2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

செம்மணியை கடந்த கச்சதீவுக்கு சென்ற ஜனாதிபதி

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 10 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவா நகரில் 8 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகியது.அதில் உரையாற்றிய இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் என்ற விடயத்தில் வெளிநாட்டு பொறிமுறை ஒன்று தலையிடுவதை நிராகரித்தார்.

கடந்த வருடம் பிரேணையை நிராகரிக்க தேசிய மக்கள் சக்தி கடுமையாக நிர்பந்திக்கப்பட்டது. ஏனெனில் கடந்த வருடம் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் அதே வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னரும் பொதுத் தேர்தலுக்கு முன்னருமே நடைபெற்றது. ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரான அனுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றாலும் செல்லுபடியான வாக்குகளில் 42 சதவீத வாக்குகளையே பெற்றார்.

இதே வாக்கு வீதத்தை தேசிய மக்கள் சக்தி பொதுத் தேர்தலிலும் பெற்றால் அதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற முடியாமல் போய்விடும் என்றதோர் அபாயம் அப்போது நிலவியது. இந்த நிலையில் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு இருந்த பிரேரணையை ஆதரித்து பெரும்பான்மை மக்களின் வாக்குகளை மேலும் இழக்க தேசிய மக்கள் சக்தி விரும்பாது என்பது இலகுவில் விளங்கிக் கொள்ள முடியும்.

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 62 சதவீத வாக்குகளை பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை நிறுவினாலும் மக்கள் அண்மைக்கால பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டு விரக்தியால் உந்தப்பட்டு தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்களேயல்லாமல் அறிவுபூர்வமாக வாக்களிக்கவில்லை.

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அது தெளிவாக தெரிய விருந்து. எனவே இன்னமும் பெரும்பான்மை மக்களை பகைத்துக் கொள்ளும் வகையில் செயல்பட அரசாங்கம் தயாராக இல்லை.  

சர்வதேச பொறிமுறையென்றின் மூலம் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படலாம் என்பதனாலேயே அரசாங்கம் அதனை நிராகரிப்பதாக அமைச்சர் விஜித்த ஹேரத் திங்கட்கிழமை மனித உரிமை பேரவையில் ஆற்றிய தமது உரையில் கூறினார்.

நடைமுறையில் பார்த்தால் அதை மறுக்க முடியாது. இவ்வாறானதொரு பொறிமுறை ஒன்றின் மூலம் போர் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களைப் பற்றிய விசாரணைகள் அரம்பிக்கப்படும்  இன ரீதியாக பிரிந்து அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் மக்கள் கருத்து தெரிவிக்க முற்படுவார்கள்.

இனவாத மற்றும் தேசியவாத குழுக்கள் தமது கருத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை நடத்தும். இனவாத போக்குடைய ஊடக நிறுவனங்களும் தமது கைவரிசையை காட்டும் நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக்கொண்ட அரசாங்கமும் இந்த நிலைமையை எதிர்நோக்கியது.

அவ் அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு மனித உரிமை பேரவையின் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியது. அப்பிரேரணையின் கீழ் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகளை கொண்ட பொறிமுறை ஒன்றை அமைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்து இருந்தது.

ஆனால் அதே ஆண்டு டிசம்பர் மாதம் முப்படைகளின் தளபதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இதைப் பற்றிய தனது ஆதங்கத்தை தெரிவித்ததை அடுத்து நிலைமை மாறியது.

அமைச்சர் விஜித ஹேரத் கூறுவதைப் போல் மனித உரிமை விவகாரங்களை கையாள உள்ளக பொறிமுறை ஒன்றை அமைத்தாலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் போது இரு புறத்திலும் தேசியவாத குழுக்கள் தத்தமது நிலைப்பாடுகளில் விடாப்பிடியாக நிற்பர். அதன் மூலமும் நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படலாம்.

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட போது எவரும் சட்டத்திற்கு அடிபணிய வேண்டும் என்று அரசாங்கத்தின் தலைவர்கள் வாதிட்ட போதிலும் போர் கால சம்பவங்களைப் பற்றிய விசாரணை என்று வரும் போது அது நடைமுறை சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுகிறது.

இது தான் யதார்த்தம். அதனால் தான் கடந்த வருடமும் அதேபோல் தேசிய பொறிமுறை ஒன்றைப் பற்றி வெளிநாட்டமைச்சர் கூறிய போதிலும் அதன் பின்னர் கடந்த ஒரு வருட காலத்தில் அந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் எதையும் செய்யவில்லை.

ஆயினும் இதனை ஏற்க தமிழ் தலைவர்களும் தீவிர இடதுசாரிகளும் தயாராக இல்லை. தமது இருப்பைப் பற்றிய அரசாங்கத்தின் அச்சம் எதுவாக இருப்பினும் சர்வதேச பொறிமுறை ஒன்றின் மூலமே விசாரணைகள் நடைபெற் வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அவர்கள் இருக்கின்றனர்.

ஆனால் கடந்த கால அரசாங்கங்களிலிருந்து தேசிய மக்கள் சக்தி சில விடயங்களில் வேறுபடுகிறது. தற்செயலாக மனித எழும்பொன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஆரம்பிக்கப்பட்ட செம்மணி கூட்டு புதைகுழியில் அகழ்வுப் பணிகளை தொடர தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளது.

(தற்போது எதிர்பாராத அளவு நீடித்துச் செல்லும் அகழ்வுப் பணிகளுக்குப் போதிய நிதி இல்லாமையால் அப்பணிகள் தடைப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.) கடந்த பிப்ரவரி மாதம் முதல் இது வரை செம்மணியிலிருந்து சுமார் 240 மனித எழும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் நினைத்திருந்தால் இந்த அகழ்வுப் பணிகளை ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம்.

அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போது அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்த அப்பணிகளை ஊக்குவிப்பதாக விமல் வீரவன்ச மற்றும் சரத் வீரசேகர போன்ற பேரினவாதிகள் பெரும்பான்மை மக்களை குழப்ப முற்பட்ட போதிலும் அரசாங்கம் அதை பொருட்படுத்தவில்லை.

ஆனால் அகழ்வுப் பணிகள் முடிவடைந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு அரச படைகள் குற்றஞ்சாட்டப்படும் போது சிலவேளை எதிர்ப்புகள் எழலாம். எனவே அரசாங்கம் அதனை தணிப்பதற்காக புலிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் விசாரணைக்கு உட்படுத்தலாம்.

ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் குருக்கல் மடத்தில் இருப்பதாகக் கூறப்படும் கூட்டு புதைக்குழி பகுதியில் அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 25 ஆம் திகதி களுவாஞ்சிக்குடி நீதிவான் ஏ.ஜே.பி ரஞ்சித்குமார் அந்தப் புதைகுழிகளை அகழ கட்டளையிட்டுள்ளார்.

1990 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் திகதி புலிகள் ஹஜ் பிரயாணம் சென்று திரும்பிக்கொண்டு இருந்த நூற்றுக்கு மேற்பட்டோரை கடத்திச் சென்று குருக்கல்மடத்தில் அவர்களை படுகொலை செய்தனர். மொத்தம் 167 பேர் அவ்வாறு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தின் போது உயிர் தப்பிய ஒருவரின் முறைப்பாட்டை அடுத்தே இந்த விசாரணை நடக்கவிருக்கிறது.

இதேவேளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கடந்த செப்டம்பர் 1 ஆம் திகதி வட மாகாணத்துக்கு சென்றார். அந்த விஜயத்தின் ஒரு பகுதியாக அவர் 2 ஆம் திகதி கச்சதீவுக்கும் சென்றார். அதன் போது நாட்டின் கடலையும் நிலத்தையும் பாதுகாக்க தமது அரசாங்கம் அனைத்தையும் செய்யும் என்றும் கூறியிருந்தார். இந்த கச்சதீவு விஜயமும் அவரது கூற்றும் வடக்கில் மீனவர்களை நீண்ட காலமாக பாதித்து வரும் ஒரு முக்கிய பிரச்சினையோடு சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்திய மீனவர்கள் கடந்த பல தசாப்த காலமாக நிரந்தரமாக இலங்கையின் வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இலங்கையின் கடல் பரப்பில் நுழைந்து சட்ட விரோதமன முறையில் மீன் பிடித்து வருகிறார்கள். இந்தப் பிரச்சினையை தமிழக அரசியல்வாதிகள் அரசியலாக்கியும் வருகிறார்கள். இதன் ஓரங்கமாக அவர்கள் கச்சதீவை மீண்டும் இந்தியா பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதி மதுரையில் நடைபெற்ற தமது கட்சி மாநாட்டில் உரையாற்றிய சினிமா நடிகரும் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் என சுருக்கமாக அழைக்கப்படும் ஜோசப் விஜய் சந்திரசேகரும் கச்சதீவை மீட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஜனாதிபதி  மக்கள் குடியிருப்புகளற்ற கச்சதீவுக்கு சென்று இலங்கையின் இறைமையைப் பற்றிப் பேசியுள்ளார். இது வடக்கிலும் தெற்கிலும் வாழும் மக்களின் வரவேற்பை பொதுவாக பெறக்கூடிய உரையாகும். ஆனால் அதிலும் குறை காண்போர் இருக்கின்றனர்.

கச்சதீவுக்குச் சென்ற ஜனாதிபதி செம்மணிக்குச் செல்வில்லை என்று அவர்கள் வாதிடுகின்றனர்.உண்மை தான். ஆனால் அவ்வாறு அவர் செம்மணிக்குச் சென்றிருந்தால் அது தென்பகுதி இனவாதிகளுக்கு தீனி போட்டதாகவே அமையும். செம்மணியில்  நடைபெறும் அகழ்வுப் பணிகளுக்கான அவர்களது எதிர்ப்புக்கு வலுச்சேர்க்கவே அது உதவும்.

ஜனாதிபதி செம்மணிக்குச் செல்வதால் தமிழ் தலைவர்களது மனதை வெல்ல முடியும் என்று கூறவும் முடியாது. அவர்கள் சிலவேளை அதனை நடிப்பு என்று கூறலாம்.

மொத்தத்தில் இனப் பிரச்சினை விடயத்தில் இந்த அரசாங்கத்தின் கீழும் ஒரு சில மாற்றங்களை மட்டுமே எதிர்பார்க்க முடியும். அரசாங்கத்தின் தலைவர்கள் சில விடயங்களை செய்ய விரும்பினாலும் அரசாங்கத்தின் இருப்பை சவாலுக்குள்ளாக்கும் வகையிலான எதையும் அவர்களிடம் இப்போது எதிர்பார்ப்பது யதார்த்தபூர்வமானதல்ல.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .