாகப் பேசுகின்றார்கள் என்பதற்காக சிங்கள தேசிய இனத்திற்குள் உள்ளடக்க முடியுமா? அது மட்டுமன்றி, தமிழை விட அதிகமாக சிங்களத்தைப் பேசுகின்ற தமிழர்களையும் சிங்கள தேசிய இனமாகக் கொள்ள முடியுமா?
முஸ்லிம்களும் தமிழர்களும் தமிழ் பேசும் சமூகங்களே அன்றி தமிழ் பேசும் ஒரு தனி தேசிய இனம் அல்ல. வடக்கு, கிழக்கில் அவர்கள் தமிழர்களோடும் அதற்கு வெளியே பெரும்பான்மைச் சமூகத்தோடும் பின்னிப் பிணைந்து வாழ்கின்றார்கள் என்பதற்காக தங்களது தேசிய இனத்திற்குள் முஸ்லிம்களை உள்ளடக்கி விட முடியாது.
குறிப்பாக, முஸ்லிம்களும் தமிழ் பேசும் இனம் என்று கருதியிருந்தால் வடக்கில் இருந்து தனியே முஸ்லிம்களைப் புலிகள் வெளியேற்றியிருக்க மாட்டார்கள். வடக்கு, கிழக்கில் பல இடங்களில் முஸ்லிம்கள் ‘தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு’ தமிழ் ஆயுதக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்.
இதனையெல்லாம் மறந்து விட்டு, கருத்துக் கூற முற்படும் பழமைவாத சிந்தனையைத் தமிழ் அரசியல்வாதிகள் களைய வேண்டும். முஸ்லிம்களைத் தனியொரு தேசிய இனமாகக் கூட கருத முடியாத மனநிலையில் இருக்கின்ற தமிழ் அரசியல்வாதிகள்தான், சிங்கள தேசியத்திடம் தமிழ் மக்களுக்கான உரிமையை வேண்டி நிற்கின்றனர் .
என்பது முரண்நகை இல்லையா?20 இலட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு சமூகத்தை, மதம், கலாசாரம், பண்பாடு என பல அடிப்படைகளில் தனித்துவமான அடையாளங்களின் அடிப்படையில் ஒரு தேசிய இனமாகக் கூறுவதற்குக் கூட விரும்பாத சூழலில் நாம், நல்லிணக்கம் பற்றிப் பேசுவது நகைப்புக்கிடமானது இல்லையா?உலக அரங்கில் தேசிய இனங்களைப் பிரகடனப்படுத்தும் ஒழுங்குகள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரே மாறிவிட்டன.
முன்னைய காலங்களில் மொழி ஒரு பிரதான தீர்மானிக்கும் சக்தியாக இருந்த போதும், இப்போது மொழியை விட வேறு பல காரணிகள்தான் தேசிய இனங்களைத் தீர்மானிக்கின்றன என்பதைத் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.
மதப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டே நெதர்லாந்தில் வாழ்ந்த மக்களில் ஒரு பகுதியினர் தம்மைத் தேசிய இனமாக பிரகடனப்படுத்தி, பெல்ஜியம் என்ற நாடாகப் பிரிந்து சென்றனர். தவிர, மொழியை அடிப்படையாகக் கொண்டல்ல. இஸ்ரேல் உருவானதும் மொழியை அன்றி யூதர்கள் என்ற அடையாளத்தை மையமாகக் கொண்டே ஆகும்.
மதத்தை அடிப்படையாக வைத்து ஒரு தேசிய இனம் பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கியது. உலகில் வாழும் ஆங்கிலம் பேசுகின்ற எல்லோருமே ஒரு தேசிய இனத்திற்குள் உள்ளடங்குவது கனவிலும் சாத்தியமில்லை.
ஐரோப்பாவில், ஆங்கிலம் என்ற ஒரே மொழியைப் பேசுகின்ற சமூகங்கள் வேறு காரணங்களை முன்வைத்து தம்மை, தனியான தேசிய இனங்களாக முன்னிறுத்தி, பிரிந்து செல்ல முற்படுவதை நாம் கண்டிருக்கின்றோம்.
அரபு மொழியைப் பேசும் நாடுகளிலும் இவ்வாறு தனித்தனியான பல தேசிய இனங்கள்; உருவாகியுள்ளன.இதனையெல்லாம் இருட்டடிப்புச் செய்து விட்டு, இலங்கையில் இரு தேசிய இனங்கள் உள்ளன என்று நாட்டின் உயரிய சபையில் உரையாற்றிச் செல்வது. குறுகிய அரசியல் சிந்தனையையே வெளிப்படுத்துகின்றது.
பாராளுமன்றத்தில் இக்கருத்தை சிறிதரன் எம்.பி. கூறியபோது, இரு முஸ்லிம் எம்.பிக்கள் மாத்திரம் எழுந்து பதிலளித்தனர். ஹக்கீம். றிசாட் போன்ற கட்சித் தலைவர்களும் அரச தரப்பு முஸ்லிம்களும் மௌனமாக இருந்தாலும் கூட, இக்கருத்தை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் கண்டிக்கின்றது.
இப்படியான வேலையைச் சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தில் இருந்தே பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சில தமிழ் தலைவர்கள் செய்து வந்தார்கள். ‘முஸ்லிம்களும் தமிழர்கள்’ அல்லது ‘தமிழ் பேசும் இனத்தவர்’
என்று சொன்னார்கள்.
ஆனால், அதனை முஸ்லிம் சமூகம் மறுதலித்து. தாங்கள் ஒரு தனி தேசிய இனம் என்பதைப் பல வழிகளில் நிரூபித்தது. பின்வந்த தமிழ்த் தேசிய தலைவர்கள் இந்த யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு செயற்பட்டதாகச் சொல்லலாம்.
ஆனால், சிறிதரன் எம்.பியின் அண்மைய உரையானது, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் குறுகிய அரசியல் சிந்தனை என்ற முருங்கை மரத்தில் மீண்டும் ஏறுகின்றார்களா? என்ற சந்தேகத்தைக் குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தியுள்ளது,
இக்கருத்து உண்மையில், சிறிதரன் எம்.பியின் தனிப்பட்ட கருத்தா அல்லது ஒட்டுமொத்த தமிழ்த் தேசியத்தின் கருத்தும் இதுதானா என்பதைத் தெளிவுபடுத்துவது ஏனைய தமிழ் எம்.பிக்களின் பொறுப்பாகும்.
8 minute ago
21 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
21 minute ago
2 hours ago
3 hours ago