2025 மே 14, புதன்கிழமை

ஜெனிவாவைக் கையாளும் வித்தை

Administrator   / 2017 மார்ச் 03 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே. சஞ்சயன்

ஜெனிவாவில் அரசாங்கத்துக்குக் காலஅவகாசத்தை அளிக்கும் விவகாரம் தொடர்பாகத் தமிழ் அரசியல் தலைமைகள் குடுமிப்பிடிச் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சூழலில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மிகச் சாவகாசமாகத் தனது உரையை நிகழ்த்தியிருக்கிறார்.  

மங்கள சமரவீரவின் உரையில் இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட சில விடயங்களை அவர் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை.  

2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையின் இணை அனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நிறைவேற்றத் தவறியிருப்பது பற்றிய பதற்றம் கொஞ்சம் கூட இல்லாமல், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றியிருக்கிறார்.  

சர்வதேச சமூகத்தைக் கட்டிப்போடும் வித்தையை இலங்கை அரசாங்கம் நன்கு கற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு அவரது இந்த உரை சான்றாக இருக்கிறது.  

30/1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். சர்வதேச சமூகமும் இதனை நன்றாக அறியும்.  

இந்த நிலையில் 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலதிக காலஅவகாசத்தை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் கோரும் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.  

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் உரையில் இதுபற்றிப் பிரஸ்தாபிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புப் பரவலாகக் காணப்பட்டது.  

ஆனால், மங்கள சமரவீர தனது உரையில், காலஅவகாசம் தேவைப்படுவது பற்றிய எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை.   

அதாவது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் இருந்து காலஅவகாசத்தைக் கோராமல், காலஅவகாசத்தை தாமே எடுத்துக் கொள்வதைப் போன்ற உத்தியைக் கொண்டதாக அவரது உரை அமைந்திருந்தது.  

30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், கடந்த 15 மாதங்களில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்களை அவர் சுருக்கமாகப் பட்டியலிட்டிருந்தார்.  

30/1 தீர்மானத்தை நடைமுறைப் படுத்துவதற்காகக் குறிப்பாக, அரசியலமைப்பு மாற்றம், சித்திரவதைகளைத் தடுத்தல், உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களில் இலங்கை அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.  

30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தடைக்கற்கள் போடப்படுவதையும் ஆனாலும், தீர்மானத்தை நிறைவேற்றி, அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது என்பதையும் அவர் கூறியிருக்கிறார்.  
ஆனால், மிக முக்கியமான ஒரு விடயத்தைப் பற்றி எந்தக் கருத்தையுமே மங்கள சமரவீர குறிப்பிடவில்லை. அதுதான், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான விசாரணைப் பொறிமுறை மற்றும் அதுபற்றிய 30/1 தீர்மானத்தின் பரிந்துரை.  

2015 ஆம் ஆண்டு, ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில், போர்க் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள், சட்டத்தரணிகள் ஆகியோரின் பங்களிப்புடன், நம்பகமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.  

கலப்பு விசாரணைக்கான பரிந்துரையை உள்ளடக்கிய, 30/1 தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதன் மூலம், அரசாங்கம் அந்தப் பரிந்துரையையும் ஏற்றுக் கொண்டிருந்தது.  

ஆனால், ஜெனிவாவில் இருந்து திரும்பியதுமே, கலப்பு விசாரணை நடத்தப்படாது உள்நாட்டு விசாரணை தான் நடத்தப்படும் என்று அமைச்சர்கள் மாத்திரமன்றி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கூறத் தொடங்கி விட்டனர். 

அண்மையில் பொலன்னறுவவில் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் விழாவில், உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “வெளிநாட்டு நீதிபதிகளை நீதி விசாரணைப் பொறிமுறையில் உள்ளடக்க முடியாது” என்றும் “அதற்கு நாட்டின் சட்டத்தில் இடமில்லை” என்று கூறியிருக்கிறார்.  

இதுதொடர்பாக, ஐ.நா பொதுச்செயலாளர், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் ஆகியோருக்கும் சக்தி வாய்ந்த மேற்குலக நாடுகளின் தலைவர்களுக்கும் தாம் அறிவித்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

இருந்தாலும், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் 30/1 தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பித்த, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்தக் கலப்பு நீதிமன்ற விசாரணை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி மூச்சுக் கூட விடவில்லை.  

கலப்பு விசாரணைப் பொறிமுறையை ஏற்றுக் கொண்டு, அதனை நடைமுறைப்படுத்துவோமா அல்லது இந்தப் பரிந்துரை இலங்கைக்கு ஏற்புடையதல்ல; அதனை நடைமுறைப்படுத்த முடியாது என்று எதையாவது ஒரு பதிலை அவர் கொடுத்திருக்க வேண்டும். 

ஆனால், மிக நாசூக்காக அந்த விவகாரத்துக்கே செல்லாமல் நழுவியிருக்கிறார் மங்கள சமரவீர.  

பொறுப்புக்கூறல் பொறிமுறையின் ஓர் அங்கம்தான், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு. அதுபற்றி மாத்திரமே இந்த உரையில் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருக்கிறாரே தவிர, பொறுப்புக்கூறலுக்கான நீதித்துறை சார் நடவடிக்கைகள் பற்றிய எந்தத் தகவலும் பேரவைக்கு அறியத் தரப்படவில்லை.  

இதன் மூலம், பொறுப்புக்கூறல் தொடர்பான வாக்குறுதிகள் விடயத்தில் அரசாங்கம் மெத்தனப் போக்கிலேயே இருக்கிறது என்பது வெளிப்பட்டிருப்பதுடன், ஜெனிவாவில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையிட்டு அலட்டிக் கொள்ளாத நிலையில் அரசாங்கம் இருக்கிறது என்பதும் அம்பலமாகியிருக்கிறது.  

சர்வதேச சமூகத்தை, குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்தை மிகவும் புத்திசாதுரியமாக வேறு பக்கம் திருப்புகின்ற முயற்சியைத்தான் மங்கள சமரவீர எடுத்துக் கொண்டிருக்கிறார்.  

ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர் பெரியளவில், சவால்களை எதிர்நோக்கத் தேவையில்லாத விடயங்களை நிறைவேற்றியதன் மூலம், பெற்றுக் கொண்டிருக்கின்ற நன்மதிப்பைத் தற்போதைய அரசாங்கம் ஜெனிவாவுக்கான மூலதனமாகப் பயன்படுத்தியிருக்கிறது.  

ஆனால், இனிமேலும் நிறைவேற்ற வேண்டியுள்ள பெரியளவிலான வாக்குறுதிகள் விடயத்தில் அரசாங்கத்தின் நகர்வுகள் நம்பகமானவையாக இல்லாவிட்டாலும், அவற்றை நிறைவேற்றும் கடப்பாடு தமக்கு இருப்பதாக காட்டிக் கொள்வதன் மூலம் அரசாங்கம் சாதகமான பெறுபேற்றை பெற்றிருக்கிறது.  

ஜெனிவாத் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் அர்ப்பணிப்பு அரசாங்கத்திடம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியதன் மூலம், அதற்கான காலஅவகாசம் ஒன்றைத் தாமாகவே மறைமுகமாகப் பெற்றுக் கொள்ள முனைந்திருக்கிறது.  

ஐ.நா மனித உரிமைகள் பேரவை காலக்கெடு கொடுத்துத்தான், இதனைச் செய்ய வேண்டும் என்றில்லை; நாமாகவே நிறைவேற்றுவோம் என்பது போலுள்ளது, இந்த உரை.  

காலஅவகாசம் பற்றிய எந்தக் கோரிக்கையையும் முன்வைக்காததன் மூலம், இலங்கை அரசாங்கம், இராஜதந்திரத்தை நன்றாகவே கையாண்டிருக்கிறது.  

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் அறிக்கை இன்னமும் வெளிவரவில்லை. அந்த அறிக்கையில்தான், 30/1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தியிருக்கிறது என்ற தகவல்கள் இடம்பெறும்.  

அந்த அறிக்கை வெளியாவதற்கு முன்னரே, காலஅவகாசம் என்ற கருத்தை முன்வைத்து, தேவையற்ற சர்ச்சையை உருவாக்கிக் கொள்ள அரசாங்கம் விரும்பவில்லை.  

அறிக்கையின் உள்ளடக்கத்தைப் பொறுத்து, அதற்குப் பதிலளிக்கும்போது, காலஅவகாசக் கோரிக்கையை முன்வைக்கலாம் என்று மங்கள சமரவீர ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்.  

அதேவேளை, பிரித்தானிய இணை அமைச்சர் அலோக் சர்மா, இலங்கைக்கு மேலதிக காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார்.  

இலங்கை அரசாங்கம் கேட்டாலும் சரி, கேட்காது போனாலும் சரி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் காலஅவகாசம் அளிக்கும், 30/1 தீர்மானத்தின் தொடர்ச்சியாக இன்னொரு தீர்மானம் முன்வைக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன. அலோக் சர்மா தனது உரையில், இதுபற்றித் தாம், இலங்கை அரசாங்கத்துடனும் ஏனைய இணை அனுசரணை நாடுகளுடனும் கலந்துரையாடி வருவதாகக் கூறியிருக்கிறார்.  

எனவே, இலங்கை அரசாங்கத்துக்குக் காலஅவகாசத்தை அளிக்கின்ற தீர்மானம் ஒன்றுதான், இந்த அமர்வில் முன்வைக்கப்படும் என்பது உறுதியாகவே தெரிகிறது.  

அதேவேளை, இலங்கை அரசாங்கம் ஜெனிவாத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அளிக்கப்பட்ட 15 மாத காலஅவகாசத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும், வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.  

இதனைக் கண்டித்து, இலங்கைக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.  

ஆனால், இப்போதுள்ள நிலையில் இலங்கைக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படும் சாத்தியங்கள் அறவே கிடையாது. அவ்வாறான ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அமெரிக்கா கூட எதிர்த்து வாக்களிக்கலாம். மஹிந்த அரசாங்கத்துடன் அமெரிக்கா முட்டி மோதிக் கொண்டிருந்த போது கூட, ஜெனிவாவில் கண்டனத் தீர்மானம் முன்வைக்கப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.  

இப்போதைய அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வருகின்ற சூழலில், அத்தகையதொரு வாய்ப்பு சாத்தியமே இல்லை. இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை மிகவும் நுட்பமாகவே கையாளுகிறது. அதுபோலவே, சர்வதேச சமூகமும் இலங்கையைக் கொண்டே இந்த விவகாரத்தை சமாளிக்க முனைகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X