2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஜூலியன் அசாஞ்: அநீதியின் நீதி

Thipaan   / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

நீதி, எப்போதும் நீதியாகச் செயற்படும் என்றில்லை. நீதி, அநீதியாகச் செயற்பட்ட சந்தர்ப்பங்களைக் கண்டிருக்கிறோம். இருந்தும், இன்னமும் எம்மிடம், நீதி மீதான நம்பிக்கை கொஞ்சம் மிச்சமிருக்கிறது. உள்ளூர் நீதியை விட உலக நீதி, நியாயமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். ஆனால், நீதி எதுவாயினும், அநீதியையே நீதியாக, அரசுகள் முன்மொழிகின்றன. இவை, நீதியின் அநீதி பற்றியும் அநீதியின் நீதி பற்றியும் வினாக்களை எழுப்புகின்றன.

விக்கிலீக்ஸ் நிறுவுநர் ஜூலியன் அசாஞ், சட்டவிரோதமாகக் கைதாவதற்கு அஞ்சி, பிரித்தானியாவில் உள்ள ஈக்குவடோர் தூதரகத்தில், 2012ம் ஆண்டு முதல் தங்கியிருக்கிறார். அவர், தூதரகத்தினின்று வெளியேறும்போது கைதுசெய்யும் பொருட்டு, 24 மணி நேரக் கண்காணிப்பில்  பொலிஸார்

ஈடுபட்டுள்ளனர். அவருடைய அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாயும் அவர் ஏதேச்சையாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனவும் அதற்கெதிராக நடவடிக்கைகளை எடுக்கக் கோரியும், 2014ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் ஏதேச்சையான சிறைவைப்புப் பணிக்குழுவில் (UNWGAD), வழக்குப்; பதிவானது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஏதேச்சையான சிறைவைப்புப் பணிக் குழுவானது, 1991ம் ஆண்டு, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் உருவாக்கிய வல்லுநர் குழுவைக் கொண்டதாகும். இது, தனிமனித சுதந்திரத்தை, ஏதேச்சையாகப் பறிப்பதை விசாரிக்கவும் சர்வதேச மனித உரிமைகள் நெறிமுறைகட்குப் பொருந்தாத, தனிமனித சுதந்திரப் பறிப்பைப் பற்றியும், வேண்டின் தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்குமாறும் இழப்பீட்டுத் தீர்வுகளை பரிந்துரைக்கவும் உருவாக்கப்பட்டது.

கடந்த வாரம் இவ்வமைப்பு, ஜூலியன்  அசாஞ்சின் வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கியது. ஜூலியன் அசாஞ்சைச் சட்டவிரோதமாகக் காவலில் வைத்துள்ளதாகவும், அவரைச் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் என்றும், அத்தீர்ப்பு வலியுறுத்தியது. உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைப் பட்டயமான அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் (UDIR) குடிமுறை உரிமைகள், அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கை (ICCPR) ஆகியவற்றின் அடிப்படையில், தீர்ப்பை வழங்கியதாகவும் அவற்றை ஐரோப்பிய நீதிமன்றம் உட்பட முக்கிய சர்வதேச, பிராந்திய நீதி அமைப்புகள் அதிகாரபூர்வமாக ஏற்றுள்ளதால், தீர்ப்பு அவர்களைக் கட்டுப்படுத்துகிறது என்றும் அத்தீர்ப்பு மேலுந்தெரிவித்தது.

'ஜூலியன் அசாஞ்சின் விடயத்தில், விசாரணைக் குழுவின் கருத்துரை' எனத் தலைப்பிடப்பட்ட 18-பக்க அறிக்கை, செப்டம்பர் 2014இல் அசாஞ்சின் சட்ட அணி சமர்ப்பித்த விண்ணப்பத்தின் மீதான விசாரணை முடிவுகளை எடுத்துரைக்கிறது. பிரித்தானிய, சுவீடன் அரசாங்கங்களும், தமது வழக்கை ஏதேச்சையான சிறைவைப்புப் பணிக்குழுவின் முன் வைத்தன.

அசாஞ்சின் கைதும் தடுப்புக்காவலும், அனைத்து வழிகளிலும் சர்வதேச சட்டத்திற்கு அமைவானவை என்று பிரித்தானியாவும் சுவீடனினும் முன்வைத்த எல்லா வாதங்களையும் செல்லாமலாக்குமாறு, இத்தீர்ப்பு அமைந்துள்ளது. தீர்ப்பு, சர்வதேசச் சட்டங்களையும் அதன் தன்மையையும் இரு நாடுகளுக்கும் எடுத்துரைப்பதோடு, அசாஞ்சின் விடயத்தில் இரு நாடுகளினதும் நடத்தைகளின் இழிவை இடித்துரைக்கின்றன.

தீர்ப்பிற் சொல்லிய இன்னொரு முக்கியமான கருத்து: 'முதலில் வேண்ட்ஸ்வோர்த் சிறையில் தடுப்புக்காவல், அடுத்து வீட்டுக் காவலும் ஈக்குவடோர் தூதரகத்தில் அவர் அடையுண்டிருப்பதும் எனப் பலவாறு, சுதந்திரப் பறிப்புக்கு அசாஞ் ஆளாகியுள்ளார்'.

மேலும், அசாஞ்சின் 'பாதுகாப்பையும் உடல்நிலையையும்' உறுதி செய்யுமாறும், உரியவாறு, அவருடைய சுதந்திர நகர்வுக்குக்கான உரிமையைப் பெற ஒத்துழைக்குமாறும், தடுப்புக்காவல் பற்றிய சர்வதேச விதிமுறைகள் உத்தரவாதமளிக்கும் அவரது உரிமைகளை அவர், முழுமையாக பெறுவதை உறுதி செய்யுமாறும் தீர்ப்புக் கோருகிறது.

விசாரணைக் குழுவின் இம்முடிவுகள், அசாஞ்சின் கைதும் தடுப்புக்காவலும் தொடர்பில் பிரித்தானிய, சுவீடன் அதிகாரிகள் முன்வைத்த ஒவ்வொரு வாதத்தையும் நொறுக்கும் மறுப்புரைகளாக உள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பொன்று வழங்கிய இத்தீர்ப்பு, அசாஞ்சின் நீதிக்கான போராட்டத்தின் முக்கியமான குறிகாட்டியாகும்.

இத்தீர்ப்பு, அசாஞ்சை வேட்டையாடக் காத்திருக்கும் பிரித்தானிய, சுவீடன், அமெரிக்க முனைப்புக்கட்கு, புதிய சவாலாகியுள்ளது. விக்கிலீக்ஸ் ஊடாக அசாஞ், இரகசியத் தகவல்களை முதலில் பகிரங்கப்படுத்தியமை தொடக்கம், அவர் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகிறார். இக்கதை நீண்டது. விக்கிலீக்ஸ், அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு, அமெரிக்கத்

 தூதரகங்களால் அனுப்பப்படுகின்ற 'கேபிள்கள்' எனும் 'தந்திச் செய்திகளை'ப் பகிரங்கப்படுத்தியது. இத்தந்திச் செய்திகளைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்ததன் மூலம், உலகத் தலைவர்களின் கொலை, சதி வேலைகள் உட்பட்ட சகல தீச்செயல்களையும், அமெரிக்கா எவ்வாறு செய்தது என விக்கிலீக்ஸ், உலகுக்கு அறிவித்தது.

அதையடுத்து, ஜூலியன்  அசாஞ், பின் லேடன் போன்ற பயங்கரவாதியாக, அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டார். அப்போதைய அமெரிக்க உள்துறைச் செயலராயிருந்த ஹிலாரி கிளின்டன், அமெரிக்கத் தேச நலனுக்கு எதிராக இராணுவ இரகசியங்களை வெளியிட்ட குற்றத்தை அசாஞ் இழைத்துள்ளதால், அவரைத் தண்டிக்க வேண்டும் எனக் கோரினார்.

அசாஞ்சின் சொந்த நாடான அவுஸ்ரேலியாவின் பிரதமர், அவரது கடவுச்சீட்டுத் திரும்பப் பெறப்படும் என அறிவித்தார். அசாஞ், சுவிற்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியதும், சுவிற்ஸர்லாந்து தஞ்சம் வழங்கினால், கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேருமென அமெரிக்கத் தூதர்

எச்சரித்தார். தனது நாட்டின் இரு பெண்களை வன்புணர்ச்சிக்குட்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டிய சுவீடன், அசாஞ்;சைத் தேடியது.

அவர் செய்த பெருங்குற்றம் என்ன? அவரைத் தண்டிக்க, இத்தனை பேர் துடிப்பது ஏன்? எங்களுக்குக் காட்டப்படுவது போன்றோ அல்லது ஊடகங்கள் சித்தரிப்பதைப் போலவோ உலகம் இயங்கவில்லை என்ற உண்மையை, விக்கிலீக்ஸ் வெட்டவெளிச்சமாக்கியது. உலக அரசியலை விளங்குவதற்கான இன்னோர் அளவுகோலை, விக்கிலீக்ஸ் வழங்கியது.

இன்று அசாஞ் குறிவைக்கப்படுவதன் பின்னால், ஜனநாயகம் பற்றியும் கருத்துச் சுதந்திரம் பற்றியுமான ஆழமான வாதங்கள் தோற்றம் பெற்றுள்ளன. தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கான உரிமையை ஜனநாயகப்படுத்தியதற்காகவே, அசாஞ் தேடப்படுகிறார் என்ற உண்மை மறைக்கப்படுகிறது. அவர், குற்றவாளி போல சித்தரிக்கப்பட்டுள்ளார். விக்கிலீக்ஸ், மக்களின் பார்வையில் இருந்து இருட்டடிக்கப்பட்ட, அதிகார நிறுவனங்களின் இழி செயலைத் தோலுரித்துள்ளது. கொடூரமானவர்கள், இவ்வளவு காலமும் சூடியிருந்த ஜனநாயக, சமத்துவ முகமூடியைக் கிழித்தெறிந்து விட்டது. இதை, அதிகாரத்தால் பொறுத்துக் கொள்ளவியலாது.

ஐ.நா சபையின் மனித உரிமைகளுக்குப் பொறுப்பான ஐ.நா மனித உரிமைக் கழகத்தின் துணை உறுப்பு வழங்கிய தீர்ப்புக்கு, பிரித்தானியாவினதும் சுவீடனினதும் எதிர்வினைகள், நீதி பற்றிய வினாக்களையும் உலகப் பொதுமன்றமாக ஐக்கிய நாடுகள் சபையின் தேவை பற்றிய ஐயங்களையும் எழுப்பியுள்ளன.

இத்தீர்ப்பையிட்டுக் கருத்துரைத்த பிரித்தானிய வெளியுறவு அலுவலகம், 'இத்தீர்ப்பை நாம் பொருட்படுத்தவில்லை. இது, தற்போதைய நிலையை எதுவிதத்திலும் மாற்றாது. அசாஞ்;, ஏதேச்சையான தடுப்புக்காவலுக்கு உட்பட்டுள்ளார் என்ற கருத்தை, நாம் முழுமையாக நிராகரிக்கிறோம். அவரைக் கைது செய்யும் முயற்சிகளில், நாம் தொடர்ந்தும் ஈடுபடுவோம். ஐ.நாவின் தீர்ப்பு, எம்மை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது' எனத் தெரிவித்தது. அசாஞ்சை, ஈக்குவடோர்

தூதரகத்தில் மறித்துவைக்க பிரித்தானியா, இதுவரை 12.6 மில்லியன் பவுண்ட்ஸ்களை செலவிட்டுள்ளது.

இத்தீர்ப்பை மறுப்பதாகவும், உள்நாட்டுச் சட்டங்களின் அடிப்படையில், அசாஞ்சின் நாடுகடத்தலை, ஐரோப்பிய நாடுகடத்தல் உடன்பாட்டின் அடிப்படையில், பிரித்தானியாவிடம் எதிர்பார்ப்பதாகவும் சுவீடன் அறிவித்துள்ளது.

இவை, சர்வதேச சட்டங்களின் பொருத்தப்பாட்டையும் ஐ.நா சபையின் செயற்பாடுகளின் வலிமையையும் கேள்விக்குட்படுத்துகின்றன. ஐ.நா மனித உரிமைகள் கழகத்தின் அமைப்பு, இரு நாடுகள், ஒருவரது மனித உரிமையை மீறியுள்ளதாகவும், அவர், ஏதேச்சாதிகாரமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்து வழங்கிய தீர்ப்பை, அந்நாடுகள் ஏற்காமை, சர்வதேசச் சட்டங்களின் பயனின்மையை, மீண்டுமொருமுறை அம்பலமாக்கியுள்ளது.

ஐ.நா மனித உரிமைக் கழகம், ஒருவருக்கு வழங்கிய நீதியை நிலைநாட்ட முடியவில்லை எனும் போது, ஐ.நா அமைப்பின் தேவை இல்லாமலாகிறது. எனவே, நீதியின் பக்கம் நிற்கவியலாத அநீதியின் காவலானாகத் தன் வகிபாகத்தை ஐ.நா சபை மீண்டுமொருமுறை நிறுவியுள்ளது.

இவ்விடத்துப், பல்வேறு அழுத்தங்களின் நடுவிலும் நீதியைக் காப்பதற்காகச் சமரசமின்றித் தீர்ப்பு வழங்கிய ஏதேச்சையான சிறைவைப்புப் பணிக்குழு பாராட்டுக்குரியது. தொடக்கத்திலிருந்து இவ்வழக்கில் ஈடுபட்டு, கடந்தாண்டு ஓய்வுபெற்ற இக்குழுவின் முன்னாள் தலைவரான நோர்வே வழக்கறிஞர் பேராசிரியர் மற்ஸ் அன்டெனாஸ், இக்குழு, அசாஞ்சின் வழக்குத் தொடர்பில் கடும் அழுத்தத்திற்குள்ளானதை ஏற்கும் அதேவேளை இத் தீர்ப்பு 'ஒரு தைரியமான முடிவு, சர்வதேசச் சட்டத்தின் ஆட்சிக்கு, இது முக்கியம்' என்றுங் கூறினார்.

பிரித்தானியாவும் சுவீடனும் இத்தீர்ப்பை ஏற்க மறுத்தமை, அசான்சை பிரித்தானியாவில் இருந்து சுவீடனுக்கு நாடுகடத்தி, அங்கிருந்து அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று, அவருக்கு அமெரிக்காவில் மரண தண்டணையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கமே, அவரது தடுப்பின் பின்னணியில் இருந்ததை அசாஞ்சின் சட்டத்தரணிகள், வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.

அசாஞ், நீதிக்கான குரலின் வடிவமாகியுள்ளார். சர்வதேசச் சட்டங்களோ ஐக்கிய நாடுகள் சபையோ, நியாயத்தின் அடிப்படையில் உருவாகவில்லை. மாறாக, அதிகார வலிமையின் அடிப்படையில் உருவானவை என்பதை, இவ்வழக்கும் அதற்கான எதிர்வினைகளும் உயர்த்தியுள்ளன.

நீதியை மறுப்போரே, நீதி பற்றி அதிகம் பேசுகின்றனர். அவர்களது பார்வையில், அவர்களின் அநீதிகட்கு எதிராகப் பேசுவது அநீதியாகும். அதனாலேயே அவர்கள், நீதியின் பெயரால் அசாஞ்சைத் தண்டிக்க நினைக்கிறார்கள். அசான்சிற்காக, இன்னமும் எஞ்சியுள்ள நீதியின் குரல் உரத்து ஒலிக்கையில், அது அநீதி என அலறுகிறார்கள். அவர்களின் அலறல், அவர்களின் அநியாயங்களால் அல்லல்படுங் கோடிக்கணக்கான மக்களின் அலறல்களை நினைவூட்டுகிறது. ஆனால், நீதிக்கான குரல் வலுவிழக்குமாறு, அதிகார வலிமை அநீதிக்கான குரலை நீதியானதாகப் புரட்டுகிறது.

நீதிக்கான குரல் சிறியதாயிருக்கலாம். ஆனால் அது, வலுவானதும் நியாயமானதுமாகும். அது தன் நியாயத்தின் வலுவால், என்றோ தனது நீதியை நிலைநாட்டும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .