Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Administrator / 2017 மே 12 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
- மொஹமட் பாதுஷா
அரசியலில் மட்டுமல்ல எல்லா விடயங்களிலும் கருத்து வேற்றுமைகள் இருப்பது சர்வசாதாரணமானது.
மாறுபட்ட கருத்துகள், எண்ணங்களில் இருந்து புதுவிதமான கருத்துருவாக்கங்கள் பிறக்கின்றன. ஆனால், ஒவ்வொருவரும் கொண்டுள்ள கருத்துகள் ஒரு பொதுத் தளத்தில் அமர்ந்து பேசப்படாதவிடத்து, அவை கருத்து முரண்பாடுகளாக ஆகிவிடுவதைக் காண்கின்றோம்.
உலக மரபில் தோற்றம்பெற்ற அனைத்து விதமான இன முரண்பாடுகளும் முரண்பட்ட கருத்துகளை ஒரு மேசையில் அமர்ந்து, மனம்விட்டுப் பேசாமல் விட்டதன் பக்கவிளைவு என்றும் சொல்ல முடியும்.
வேறுபட்ட இனக் குழுமங்கள், மனிதகுல வர்க்கங்கள், சமயங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் ஒவ்வொரு விடயம் பற்றியும் வேறுபட்ட எண்ணங்கள், கருத்துநிலைகள் இருப்பது வழமையே.
அதையும் தாண்டி, சில போதுகளில், அடிப்படையில் ஒரே இயல்பையுடைய மக்கள் பிரிவினரிடையேயும் முரணான நிலைப்பாடுகள் தோன்றி விடுவதை அவதானிக்க முடிகின்றது.
ஒவ்வொருவரினதும் பார்வைக் கோணம் ஒன்றாக இருப்பதில்லை. அது ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை.
சமாதானத்தை நிலைநாட்டுதல் என்ற போர்வையில், மேற்குலக படைகள் மேற்கொள்ளும் போர் நடவடிக்கையை, பாலஸ்தீன மக்கள், இஸ்லாமியர்களை அழித்தொழிக்கும் முயற்சியாகவே பார்க்கின்றனர்.
இலங்கையில் பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டுதல் என்று அரசாங்கத்தால் சொல்லப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தை, தமிழ் மக்கள் இன அழிப்பின் பலிபீடம் என்றே நோக்குகின்றனர்.
மகாத்மா காந்தியை பின்பற்றுபவர்களும் இருக்கின்றார்கள்; கோட்சேக்குப் பரிந்து பேசுபவர்களும் இருக்கின்றார்கள். இலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தீர்வு கிடைக்க வேண்டுமெனப் போராடும் சிங்கள முற்போக்காளர்களும் உள்ளனர்; மாற்றுச் சமூகத்துக்குத் தீர்வு கிடைப்பதற்கு முட்டுக்கட்டை போடும் சிறுபான்மை சமூகத்தவரும் உள்ளனர். இவற்றையெல்லாம் அவரவரின் நலனும் அதனை அவர்கள் நோக்குகின்ற விதமும் தீர்மானிக்கின்றது.
ஒரு குடும்பத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாக இருக்கின்ற ஒரு மரணத்தை, சவப்பெட்டிக் கடைக்காரன் வியாபாரமாகவே பார்ப்பது பெருந்தவறு என்று யாரும் சொல்ல முடியாது.
இந்தப் பண்பை அரசியலில் பரவலாகக் காண முடியும். தமது சொந்த இலாபங்கள், கொள்கைகள் சரி எனச் சொல்வதற்கு ஏற்றாற்போல் ஆதாரங்களை முன்வைப்பதிலும், தமது அரசியல் இருப்புக்காக முரண்பட்ட கருத்துகளைக் கூறி, அதை நிரூபிக்க முனைவதிலும் நமது அரசியல்வாதிகள் கைதேர்ந்தவர்கள்.
ஒருகொள்கையைச் சரியெனக் காட்டுவதற்கு ஆயிரம் காரணங்களை கூறுவார்கள். பின்னொருநாளில், அதே கொள்கையில் தாமே பிழை காண்பார்கள். அதற்கு ஆயிரத்தெட்டுக் காரணங்களைச் சொல்வார்கள்.
இலங்கையின் இனப்பிரச்சினையும் அதற்கான தீர்வுத்திட்டமும் கூட இப்படித்தான் பார்க்கப்படுகின்றது. இந்த நாட்டில் தமிழர்களுக்கு ஒரு பிரச்சினையே இல்லை; அவர்கள் தனிநாட்டைக் கைப்பற்றும் நோக்கோடு வேண்டாத காரியங்களில் ஈடுபடுகின்றார்கள் என்றும் அவர்களுக்குத் தீர்வு அவசியமில்லை என்ற கோதாவிலுமே பெருந்தேசிய ஆட்சியாளர்கள் ஆரம்பத்தில் எண்ணினார்கள்.
தமிழர்களுக்குப் பிரச்சினை இருக்கின்றது என்பதை நீண்டதொரு யுத்தத்தின் மூலம் பெருந்தேசியமும் பௌத்த மக்களும் உணர்ந்து கொண்டார்கள். அதாவது அவர்களது பார்வைக் கோணமும் கருத்துநிலையும் மாறியது.
இப்போது தீர்வு வழங்குவதற்கு கொள்கையளவில் அரசாங்கம் தயாராகி நிற்கின்றது. தீர்வுப் பொதியின் வடிவம்தான் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
தமிழர்களுக்குப் பிரச்சினை இருக்கின்றது என்று உணர்ந்த பெருந்தேசியம், இந்நாட்டில் வாழும் இரண்டாவது சிறுபான்மை இனமான முஸ்லிம்களுக்கும் பிரச்சினையுள்ளது; எனவே, தீர்வில் அவர்களுக்கும் பங்கு வழங்க வேண்டும் என்று உளப்பூர்வமாக எண்ணுகின்றது என்பதை விடவும், அப்படியான ஓர் இக்கட்டான நிலைக்கு ஆட்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.
முஸ்லிம்களுக்குப் பிரச்சினைகள் உள்ளன என்றும் அதன்படி அவர்களுடைய அபிலாஷைகளை நிவர்த்தி செய்யக் கூடிய உபதீர்வு ஒன்று அவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் ஐம்பது வருடங்களுக்கு முன்னரே, தமிழ் அரசியல்வாதிகள் கரிசனை காட்டத் தொடங்கி விட்டனர்.
அப்போதைய தமிழ் அரசியல்வாதிகளின் முற்போக்கு, தூர சிந்தனையாகவும் இதைக் கருத முடியும். ஆனால், இடைப்பட்ட காலத்தில் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பாதைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் முஸ்லிம்களின் அபிலாஷைகள் மறக்கடிக்கப்பட்டு விட்டன.
யுத்தம் முடிந்த பிற்பாடு, தீர்வுத் திட்டம் பற்றிப் பேச ஆரம்பித்தபோது,“போராடாத முஸ்லிம் சமூகம், தீர்வில் பங்கு கேட்பது ஏன்?” என்பது போன்ற சிந்தனைகள், தமிழ் அரசியலில் ஆங்காங்கே ஏற்பட்டிருந்தன. ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த நிலைமை இப்போது மாறியிருக்கின்றது.
தமிழ் மக்களுக்குத் தீர்வுத்திட்டம் வழங்கப்பட வேண்டுமென்ற புரிதல் முஸ்லிம்களிடையே எவ்வாறு ஏற்பட்டிருக்கின்றதோ, அவ்வாறு முஸ்லிம்களினது அபிலாஷைகளும் நிவர்த்திக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தமிழர் தரப்பில் ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் உடன்பட்டு விட்டதாக எண்ணுமளவுக்கு நிலைமைகள் இருந்தன.
ஆனால், இன்று ஒரு குறிப்பிட்ட முஸ்லிம் கட்சியுடன் பேசுவதன் ஊடாக மட்டும், கிழக்கு முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுவிட முடியாது என்ற யதார்த்தத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்து கொண்டுள்ளது எனலாம்.
முஸ்லிம்களுக்கு என்ன தேவை? என்று சொல்லுங்கள் எனவும், முஸ்லிம்களின் அபிலாஷைகள் தீர்த்து வைக்கப்படும் எனவும், முஸ்லிம்களின் சம்மதமின்றி நிலையான தீர்வைப் பெற முடியாது எனவும் கருத்து வேற்றுமைகளில் இருந்து ஒரு கருத்தியல் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.
எந்தளவுக்கு என்றால், முஸ்லிம்களின் விடயத்தில் சில முஸ்லிம் அரசியல்வாதிகளை விட, ஓரிரு தமிழ் அரசியல்வாதிகள் தெளிவுடன் இருக்குமளவுக்கு நிலைமைகள் முன்னேறியிருக்கின்றன.
வெளிப்படையாகப் பார்க்கின்ற போது, தெரிகின்ற இந்த முன்னேற்றம் உள்ளார்த்தமாகவும் ஏற்பட்டிருக்கின்றது என்றே முஸ்லிம் மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதில் சிறியதொரு சந்தேகக் கீறல் அண்மையில் விழுந்திருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டம் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பில் இடம்பெற்றபோது, வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அதாவது, “வடக்கும் கிழக்கும் இணைந்தாலும் முஸ்லிம்களுக்கு ‘தென்கிழக்கு அலகு’ என்ற ஒன்று இருக்கக்கூடாது என்ற விடயத்தில் தமிழ் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
“இவ்விரு மாகாணங்களும் இணைந்திருந்தால் அது பலமாக அமையும். முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் இருக்கின்ற செயற்கையான பிரிவினையை இல்லாது செய்ய வேண்டும். தென்கிழக்கு அலகு என்பது வெறும் கற்பனாவாதம். இது முஸ்லிம் சமூகத்தைப் பலவீனப்படுத்துகின்றதும் நடைமுறைச் சாத்தியமற்றதுமான விடயம் ஆகும். அதுபற்றி எவரும் சிந்திக்க வேண்டியதில்லை” என்றும் கூறியுள்ளார்.
மாகாண சபை உறுப்பினர், இவ்வுரையில் நல்ல பல விடயங்களை முன்வைத்துப் பேசினார். என்றாலும், தென்கிழக்கு அலகு என்பது கற்பனாவாதம் என்று அவர் கூறுவதை கிழக்கு முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.
முஸ்லிம் அரசியல் களத்தில் மிகவும் எதிர்பார்ப்புமிக்க அரசியல் சக்தியாக உருவெடுத்து, இன்னும் மக்களிடையே நம்பிக்கையைத் தக்கவைத்திருக்கின்ற ‘நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி’யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு அமைவாக, வடமாகாண சபை உறுப்பினரானவர் அய்யூப் அஸ்மின்.
எனவே, இவர் தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் ஊடாகப் பிரதானமாக, முஸ்லிம்களையும் அடுத்ததாக தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்பவர். அதுமட்டுமன்றி, நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் அரசியல் பிம்பமாக பார்க்கப்படுபவரும் ஆவார்.
அப்பேர்ப்பட்ட மாகாண சபை உறுப்பினரே மேற்குறிப்பிட்ட கருத்தைப் பொது மேடை ஒன்றில் சொல்லியிருக்கின்றார். எனவே, அவர் இக்கருத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகச் சொன்னாரா? நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் நிலைப்பாடாக முன்வைத்தாரா? அல்லது தனது சொந்த அரசியல் கருத்தாகக் கூறினாரா என்ற கேள்விகள் இவ்விடத்தில் எழுந்திருக்கின்றன.
இது, நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் நிலைப்பாடா என்பதை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை. என்றாலும் அதனது நிலைப்பாடு இதுவல்ல என்பது பலரும் அறிந்த விடயமாகும்.
ஆனாலும், முஸ்லிம்களுக்கும் தீர்வு தரப்போவதாகக் கூறிவருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் போன்றோர் கலந்துகொண்ட ஒரு மேடையில், அஸ்மின் ஏன் இவ்வாறு உரையாற்றினார் என்ற சந்தேகம் எழவே செய்கின்றது.
ஒருவேளை, தமிழ்க் கூட்டமைப்பின் உள்மனக் கிடக்கையை அஸ்மின் குறிப்பால் உணர்த்தி இருக்கின்றாரா என்று தென்கிழக்கு அலகு பற்றிப் பேசும் முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் எம்மிடம் கேட்டார்.
அதற்கப்பால், பார்வையாளர்களான மக்களைக் கவர்வதற்கான பேச்சாக இதை எடுத்துக் கொள்ள முடியவில்லை. எது எப்படியாயினும், அஸ்மினின் கருத்து மீள்வாசிப்புக்குரியது.
வரலாற்றில் பல தடவை முஸ்லிம்களுக்கான தீர்வை தமிழர் அரசியல் முன்மொழிந்திருக்கின்றது என்ற அடிப்படையில் இது உண்மையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய தமிழர் கட்சிகளினால் வெளிப்படுத்தப்பட்ட நிலைப்பாடுகளுக்கும் முரணானது என்றே கூறவேண்டும்.
1956 இல் தமிழரசுக் கட்சியின் நான்காவது மாநாட்டில் இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கு ஒரு சுயாட்சி தமிழரசும் முஸ்லிம்களுக்கு ஒரு சுயாட்சி முஸ்லிம் அரசும் எனத் தீர்மானிக்கபட்டது.
1961 இல் இடம்பெற்ற ஒன்பதாவது மாநாட்டில், தந்தை செல்வநாயகம் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சமஆட்சி அலகை மீள் உறுதி செய்தார். அதன்பிறகு 1977 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் சுயாட்சி என்ற விடயம் குறித்துரைக்கப்பட்டது.
இப்போது தமிழ்க் கூட்டமைப்பும் நியாயமான ஒரு தீர்வை வழங்குவதற்கு முன்வந்திருக்கின்றது. இந்நிலையில், என்ன நியாயத்தின் அடிப்படையில் மாகாண சபை உறுப்பினர், இதைக் கூறியிருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கின்றது.
இந்தப் பேச்சைத் தமிழ்க் கூட்டமைப்பு மறுத்துரைத்ததாகவோ அல்லது நல்லாட்சி மக்கள் முன்னணி விளக்கம் கோரியதாகவோ அறியக் கிடைக்கவில்லை. ஆனால், ஏற்கெனவே உடன்பாடு காணப்பட்டதுக்கு இணங்க அஸ்மினை, ந.ம.முன்னணி அப்பதவியில் இருந்து மீள அழைத்திருக்கின்றது.
வடக்கும் கிழக்கும் இணைவது இரு சமூகங்களுக்கும் பலமாக அமையும் என்பது உண்மைதான். இரு சமூகங்களும் பகையை மறந்து ஒன்றுபட வேண்டியது காலத்தின் கட்டாயமும் ஆகும்.
ஆனால், தீர்வுத்திட்டம் என்று வருகின்றபோது, வடக்கையும் கிழக்கையும் இணைப்பதைக் கிழக்கு முஸ்லிம்கள் விரும்பவே இல்லை. அதை அவர்கள் விரும்பவே இல்லை எனும் போது, அதை அவர்கள் தமக்கு உகந்த தீர்வாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது கண்கூடு.
எனவேதான், அவர்கள் வடக்கு, கிழக்கை இணைத்தால் அல்லது இணைக்காமல் தீர்வு வழங்கினால் தமக்குரிய பங்கு எதுவாக இருக்க வேண்டும் என்று பேசத் தொடங்கியிருக்கின்றார்கள்.
இது சம்பந்தனினதும் ரவூப் ஹக்கீமினதும் பிரச்சினையில்லை; இங்கு வாழ்கின்ற மக்களின் பிரச்சினை. அந்த வகையில், வடக்கும் கிழக்கும் இணைக்கப்படாதிருப்பதே ஒரு தீர்வு போன்றது என்று கருதுவோரும் உள்ளனர்.
கிழக்கில் தனிமுஸ்லிம் மாகாணமும், இணைந்த வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணமும் அமைய வேண்டும் என்றும் ஒரு சில அரசியல்வாதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
சமஷ்டி முறை பற்றியும் பேசப்படுகின்றது. ஒருவேளை முஸ்லிம் சுயாட்சி அலகின் எல்லைகள் குறுகலடையுமாக இருந்தால், அல்லது அதன் மையம் தென்கிழக்காக அமையுமாக இருந்தால், அதனைத் தென்கிழக்கு அலகாக ஒரு தீர்வாகப் பெறுவது தொடர்பிலும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
தமிழர்களுக்குத் தீர்வுத்திட்டம் கிடைப்பதை சிங்கள ஆட்சியாளர்களும் வெறும் கற்பனை என்றே முன்னர் கருதினார்கள். இப்போது அந்த நிலைமை தலைகீழாக மாறியிருக்கின்றது.
அதுபோல, முஸ்லிம்களுக்கான தீர்வுத்திட்டம் பற்றிய கருத்தியல்களும் மாறலாம் என்பதை நினைவில் கொள்வது நல்லது. எனவே, முஸ்லிம்களின் அபிலாஷைகளையும் நியாயங்களையும் விளங்கிக் கொண்டு, அரசியல்வாதிகள் கருத்து வெளியிட வேண்டும்.
எந்தக் காரணத்துக்காகவும் தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கை இணைத்துக் கேட்பதை கேலி செய்ய முடியாதோ, கற்பனாவாதம் என்று கூற முடியாதோ, அதுபோலவே கிழக்கு முஸ்லிம்கள் கோரும் தென்கிழக்கு அலகு போன்ற தீர்வு ஒன்றைக் கற்பனை என்று கூறி யாரும் கேலிக்குள்ளாக்க முடியாது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago