2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையும் உத்தியோகபூர்வ வாழ்க்கையும் ஒன்றா?

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.எஸ்.எம். ஐயூப்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023ஆம் ஆண்டு ஜீ 77 உச்சி மாநாட்டுக்காக கியூபாவுக்குச் விஜயம் செய்து வரும் வழியில்,  இங்கிலாந்தில் வுல்வர்ஹம்ப்டன் பல்கலைகழகத்தில் தமது மனைவியின் பட்டமளிப்பு விழாவொன்றுக்காகவும் சென்றுள்ளார்.

அந்த விழாவுக்கு சென்றமை அவரது தனிப்பட்ட விஜயம் என்றும் அதற்காக அவர் இலங்கைப் பணத்தில் ஒரு கோடியே 62 இலட்சம் ரூபாய் அரச பணத்தை செலவிட்டுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டியே அவர் கடந்த வெள்ளிக்கிழமை (22) இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அன்றே அவர் கொழும்பு பிரதம நீதவான் நிலுப்புலி லங்காபுர முன்னிலையில் 
ஆஜர் செய்யப்பட்டார். வழமைக்கு மாறாக, பல மணி நேரம் சட்டமா அதிபர் திணைக்களத்தினதும் ரணிலினதும் சட்டத்தரணிகளின் வாதப் பரதிவாதங்களை கேட்டு இறுதியில் நீதிவான ஓகஸ்ட் 26ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் 
வைக்க உத்தரவிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி தனிப்பட்ட பயணமொன்றுக்காக அரச பணத்தை செலவழித்தார் என்பது உண்மையாக இருந்தால், அதற்காக அவர் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அவர் முன்னாள் ஜனாதிபதி என்பதற்காகவோ, நோயாளர் என்பதற்காகவோ, அவரை விட்டுவிடவோ, மன்னிக்கவோ சட்டத்தில் இடமில்லை.

அந்த குற்றச்சாட்டு தொடர்பாக அரச தலைவர் ஒருவரோ, அரச அதிகாரி ஒருவரோ, சாதாரண பிரஜை ஒருவரோ, பொலிஸிலோ இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிலோ முறைப்பாடு செய்வதை அரசியல் பழிவாங்கல் என்று கூற முடியாது.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் அவரை கைது செய்வதையும் நீதி மன்றத்தில் ஆஜர் செய்வதையும் பழிவாங்கல் என்று கூற முடியாது. அதன் பிரகாரம், நீதிமன்றம் அவரை விளக்க மறியலில் வைப்பதையும் பழிவாங்கல் என்று கூற முடியாது. அவ்வாறு கூறுவது நீதிமன்ற அவதூறாகலாம். சட்டத்தின் முன் சகலரும் சமம் என்பதே நியதியாகும்.

இவ்விடயம் தொடர்பான வழக்கு விசாரணையின் இறுதியில் அவர் நிராபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் மட்டுமே அவருக்கு எதிரான முறைப்பாடு பழிவாங்கல் என்று கூறலாம். சட்டமா அதிபர் திணைக்களத்தை வழிநடத்தும் அதிகாரம் நீதி அமைச்சருக்கு இருப்பதால் அவரை கைது செய்ததையும் சிலவேளை பழிவாங்கலாக கருதலாம்.

ஆனால், அதற்கு அப்பால் நீதிமன்றத்தின் செயற்பாடுகளை விமர்சிக்க முடியாது. அதேவேளை, நீதிமன்றத்தால் நிரபராதி எனறு தீர்ப்பளிக்கப்படும் சகலரும் பழிவாங்கலுக்கு உள்ளானவர்களுமல்ல.

லண்டனிலிருந்து வொல்வர்ஹமப்டன் வரையிலான ரணிலின் பயணம் தனிப்பட்ட பயணம் என்பதால் அதற்காக அரச பணத்தை செலவிட்டதற்காகவே பொலிஸார் ரணிலை கைது செய்தனர்.

இதற்கு பதிலளித்த ரணில் ஜனாதிபதி ஒருவருக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்றும் பொது வாழ்க்கை என்றும் இரண்டு வாழ்க்கை இல்லை என்று இரகசிய பொலிஸாரிடம் கூறியுள்ளார். ஒரு ஜனாதிபதிக்கு குறிப்பிட்ட கடமை நேரம் இல்லை என்ற அர்த்தத்தில் அதனை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், செலவு என்று வரும்போது, அதனை ஏற்க முடியாது. உதாரணமாக, ஒரு ஜனாதிபதிக்கு இரண்டு வாழ்க்கை இல்லாவிட்டாலும் அவர் நாளாந்தம் தமது நண்பர்களுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் அரச பணத்தில் விருந்தளித்தால் அதனை ஏற்க முடியாது.

அவர் அரச பணத்தில் தமது சொந்தப் பெயரில் சொத்து சேகரித்தால் அதனை ஏற்க முடியாது. அதேபோல், அவர் தமது குடும்பத்துடன் வெளிநாடுகளில் சவாரி செய்தால் அதனை ஏற்க முடியாது.

இங்கு எழும் முக்கியமான பிரச்சினை என்னவென்றால்? ஒரு ஜனாதிபதியோ அல்லது ஏனைய மக்கள் பிரதிநிதிகளோ தமது அலுவலக பணிகளையும் சொந்தப் பணிகளையும் வேறுபடுத்திக்கொள்வது எவ்வாறு என்பதேயாகும்.

வேறு வார்த்தைகளில கூறுவதாக இருந்தால், அவர்கள் தமது சொந்த தேவைகளுக்காக அரச பணத்தை ஒருபோதும் கலக்காமல் நடந்துகொள்ள முடியுமா? என்ற கேள்வியை பலர் எழுப்புகின்றனர்.

இந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு உத்தியோகபூர்வ பணிகளின்போது, செலவழிப்பதற்காக பணம், வாகனங்கள். அவர்களது பாதுகாப்புக்கான அதிகாரிகள் மற்றும் வாகனங்கள் போன்றவை அரச பணத்தில் வழங்கப்படுகின்றன. அவர்களது சொந்த செலவுக்காக சம்பளமும் வழங்கபப்படுகிறது.

இதனை எதிர்க்க முடியாது. ஆளும் தேசிய மக்கள் சக்தியும் அதனை எதிர்க்கவில்லை.பதவிக் காலம் முடிவடைந்து ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றவர்களுக்கு ஓய்வூதியம், உத்தியோகபூர்வ இல்லங்கள், அலுவலகங்கள், வாகனங்கள் போன்றவற்றை வழங்குவதையே அக்கட்சி எதிர்க்கிறது.

பட்டமளிப்பு விழாவுக்கு தாம், தமது மனைவி மற்றும் அதிகாரிகளுடன் செல்லவில்லை என்றோ, அதற்காக அரச பணத்தை செலவழிக்கவில்லை என்றோ, ரணில் தரப்பில் கூறப்படுவதில்லை. 

ஆனால், அது உத்தியோகபூர்வ பயணமா? இல்லையா? என்ற விடயத்தில் தான் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விடயத்தில் அவருக்காக வாதிடுவோர் மத்தியிலும் ஒருமித்த கருத்து இல்லை என்றே தெரிகிறது.

இது தனிப்பட்ட பயணம் என்றே ரணில் ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது அலுவலகம் இலண்டனில் உள்ள இலங்கை தூதரகததுக்கு அறிவித்துள்ளது. பின்னர் இது தொடர்பாக சிலர் கருத்து தெரிவித்ததையடுத்து, அவரது அலுவலகம் அதனை வெறுமனே விஜயம் என்று குறிப்பிட்டதாகவும் நீதிமன்றத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

அது உண்மையாயின் லண்டனில் இருந்து வொல்வர்ஹம்ப்டன் பல்கலைகழகம் வரையிலான பயணம் தனிப்பட்ட பயணம் என்பதை மறைக்க அதிகாரிகள் முற்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (24) அன்று நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் ஊடக சந்திப்பில்  இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கப்பட்டது. “ரணில் திருடர்” என்றும் அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கடந்த காலங்களில் கூறியவர்களும் அந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அவ்வனைவரும் ரணில் விக்ரமசிங்கவை நியாயப்படுத்தியும் அவரை கைது செய்ததை எதிர்த்தும் கருத்து தெரிவித்த போதிலும், அவரது வொல்வர்ஹம்ப்டன் பயணம் தனிப்பட்ட பயணமா? உத்தியோகபூர்வ பயணமா? என்பதைப் பற்றி அவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை என்பது தெரியவிருந்தது.

வொல்வரஹம்ப்டன் பயணத்தில் இரண்டு நிகழ்ச்சிகளில் ரணில் கலந்து கொண்டதாகவும் அதில் ஒன்று அப்பல்கலைகழகத்தின் வேந்தர் ஸ்வராஜ் போல் வழங்கிய பகல் போசன விருந்து என்றும் மற்றையது பட்டமளிப்பு விழா, என்றும் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார்.

விருந்துக்கு ரணிலுக்கு இலங்கையின் ஜனாதிபதி என்ற அடிப்படையிலேயே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் எனவே, இப்பயணம் உத்தியோகபூர்வ பயணமாகவே கருதப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
அதாவது, ரணில் பிரதானமாக பட்டமளிப்புக்காக செல்லவில்லை.

விருந்துக்காகவே சென்றுள்ளார். அத்தோடு, தமக்கு வழங்கப்பட்ட பட்டத்தையும் மைத்திரி விக்ரமசிங்க பெற்றுக் கொண்டுள்ளார். இது உண்மையாக இருக்கலாமா? அவ்வாறாயின், நாடு வங்குரோத்து அடைந்த நிலையில் இருக்கும் போதும் ஒரு விருந்தில கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ஒரு கோடியே
62 இலட்சம் ரூபாய் செலவழித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ஏனையோர் இது தனிப்பட்ட பயணமாக இருந்த போதிலும், அதற்காக பொதுப் பணம் செலவழிக்கப்பட்ட போதிலும், ஒரு ஜனாதிபதிக்கு அதுபோன்ற சலுகைள் இருக்க வேண்டும் என்ற தோரணையிலேயே கருத்து தெரிவித்தனர்.

ஜனாதிபதி ரணில் கியூபாவிலிருந்து வரும் வழியில் வொல்வர்ஹம்ப்டனுக்குச் செல்லாமல் லண்டனில் ஒரு ஹோட்டலில் இரண்டு நாள் தங்கியிருந்தால் அதற்கான செலவையும் அவரிடம் அறவிட வேண்டுமா? என்றும் சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அவ்வாறு அவர் தனிப்பட்ட தேவைக்காக தங்கியிருந்தால் அதற்கான செலவு அவரிடமிருந்து அறவிடப்படத் தான் வேண்டும். இல்லாவிட்டால் அவர் ஒரு மாதம் தங்கி விட்டும் வரலாம்.

ஜனாதிபதிகளோ, அமைச்சர்களோ, எம்.பிக்களோ தாம் விரும்பியவாறு அரச பணத்தை செலவளிக்க முடியாது என்ற தேசிய மக்கள் சக்தியின் கருத்து சரியானதே. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் பிரசார பணிகளில் கலந்து கொண்டபோது, அவரது பயணச் செலவுகளை அவரது கட்சியே ஏற்றது என்று பிரதி அமைச்சர் சமந்த வித்தியாரத்ன கூறியிருந்தார்.

ஜனாதிபதி ஜேர்மனிக்கு அண்மையில் விஜயம் செய்தபோது, அங்கு வாழும் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்களையும் சந்திக்கச் சென்றிருந்தார். அப்போது, 
அவரது உணவு மற்றும் பயணச் செலவுகளை அந்த ஆதரவாளர்களே 
ஏற்றனர் என்று அங்குள்ள தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர் ஒருவர் முகநூலில் பதிவிட்டு இருந்தார்.

ஆனால், அந்த நியதியில் ஒரு சில சிக்கல்கள் இருக்கின்றன. அனுரகுமார ஜனாதிபதி என்ற ரீதியில் உத்தியோகபூர்வ அலுவல் ஒன்றுக்காக அனுராதபுரத்துக்குச் செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதே மாவட்டத்தில் சில கிலோ மீட்டர் தொலைவில் தம்புத்தேகமவில் அவரது தாயார் வாழ்கிறார்.

அவர் தாயாரை பார்க்க விரும்புகிறார். அது தனிப்பட்ட பயணமாகும். எனவே, அவர் அதற்காக தமது உத்தியோகபூர்வ வாகனத்தை உபயோகிக்காமல் தனியார் வாகனம் ஒன்றை பாவிப்பதா? நண்பர் ஒருவரின் வாகனத்தை பயன்படுத்தினால் அது இலஞ்சமாக கருதப்படலாம்.

ஜனாதிபதியின் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டால் அவர் இறுதி கிரியைகளில் கலந்துகொள்ள எந்த வாகனத்தில் பயணிப்பது? இதுபோன்ற நடைமுறை பிரச்சினைகளையும் தவிர்த்து ஜனாதிபதிகள் பொதுப் பணத்தை துஷ்பிரயோகம் செய்வதையும் தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வராவிட்டால் பதவிக்காலம் முடிவடைந்ததன் பின்னர் அனுரகுமாரவும் பல வழக்குகளை 
சந்திக்க நேரிடும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X