Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூலை 31 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
முருகானந்தன் தவம்
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் பாராளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் காய்ச்சல் அடித்து முடிந்து விட்ட நிலையில், தற்போது மாகாண சபைகளுக்கான தேர்தல் காய்ச்சல் அடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த தேர்தலை உடனடியாகவே நடத்த வேண்டுமென சிறுபான்மையினக் கட்சிகள் வலியுறுத்திவரும் நிலையில் மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரி- ரணில் கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் அரசுகள் நடத்தாத, அல்லது நடத்த முடியாத,விரும்பாத இந்த மாகாண சபைகளுக்கான தேர்தலை மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதையே முற்றாக எதிர்க்கும்
ஜே.வி.பி.-தேசிய மக்கள் சக்தி ஆட்சியாளர்கள் நடத்துவார்களா
என்பதே இன்றுள்ள கேள்வி.
இலங்கையில் தமிழர்களின் தனி நாடு கோரிய ஆயுதப் போராட்டமே மாகாண சபை ஆட்சி முறைக்கு வித்திட்டது. இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, இலங்கை-இந்திய ஒப்பந்தம் 1987 அக்டோபர் 29ஆம் திகதி கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய இலக்கு இலங்கை அரசு அதன் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகவே இருந்தது. இதன் படி 1987 நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13ஆவது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது.
1988 பெப்ரவரி 3ஆம் திகதி இலங்கையில் மத்திய மாகாணம் , கிழக்கு மாகாணம், வடமத்திய மாகாணம்,வடக்கு மாகாணம்,வடமேற்கு மாகாணம், சப்ரகமுவ மாகாணம், தென் மாகாணம், ஊவா மாகாணம், மேல் மாகாணம் என 9மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன.
மாகாண சபைகளுக்கான முதலாவது தேர்தல் 1988 ஏப்ரல் 28ஆம் திகதி வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களுக்கு இடம்பெற்றது. இதன் தொடர்ச்சியாக 1988 ஜூன் 2ஆம் திகதி மத்திய, தென் மற்றும் மேல் மாகாணங்களுக்குத் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
அதன்பின்னர் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் 1988 நவம்பர் 19ஆம் திகதி நடத்தப்பட்டது.மாகாண சபையின் பதவிக் காலம் 5 வருடங்களாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 1993இல் இரண்டாவது மாகாணசபைத் தேர்தலும் 2004இல் மூன்றாவது மாகாணசபைத் தேர்தலும் முதலில் ஒரே தடவையில் நடத்தப்பட்ட நிலையில்,
பின்னர் தேர்தல்கள் பிரித்து பிரித்து நடத்தப்பட்டதால் 2008 -2009களில் நான்காவது மாகாண சபைத் தேர்தலும் 2012,2013,2014களில் அடுத்தடுத்த மாகாண சபைத் தேர்தல்களும் இடம்பெற்றன.
இவ்வாறான நிலையில், மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிவடைந்த போதும் இதுவரையில் இந்த மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படவில்லை. மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தின் பத்தாம் சரத்து மற்றும் அரசமைப்பின்
154 ஈ உறுப்புரை ஆகியனவற்றின்படி, மாகாண சபையொன்றின் பதவிக்காலம் நிறைவடைந்து,
அந்த மாகாணசபை கலைந்த நாளிலிருந்து, நான்கு வாரக் காலத்துக்குள், குறித்த மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான அறிவித்தலை, தேர்தல் ஆணைக்குழு விடுக்க வேண்டும். ஆனால், மாகாண சபைகள் கலைந்து
பல வருடங்களுக்கு மேலாகியும் இன்று வரை மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்கப்படவில்லை.
இவ்வாறு எந்தவொரு மாகாண சபைகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்படாத நிலையில் மாகாணசபைகள் ஆளுநர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றன.
இதனை பயன்படுத்தி ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் தமக்கு விசுவாசிகளான ஆளுநர்களை ஒவ்வொரு மாகாணங்களுக்கும் நியமித்து தமது நோக்கங்கள், தேவைகள், திட்டங்கள், இலக்குகளை இலகுவாக அடைந்து கொள்ளும் நிலையே கடந்த பல வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வருகின்றன.
இதற்கிடையில் கடந்த கோட்டாபயவின் அரசிலும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி , அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியதையடுத்து,
கட்சித் தலைவர்களின் இணக்கப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டு அமைச்சரவை கூட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான யோசனை, அப்போதைய பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனால் முன்வைக்கப்பட்டு ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது.
இவ்வாறு ஒருபுறம் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதில் கோட்டாபய ராஜபக்ஷ அரசு அக்கறை கொண்டுள்ளதாகக் காட்டிக்கொண்டு மறுபுறம் மாகாணசபைகளுக்கான மூலாதாரமான 13ஆவது திருத்தம் ஒழிக்கப்படவேண்டும், மாகாண சபைக்கான தேர்தல்கள் நடத்தப்படக் கூடாதென்ற இனவாதக் கருத்துக்களையும் கோட்டாபய அரசு தட்டி எழுப்பிவிட்டது.
மாகாண சபைகள் வெள்ளை யானைகளாக இருப்பதாக அரச தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டனர். கோட்டாபய அரசின் அமைச்சரவைக் கூட்டத்திலும் அப்போதைய முக்கிய அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர ஆகியோர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதுடன், மாகாண சபை முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர். இந்நிலையில், கோட்டாபய அரசு மக்கள் போராட்டத்தினால் விரட்டப்பட்டதனால் மாகாண சபைகளுக்கான தேர்தல் முயற்சிகளும் கைவிடப்பட்டன .
இவ்வாறான நிலையில், மீண்டும் தற்போது மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்த வேண்டுமென்ற வலியுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. மாகாணசபை முறைமையை முற்றாக இல்லாமல் செய்வதற்கே சிங்கள தேசியக் கட்சிகள் விரும்புவதாகச் சுட்டிக்காட்டும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அதற்கு இடமளிக்காமல் மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கத் தொடங்கியுள்ளன. இவ்வாறான நிலையில்தான் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் சட்ட ரீதியான சில தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன்படி, அமைச்சு மட்டத்தில் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் 2017ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் சட்டத்திருத்தம் தொடர்பில் 2019 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் தமிழரசுக் கட்சியின் எம்.பி. சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணை என்பன தொடர்பில் விசேட அவதானம் செலுத்தி ஆராய்ந்து வருகிறோம்.
இதுகுறித்து சகல தரப்பினருடனும் வெளிப்படைத்தன்மையுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் என தற்போதைய மாகாணசபைகள், உள்ளூராட்சி சபைகள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
ஆனால், இலங்கை -இந்திய ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்ட, அந்த ஒப்பந்தத்தின் பயனாக இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பை நீதிமன்றத்தை நாடி துண்டித்த, மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படக்கூடாது என்ற கொள்கையைக்கொண்ட இந்த அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஆட்சியாளர்கள் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு எந்தளவுக்கு ஆர்வம் காட்டுவார்கள் அல்லது நடவடிக்கை எடுப்பார்கள் என்பதே இன்றுள்ள கேள்வி.
மைத்திரி-ரணில் நல்லாட்சியில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த நடவடிக்கைகள் எடுக்க முற்பட்டபோது, எதிர்த்தவர்கள், கோட்டாபய ஆட்சியில் மாகாண சபைகளுக்குத் தேர்தலுக்கான முயற்சிகள் என்ற நாடகம் நடத்தப்பட்போது கூட,
அந்த நாடகத்தையே முழு மூச்சாக எதிர்த்தவர்கள் இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருக்கும்போது அதனை நடத்த விரும்புவார்களா? அல்லது தமது இனவாத அரசியலை முன்னெடுக்கச் சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்கும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர மற்றும்
மகா சங்கத்தினர் தான் விடுவார்களா?
அதுமட்டுமல்ல, ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் பெரு வெற்றி பெற்ற அனுரகுமார தலைமையிலான ஜே.வி.பி.-தேசிய மக்கள் சக்தியினர் சில மாதங்களில் நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் மக்களின் ஆதரவை கணிசமானளவு இழந்து தோல்விப் பாதையில் சென்று கொண்டிருக்கும்
நிலையில், மாகாண சபைகளுக்கானத் தேர்தலை நடத்தி மீண்டுமொரு படுதோல்வியைச் சந்திக்க விரும்பமாட்டார்கள். ஆகவே, மாகாண சபைகளுக்கான தேர்தல் சட்டத் திருத்தத்தை பயன்படுத்தி மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாது இழுத்தடிக்கவே முடிந்தளவுக்கு முயற்சிப்பார்கள்.
மாகாண சபைகளுக்கானத் தேர்தலை உள்ளடக்கிய 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் தாய் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்ரமசிங்கவே நடத்தாது இழுத்தடித்த, தமிழ் மக்களுக்கு 13 அல்ல, 13 பிளஸ் தீர்வினை வழங்குவோம்
என ஐ.நாவுக்கு உத்தரவாதமளித்த ராஜபக்ஷக்களே நடத்த விரும்பாத, நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வைத்துக் கொண்டு அதன் ஆதரவோடு ஆட்சி நடத்திய மைத்திரி -ரணில் நல்லாட்சி அரசே நடத்தாத மாகாண சபைகளுக்கான தேர்தலை மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்குவதனை கடுமையாக எதிர்த்த,
எதிர்க்கும் 3இல் 2 பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியிலுள்ள ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான ஜே.வி.பி.-தே.ம.ச. ஆட்சியாளர்கள் நடத்தினால் அதுதான் இந்த நாட்டில் ஏற்பட்ட முதல் ‘மாற்றம்’ஆக இருக்கும். ஆனால், அது நடக்க முதலில் சிவப்பு சட்டை ஆட்சியாளர்களின் மனதில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் தொடர்பில் ‘மாற்றம்’ ஏற்பட வேண்டும்.
17 minute ago
19 minute ago
19 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
19 minute ago
19 minute ago
27 minute ago