Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒக்டோபர் 3, 1993 அன்று, கொலைப்பழி சுமத்தப்பட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து, வைகோ வெளியேற்றப்பட்டார். இன்றைக்கு தரைமட்டமாகிக் கிடக்கும் தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில், மே 6, 1994 அன்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க) உதயமானது.
இன்று 21ஆவது வருடத்தில் காலடிடி எடுத்து வைத்திருக்கும் ம.தி.மு.க, அக்கட்சி தொடங்கியதிலிருந்து இப்படியொரு 'போர்க்களக் காட்சியை' உள்கட்சிக்குள் சந்தித்தது இல்லை என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு, 'தானே' புயலும் 'நீலம்' புயலும் 'சுனாமி'யும், ம.தி.மு.க.வுக்குள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றன.
வைகோ, முதலில் கலைஞர் கருணாநிதியின் 'போர்வாள்' என்று அறியப்பட்டவர். இன்று, கலைஞர் கருணாநிதி, தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோருக்குப் பின்னர், திராவிட இயக்கக் கருத்துக்களை சீர்தூக்கிப் பேசும் தலைவர்களில், வைகோ தவிர வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம்.
அந்த அளவுக்கு அவர் பேச்சில் 'வீச்சும், மூச்சும்' இணைந்தே இருக்கும். மேடையில், தன் எதிரே அமர்ந்திருக்கும் தலைவர்களைத் தனது வசீகரப் பேச்சால் கட்டிப்போடும் ஆற்றல், தன்னைச் சந்திக்க வரும் மற்றக் கட்சித் தலைவர்களைக் கவர்ந்திழுக்கும் சக்தி, வைகோவிடம் இருந்தாலும், இன்றைக்கு தன் சொந்தக் கட்சியினரை மட்டுமல்ல, தன் சொந்த மாவட்டத்தில் உள்ள கட்சியின் மாவட்டச் செயலாளரையே கட்டிப்போடும் ஆற்றலை இழந்து தவிக்கிறார். தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வைகோ, ஏன் இப்படித் தவிக்கிறார்?
இது ஒரு பட்டிமன்றம் அல்ல. கிராமந்தோறும் பட்டிமன்றங்கள் வைத்து விவாதித்தாலும், விடை காண முடியாது. ஏனென்றால், அரசியலில் நேர்மை வேண்டும் என்று நினைத்தவர் வைகோ. அதற்காகவே தனிக் கட்சி தொடங்கி அவர், 1996இல் சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், சென்னையில் உள்ள பனகல் பார்க் பொதுக்கூட்டத்தில், சொத்துக் கணக்கை வெளியிட்டார்.
முதலமைச்சராக வர வேண்டும் என்று நினைப்பவர்களில், தமிழகத்தில் சொத்துக் கணக்கை வெளியிட்டவர் வைகோ மட்டுமே என்றால் மிகையாகாது. அவர் முதல் பிழையை, 1998இல் செய்தார். எந்த அ.தி.மு.க ஆட்சியை எதிர்த்து, 1,500 கிலோ மீற்றர் தூரம் பாதயாத்திரை போனாரோ, அதே அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்தார். 1998 நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்குக் கிடைத்த வெற்றி, கட்சியின் அங்கிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள கை கொடுத்தது. ஆனால், அவரது கொள்கை முழக்கம், பஞ்சரானது. அடுத்து, 1999இல் அடுத்த தவறைச் செய்தார். தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தார். கொலைப்பழி சுமத்திய கட்சியுடன், நான்கு வருடத்தில் கைகுலுக்கினார். அப்போதும் அவருக்கு எம்.பி.க்கள்
கிடைத்தார்கள். மீண்டும் கொள்கை முழக்கம், குப்புற விழுந்தது. எல்லாவற்றையும் விட அவர் செய்த இமாலயத் தவறு, 19 மாதங்கள் தன்னை ஜெயிலில் அடைத்த அ.தி.மு.கவுடன் 2006 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்ததுதான். அதுவும், 'பொதுவாழ்வைப் பாழ்படுத்தும் அரசியல் வர்த்தக சூதாட்டத்தை அறவே அகற்ற, தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பேன்' என்று கூறிவிட்டு, அடுத்த சில தினங்களிலேயே அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்தார். 35 சட்டமன்ற தொகுதிகளைப் பெற்றார். பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்த போது, அவர் பெற்ற அதிக தொகுதிகள். ஆனால், தடம்புரண்ட அந்தக் கூட்டணி அவருக்கு, தார்மிக வெற்றியைக் கொடுக்கவில்லை. 35ல், 6 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதனால், '35 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தகுதியில்லாத கட்சி ம.தி.மு.க' என்ற தோற்றத்தை, இந்தத் தோல்வி அ.தி.மு.கவுக்கு எடுத்துக் காட்டி விட்டது. அதன் தொடர்ச்சியாக, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் நாடாளுமன்றத் தொகுதிகளை அ.தி.மு.கவிடம் பெற, மகாபாரத யுத்தம் நடத்த வேண்டிய மார்க்கத்துக்கு போனார் வைகோ. 2011 சட்டமன்றத் தேர்தல், வைகோவின் அரசியல் எதிர்காலத்துக்கு உலை வைத்த வருடம்.
ஆம், அரசியல் கட்சி, பொதுக் காரணத்தை சொல்லி தேர்தலை புறக்கணிக்கலாம். மக்கள் பிரச்சினைகளுக்காக தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்று கூறலாம். ஆனால், 'கூட்டணி கிடைக்கவில்லை', 'கூட்டணிக்கான பேச்சுவார்த்தை கடைசி நேரத்தில் முறிந்து விட்டது' என்ற காரணங்களுக்காக, ஓர் அரசியல் கட்சி தேர்தலை புறக்கணிக்காது. அப்படிக் காரணம் சொல்லி தேர்தலை புறக்கணித்தது ம.தி.மு.க.
2011இல் ஏற்பட்ட அந்த சறுக்கல், இன்றைக்கு ம.தி.மு.கவுக்கு பெரிய வழுக்குப் பாறையாக மாறிவிட்டது. அக்கட்சியில் இருந்த ஒவ்வொருவரும் விலகிக் கொண்டிருக்கிறார்கள். 2014இல், மோடியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட வைகோ, அந்தக் கூட்டணியை முறித்து விட்டு வெளியேறினார்.
மீண்டும் தி.மு.க.வுடன் கூட்டணி என்ற சமிக்ஞை காட்டி விட்டு, பிறகு பின் வாங்கி, இப்போது தி.மு.க. தோற்க வேண்டும் என்ற அரசியலை முன்னெடுத்துச் செல்கிறார். அதனால், மக்கள் நலக்கூட்டணியை அமைத்துள்ளார். ஆனால், அவர் மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்ததில் இருந்து, ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் ஒவ்வொருவராக விலகிச் செல்கிறார்கள். இதுவரை, 8 மாவட்டச் செயலாளர்கள் விலகி, தி.மு.க.வில் சேர்ந்து விட்டார்கள்.
அதில், அவருடைய சொந்த மாவட்டமான திருநெல்வேலி உள்பட தென் மாவட்டங்களில் இருந்த 4 மாவட்டச் செயலாளர்கள், கொத்தாக தி.மு.க.வில் சேர்ந்தமை, வைகோவுக்கு அதிர்ச்சி வைத்தியம். ம.தி.மு.கவில் ஏற்பட்ட இந்தக் குழப்பங்களுக்கு எல்லாம் ஒரே காரணம், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் 'தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது' என்ற ஒரே நோக்கம்தான். சொந்தக் கட்சி ஆரம்பிக்கும் தலைவர்கள், இதுவரை தன் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு அரசியல் செய்வார்கள்.
ஆனால், வைகோ மட்டுமே கட்சி தொடங்கியதிலிருந்து 'எந்தக் கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது' என்பதை முன்னிறுத்திக் கூட்டணி அமைப்பதும், அரசியல் செய்வதுமாக இருக்கிறார். அதனால்தான் இப்போது விலகிய ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட 'தி.மு.க.வுடன் கூட்டணி வைப்போம் என்று கூறிய வைகோ, திடீரென்று அ.தி.மு.க ஜெயித்தால் பரவாயில்லை. நாம் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்கிறார். இந்த மர்மம் ஏன் என்பதுதான் தெரியவில்லை' என்று பேட்டி கொடுத்துள்ளார்கள். இந்தப் பேட்டி, ம.தி.மு.கவில் உள்ள மற்ற மாவட்டச் செயலாளர்களையும் சிந்திக்க வைக்கும் என்பதே இப்போதைய செய்தி.
ம.தி.மு.கவில் முதலில் 'முதல் தலைமுறை தலைவர்கள்' வைகோவை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், மு. கண்ணப்பன் என்று எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் எல்லாம் வைகோ, தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட போது வைகோ தலைமையை ஏற்று வந்தவர்கள். இவர்களை வைகோ உருவாக்கவில்லை. அவர்கள் எல்லாம் சேர்ந்து வைகோவே முதலமைச்சராக்க முன்வந்தார்கள். ஆனால், இப்போது வெளியேறும் மாவட்ட செயலாளர்கள், வைகோ உருவாக்கிய இரண்டாம் கட்டத் தலைவர்கள்.
அதாவது இப்போது நடக்கும் ' கட்சித் தாவல்' என்பது, வைகோ உருவாக்கிய இரண்டாம் தலைமுறை தலைவர்களால் நடக்கிறது. தான் உருவாக்கிய தலைவர்கள் விலகிப் போவதுதான், வைகோவுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கியிருக்கிறது.
இந்த 'விலகல்' அத்தியாயம் இன்னும் தொடரும் என்றே தெரிகிறது. மக்கள் நலக்கூட்டணியில் இன்றைக்கு வைகோவுக்கு ஒருங்கிணைப்பாளர் என்ற அந்தஸ்தைக் கொடுத்து வைத்துள்ளன கம்யூனிஸ்ட் கட்சிகள்.
அதனால், ம.தி.மு.கவுக்குள் நடக்கும் மாவட்டச் செயலாளர்கள் 'விலகல்', வைகோவின் இமேஜை இன்னும் கூட தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு வேளை விஜயகாந்த், மக்கள் நலக்கூட்டணிக்கு வந்தால் வைகோவின் முக்கியத்துவம் கேள்விக்குறியாகும். அதுவும், 'விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக்க கம்யூனிஸ்டுகள் முடிவு செய்தால்' வைகோவுக்கு இன்னும் தலைவலியாக இருக்கும்.
ஏனென்றால் அவர், கலைஞர் கருணாநிதியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியவர். அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பிரசாரம் செய்தவர். பாரத பிரதமராக இருந்த வாஜ்பாய், டொக்டர் மன்மோகன் சிங் ஆகியோரை பிரதமராக முன்னிறுத்திப் பிரசாரம் செய்தவர்.
இப்போது, பிரதமராக இருக்கும் நரேந்திர மோடிக்காகவும் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தவர். அப்படிப்பட்ட அனுபவமிக்க வைகோ, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்துப் பிரசாரம் செய்ய வேண்டிய நிலைக்கு வருவார். அதை வைகோ எந்தளவுக்கு ஏற்றுக் கொள்வார் என்பது, இனிவரும் அரசியல் மாற்றங்களின் அடிப்படையில் தெரியவரும்.
ஆனால், திராவிட இயக்கத் தலைவர்களில் முக்கிய இடத்தைப் பெற வேண்டிய வைகோ, திராவிடக் கட்சிகளின் வரிசையில் முக்கிய இடத்தைப் பெற வேண்டிய ம.தி.மு.க, 'தவறான கூட்டணிக் கொள்கை', 'தன் கட்சி ஆட்சி பற்றி கவலைப்படாமல் மாற்றுக் கட்சியை ஆட்சிக்கு வர விடக்கூடாது' என்று வகுக்கும் வியூகங்கள் எல்லாம் சேர்ந்து, இன்றைக்கு பலவீனப்படுத்தி விட்டது. திராவிட இயக்கம், நூறாண்டு கண்டு கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வைகோ போன்ற தலைவர்களும், ம.தி.மு.க போன்ற கட்சியும் இப்படி பலவீனப்பட்டுக் கொண்டிருப்பது தமிழினத்துக்குப் பெரிய இழப்பு.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago