2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தோல்வியுற்ற அரசாகுமா?

Administrator   / 2017 மே 12 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே.சஞ்சயன்

காலிமுகத்திடலில் கூட்டு எதிரணியினர் நடத்திய மேதினப் பேரணியில் திரண்டிருந்த மக்கள் கூட்டம், அரசியல் மட்டத்தில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.  

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் எழுச்சி கொள்கிறாரா? அரசியல் ரீதியாகப் பலம் பெற்று வருகிறாரா என்ற கேள்விகள், எல்லா மட்டங்களிலும் எழுந்திருக்கின்றன.  

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பலம் பெறுவதானது, வெறுமனே ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான அச்சுறுத்தலாக மாத்திரமன்றி, தற்போதைய அரசியல் சீர்திருத்த முயற்சிகளுக்கும் கூட ஆபத்தானது என்ற பார்வை பரவலாக இருக்கின்றது.  

மஹிந்த ராஜபக்ஷவின் மேதினக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையான மக்கள் அணிதிரண்டமையானது, அரசியலமைப்புத் திருத்த முயற்சிகளில் இருந்து அரசாங்கத்தைப் பின்வாங்கச் செய்யும் ஆபத்து இருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியதாகச் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.  

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இரா.சம்பந்தன் இந்தக் கருத்தை வெளியிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த போதிலும், அவ்வாறு அவர் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.  

எவ்வாறாயினும், புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளைக் கடுமையாக விமர்சித்து வரும், மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அணியினரும் பலமடைந்து வருவதானது, அரசியலமைப்பு மாற்ற விடயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சொல்வதற்கில்லை.  

மஹிந்த ராஜபக்ஷவும் சரி, அவரது அணியிலுள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, தினேஸ் குணவர்த்தன போன்றவர்களும் சரி, புதிய அரசியலமைப்பை, ‘பிரிவினை அரசியலமைப்பு’ என்றவாறாகவே காண்பித்து வருகின்றனர்.  

ஏதோ நாட்டில் சமஷ்டி ஆட்சி முறையைக் கொண்டு வந்து நாட்டைப் பிளவுபடுத்தப் போவதாகவும் பயமுறுத்தி வருகின்றனர்.  

அதுமாத்திரமன்றி, “என்ன விலைகொடுத்தாவது, புதிய அரசியலமைப்பைத் தோற்கடிப்போம்” என்று வேறு சூளுரைத்திருக்கின்றனர்.  
புதிய அரசியலமைப்பைத் தோற்கடிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ தரப்பு எதையும் செய்வதற்கு, எந்தளவுக்கு மலினத்தனமான அரசியல் சூழ்ச்சிகளைச் செய்வதற்கும் தயாராகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  

ஏனென்றால், புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒன்றாக இல்லாவிட்டாலும் கூட, ஒற்றையாட்சியை உறுதிப்படுத்துவதாக இருந்தாலும் கூட, பௌத்த மதத்துக்கான முன்னுரிமையைத் தொடர்ந்து உறுதிப்படுத்துவதாக இருந்தாலும் கூட, அதனைத் தோற்கடிப்பதை ஒரு கௌரவப் பிரச்சினையாகவே மஹிந்த அணி கருதுகிறது. 

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தைத் தடுத்து, அந்த முயற்சிகளைத் தோற்கடிப்பதன் மூலம் தோல்வியுற்ற ஓர் அரசாங்கமாக, தற்போதைய அரசாங்கத்தைக் காட்டுவதே அவர்களின் இலக்கு. இதனை மக்களின் விருப்பத்துக்கு எதிரான அரசாங்கமாக வெளிப்படுத்துவதே அவர்களின் நோக்கம். 

இப்படியொரு நிலையில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதும் சரி, அதனை நிறைவேற்றுவதும் சரி சுலபமான வேலையல்ல என்பதை எல்லா அரசியல் தலைமைகளும் ஏற்றுக் கொள்கின்றன.   மே தினப் பேரணியின் மூலம் மஹிந்த ராஜபக்ஷ தனது பலத்தை வெளிப்படுத்தி விட்டுள்ள ஒரு சூழலில், புதிய அரசியலமைப்பை அரசாங்கம் எவ்வாறு நிறைவேற்றப் போகிறது என்ற கேள்விகளும் இருக்கின்றன.  

மே தினப் பலப்பரீட்சையில் மஹிந்த ராஜபக்ஷ தனது பலத்தை வெளிப்படுத்தி மிரட்டலை விடுத்திருக்கிறார். இது அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு நேரடியான சவால்தான்.  

இந்தச் சவாலை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது? மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டு எதிரணியின் சவால்களை எவ்வாறு முறியடிக்கப் போகிறது என்ற கேள்விகள் இருக்கின்றன.  

மஹிந்தவின் இந்த எழுச்சியால், அரசியலமைப்புத் திருத்த முயற்சிகளில் இருந்து அரசாங்கம் பின்வாங்கிக் கொள்ளும் ஆபத்து இருப்பதாகக் கூற முடியாது. ஏனென்றால், அரசாங்கத்தின் ஒட்டுமொத்தச் செயற்பாடுகளையும்தான் மஹிந்த, விமர்சித்து வருகிறார்; எதிர்த்துக் கொண்டிருக்கிறார்.  

அவரது இலக்கு தனியே அரசியலமைப்புத் திருத்தத்தைத் தடுத்து நிறுத்துவது மாத்திரமல்ல; ஆட்சியைக் கைப்பற்றுவதுதான் அவரது பிரதான இலக்கு.  

எனவே, மஹிந்தவின் பலத்தைக் கண்டு அச்சத்தில் அரசாங்கம் அரசியலமைப்பு மாற்ற முயற்சிகளில் இருந்து பின்வாங்கினால், மஹிந்தவுக்கு எதிராக உள்ள பெரும் எண்ணிக்கையான மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் அரசாங்கம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.  

இப்போதுள்ள அரசியலமைப்பின் கீழ், மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியைப் பிடிப்பாரானால், முன்னரை விட மோசமான அதிகாரத்துவ ஆட்சியின் பிடியில் நாடு சிக்கிக்கொண்டு விடும் என்ற அச்சம் பெரும்பாலான மக்களிடம் இருக்கிறது.  

எனவே, அத்தகைய நிலை ஒன்று ஏற்படுவதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு, தற்போதைய அரசாங்கத்துக்கு இருக்கிறது. அந்தக் கடப்பாட்டில் இருந்து அரசாங்கம் விலகிக் கொள்ளுமேயானால், மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இந்த அரசாங்கம் இழந்துபோகும், அது மஹிந்த ராஜபக்ஷவை மேலும் பலப்படுத்தும். 

எனவே, அரசியலமைப்பு மாற்ற விடயத்தில், தற்போதைய அரசாங்கத்துக்கு கூடுதல் அழுத்தங்களையும் பொறுப்பையும் இந்த மே தினப் பேரணி கொடுத்திருக்கிறது.  

தற்போதைய அரசாங்கம் மீது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை இப்போது இல்லை. மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை என்ற குற்றச்சாட்டை இந்த அரசாங்கம் எதிர்கொண்டிருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் மக்களின் ஆதரவை அரசாங்கம் இழந்து வருகிறது.   இப்படியான நிலையில், அரசியலமைப்பு திருத்த முயற்சிகளை, வேகப்படுத்த வேண்டிய சிக்கல் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது, ஏனென்றால், பலமடைந்து வருவதாகச் சொல்லப்படும் மஹிந்த அணியின் முட்டுக்கட்டைகள் போகப்போக அதிகரிக்கும். அதிலிருந்து தப்பித்து, அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டுமானால், இதை விடப் பொருத்தமான வேறு தருணம் வாய்க்கப் போவதில்லை.  

அரசியலமைப்பு மாற்றம் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டால் போதும் என்ற ஒரு கருத்தும், அது சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற ஒரு கருத்தும் உள்ளது.  

பெரும்பாலும் உயர்நீதிமன்றம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த ஆணையிடக் கூடும் என்பதால், இது ஒரு மிகவும் சிக்கலான விடயமாகவே இருக்கும்.  

சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஓர் அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்படுமானால், எல்லா மக்களினதும் அங்கிகாரத்தைப் பெற்ற ஒன்றாக அது அமையும்.  

அதனைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்பார்க்கிறது. ஏனென்றால் தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்கக்கூடிய அரசியலமைப்புக்கு சிங்கள மக்கள் நேரடியான ஆதரவை வழங்கத் தவறினால், அந்த அரசியலமைப்பில் அர்த்தமில்லாது போய் விடும். நீடித்த பிரச்சினைகளையே அது ஏற்படுத்தும் என்பது சம்பந்தனின் கணிப்பு.  

மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியாக பலமடைந்து விட்டால், சர்வஜன வாக்கெடுப்பை எதிர்கொள்வது என்பது அரசாங்கத்துக்கு மிகப்பெரிய சவாலாகத்தான் இருக்கும்.  

இதனைக் கருத்தில் கொண்டுதான், அரசியலமைப்புத் திருத்தத்தில் இருந்து அரசாங்கம் பின்வாங்கக் கூடும் என்று சம்பந்தன் கூறியதாகச் செய்திகள் வெளியாகின.  

ஆனால், கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன், அந்தக் கருத்தை நிராகரித்திருக்கிறார். கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் சம்பந்தன் அவ்வாறு கூறவில்லை என்றும், தானும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாகவும் அவர் கூறியிருக்கிறார்.  

அதுமாத்திரமன்றி, மஹிந்த ராஜபக்ஷவின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் அரசியலமைப்பு மாற்றத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்ற வாதத்தையும் அவர் முன்வைத்திருந்தார்.  

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் சுமார் ஐந்து சதவீதமானோர் மட்டுமே வாக்களித்தனர் என்றும், ஆனால், கண்டியில் அவரது மேதினக் கூட்டத்தில் பெருமளவானோர் திரண்டிருந்தனர் என்றும் அவர் கூறியிருக்கிறார். 

அதாவது மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு அலை இருந்தாலும், முன்னர் மைத்திரிபால சிறிசேனவுக்குக் கிடைத்திராத சுதந்திரக் கட்சியினரின் கணிசமான ஆதரவு இப்போது கிடைத்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.  

எனவே, மைத்திரி பக்கம் உள்ளவர்கள், ஐ.தே.கவினர், தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் அரசியலமைப்பை நிறைவேற்றலாம் என்பது அவரது வாதத்தின் அடிப்படையாக உள்ளது.  

இது உண்மைதான், ஆனால், புதிய அரசியலமைப்பு எல்லா மக்களினதும் ஆதரவைப் பெற்றதாக இருக்க வேண்டியது முக்கியம். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடியதாகவும் இருக்க வேண்டும். சிங்கள மக்கள் இது பிரிவினை அரசியல் யாப்பு என்று அச்சம் கொள்ளாததாகவும் இருக்க வேண்டும்.  

இந்த இரண்டும் சாத்தியமானால்தான், சுமந்திரன் குறிப்பிட்டது போன்று, ஐ.தே.கவும் சுதந்திரக் கட்சியும் மற்றும் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.  

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக எல்லா வழிகளையும் பயன்படுத்துவார். இனவாதம், மதவாதத்தைத் தூண்டி சிங்கள மக்களைத் தனது பக்கம் திருப்ப முயற்சிப்பார்.  இத்தகையதொரு நிலைக்குள் நாடு செல்வதற்கு முன்னர் அரசியலமைப்பு மாற்றத்தைக் கொண்டுவரத் தவறினால் இந்த அரசாங்கம் தோல்வியுற்ற அரசாங்கம் என்ற வரலாற்றுப் பழியில் இருந்து தப்பிக்க முடியாது போகும்.  

You May Also Like

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X