Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 ஒக்டோபர் 25 , பி.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தில் நடிகர் சங்கத் தேர்தல் 'மினி பொதுத் தேர்தல்' போல் நடைபெற்றது இதுதான் முதல் முறை. பத்து வருடங்களாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரும் பொதுச் செயாளராக நடிகர் ராதா ரவியும் இருந்தார்கள். சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சங்க கட்டடத்தை இடித்து விட்டு நவீன அங்காடித் தொகுதி கட்டும் விவகாரத்தில் முதன் முதலில் எரிமலை வெடித்தது.
சரத்குமார் அணிக்கு எதிராக முதலில் புறப்பட்டவர் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினராக இருந்த பூச்சி முருகன். இவர், 'நடிகர் சங்க இடத்தை சத்யம் சினிமாஸ் நிறுவனத்துக்கு 29 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டது தவறு. அதில் முறைகேடு' என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டு திரையுலகில் உள்ள அனைவரையும் மிரளச் செய்தது.
நடிகர் சங்க இடத்தை குத்தகைக்கு விட்டதில் குழப்பமாக என்ற குரல் திரையுலகில் உள்ள அனைத்து நடிகர்கள் மனதிலும் பல கேள்விகளை எழுப்பியது. சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கூட நடிகர் சங்கத்தின் சொத்து தவறாகப் போய்விடக் கூடாது என்று கவலை கொண்டார்கள். இந்நிலையில் முதல் கட்டத்தில் குற்றச்சாட்டை எழுப்பிய பூச்சி முருகனுக்கும், சரத்குமார் அணிக்குமான மோதலாகவே இது உருவெடுத்தது. ஆனால், காலப்போக்கில் இந்தப் புகாரே நடிகர் விஷாலுக்கும், சரத்குமாருக்குமான யுத்தமாக மாறிவிட்டது.
தென்னைந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியும் சரத் அணியும் களத்தில் நின்றது. விஷால் அணியில் நடிகர் நாசர் தலைவராக முன்னிறுத்தப்பட்டார். இவருக்கு நடிகர் சிவகுமாரின் பரிபூரண ஆதரவு முதலில் இருந்தது.
ஏனென்றால், அந்த வாய்ப்பை முதலில் சிவகுமாருக்குத்தான் விஷால் அணி கொடுத்தது. ஆனால் நடிகர் சிவகுமார் தான், 'நான் போட்டியிடவில்லை. நாசரை நிறுத்துங்கள்' என்று முன்னிறுத்தினார். தனது ஆதரவு விஷால் அணிக்கு உண்டு என்பதை வெளிப்படையாகக் காட்டும் பொருட்டு பொருளாளர் பதவிக்கு தன் மகன் கார்த்தியை அந்த அணி சார்பில் போட்டியிட வைத்தார் நடிகர் சிவகுமார். இந்த அணிக்கு 'பாண்டவர் அணி' என்று பெயர்சூட்டியவரும் சிவகுமார்தான் என்ற பேச்சு உண்டு.
நாசர், விஷால், கார்த்தி அணிக்கு எதிராக சரத், ராதாரவி, எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் அணி நின்றது. எடுத்த எடுப்பிலேயே ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க இந்த தேர்தலில் ஒதுங்கிக் கொண்டது. அது மட்டுமின்றி அ.தி.மு.க ஆதரவு பெற்ற நடிகர்கள் யாரும் அதில் பங்கேற்கக்கூடாது என்றும் அறிவித்தது.
சட்டமன்ற தேர்தல் நடக்கும் நேரத்தில் திரையுலகத்தில் ஒரு பிரிவினரை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணமே அதன் பின்னனியில் இருந்தாலும், நடிகர் சரத்குமார் தேர்தலில் தோற்று விடுவார் என்று நம்பியது அ.தி.மு.க. இரு தரப்பு அணிகளும் களத்தில் படு வேகமாக மோதிக் கொண்டன. மொத்தம் உள்ள வாக்குகள் 3,139. அதில் நாடக நடிகர்களின் வாக்குகள் மட்டும் 1,000 வரை இருந்தன. இதனால் இந்த வாக்குகள் ராதாரவியின் பேச்சைக் கேட்கும் வாக்குகள் என்று சரத் அணி முடிவு செய்தது.
ஆனால், 'இந்த நாடக நடிகர்கள் வாக்குகளை பிரித்து விட்டால், மற்ற நடிகர்கள் வாக்குகளைப் பொறுத்தமட்டில் நாம் வெற்றி பெறுவதற்கு தேவையான வாக்குகளைப் பெற்று விடலாம்' என்பது விஷால் அணியின் வியூகம். மற்றபடி சின்னத்திரை நடிகர்கள், இளம் நடிகர்கள் உள்ளிட்டவர்கள் மத்தியிலும் விஷால் அணிக்கு கணிசமான ஆதரவு கிடைத்தது தேர்தலில் நடைபெற்ற திருப்பு முனை. இதற்கு முக்கியக் காரணம் ரஜினி காந்தின் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற ராதா ரவியின் வாக்கு கேட்பு கூட்டம். அந்தக் கூட்டத்தில் சரத்குமார் அணியின் தரப்பில் நடைபெற்ற பிரசாரம் பல டி.வி.சேனல்களிலும் ஒளிபரப்பப்பட்டது.
நடிகர் ராதா ரவி, நடிகர் ராம்கி, நடிகர் சிம்பு, நடிகர் சேரன் ஆகியோரின் பேச்சுதான். குறிப்பாக நடிகர் கமல்ஹாசனை விமர்சித்தது சக நடிகர்கள் மத்தியில் சரத் அணிக்கு பெரிய எதிர்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அதை விட நடிகை ராதிகா 'விஷால் ரெட்டி' என்று ஜாதிப் பெயரை முன் வைத்து செய்த பிரசாரம் நடிகர் சங்கத்தின் தேர்தல் பிரசாரக் களத்தை மாற்றி அமைத்தது. இதற்கிடையில் 'தமிழ்நாடு நடிகர் சங்கம்' என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பூதமாக புறப்பட்டது. எல்லாம் சேர்ந்து தேர்தல் நாளன்று சரத்குமார் அணிக்கு எதிரான சூழ்நிலையை உருவாக்கி விட்டது.
தேர்தலை நடத்தும் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பத்மனாபன் கறாராக தேர்தல் பணிகளை கவனித்தார். வாக்குச் செலுத்த வந்த ரஜினி காந்த் 'தமிழ்நாடு நடிகர் சங்கம்' என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஒரு பட்டாசைத் தூக்கிப் போட்டு, விட்டுச் சென்று விட்டார்.
இது பல நடிகர்கள் மத்தியிலும் குறிப்பாக வெளிமாநில நடிகர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வாக்களித்து விட்டு பேட்டி கொடுத்தார் நடிகர் கமல்ஹாசன். 'தென்னிந்தியை நடிகர் சங்கத்தை முடிந்தால் இந்திய நடிகர் சங்கம்' என்று மாற்ற வேண்டும் என்று ரஜினிக்கு நேர் எதிர்மாறான கருத்தை கூறி விட்டுச் சென்றார். சரத் மற்றும் விஷால் போட்டி என்பது வாக்குப் பதிவு தினத்தில் 'ரஜினி- கமல்' போட்டியாக மாறியது.
இந்த விறுவிறுப்புடன் தேர்தல் நடைபெற்றது. மொத்த வாக்குகள் 3,139ல் 2,607 வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குப் பதிவே சரத் அணிக்கு கிலியை ஏற்படுத்தியது. 1,800 வாக்குகளுக்கு மேல் பதிவாகாது என்று இருந்த சரத் அணிக்கு 2,600 வாக்குகள் வரை பதிவானது தங்களது தோல்விக்கு அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டது என்பதை உணர்ந்தது.
இறுதியில் நள்ளிரவில் வாக்கு எண்ணிக்கை முடிவினை அறிவித்தார் நீதிபதி பத்மனாபன். தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நாசர் 1,344 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சரத்குமார் 1,231 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார்.
பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ராதா ரவி 1,138 வாக்குகள் பெற்று தோற்றார். ஆனால், அதே பதவிக்கு போட்டியிட்ட விஷால் 1,445 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். நடிகர் சிவகுமாரின் மகன் நடிகர் கார்த்தி 1,493 வாக்குகள் பெற்று பொருளாளர் பதவியை பிடித்தார். விஷால் அணியில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது நடிகர் கார்த்தி. ஒருவழியாக பத்து ஆண்டுகளாக வீற்றிருந்த சரக்குமாரின் கோட்டையைக் கைப்பற்றியது விஷால் அணி.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு 'நடிகர் சங்கம் குத்தகை' தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தம் முன்பே இரத்து செய்யப்பட்டு விட்டது என்று சரத்குமார் அறிவித்துள்ளார். ஆனால், விஷால் அணியோ, 'நாங்கள் நடிகர் சங்க முறைகேடுகள் குறித்து ஓர் ஓய்வு பெற்ற நீதியரசரை வைத்து விசாரிப்போம். அதன் பேரில் நடவடிக்கை எடுப்போம்' என்ற தங்களின் தேர்தல் கோஷத்தில் உறுதியாக இருக்கிறது.
ஆனால், நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றது விஷால் அணி. தோற்றது சரத்குமார் அணி. இது ஒரு புறமிருக்க திரையுலகில் இருப்பவர்கள் 'ரஜினி தோற்று விட்டார்' என்றும் 'கமல் வெற்றி பெற்று விட்டார்' என்றும் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்கள். 'தமிழ்நாடு நடிகர் சங்கம்' என்ற கோரிக்கைக்கு சரத் அணி ஆதரவு தெரிவித்தது. அதைத்தான் ரஜினி சொன்னார்.
ஆனால், அதற்கு எதிராக கருத்துச் சொன்னார் கமல். இதை அடிப்படையாக வைத்து, 'ரஜினி தேர்தலுக்கு குரல் கொடுத்தாலும் சரி', ' நடிகர் சங்கத் தேர்தலுக்கு குரல் கொடுத்தாலும் சரி' அந்த அணிக்கு வெற்றி கிடைக்காது என்பது நிரூபணமாகி விட்டது என்பதுதான் திரையுலக வட்டாரத்தில் ஒரே பரபரப்பான பேச்சு.
இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்கும் நடிகர் சங்க நிர்வாகிகள் ஏற்கெனவே நடைபெற்றது போல் தனி மனித தாக்குதல்கள், திரையுலகின் மூத்த கலைஞர்கள் போன்றோரை விமர்சிக்காமல் அவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்று சிவகுமாரின் இன்னொரு மகன் சூர்யா அறிக்கை கொடுத்துள்ளார்.
இது சூர்யாவின் அறிக்கையா அல்லது நடிகர் கமல்ஹாசன் சொல்லி வெளிவந்துள்ள அறிக்கையா என்று திரையுலகில் இன்னொரு விவாதம் இப்போது அரங்கேறியிருக்கிறது.
ஆனால், தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் கண்ணியம் காக்க வேண்டும் என்ற இந்த அறிக்கை கமலுக்கு மட்டுமல்ல, ரஜினிக்கும் பிடித்தமான அறிக்கையாகவே இருக்கும் என்பதுதான் இன்றைய சூடான செய்தி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
16 May 2025