Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Thipaan / 2016 ஜூன் 02 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
நாடுகளின் உருவாக்கம் நியாயத்தின் அடிப்படையில் நிகழ்வதில்லை. எவ்வடிப்படையில் உருவாகின என்று விளக்கவியலாதவாறு, எந் நியாயமுமற்று உருவான பல நாடுகள் உலகில் உள்ளன. அவ்வாறு உருவான நாடு எதனதும் முரண்பாடுகளின் ஊற்றே அதன் உருவாக்கந்தான். தோன்றலில் பிழையிருப்பின், இருப்பில் மட்டுமன்றி இயங்கலிலும் கோளாறிருப்பது இயல்பு.
பிரித்தானியாவின் வெளிநாட்டுப் பிரதேசமாகவுள்ள ஜிப்ரால்ட்டரின் முதலமைச்சர் ‡பேபியன் பிக்காடோ, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுமிடத்து, ஜிப்ரால்ட்டர், ஸ்பெயினுடன் 'கூட்டு இறைமை' பற்றித் தீவிரமாகச் சிந்திக்கும் என்று கூறியமை கவனம் பெற்றிருக்கிறது. அரசியல் ஒழுங்கு, அரசியற் கோட்பாடு, என்ற இரு அடிப்படைகளிலும், இது புதியதொரு சவாலாகிறது. அளவில் சிறியதாயினும் ஜிப்ரால்ட்டரின் நகர்வுகள், நடைமுறையில் உள்ள உலக இயக்கத்தின் ஒழுங்கில் ஏற்படுத்தவல்ல தாக்கம் பெரிது.
ஐபீரிய வளைகுடாவின் தென் எல்லையில் 6.7 சதுர கிலோமீற்றர் பரப்பளவையும் ஜிப்ரால்ட்டரியரும் பிற இனத்தவரும் உள்ளடங்க 30,000 மக்கள் தொகையையும் கொண்ட ஒரு சிறு நிலப்பரப்பே ஜிப்ரால்ட்டர். அதன் வட எல்லையில் ஸ்பெயின் உள்ளது. அப்பிரதேசத்தின் முக்கிய அடையாளம் ஜிப்ரால்ட்டர் பாறையாகும். அத்திலாந்திக் சமுத்திரத்தையும் மத்தியதரைக் கடலையும் இணைக்கும் ஜிப்ரால்ட்டர் நீரிணையும் அங்கு அமைந்துள்ளது. 50,000 ஆண்டுகட்கு முன் நியன்டதால் மனிதர்கள் வசித்த இப்பகுதியில், அவர்கள் அழியுமுன் இறுதியாக வாழ்ந்த இடமாக, இங்குள்ள கொர்ஹாம் குகை கருதப்படுகிறது.
ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின், கி.பி. 771இல் முஸ்லிம் மன்னர்களின் கட்டுப்பாட்டுள் வந்த ஜிப்ரால்ட்டர், 1462இல் ஸ்பெயின் முடியரசின் கட்டுப்பாட்டுள் வந்தது. 1704ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஆங்கில-டச்சுப் படையெடுப்பால் நிகழ்ந்த ஸ்பானிய யுத்தத்தின் நிறைவில், பிரித்தானியாவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையில், 1713இல் ஏற்பட்ட உட்ரெக்ட் உடன்படிக்கைப்படி, ஸ்பெயின், ஜிப்ரால்ட்டரை பிரித்தானியாவுக்கு அளித்தது. அன்றுமுதல் ஜிப்ரால்ட்டர், பிரித்தானியாவின் வெளியக நிலப்பரப்பாகக் கருதப்படுகிறது. இந்நிலப்பரப்பை மீளக் கைப்பற்ற ஸபெயின் பலமுறை முயன்றும் இதுவரை இயலவில்லை. உட்ரெக்ட் உடன்படிக்கையின் படி, அனுமதிக்கப்பட்ட அளவிலும் அதிகமாக, ஜிப்ரால்ட்டரில் உள்ள கோட்டைகளை பிரித்தானியா மீளமைக்கின்றது என்ற அடிப்படையில், ஸ்பெயின் 1727இல் உடன்படிக்கையை இரத்துச் செய்தது. அன்று முதல் பத்துக்கும் மேற்பட்ட முற்றுகைகளை ஜிப்ரால்ட்டர் சந்தித்திருக்கிறது.
பிரித்தானியக் கொலனியாகவும் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில், ஒரு முக்கிய கப்பற் பயணத் துறைமுகமாகவும் அறியப்பட்ட ஜிப்ரால்ட்டர், அதன் பூகோள அமைவிடங் காரணமாக மிக முக்கியமான ஒரு பிரதேசமாயுள்ளது. அக்காலப்பகுதியில் சுயஸ் கால்வாயூடு இந்தியாவை அடையும் பாதையில் ஒரு முக்கிய தரிப்பிடமாகவும் அது விளங்கியது. இரண்டாம் உலகப் போரின் போது, ஜிப்ரால்ட்டர், பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருந்ததால் முழு மத்தியதரைக் கடலும் நேச நாடுகள் கட்டுக்குள் இருந்தது. இரண்டாம் உலகப் போரின் பின் பிரித்தானியாவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலால், 1969ஆம் ஆண்டு தனது ஜிப்ரால்ட்டர் எல்லையை மூடிய ஸ்பெயின் 1985ஆம் ஆண்டே அதை மீளத் திறந்தது. இக்காலப்பகுதியில் ஜிப்ரால்ட்டரியர்கள் தமது சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கினர். அன்றிலிருந்து இன்றுவரை, ஜிப்ரால்ட்டரியரின் உரிமை பற்றியும் அப்பகுதி மீதான பிரித்தானியா மற்றும் ஸ்பெயினின் ஆதிக்கம் பற்றியும் வாதங்கள் தொடர்கின்றன.
இப்போது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திற் தொடர்ந்தும் இருப்பதா வெளியேறுவதா என்பதை முடிவுசெய்ய 'பிரெக்சிட்;' எனும் கருத்து வாக்கெடுப்பு இம் மாதம் 23ஆம் நடக்கவுள்ளது. பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற முடிவெடுப்பின் ஜிப்ரால்ட்டரின் நிலை சிக்கலடையும். பிரித்தானியக் கொலனியாக இருப்பினும் பிரித்தானியாவுடன் நிலத்தொடர்பு அற்ற ஜிப்ரால்ட்டரைப் பிற ஐரோப்பிய நாடுகளுடன் இணைக்கும் பிரதான தரைப்பாதை ஸ்பெயினின் ஊடாகச் செல்கிறது. ஸ்பெயின் தனது எல்லையை மூடுமாயின் ஜிப்ரால்ட்டரின் தரைப்பாதை தடைப்படும்.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் என்ற வகையிலும் நெருக்கடிகளை ஐரோப்பிய ஒன்றியம் கையாளும் என்பதாலும் இதுவரை ஜிப்ரால்ட்டர் மீதான பிரித்தானிய, ஸ்பானிய உரிமை கோரல்கள் நெருக்கடியை உருவாக்கவில்லை. ஆனால், பிரித்தானியா வெளியேறுமாயின் நிலைமைகள் மாறலாம். இதைக் கவனத்திற் கொண்டே ஜிப்ரால்ட்டர் முதலமைச்சர் தனது கருத்தைக் கூறியிருக்கிறார்.
2014ஆம் ஆண்டுப் புள்ளிவிவரப்படி, 6,000 அளவிலான ஸ்பானியர்கள், தொழிலுக்காக நாளாந்தம் எல்லை கடந்து ஜிப்ரால்ட்டருக்குப் போகின்றனர். இது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகட்கிடையிலான திறந்த எல்லைக் கொள்கைப்படி இயலுகிறது. பிரித்தானியா வெளியேறுமிடத்து இதிற் சிக்கலிருக்கும்.
இப்போது முன்மொழியப்படும் 'கூட்டு இறைமை' என்ற கருத்தாக்கம் புதிதல்ல. 2002ஆம் ஆண்டு, ஜிப்ரால்ட்டர் பற்றிய பிரித்தானிய-ஸ்பெயின் பேச்சுக்களையடுத்து, ஜிப்ரால்ட்டர் மக்கள் விரும்பின் ஜிப்ரால்ட்டரின் இறைமையை ஸ்பெயினுடன் பகிர ஆயத்தமென பிரித்தானியா தெரிவித்த பின்னணியில், ஜிப்ரால்ட்டர் ஸ்பெயினுடன் இணைந்து கூட்டு இறைமையை ஏற்பதா இல்லையா என்ற கருத்து வாக்கெடுப்பில், பெரும்பாலோர் இணைவுக்கு எதிராக வாக்களித்தனர்.
ஜிப்ரால்ட்டர் இப்போது இரண்டு அடிப்படைகளில் முக்கியமுடையது. முதலாவதாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வெளியேற்றம் ஜிப்ரால்ட்டரின் இருப்பையும் பொருளாதாரத்தையும் அச்சுறுத்தும் என்பதால், பிரித்தானியா வெளியேறலாகாது என்ற வாதம் வலுப்படும். இதை 'பிரெக்சிட்' தேர்தல் என்ற பரந்த தளத்தில் நோக்கவுள்ளது.
இரண்டாவது, நவீன உலகில் ஜிப்ரால்ட்டர் என்ற கொலனியின் இருப்பும் அதன் மக்களின் உரிமை மறுப்புத் தொடர்பானது. ஜிப்ரால்ட்டர் ஒரு கொலனி அல்ல எனப் பிரித்தானியா தொடர்ச்சியாகச் சொல்லி வருகின்றமையும் விவாதத்துக்குரியது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதா இல்லையா என்ற விவாதமே ஒரு திசைதிருப்பல் உத்தி என்பதைக் கவனித்தல் வேண்டும். முடிவு எதுவாயினும், பிரித்தானியா நலத்திட்ட வெட்டுக்கள் உட்பட்ட சிக்கன நடவடிக்கைகளைச் செயற்படுத்தும் என்பது உறுதி. பிரித்தானியா எதிர்நோக்கும் பொருளாதார மந்தமும் அகதிகளின் வரவும் ஆழ்ந்த உலக அரசியல் நெருக்கடிகளும் தம் விளைவுகளை மெதுமெதுவாக வெளிக்காட்டுகின்றன. இவற்றைக் கையாள இயலாததால் 'பிரெக்சிட்' என்ற நாடகம் அரங்கேறுகிறது.
ஐரோப்பிய ஒன்றியச் சந்தை விதிகள் தனக்குச் சாதகமாக அமையாவிடின், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகப்போவதாக பிரித்தானியா அச்சுறுத்துகிறது. விலகின் ஜிப்ரால்ட்டர் போன்ற பிரித்தானியக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் பாரிய நெருக்கடிகளைச் சந்திக்க நேருமென ஐரோப்பிய ஒன்றியம் அச்சுறுத்துகிறது. ஜிப்ரால்ட்டர் மீது ஸ்பெயினின் புதிய அக்கறையை இப்பின்னணியிலேயே நோக்க வேண்டும்.
இவ்வாதங்கட்கிடையே தன்னைத் தனிநாடாக அறிவித்து, தனது அடையாளம் பேணும் ஒரு நிலையை ஜிப்ரால்ட்டர் எய்துவதன் சாத்தியம் மூழ்கிப் போகிறது. தன்னை ஒரு தனி நாடாகவோ ஒரு தேச அரசாகவோ வரையறுக்கும் வாய்ப்பு ஜிப்ரால்ட்டருக்கு இன்னமும் உண்டு. மூலதனத்தின் வளர்ச்சிக்காக வரலாற்று ரீதியாக இருந்துவந்த தேச அரசுகளின் தேவை படிப்படியாகக் குறையும் பின்னணியில், இவ்வாறான இறைமையுடைய பகுதிகள் பெரிய அரசுகளுள் தம்மைக் கரைத்துக் கொள்கின்றன. உதாரணமாக, 19ஆம்
நூற்றாண்டில், பிரான்ஸ் என்ற தேசத்தின் உருவாக்கத்தின் போது பல தேசங்கள் அடையாளமிழந்து பிரான்ஸ் தேசத்தினுள் தம்மைக் கரைத்துக் கொண்டன.
இன்று கவனிக்க வேண்டியன, ஜிப்ரால்ட்டரில் வாழும் மக்களுடைய உரிமைகள். ஆனால் உரையாடல், ஒருபுறம் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா இருப்பதா இல்லையா என்ற வாதத்தின் பகுதியாயுள்ளது. மறுபுறம் ஜிப்ரால்ட்டரை ஆளும் உரிமை பிரித்தானியாவுக்கா ஸ்பெயினுக்கா என்பது பற்றியதாகும்.
ஜிப்ரால்ட்டர் மக்கள் பல்லாண்டு காலக் கொலனியாதிக்கத்தின் பயனாக, தமது அடையாளங்களைப் படிப்படியாக இழந்து தம்மைப் பிரித்தானியராகக் கருதும் நிலைக்கு வந்துள்ளனர். பல ஐரோப்பிய நாடுகளில், தேச அரசின் தோற்றமும் முதலாளிய விருத்தியும் இணைந்து, ஒவ்வொரு நாட்டிலும் ஓர் ஆதிக்க மொழியினது அல்லது ஆதிக்க இனத்தினது நிலைப்புக்கு வழி செய்தன. சிறுபான்மை மொழிகளையும் இனக்குழும அடையாளங்களையும் ஓரங்கட்டுவதில் முதலாளியப் பொருளியலின் விரிவாக்கம் தீர்மானமான பங்கு வகித்தாலும், இனக்குழும, மொழி அடையாளங்களை நசுக்குவதில் அரசு ஒரு கருவியாக இயங்கியுள்ளது. இதை ஜிப்ரால்ட்டரிலும் காண்கிறோம்.
ஜிப்ரால்ட்டர், மொத்த ஐரோப்பிய ஒன்றிய நிலப்பரப்பில் இரண்டாவது வளமான பகுதியாயும் உயர் தனிமனித வருமானமுடைய பகுதியாயும் உள்ளது. பனாமாவிற் போல, வரித் தவிர்ப்பு முறைகளின் கீழ்ப் பணத்தைப் பதுக்கும் வசதியும் உள்ளது. ஜிப்ரால்ட்டரின் இருப்புக்கு அரசியற் காரணங்களை விடப் பொருளாதாரக் காரணங்களே முக்கியமானவை. அதனாலேயே ஜிப்ரால்ட்டரின் சுயாட்சி உரிமை பற்றியோ அதன் சாத்தியம் பற்றியோ வாதப் பிரதிவாதங்கள் நடப்பதில்லை. இப்போது எழுந்துள்ள கவலைகளும் ஜிப்ரால்ட்டரின் வியாபாரமும் தொழில்களும் பற்றியன. அவை மக்களையோ மக்களின் உரிமைகளையோ பற்றியனவல்ல.
நியூயோர்க், ஜெனீவா, பிரஸல்ஸ் என உலக அரங்குகளில், மேற்குலகின் ஐனநாயக நாடுகள், மனித உரிமைகள் பற்றியும் வாழ்வுரிமை பற்றியும் குரல் கொடுக்கின்றன. அதே குரல், தங்கள் கட்டுக்குட்பட்ட மக்களின் குரல் வளையை நெரிக்கிறது.
எல்லையற்ற பிராந்தியமாக அறியப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் சில பகுதிகள் தம் அமைவிடமும் பொருளாதார முக்கியத்துவமும் கருதி எல்லை வகுக்கப்பட்டுள்ளன. ஜிப்ரால்ட்டர் மீதான உரிமை பிரித்தானியாவுக்கா ஸ்பெயினுக்கா என்ற திசையில் விவாதம் பயணிக்கிறது.
இவ்வாதம் ஒரு நடுவழித் தனிமையை ஜிப்ரால்ட்டருக்கு உருவாக்கியுள்ளது. அதற்கும் அப்பால் 'பிரெக்சிட்;' நிச்சயமின்மைக்கு வழிவகுத்துள்ளது. ஜிப்ரால்ட்டரியர்கள் கையில் தெரிவெதும் இப்போது இல்லை. இவர்களின் எதிர்காலத்தை வேறு இரு நாடுகள் தீர்மானிப்பதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளனவே அன்றி குறையவில்லை.
எல்லைகள் அற்ற உலகில் எல்லைகளுட் சிக்கிச் சீரழிவது என்பது இதுதானோ?
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago