2025 ஜூலை 31, வியாழக்கிழமை

செம்மணி விடயத்தில் அனுர உறுதியாக இருப்பாரா?

R.Tharaniya   / 2025 ஜூலை 23 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏம்.எஸ்.எம்.ஐயூப்

பல தமிழ் இயக்கங்கள் அரச படைகளுக்கு எதிராகப் போராடி வந்த 1980களில் இருந்தே வடக்கு, கிழக்கில் கூட்டுக் கொலைகள் இடம்பெற்று வந்துள்ளன.

1984 செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி தமிழ் ஈழ விடுதலை அமைப்பினர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தைத் தாக்கி பெரும் சேதத்தை விளைவித்ததை அடுத்து யாழ். நகரில் நூற்றுக் கணக்கான சாதாரண மக்கள் கொல்லப்பட்டனர்.

ஆனால், அந்நாட்களில் செய்தித் தணிக்கை கடுமையாக அமுலில் இருந்ததால் இவ்விபரங்கள் வெளியே வரவில்லை. அக்காலத்தில் பத்திரிகைகளும் அரச வானொலியும் மட்டுமே ஊடகங்களாக இருந்தன.

தொலைக்காட்சி சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டு இருந்த போதிலும், அது தென் பகுதியை மையமாகக்கொண்டு இயங்கியது. இணையத்தளங்கள் இருக்கவில்லை.

ஆயினும், சில தமிழ் பத்திரிகைகள் மறைமுகமாக அக்கொலைகளை அம்பலப்படுத்தின. ஒரு தமிழ் பத்திரிகை கொல்லப்பட்ட ‘பயங்கரவாதிகளின்’ விபரம் என ஒரு பட்டியலை வெளியிட்டது.

அதில், கொல்லப்பட்டவர்களின் வயது விபரமும் வெளியிடப்பட்டு இருந்தது. அதன் மூலம் சிறுவர்களும் கொல்லப்பட்டு இருந்தமை தெரிய வந்தது. பயங்கரவாதிகள் யார் என்பதும் அம்பலமாகியது.

இப்போது செம்மணி மயானத்தில் கண்டெடுக்கப்படும் எலும்புக்கூடுகளிலும் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன. இதுவும் சாதாரண பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கு மறுக்க முடியாத சான்றாகும்.

செம்மணியில் கண்டெடுக்கப்படும் மனித எச்சங்கள் யாருடையவை என்பதைப் பற்றி தெற்கில் சில அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டு இருக்கின்றனர். குறிப்பாக முன்னாள் கடற்படை அதிகாரியும் அமைச்சருமான சரத் வீரசேகர மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஆகியோர் விசித்திரமான கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

செம்மணியில் கண்டெடுக்கப்படும் எலும்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்று அவர்களில் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, அவை இராணுவத்தினருடையதாக இருக்கலாம் என்றும் மற்றொரு கருத்தும் வெளியிடப்படுகிறது.கடந்த மாத இறுதியில் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, செம்மணிக்கும் சென்று அங்கு அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டார்.

அவரை அங்கு செல்ல அனுமதித்ததையிட்டு விமல் வீரவன்ச அரசாங்கத்தைக் குறை கூறியிருந்தார். இது அவர்களது வாதத்துக்கே முரணானதாகும். இந்த எலும்புகள் புலிகளால் கொல்லப்பட்டவர்களுடையவை என்றால், ஐ.நா. உயர்ஸ்தானிகர் அங்கு செல்வதை அவர்கள் ஏன் குறை கூற வேண்டும்?

செம்மணி 1990களில் இருந்தே அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரின்போது, பொது மக்கள் அதனை எவ்வாறு சந்தித்தார்கள் என்பதைப் பற்றி கதை சொல்லும் இடமாக இருக்கிறது. அக் காலத்தில் அங்கு இராணுவத்தின் சோதனைச் சாவடியொன்று இருந்தது.

 அந்த இடத்தில் தான் கிருசாந்தி குமாரசுவாமி என்ற பாடசாலை மாணவி, அவரது தாய், சகோதரன் மற்றும் அயலவர் ஒருவர் கடத்திக் கொல்லப்பட்டனர்.
அச்சம்பவம் தொடர்பான விசாரணையின் போது, தான் இந்த இடத்தில் சுமார் 600 பொது மக்கள் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டனர் என்று சோமரத்ன ராஜபக்‌ஷ என்ற இராணுவ அதிகாரி கூறியிருந்தார்.

ஆயினும், அதன் பின்னர் அதைப் பற்றி பெரிதாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.1995இல் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது, யாழ். குடாநாடு ஏறத்தாழ முழுவதுமாக புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இந்த நிலையில், குடாநாட்டை புலிகளின் பிடியிலிருந்து மீட்பதற்காக அவ்வாண்டு இராணுவத்தினர் ‘ரிவிரெச’ என்ற படை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அக்காலத்தில் குடாநாட்டைச் சேர்ந்த 500க்கும் 600க்கும் இடைப்பட்டோர் காணாமற் போனதாக சிறிது காலத்துக்குப் பின்னர் கூறப்பட்டது. அத்தகவலும் சோமரத்ன ராஜபக்‌ஷவின் சாட்சியமும் பொருத்தமாக இருக்கிறது.

இலங்கையில் செம்மணியில் மட்டும் கூட்டுக் கொலைகள் இடம்பெறவில்லை. அதேவேளை, அரச படைகள் மட்டும் தான் கூட்டுக் கொலைகளைச் செய்தார்கள் என்று கூறவும் முடியாது.

இலங்கை இராணுவம், கடற்படை, விமானப் படை, இந்தியப் படைகள், புலிகள் மற்றும் முஸ்லிம் ஊர்காவல் படை ஆகிய அனைவரும் கூட்டுக் கொலைகளுக்காகக் கடந்த காலத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். அச்சம்பவங்களில் பலவற்றில் தடயங்கள் எதுவும் இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது கிளர்ச்சியின் போதே கூட்டுக் கொலைகள் முதன் முதலில் இடம்பெற்றன.

தெனியாய, கேகாலை போன்ற பல பிரதேசங்களில் இச்சம்பவங்கள் இடம்பெற்றன. அக்காலத்தில் மனித உரிமை அமைப்புக்களில் செயற்பாடுகள் மிகக் குறைந்ததாகவே இருந்தமையினால் சம்பவங்கள் இடம்பெற்ற இடங்கள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகியன அறிக்கையிடப்படவில்லை.

ஆங்காங்கே ‘டயர்’ போட்டு சடலங்களை எரித்த கதைகள் மற்றும் ஆறுகளில் சடலங்கள் மிதந்த கதைகள் மட்டுமே கேட்கக் கூடியதாக இருந்தன.
பிரிவினைவாத போர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதலாவது கூட்டுக் கொலை 1984 செப்டெம்பர் 10ஆம் திகதி வவுனியா பிரதேசத்தில் பூவரசங்குளத்திலேயே இடம்பெற்றது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பஸ்ஸொன்று ரம்பேவ என்னுமிடத்தில் வழிமறிக்கப்பட்டு பூவரசங்குளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பஸ்ஸில் பயணம் செய்த 47 பயணிகளில் 15 பேர் அவ்விடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தமிழ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

இராணுவத்தினரையே அப்பத்திரிகைகள் மறைமுகமாக குற்றஞ்சாட்டியிருந்தன.
இதனையடுத்து, தமிழ் ஆயுத குழுக்களும் அதே ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி முதல் சாதாரண மக்களைத் தாக்கின.

1984ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் ‘டொலர் பார்ம்’ மற்றும் ‘கென்ட் பார்ம்’ என்ற இரண்டு பெரும்பான்மையின குடியேற்றங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 62 சாதாரண மக்கள் உள்ளிட்ட மொத்தம் 82 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்பட்டது.

அடுத்த நாள் அதாவது டிசெம்பர் 1ஆம் திகதி அதே மாவட்டத்தில் கொக்குளாய் மற்றும் நாயாறு ஆகிய இரண்டு மீனவ கிராமங்கள் தாக்கப்பட்டு 11 பெரும்பான்மை இனத்தவர்கள் கொல்லப்பட்டனர். புலிகளே இந்தத் தாக்குதலையும் நடத்தியதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து, 
அதே மாதம் இராணுவத்தினர் அப்பிரதேசத்தில் பல கிராமங்களைத் தாக்கி சுமார் 100 தமிழர்கள் வரை கொன்றதாகக் கூறப்பட்டது.

இவ்வாறு அடுத்து வந்த வருடங்களில் இரு சாராரும் வடக்கு கிழக்கில் ஏட்டிக்குப்போட்டியாக கிராமங்களைத் தாக்கியுள்ளனர்.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் கீழ், இலங்கைக்கு வந்த இந்தியப் படையினர், ஆரம்பத்தில் தமிழ் மக்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டாலும், பின்னர் அவர்களும் பல இடங்களில் கூட்டுக் கொலைகளில் ஈடுபட்டனர்.

1990ஆம் ஆண்டு சாதாரண மக்கள் கூடுதலாகக் கொல்லப்பட்ட வருடமாகும். கிழக்கில் காத்தான்குடி பள்ளிவாசலில் மற்றும் ஒண்டாச்சிமடத்தில் நூற்றுக்கணக்கில் முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். புலிகளே அத்தாக்குதல்களை நடத்தினர்.

1980களில் இறுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சியின் போது, 60,000க்கும் அதிகமானோர் படையினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அக்காலத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் சூரியகந்த, கொழும்பு மாவட்டத்தில் ஹோகந்தர, கம்பஹ மாவட்டத்தில் வனவாசல போன்ற இடங்களில் புதைகுழிகளில் கூட்டாகப் பலர் புதைக்கப்பட்டுள்ளதாகப் பின்னர் தெரிய வந்தது.
இவ்வாறு பல்வேறு தரப்பினர் பல்வேறு காலங்களில் கூட்டுக் கொலைகளில் ஈடுபட்ட போதிலும், சகல கொலைகளைப் பற்றியும் கூட்டுப் புதைகுழிகள் போன்ற தடையங்கள் காணக்கூடியதாக இல்லை.

அதேபோல, பதவிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் அவற்றைப் பற்றி உரிய நடவடிக்கை எடுக்கவுமில்லை.சர்வதேச நெருக்குதல் காரணமாகப் பல அரசாங்கங்கள் காணாமற்போனோர்களைப் பற்றி ஆணைக்குழுக்களை நியமித்தன.

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலங்களில் தெற்கில் 60,000க்கு அதிகமானோர் காணாமற்போனதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவங்களைப் பற்றி விசாரணை செய்வதற்கென பிரேமதாச ஆணைக்குழுவொன்றை நியமித்தார். இதனையடுத்து, வந்த ஜனாதிபதி சந்திரிகாவும் அதே விடயத்துக்காக மூன்று ஆணைக்குழுக்களை நியமித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றொன்றை நியமித்தார். குறித்த சகல ஆணைக்குழுக்களும் ஊரையும் உலகையும் ஏமாற்றம் உத்திகள் என்பது இப்போது நிரூபனமாகி விட்டது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மனித உரிமை விடயத்தில் சில சாதகமான நடவடிக்கைகளை எடுத்தார். அரசாங்கத்தின் போர் வீரர் தின வைபவங்களில் கலந்துகொள்ள அவர் ஆரம்பத்தில் விரும்பவில்லை.

பின்னர் அதில் கலந்துகொண்டாலும், முன்னைய ஜனாதிபதிகளைப் போலல்லாது, அவர் நல்லிணக்கத்தை வலியுறுத்தியே அங்கு உரையாற்றினார். ஐ.நா. மனித உரிமை ஸ்தானிகர் செம்மணிக்குச் செல்ல அவரது அரசாங்கம் எவ்வித தடையும் விதிக்கவில்லை.

ஆயினும், மனித உரிமை விடயத்தில் நிர்ணயகரமான முறையில் அவர் நடவடிக்கை எடுப்பாரா என்பதைக் காலம் தான் கூறும். ஏனெனில், அவ்வாறு நடவடிக்கை எடுக்க முற்பட்டால் பெரும்பான்மை சமூகம் அடுத்த தேர்தலில் அவரை தூக்கி எறிந்துவிடும்.

அவர் அந்த அபாயத்தை எதிர்கொள்ளத் தயாராவாரா என்பது காலம் போகப் போகத் தான் தெரிய வரும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .