2025 மே 16, வெள்ளிக்கிழமை

தோல்வியடைந்தவர்கள் எல்லோரும் தகுதியற்றவர்கள் அல்லர்

Thipaan   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதி அமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ் குணவர்தனவின் மறைவை அடுத்து, அவரது நாடாளுமன்ற ஆசனத்துக்கு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலமாக நியமிக்கப்பட்டமை தொடர்பாக, பலர் பல வாதங்களை முன்வைத்து, எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம், தேசியப் பட்டியலில் பெயர் இல்லாத ஒருவரை, அந்தப் பட்டியல் மூலமாக நியமித்தமை சட்ட விரோதமானது எனக் கூறி வழக்கொன்றையும் தாக்கல் செய்துள்ளது.

தெரிவிக்கப்பட்டு இருக்கும் எதிர்ப்புக்கள் சில சட்ட அடிப்படையிலானவை. மற்றவை தார்மிக அடிப்படையிலானவை. தேசியப் பட்டியலுக்கு வெளியில் இருந்து எவரையும் நிமிக்கக் கூடாது என்பது சட்ட வாதம். அதேபோல், அவர் ஓய்வு பெற்றதன் பின்னர் அவருக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட்டமையினால் அவர் மீண்டும் செயற்பாட்டு இராணுவ சேவையில் இருக்கிறார் என்றும் அவ்வாறான ஒருவரை நாடாளுமன்றத்துக்கு நியமிப்பது சட்ட விரோதமானது என்றும் சட்ட வாதம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒருவர் நியமிக்கப்படக் கூடாது என்று மற்றொரு வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. அது அரசியல் நாகரிகம் தொடர்பானது. ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய உறுப்பினர்கள் இருக்கையில் வேறு கட்சியொன்றின் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டமை தவறானது என்ற வாதமும் அவ்வாறனதே. முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரோஸி சேனாநாயக்க போன்ற அந்த ஆசனத்தை எதிர்ப்பார்த்தவர்கள் அவ்வாறு நினைக்கிறார்கள் போலும்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரைத் தளமாகக் கொண்ட ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் நிறுவனம் மற்றொரு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. அரசாங்கம், போர்க் குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறும் பொறிமுறையொன்றை உருவாக்க வாக்குறுதி அளித்துள்ள நிலையில், இறுதிப் போரின் போது இராணுவத் தளபதியாக இருந்தவரை நாடாளுமன்றத்துக்கு நியமித்தமை 'வாக்குறுதி மீறும் செயலாகும்' என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேர்தலில் தோல்வியடைந்தவர்களை தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றத்துக்கு நியமிப்பதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க கடந்த பொதுத் தேர்தல் முடிவடைந்தவுடன் கூறினார். ஆனால், அவர் அந்தக் கூற்றை மீறி இரண்டு முறை செயற்பட்டுள்ளார்.

ஐ.தே.க. தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் போட்டியிட்டது. மக்கள் காங்கிரஸுக்கு நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி தேசியப் பட்டியல் மூலம் ஆசனமொன்றை வழங்கியது. மக்கள் காங்கிரஸ் அந்த ஆசனத்துக்கு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த எம.;எச்.எம் நவவியை நியமிக்குமாறு கோரியது. விக்கிரமசிங்க அதனை ஏற்றுக் கொண்டார். அது, அவர் சொல்லை மீறிய முதலாவது முறையாகும். சரத் பொன்சேகாவின் நியமனம் இரண்டாவது முறையாகும்.

பொன்சேகா தொடர்ந்தும் இராணுவ சேவையில் இருக்கிறாரா இல்லையா என்பதும் தேசியப் பட்டியலுக்கு வெளியில் இருக்காதவர்களை தேசியப் பட்டியல் மூலமாக நிமிப்பது சரியா என்பதும் சிக்கலான சட்டப் பிரச்சினைகள் என்பதால் அந்த விடயங்களை நாம் இங்கு ஆராயப் போவதில்லை. ஆனால், தோல்வியடைந்தவர்களை தேசியப் பட்டியல் மூலமாக நியமிப்பது தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள வாதத்தை இங்கு ஆராய வேண்டியுள்ளது.

கடந்த பொதுத் தேர்தல் முடிவடைந்தவுடன், நாம் தமிழ்மிரருக்கு எழுதிய கட்டுரையொன்றிலிருந்து சில கருத்துக்களை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். தேர்தலில் தோல்வியடைந்தவர்களை மக்கள் நிராகரித்துள்ளார்கள் என்ற அடிப்படையிலும் மக்கள், தேர்தலின் போது சரியாக முடிவெடுத்துள்ளார்கள் என்ற அடிப்படையிலுமே தோல்வியடைந்தவர்களை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கக் கூடாது என்று வாதிடப்படுகிறது.

தோல்வியடைந்தவர்களை மக்கள் நிராகரித்துள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், தேர்தல்களின் போது மக்கள்  சரியான முடிவு எடுக்கிறார்கள் என்பது எப்போதும் சரியான கருத்தல்ல. அதேவேளை, எல்லாத் தேர்தல் முடிவுகளும் சரியான மக்கள் அபிப்பிராயமும் அல்ல. உதாரணமாக, 1984ஆம் ஆண்டு நடைபெறவிருந்த பொதுத் தேர்தலை இரத்துச் செய்து நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை 1988ஆம் ஆண்டு வரை நீடிப்பதற்காக, 1982ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டது. நாட்டில் இதுவரை காலமும் நடைபெற்ற வாக்கெடுப்புக்களில் மிகவும் ஊழல் மோசடிகள் நிறைந்த வாக்கெடுப்பாகவே அது கருதப்படுகிறது. ஆனால், அதுவும் மக்கள் தீர்ப்பாகவே கருதப்படுகிறது.

1999ஆம் ஆண்டு நடைபெற்ற வட மேல் மாகாண சபைத் தேர்தலும் வரலாற்றில் மிகவும் மோசமான ஊழல் நிறைந்த தேர்தல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், அதன் முடிவுகள் மக்கள் தீர்ப்பாகவும் கருதப்படுகிறது. அதாவது, தேர்தல் முடிவுகள் எப்போதும் சரியான மக்கள் அபிப்பிராயத்தைப் பிரதிபலிப்பதில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதாக இருந்தால் திறமை, நேர்மை, சேவை உணர்வு மற்றும் அர்ப்பணிப்பு உள்ள வேட்பாளர்களையோ அல்லது கட்சிகளையோ தெரிவு செய்து வாக்களிக்க மக்களுக்கு போதிய அறிவும் இல்லை, அவ்வாறு செய்ய வேண்டும் என்ற தேவையும் அவர்களிடம் இல்லை.

தனித்தனி நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கடந்த கால தேர்தல்களின் போது பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகளைப் பார்த்தால் இது தெளிவாகும். மிகச் சிறந்த உதாரணமாக, 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, கம்பஹா மாவட்டத்தில் ஐ.தே.க. பெற்றுக் கொண்ட வாக்குகளைச் சுட்டிக் காட்டலாம். அந்தத் தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட்ட அப்போதைய அக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவை விட கூடுதலாக, அக் கட்சியின் கீழ் போட்டியிட்ட இளம் நடிகையான பபா என்றழைக்கப்படும் உபேக்ஷா சுவர்ணமாலி பெற்றுக் கொண்டார்.

மேலும், இது போன்ற சில இளம் நடிகைகள் அந்தப் பட்டியிலில் இருந்திருந்தால், சில வேளை கரு ஜயசூரிய தோல்வியடைந்திருக்கவும் கூடும். தோல்வியடைவோர் அனைவரும் தகுதியற்றவர்கள் அல்லர் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.

கடந்த பொதுத் தேர்தலின் போது, இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட பிரேமலால் ஜயசேகர, கொலைக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருக்கும் போதே வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அது தான் அவரது தகைமை போலும். அவர், அம்மாவட்டத்தில் ஐ.ம.சு.கூ. சார்பில் ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளை அதாவது 150,000 விருப்ப வாக்குகளை பெற்றுக் கொண்டார். மூத்த அமைச்சரான ஜோன் செனவிரத்ன சுமார் 90,000 விருப்பு வாக்குகளையே பெற்றுக் கொண்டார். மற்றொரு மூத்த அமைச்சரான பவித்ரா வன்னியாராச்சி, ஜயசேகர பெற்றதில் அரைவாசி விருப்பு வாக்குகளையே பெற்றார்.

மக்கள் இவ்வாற வாக்களிப்பதனால் தகுதியுள்ளவர்களும் தோல்வியடைகிறார்கள். கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் மாத்தறை மாவட்ட வேட்பாளரான சுனில் ஹந்துன்னெத்தி தோல்வியடைந்தார். ஆனால், அவரது கட்சி அவரை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு அனுப்பியது. பல கட்சிகளின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்ற பல நாடாளுமன்ற உறுப்பினர்களை விட அவர் நேர்மையானவர், திறமையானவர், துடிப்பானவர் என்பதை எவரும் ஏற்றுக் கொள்வர். எனவே தான் இம் முறை அவர் பொது தொழிற்றுறைகள் தொடர்பான குழுவின் (COPE) தலைவராக நியமிக்கப்பட்ட போது எவரும் அவர் அதற்கு தகுதியற்றவர் எனக் கூறவில்லை.

சிறிய கட்சிகளைச் சேர்ந்த சில வேட்பாளர்கள் இரு பிரதான கட்சிகளில் ஒன்றின் கீழ் போட்டியிட்டு மிகப் பெருமளவில் வாக்குகளைப் பெறுகிறார்கள். 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, மக்கள் விடுதலை முன்னணி, ஐ.ம.சு.கூ.வின் கீழ் போட்டியிட்டது. அப்போது ம.வி.மு. 41 ஆசனங்களை வென்றது. அதன் வேட்பாளர்களே சகல மாவட்டங்களிலும் ஐ.ம.சு.கூ. வேட்பாளர்களில் மிகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தனர். அதேபோல் சரத் பொன்சேகாவும் இம் முறை ஐ.தே.க. சார்பில் போட்டியிட்டு இருந்தால் பெறுபேறுகள் வித்தியாசமாக இருந்திருக்கலாம்.

மற்றொரு புறத்தில் தேசியப் பட்டியல்களில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட்டு இருந்தால், அவர்களில் பலர் தோல்வியடைந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் அவ்வாறு போட்டியிடாததால் அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் எவரும் தகுதியற்றவர்களாக கருதப்படுவதில்லை. மாவட்ட பட்டியல்களில் இருந்து போட்டியிட்டு தோல்வியடைந்தவர்கள் மட்டுமே தகுதியற்றவர்களாக கருதப்படுகிறார்கள்.

போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது விருப்பு வாக்குகளே. அந்த விருப்பு வாக்குகள், அனேகமாக தகுதி தகைமை ஆகியவற்றை பார்த்து அளிக்கப்படுவதில்லை. இனம், சாதி, மதம், பிரதேசம், பிரசார உத்திகள், விளையாட்டு மற்றும் சினிமா போன்ற துறைகளில் பெறும் ஜனரஞ்சகத் தன்மை மற்றும் குண்டர்களைக் கொண்டும் அவதூறுகளையும் கொண்டும் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களை இம்சித்து தமது கட்சிக்காரர்களை திருப்திப்படுத்தல் போன்றவையே  அனேகமாக விருப்பு வாக்குகளை பெற்றுத் தரும் காரணிகளாகும்.

குறிப்பாக ஒரு மாவட்டம் முழுவதிலும் பிரசாரம் செய்து விருப்பு வாக்குகளைப் பெறுவதற்கு பண பலம் வெகுவாக அவசியமாகிறது. சண்டித்தனம் அவசியமாகிறது. மாவட்டம் முழுவதிலும் பிரசாரம் செய்ய சிலர் தமக்கு இடையூறு செய்ததனால் தமக்கு விருப்பு வாக்குகள் குறைந்ததாக ஐ.தே.க. வேட்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ரோஸி சேனாநாயக்க கூறியிருந்தார். திறமை, நேர்மை ஆகிய காரணிகளும் சில வேளைகளில் விருப்பு வாக்குகளுக்காக கருத்திற் கொள்ளப்படலாம்.

விருப்பு வாக்கு முறையின் இந்த நியாயமற்றத் தன்மையினாலேயே அதனை இரத்துச் செய்ய வேண்டும் என நாட்டில் அனேகமாக சகல கட்சிகளும் ஏற்றுக் கொள்கின்றன. உத்தேச தேர்தல் சீர்த்திருத்தங்களில் விருப்பு வாக்கு முறை இரத்துச் செய்வது முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.

விந்தையான விடயம் என்னவென்றால், விருப்பு வாக்கு முறையினால் உண்மையான மக்கள் அபிப்பிராயத்தை அறிய முடியாது எனக் கூறி, அம் முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்று கூறுவோரே விருப்ப வாக்கு முறையின் காரணமாக தோல்வியடைந்தவர்கள் தகுதியற்றவர்களாக கருதுவதே.

தோல்வியடைந்தவர்கள் தகுதியற்றவர்கள் என வைத்துக் கொண்டாலும் அதனால் தேசியப் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் தகுதியுள்ளவர்களாக ஏற்றுக் கொள்ள முடியாது.

அவ்வாறு தகுதியுள்ளவர்களைக் கொண்டு மட்டும் தேசியப் பட்டியல்கள் தயாரிக்கப்படுவதில்லை. புத்திஜீவிகள் மற்றும் தொழில்வான்மையுள்ளவர்களை நாடாளுமன்றத்துக்கு நியமனம் செய்வதற்காகவும் நாட்டின் இன விகிதாசாரம் நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கச் செய்வதற்காகவுமே ஆரம்பத்தில் தேசியப் பட்டியல் சிபாரிசு செய்யப்பட்டது. ஆனால் எந்தவொரு கட்சியும் ஒருபோதும் அந்த நோக்கம் நிறைவேறும் வகையில் தமது தேசியப் பட்டியலை தயாரிப்பதில்லை. எனவே தேசியப் பட்டியலில் உள்ளவர்களுக்குப் பதிலாக தோல்வியடைந்தவர்கள் நியமிக்கப்படுவது எப்போதும் தவறென கூற முடியாது.

எந்தவொரு கட்சியினதும் தேசியப் பட்டியலில் தகுதியானவர்களும் தகுதியற்றவர்களும் இருக்கிறார்கள். ஆனால், ஒரு கட்சிக்கு கிடைக்கும் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்காக அந்த கட்சியின் தேசியப் பட்டியலில் உள்ள தகுதியானவர்கள் தான் கட்சித் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என எந்தவொரு சட்;டமும் கூறவில்லை. கட்சித் தலைவர்கள் தமக்கு வேண்டியவர்களை நியமிக்கிறார்கள். அவர்கள், தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களை விட மோசமானவர்களாகவும் இருக்கலாம்.

எனவே தேசியப் பட்டியலிலிருந்து மட்டுமே தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்கள் தோல்வியடைந்தவர்களை விட சிறந்தவர்கள் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை.

பொன்சேகாவின் பிரச்சினையின் போதும் நவவியின் பிரச்சினையின் போதும் ஹந்துன்னெத்தியின் பிரச்சினையின் போதும் இது தான் உண்மை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .