Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூலை 03 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
முருகானந்தன் தவம்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட ‘அணையா விளக்கு’ போராட்டத்தின் இறுதி நாள் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் உணர்வெழுச்சியாக நடைபெற்ற நிலையில்,
அந்தப் போராட்டத்திற்கு தமது ஆதரவை தெரிவிக்கவும் அஞ்சலி செலுத்தவும் சென்ற தமிழ் அரசியல் வாதிகள் அங்கிருந்த கும்பல் ஒன்றினால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் தமிழர் தேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், அவ்வாறு தமிழ் அரசியல் வாதிகள் விரட்டியடிகப்பட்டமைக்கு கடும் கண்டனங்களும் எழுந்தன.
செம்மணியில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட பெருமளவானோரின் எலும்புக்கூடுகள் செம்மணி சித்துபாத்தி பகுதியில் மீட்கப்பட்டுவரும் நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவிருந்த நிலையில், அவரினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்ப்பதற்காக மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் அணையா விளக்கு போராட்டம் எனும் தொனிப் பொருளில் சர்வதேச நீதி கோரி கடந்த 23ஆம் திகதி முதல் மூன்று நாட்களாக மிகவும் எழுச்சியாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போதே இறுதி நாளான 26ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வரவிருந்த நிலையில், அதற்கு முன்னதாக அங்கு வந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், அதேகட்சியைச் சேர்ந்த இரா.சாணக்கியன் எம்.பி., கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அவரின் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எம்.பிக்களான ரஜீவன், இளங்குமரன் ஆகியோர் அங்கிருந்த குழுவொன்றினால் விரட்டியடிக்கப்பட்டனர்.
இவ்வாறு தமிழ் அரசியல்வாதிகளை விரட்டியவர்கள் எதற்காக அவர்களை விரட்டினோம் என்று தெளிவான காரணங்கள் எதனையும் குறிப்பிடவில்லை. யாழ்ப்பாணத்தில் பலர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என பகிரங்கமாகக் குற்றச்சாட்டப்பட்டுவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினருடன் (ஈ.பி.டி.பி.) கூட்டுச் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைகளில் இலங்கை தமிழரசுக் கட்சி ஆட்சி அமைத்துள்ளதாகவும், அவ்வாறானவர்களுடன் கூட்டுச் சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளத் தகுதியற்றவர்கள் என்றும் கூறியே சிவஞானம், துரத்தியடிக்கப்பட்டதாக கூறப்படும் காரணம் சிவஞானம், சாணக்கியன் ஆகியோர் விரட்டப்பட்டமைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவிருந்தது.
அதேநேரம், இந்த செம்மணிப் படுகொலையுடன் சம்பந்தப்படாத, செம்மணியில் மனிதப் புதைகுழிகளை தோண்ட, அவை தொடர்பில் விசாரணை நடத்த அனுமதி வழங்கி, நிதியும் ஒதுக்கிய தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் எம்.பிக்களை அங்கிருந்து விரட்டியடிக்கக் காரணம் என்ன? ஒரு அரசின் அமைச்சர் அந்த அணையா விளக்கு போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்து இவ்வாறு ஒரு படுகொலை சம்பவம் நடந்துள்ளது உண்மை. அதற்கு நீதி வேண்டுமெனக் கோருவது இந்தப்போராட்டத்திற்கான பெரும்பலம் அல்லவா? அவ்வாறானவர்களை
ஏன் விரட்டியடித்தார்கள்?
செம்மணி ‘அணையா விளக்கு’ போராட்டத்தில் பங்கேற்ற மக்களினால் இவர்கள் விரட்டியடிக்கப்பட்டதாக சமூக ஊடகங்கள் பொறுப்பற்ற வகையில், செய்திகளை வெளியிட்டபோதும் அவ்வாறு அரசியல்வாதிகள் விரட்டியடிக்கப்பட்டமைக்கும் அந்த போராட்டத்தின் ஏற்பாட்டாளர்களுக்கும் அந்தப் போராட்டத்தில் பங்கு கொண்ட மக்களுக்கும் எவ்வித தொடர்புகளுமில்லை என்பதே உண்மை.
இவ்வாறு தமிழ் அரசியல்வாதிகள் விரட்டியடிக்கப்பட்டமைக்கு போராட்ட ஏற்பாட்டாளர்களும் பொதுமக்களும் கடும் கண்டனமும் கவலையும் தெரிவித்துள்ளனர்.
அந்தப் போராட்டத்தினுள் அன்றையதினம் திட்டமிட்டுக் களமிறக்கப்பட்ட ஒரு
சிறு கும்பலே இந்த அநாகரிக, அடாவடித்தனத்தில் ஈடுபட்டது. அந்த சிறு கும்பலின் பின்னணியில் இருந்தவர் யார்? என்பதே கேள்வி.செம்மணி ‘அணையா விளக்கு’ போராட்டத்தைப் பயன்படுத்தி ஒரு சிறு கும்பல் தமிழ் அரசியல்வாதிகளை விரட்டியடித்ததைப் பயன்படுத்தி ஒவ்வொரு தமிழ் அரசியல் கட்சிகளும் தமது ஊத்தை அரசியலையே அந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுத்தன .
இலங்கை தமிழரசுக் கட்சியின் சிவஞானமும் சாணக்கியனும் விரட்டியடிக்கப்பட்ட நிலையில், அவர்கள் தம்மை அவ்வாறு விரட்டியடித்ததன் பின்னணியில் தமது கட்சியைச் சேர்ந்த, கிளிநொச்சியில் பலம் பொருந்தியவரே இருந்ததாகக்கூறி சிறீதரன் எம்.பியை பலிக்கடாவாக்க முயன்றனர்.
இன்னுமொரு தரப்பினர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரன் மீது பழி போட முயன்றனர்.ஆனால், அனைவரும் ஒன்றைக் கவனிக்காது விட்டனர். அல்லது கவனித்தும் கவனிக்காதிருந்து தமது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க முயன்றுள்ளனர் என்றே கூறவேண்டியுள்ளது.
ஏனெனில், செம்மணி ‘அணையா விளக்கு’ போராட்டத்திற்கு வந்த தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் விரட்டியடிக்கப்பட்ட நிலையில், அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. மட்டும் எவ்வாறு பங்கு கொண்டார்? ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வந்தபோது, அர்ச்சுனா எம்.பி. தான் முன்னுக்கு நிற்கின்றார்.
மனித உரிமைகள் ஆணையாளருக்குப் பின்னாலேயே திரிகின்றார். படங்களுக்கு போஸ் கொடுக்கின்றார். தான் மட்டுமே தமிழ் மக்களின் பிரதிநிதிபோல் நடந்து கொள்கின்றார். தானே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அங்கு அழைத்து வந்ததாகக் கூறுகின்றார்.
(அதனை அவர் பின்னர் பாராளுமன்றத்திலும் கூறினார்). தமிழ் அரசியல்வாதிகள் விரட்டியடித்த அந்த சிறு கும்பல் அர்ச்சுனாவை மட்டும் விரட்டியடிக்காதது ஏன்?
அதுமட்டுமல்ல, ஒரு தடவை பாராளுமன்றத்தில் வைத்து அமைச்சர் சந்திரசேகர் “இந்த பைத்தியக்கார அர்ச்சுனா எம்.பியை தமிழ் மக்கள், யாழ் மக்கள் விரைவில் விரட்டியடிப்பார்கள்” என்று கூறியிருந்தார்.
செம்மணியில் அமைச்சர் சந்திரசேகர் விரட்டப்பட்ட பின்னர் பாராளுமன்றத்தில் பேசிய அர்ச்சுனா எம்.பி. “அமைச்சர் சந்திரசேகர் என்னை யாழ். மக்கள் விரட்டியடிப்பார்கள் என்று இங்கு கூறியிருந்தார். ஆனால், அவரைத்தான் யாழ் மக்கள் விரட்டியடித்துள்ளனர்” என்று கூறியதன் மூலம் அமைச்சர் சந்திரசேகர் செம்மணியில் விரட்டப்பட்டமை ஒரு திட்டமிட்ட அரசியல் பழிவாங்கலாகக்கூட இருக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
அதுமட்டுமல்ல, அணையா விளக்கு போராட்டத்தில் பங்கேற்ற தமிழ் அரசியல்வாதிகளை விரட்டிய அந்த சிறு கும்பலில் இருந்தவர்களில் சிலர், அர்ச்சுனா எம்.பியின் பின்னால் இருப்பதையும் வீடியோக்களில் அவதானித்திருந்தால் கண்டுபிடித்திருக்க முடியும்.
அல்லது தமிழ் அரசியல்வாதிகள் விரட்டியடிக்கப்படுவதற்கு முதல்நாள் இரவு ‘ரிக்டொக்’ கில் அர்ச்சுனாவும் அவரை வெளிநாடுகளிலிருந்து வழி நடத்தும் கும்பலும் நடத்திய கலந்துரையாடலைக் கேட்டிருந்தாலும், இந்த சம்பவத்தின் பின்னணியில் யார்?, எந்த அரசியல்வாதி?, எதற்காக இருந்தார்? என்பதனை இலகுவாகக் கண்டுபிடித்திருக்க முடியும்.
இதனை விடுத்து, தமது அரசியல் காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு, விரோதம் காரணமாக சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இன்னொருவரின் பெயரைக் கெடுக்க நினைக்கும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் துர் குணம் இன்னும் மாறவில்லை என்பதனையே ‘அணையா விளக்கு’ சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.
தனது வீட்டு நாய்க்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டாலும், அதற்கு சிறீதரன் எம்.பியே காரணம் என்ற நிலைப்பாட்டிலேயே சாணக்கியன் எம்.பியின் அண்மைக்கால செயற்பாடுகள் அமைந்துள்ளன. அதன் அடிப்படையிலேயே அவர் எடுத்த எடுப்பில் கிளிநொச்சி நபர் என கூறி சிறீதரனுக்கு கை நீட்டுகின்றார்.
அண்மையில் ஆனையிறவு உப்பள ஊழியர்கள் போராட்டம் நடந்தபோதும், அதன் பின்னணியில் அரசியல்வாதி ஒருவர் இருந்து தூண்டி விடுவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோது, அதன் பின்னணியில் சிறீதரனே இருப்பதாகப் பலரும் நினைத்த நிலையில், பாராளுமன்றத்தில் வைத்தே அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அர்ச்சுனா எம்.பியைப் பார்த்து அந்த போராட்டத்தினை தூண்டி விடுபவர் நீங்கள்தான்.
பின்னணியில் இருந்து நீங்கள்தான் குழப்பங்களை ஏற்படுத்துகின்றீர்கள் என நேரடியாகக் குற்றம்சாட்டியபோது, அர்ச்சுனா எம்.பி. சிரித்தவாறே அமர்ந்திருந்தார்.
அந்த போராட்டத்தில் இருந்த சிலரும் செம்மணியில் தமிழ் அரசியல்வாதிகளை விரட்டியடித்த குழுவில் இருந்ததை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
ஆக செம்மணி ‘அணையா விளக்கு’ போராட்டத்தைப் பயன்படுத்தி தனது மாகாண முதலமைச்சர் கனவை நனவாக்க,, தான் தான் தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதி என காட்ட ஒருதரப்பு தமிழ் அரசியல்வாதிகளை விரட்டியடிக்கும் திட்டத்தைக் கையில் எடுத்து தனது குழுவை வைத்து அதனை நடைமுறைப்படுத்த, அவ்வாறு
விரட்டியடிக்கப்பட்ட தமிழ் அரசியல்வாதிகள், விரட்டியடித்தவர்களை விட்டு விட்டு அந்த சம்பவத்தைப் பயன்படுத்தி தமது அரசியல் எதிராளிகளின் பெயரைக் கெடுக்க முயன்றனர். இதன்மூலம் ‘அணையா விளக்கு’ போராட்டத்தின் உண்மையான நோக்கம் தோற்கடிக்கப்பட்டு தமிழ் அரசியல்வாதிகளின் சுயநல அரசியல் வெற்றி பெற்றுள்ளது.
33 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago