2025 மே 15, வியாழக்கிழமை

ஜெனீவாவில் கூட்டமைப்பு என்ன செய்வதாக உத்தேசம்?

Thipaan   / 2016 ஜூன் 07 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப. தெய்வீகன்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடர், அடுத்த வாரம் - ஜூன் 13 ஆம் திகதி, ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஜூலை முதலாம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில், ஜூன் 29ஆம் திகதி, இலங்கை தொடர்பாக கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலான முன்னேற்றங்கள் குறித்த வாய்மொழி மூல அறிக்கையை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் சமர்ப்பிக்கவுள்ளார்.

கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர், இலங்கைக்கு வந்து சில முக்கிய சந்திப்புக்களை மேற்கொண்டு, இலங்கை அரசாங்கத்தின் இதுவரைகால நடவடிக்கைகள் எவ்வளவு திருப்திவாயந்தவையாக இருந்தன என்பதை ஆராய்வதற்காக, விசேட அறிக்கையாளர் ஒருவரை  மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அனுப்ப முடிவுசெய்திருப்பதானது, தான் சமர்ப்பிக்கவுள்ள வாய்மூல அறிக்கை தொடர்பில் அவர் தீவிரமாகப் பணியாற்றுகிறார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம்.

இதேவேளை, ஆணையாளரின் விசேட பிரதிநிதியை தாம் சந்திக்கும்போது, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் முதல் இதுவரைகாலமும் இலங்கை அரசாங்கம் என்ன செய்தது, என்னென்னவெல்லாம் செய்யவில்லை என்பவை குறித்து விலாவாரியாக எடுத்துக்கூறுவோம் என்று தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் கூறியிருந்தார்.

அத்துடன், ஜெனீவாவுக்கும் சென்று, மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கை சமர்ப்பிப்புக்கு முன்னர், இலங்கை தொடர்பான தீர்மானத்தில் கையெழுத்திட்ட உறுப்புநாடுகளிடம் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தப்போவதாக தமிழ்க் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. 

இம்முறை இடம்பெறவுள்ள ஜெனீவா கூட்டத்தொடருக்கு முன்பதாக,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளவேண்டிய நிலைப்பாடு குறித்து ஆராய்வதே இந்த பத்தியின் நோக்கமாகும்.

ஐ.நா மனித உரிமைகள் அவையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்குப் பூரண ஆதரவு வழங்கி, அதில் தம்மை முழுமையான பங்காளியாகச் சமர்ப்பித்துக்கொண்ட இலங்கை அரசாங்கம், இதுநாள் வரை இதயசுத்தியுடன் மேற்கொண்ட நல்லிணக்க நடவடிக்கைகள் என்ன என்று கேட்டால், சிங்கள மக்களோ, பிரபாகரன் இல்லை என்று திருப்திப்படுகின்றனர். தமிழ் மக்களோ, மஹிந்த இல்லை என்று ஆசுவாசப்படுகின்றனர்;. இதுதான் நல்லாட்சி என்பதன் வரைவிலக்கணம் என்ற மாயையை நாடு முழுவதிலும் நம்பவைத்தமைதான்.

'துப்பாக்கிச் சத்தங்கள் அற்ற சூழலை, சமாதான காலம் என்று கூறிவிடமுடியாது. அதனைப் போரற்ற காலம் என்று மட்டுமே கூறலாம். உண்மையான சமாதானத்தை அடைவதென்பது, ஒரு போரை நடத்துவதிலும் பார்க்கக் கடினமானது. ஒரு சில நாடாளுமன்ற அமர்வுகளினாலும் ஐந்தாறு நல்லிணக்க அறிவிப்புக்களினாலும் அதனை அடைந்துவிடமுடியாது' என்று இலங்கை அரசாங்கத்தின் காதுகளில் கூவாதவர்களே கிடையாது.

ஆனால், இலங்கை அரசாங்கத்தின் கடந்த ஒரு வருடக கால நல்லாட்சி மீது, ஓர் ஆழமான மீள்வாசிப்பை நிகழ்த்தினால், அதிலிருந்து ஒன்றை மட்டும் நன்றாக விளங்கிக்கொள்ளலாம். அதாவது, மஹிந்த போரை நடத்துவதற்கு மேற்கொண்ட தந்திரரோபாயங்களைவிட மிகவும் சூழ்ச்சிமிக்கதாக மைத்திரி-ரணில் அரசாங்கம், தற்போதைய போரற்ற சூழலை, தனக்கு மட்;டும் சாதகமானதாக நகர்த்திவருகிறது.

சுருக்கமாகச் சொன்னால், கடந்த வருடம் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது, இலங்கையைப் பொறுத்தவரை தனது பொருளாதார நலன்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக பொறுமையாக எடுத்துக்கொண்ட'லைசன்ஸ்'. மஹிந்தவினால் நிறம்மாறிப்போயிருந்த நாட்டினை வெள்ளையடித்து உருமாற்றுவதற்கு, சர்வதேச ரீதியில் பெற்றுக்கொண்ட அனுமதி. மொத்தத்தில், முழுக்க முழுக்கத் தங்களது நலன்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு சூதானமாகச் செய்துமுடித்த 'இராஜதந்திரத் திருமணம்'.

இங்கு, தமிழ் மக்களின் நலன்களைத் தொலைத்துவிட்டதாகவும் சர்வதேசத்தின் முன்னால் சரணாகதி அரசியல் செய்துவிட்டதாகவும் அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது குற்றம் சுமத்தப்பட்டபோது, இலங்கை அரசாங்கத்தினை முதலில் பொறுப்புக்கூறும் வளையத்துக்குள் இழுத்துவரவேண்டும் என்றும் அதன் பின்னர்தான் அரசாங்கத்தின் இயலுமை மற்றும் இயலாமைகள் குறித்தும் தவறுகள் பற்றியும் விவாதிக்கலாம் என்றும் கூட்டமைப்பினால் தெரிவிக்கப்பட்டது. இதுவே அப்போது யதார்த்தமான அணுகுமுறையாகவும் இருந்தது.

ஆனால், கடந்த நல்லாட்சி காலத்தில் தமிழ் மக்கள் ஈட்டியிருக்கும் முன்னேற்றங்கள் என்ன என்பதை, தமிழ்க் கூட்டமைப்பு ஆழமாக ஆராய்ந்து பட்டியலிடவேண்டும். ஜெனீவாவுக்கு செல்லவிருக்கின்ற நிலையில், இதுவொரு வரலாற்றுச் சந்தர்ப்பமாக கூட்டமைப்பின் முன்னால் வியாபித்து நிற்கிறது. 

போரற்ற காலப்பகுதியை ஏற்படுத்திய மிகமுக்கிய நாயகர்களாக தம்மை தொடர்ந்து மார்தட்டிக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்,

அந்த அரசியல் வெற்றியை மக்களின் வெற்றியாகவும் திருப்தியாகவும் மாற்றுவதில் பெரிதும் தோல்வியடைந்திருக்கின்றனர் என்ற உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவேண்டும். இது குறித்த தமது இயலாமைகளுக்கான காரணங்களை சர்வதேச சமூகத்திடம் எடுத்துச்செல்லவேண்டிய மிகமுக்கிய கடப்பாடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வந்திருக்கிறது.

நல்லாட்சி காலப்பகுதி முழுவதும் ஆன்மீக வழியில் அரசியல்வாதிகளாக வந்தவர்கள் போல, மங்கள சமரவீரவும் மற்றும் குழுவினரும் எங்கு போனாலும்; நல்லிணக்கப் போதனைகளையே கூறிவருகின்றனர். ஆனால், அவர்கள் மேற்கொண்டுவரும் இந்த மிகப்பாரதூரமான - நயவஞ்சகமான - இராதந்திர நகர்வுகள். தங்களது அரசாங்கம் மேற்கொண்டுவரும் வெற்று நல்லிணக்கத்தை மறைப்பதற்காகவே என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனியாவது உணர்ந்துகொள்ளவேண்டிய காலகட்டம் இதுவாகும்.

இதுவரை அனுபவித்திருக்கும் நல்லாட்சி காலப்பகுதியில், காணியதிகாரம் தரவில்லை, பொலிஸ் அதிகாரம் தரவில்லை என்றெல்லாம் கேட்கவில்லை. உறுதியளித்தபடி, பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டனவா, அரசியல் கைதிகளின் விடுதலையில் துரிதம் காண்பிக்கப்பட்டதா அல்லது காணாமற்போனோர்கள் விடயத்தில் ஏதாவது உருப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டதா, எது நடந்தது?

அண்மையில் நடந்து முடிந்திருக்கும் பிரதமர் ரணிலின் அரசியல் கபடநாடகம், இந்த அரசாங்கம் எவ்வளவு வஞ்சகத்துடன் தமது காய்களை நகர்த்திவருகிறது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

காணாமற்போனோர் தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் அலுவலகம் ஒன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு பிரதமர் ரணில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். இந்த அறிக்கைக்கு அமைச்சரவை அங்கிகாரமும் தற்போது கிடைத்திருக்கிறது. இதன் அடிப்படையில், பிரதமர் காணாமற்போனோர் தொடர்பில் பெரிதாக ஏதோ வெட்டிப்பிடுங்கப்போகின்றார் என்ற கணக்கில் ஊடகங்களில் செய்திகளை குழையடித்துவருகின்றார்கள்.

ஆனால், இந்த அமைச்சரவை அங்கிகாரப் பத்திரத்தில் 'காணாமற்போனோர் தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் இந்த பணியில் குறிப்பிட்ட நபர்களை காணமல்போக செய்தவர்கள் என்று இனங்காணப்படுபவர்களுக்கு எதிராக எந்த சிவில் வழக்கோ குற்றவியல் வழக்கோ தாக்கல் செய்யமுடியாது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

போரின்போதும் அதன் பின்னரும் காணாமற்போனோரின் விவகாரம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை தொடரும் உபாதை. எத்தனையோ ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் கண்ணீர். அவ்வாறானதொரு பெருங்குற்றத்தை இழைத்தவர்கள் என்று கண்டறியப்படுபவர்களுக்கு எதிராக எந்த வழக்கும் தாக்கல் செய்யமுடியாது என்றும், அவர்களை நீதியின் முன்பாக நிறுத்தித் தண்டனை வழங்கவும் முடியாதென்றால், இந்த காணாமற்போனோர் தொடர்பான தரவுகளை சேகரிக்கும் அமைப்பினால் என்ன பயன்?

இந்த நிலையில், இதற்கு அப்பால் சென்று தமிழ் மக்களுடன் நல்லிணக்கம் பேசப்போவதாக பிரதமர் ரணிலும் மங்கள சமரவீரவும் தொடர்ந்து பஜனை செய்துகொண்டிருக்கின்றனர் என்றால், அது எவ்வளவு பெரிய ஏமாற்று நாடகம்?

இது அண்மையில் இடம்பெற்ற ஒரு சிறிய உதாரணம் மாத்திரமே ஆகும்.

இந்த நல்லாட்சி காலப்பகுதியில், தமிழ் மக்கள் தொடர்ந்தும் தவிர்க்கப்பட்டுவருவதும் அவர்களின் நலன்கள் தட்டிக்கழிக்கப்பட்டுவருவதும்தான் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. இது தமிழ்க் கூட்டமைப்பினருக்கு தெரியாத விடயமும் அல்ல.

ஆக, இம்முறை ஜெனீவாவில் இடம்பெறவுள்ள உறுப்பு நாடுகளுடனான சந்திப்புக்களில் தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்திய நிலைப்பாடும் இலங்கை அரசின் தொடர்ச்சியான கண்துடைப்பு நாடகங்களும் வெளிப்படையாகப் பேசப்படவேண்டும். இன்றைய தினத்தில், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்றவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குரலே சர்வதேசத்தினால் காது கொடுத்து கேட்கப்படுவதாகும். ஆகவே, அவ்வாறு கேட்பவர்களுக்கு தமிழ் மக்களின் நிலைமையை செறிவாக எடுத்துக்கூறவேண்டியது இன்றைய காலகட்டத்தில் மிகமுக்கியமாகிறது.

இம்முறை கூட்டத்தொடரில், இலங்கை அரசாங்கம் நிச்சயமாக தாங்கள் வெற்றி வீரர்களாக தமிழ் மக்களை தாலாட்டி வருவதாக ஜெனீவாவில் மார் தட்டுவார்கள். பாலாறும் தேனாறும் ஓடுகின்ற திருநாட்டில் இன்னும் கொஞ்ச காலத்தில் தமிழ் மக்களே ஜனாதிபதியாவார்கள் என்ற கணக்கில் அடித்துவிடுவார்கள். இந்த ஜாலங்களுக்குள் சென்று மாய்ந்து கொண்டு, பதவிகளுக்கு முண்டுகொடுக்கலாம் என்ற எண்ணத்தில் கூட்டமைப்பு செயற்படுமானால் போருக்கு பிறகு தமிழ் மக்கள் பெற்றுத்தந்த வரலாற்று சந்தர்ப்பத்தை தூக்கிக்கொண்டு மயானத்தை நோக்கி நடைபோடுகின்றனர் என்று அர்த்தம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .