2025 மே 14, புதன்கிழமை

தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியா?

Administrator   / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக அரசியலில் இந்த முறை ‘பெப்ரவரி சுனாமி’ வந்திருக்கிறது. அரசியல் களத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள் ‘அடிதடி’ தொடங்கி அரசாங்கம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.   

மே 2016 இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இப்போது ‘காபந்து’ அரசாங்கமாக மாறியிருக்கிறது.

முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதா மறைவினால் இன்றைக்கு ‘காபந்து’ முதலமைச்சராகும் நிலைக்கு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வந்து விட்டார்.  

 இன்னும் எத்தனை நாள் அவர் ‘காபந்து’ முதலமைச்சராக இருப்பார் என்பது கணக்கிட்டுச் சொல்ல முடியாத அளவுக்குத் தமிழக ஆளுநரும் அடுத்த அரசாங்கத்தை உருவாகும் முயற்சியைத் தாமதம் செய்து கொண்டிருக்கிறார்.  

மாநிலத்தில் உள்ள முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கும் அக்கட்சிக்கு பொதுச் செயலாளரான சசிகலா நடராஜனுக்கும் ஏற்படும் மோதல், இருக்கின்ற ஆட்சிக்கு ஆபத்தை விளைவிக்கும் காட்சிகளாக மாறி விடலாம் என்று ஏற்கெனவே ‘தமிழ் மிரர்’ கட்டுரையில் வெளியிட்டிருந்தோம். அதுதான் தமிழக அரசியலில் இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது.   

முதலமைச்சர் பதவியிலிருந்து ஓ. பன்னீர் செல்வம் இராஜினாமா செய்து விட்டார். அவருக்கு பதிலாகப் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்க, சசிகலா நடராஜன் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு விட்டார்.   

ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்ற உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பு, இப்போது சசிகலா நடராஜன் முதல்வர் ஆவதையும் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக நீடிப்பதிலும் ஊசலாட்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.  

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தன் பதவியை இராஜினாமாச் செய்து, ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார். ஆளுநரும் உடனே அதை ஏற்றுக் கொண்டு, “மறு ஏற்பாடு செய்யும் வரை பதவியில் தொடருங்கள்” என்று உத்தரவிட்டார்.   

ஆனால், அதன் பிறகு சென்னையில் உள்ள ராஜ்பவன் பக்கமே தலை காட்டாமல் டெல்லிக்கும் மும்பைக்குமாகச் சென்று விட்டார் ஆளுநர். 

“எங்கே ஆளுனர்?” என்று எல்லோரும் கேள்வி கேட்கும் நிலை உருவான பிறகு, பெப்ரவரி ஒன்பதாம் திகதி, சென்னை வந்தார் ஆளுநர் வித்யாசகர் ராவ்.   

முதலில் மாலை ஐந்து மணிக்கு ‘காபந்து’ முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தைச் சந்தித்தார். பிறகு, முதலமைச்சராகப் பொறுப்பேற்கத் தேர்வாகியிருக்கும் சசிகலா நடராஜனை 7.30 மணிக்குச் சந்தித்தார்.   

இந்த இரு சந்திப்புகளுக்குப் பிறகும் ஆளுநரின் முடிவு என்ன என்று உடனடியாக அறிவிக்கவில்லை. 
‘காபந்து’ முதலமைச்சர்  ஓ. பன்னீர்செல்வத்தின், “கட்டாயப்படுத்தி இராஜினாமா வாங்கினார்கள்” என்ற குற்றச்சாட்டை, ஆளுநர் ஏற்றுக் கொண்டது சட்டச் சிக்கலை உருவாக்கியிருக்கிறது.  

இராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்ட முதல்வரை, மீண்டும் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவது, அகில இந்தியாவில் தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்.   

ஆனால், மத்திய அரசாங்கத்தின் எண்ணமும் மாநில ஆளுநரின் நோக்கமும் ‘காபந்து’ முதலமைச்சரை, முதலமைச்சராக்கி விட வேண்டும் என்று இருப்பது போல், அடுத்தடுத்த நகர்வுகள் தெரிகின்றன.   

தமிழகத்தில் அரசியல் தட்பவெட்பம் படு சூடாக இருந்த போது, ஆளுநர் தமிழகம் வராமல் இருந்தது, அ.தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்த புதிய தலைவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது எல்லாம் அதை நோக்கியே இருக்கின்றன.   

ஆனால், இந்த நோக்கத்தை நிறைவேற்ற முதலில் இராஜினாமாச் செய்த ஓ. பன்னீர்செல்வமும் கோட்டை விட்டார். அதை ஏற்றுக் கொண்ட ஆளுநரும் கோட்டை விட்டு விட்டார்.  

எப்படியென்றால், கட்டாயப்படுத்தி இராஜினாமாப் பெற்றிருந்தால் போயஸ் கார்டனை விட்டு வெளியே வந்ததும் அவர், ஆளுநருக்குத் தகவலைச் சொல்லியிருக்க வேண்டும். அல்லது அங்கிருந்து நேராக, நள்ளிரவில் ஜெயலலிதா சமாதிக்குச் சென்றது போல், அன்றைய தினமே சென்றிருக்க வேண்டும்.  

 குறைந்தபட்சம் ஆளுநர் இராஜினாமாக் கடிதத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருந்திருப்பார். முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்குச் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கலாம்.  

அதேபோல், ஆளுநரும் தனக்கு இராஜினாமாக் கடிதம் கிடைத்தவுடன் முதலமைச்சரைத் தொடர்பு கொண்டு,“நான் சென்னையில் இல்லை. நேரில் வந்து பேசுகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள்” என்று கூறி, ஓ. பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக் கொள்ளாமல் இருந்திருக்கலாம்.   

அப்படிச் செய்திருந்தால் “கட்டாயப்படுத்தி இராஜினாமா வாங்கினார்கள்” என்ற 
ஓ. பன்னீர்செல்வத்தின் நிலைப்பாட்டுக்கு ஏற்ற வாய்ப்பை ஆளுநர் வழங்கியிருக்க முடியும்.   

ஆகவே, இன்றைய திகதியில் ஓ. பன்னீர்செல்வத்தை சட்டமன்றத்தில் அறுதி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வாய்ப்பு கொடுத்தாலே, மத்திய அரசாங்கமும் ஆளுநரும் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்ற பழி தானாகவே வந்து விடும்.  

ஏனென்றால், ஆந்திர முதல்வராக இருந்த என்.டி.ராமராவ் வழக்கில், “நினைவு இல்லாமல் மருத்துமனையில் இருந்தபோது கொடுத்த இராஜினாமாக் கடிதத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டது தவறு” என்று எடுத்து வைத்த வாதத்தை, ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதோடு மட்டுமல்ல, “முதலமைச்சர் இராஜினாமா செய்து, அது ஏற்கப்பட்டால், அவருடைய அமைச்சரவையும் அந்தத் திகதியிலிருந்து இராஜினாமாச் செய்ததாக அர்த்தம்” என்றே விளக்கியிருந்தது.

 இத்தீர்ப்பு அண்டை மாநிலமான தமிழகத்தில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் சட்ட நெருக்கடிக்கு ஏற்ற தீர்ப்பாக இருக்கிறது.  
இது ஒரு புறமிருக்க, புதிய தலைவராகத் தேர்வு பெற்றிருக்கும் சசிகலா நடராஜனை உடனடியாக அழைப்பதற்கு ஆளுநருக்கு மனமில்லை என்றே தெரிகிறது. 

அதற்குக் காரணம் அவர் மீதுள்ள சொத்துக் குவிப்பு வழக்கும் அரசியல் சட்டப்படி, விருப்ப அதிகாரத்தை, இந்த விடயத்தில் ஆளுநர் பயன்படுத்த முடியும் என்பதுமே காரணங்களாக இருக்கின்றன.  

அதிலும் சட்ட சிக்கல் இருக்கிறது. அ.தி.மு.கவின் 134 சட்டமன்ற உறுப்பினர்களில் 128 பேர் சசிகலா நடராஜனை இதுவரை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அடைத்து வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தாலும் இவர்களில் யாரும் இன்னும் ‘காபந்து’ முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறோம் என்று வெளியேறவில்லை.   

அடுத்தபடியாகச் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை சசிகலா நடராஜனை ஆட்சியமைக்க அழைக்கவில்லை என்றால், அதுவும் வேறு மாதிரியான அரசியல் பின்விளைவுகளை ஏற்படுத்தும்.   

உதாரணமாக, நாளைக்கு வரப் போகும் தகுதியிழப்பை இன்றே கணக்கில் எடுத்துக் கொண்டு, ஆளுநர் சசிகலா நடராஜனை அழைக்காமல் இருந்தால், இந்தியாவில் ஆங்காங்கே குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்ட பிறகு, அமைச்சர்களாக இருப்பவர்களுக்கு எல்லாம் பதவி பறிபோகும் சூழல் உருவாகும்.   

அப்படியொரு கேள்வியை எழுப்ப, இந்த முன்னுதாரணம் பயன்படுத்தப்பட்டு விடும் என்ற அச்சம், அரசியல் சட்ட வல்லுநர்கள் மத்தியில் நிலவுகிறது. 

தமிழகத்தில் இப்படியொரு முன்னுதாரணத்தை உருவாக்கித் தன்னை ஆளுநராக நியமித்த பா.ஜ.கவின் அமைச்சர்களுக்கும் மற்ற அரசியல் கட்சிகளின் சார்பில் இருக்கும் அமைச்சர்களுக்கும் சிக்கலை ஏற்படுத்துவாரா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.   

ஏனென்றால், தகுதியிழப்புப் பற்றி மக்கள் பிரதிநிதித்துவம் விளக்கியுள்ளது. அதன்படி மட்டுமே, ஆளுநர் தன் விருப்ப அதிகாரத்தைச் செலுத்த முடியும். சசிகலா நடராஜன் விடயத்தில் தனது ‘விருப்ப அதிகாரத்தின்’ படி செயல்பட ஆளுநருக்கு இரு வழிகளில்தான் முடியும்.  

 ஒன்று நிலையான ஆட்சியைத் தருவாரா என்பது. அதற்கு 128 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கும் பட்டியல் அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இன்னொன்று தகுதியிழப்பு இருக்கிறதா என்று பார்ப்பது. இப்போதைக்கு சசிகலா நடராஜனுக்கு தகுதியிழப்பு ஏதுமில்லை என்பது தெளிவாகத் இருக்கிறது.   

ஆகவே, விருப்ப அதிகாரத்தின் கீழ், நாளைக்கு வரலாம் என்று கருதப்படும் தகுதியிழப்பை ஆளுநர் எடுத்துக் கொண்டு, எத்தனை நாளைக்கு சசிகலா நடராஜனை பதவியேற்க அழைக்காமல் இருக்க முடியும்?  

இன்றைய சூழ்நிலையில், ஆளுநர் முன்பு இருக்கும் சிறந்த வழி பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இருக்கும் சசிகலா நடராஜனை பதவியேற்க அழைப்பது. 

அவர் ஒரு வேளை பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால் அடுத்துப் பிரதான எதிர்கட்சியாக 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன் உள்ள தி.மு.கவை அழைப்பது.  

அவர்களும் மறுத்து விட்டால், அரசியல் சட்டப்பிரிவு 356 ஐப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்வது. 

ஏனென்றால், ‘எஸ்.ஆர். பொம்மை’ வழக்கில், இந்திய உச்சநீதிமன்றம் ஓர் ஆளுநர் ‘ஆட்சியின் பலத்தை ராஜ்பவனில் நிரூபிக்க முயற்சி எடுக்கக் கூடாது. அதை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க உத்தரவிட வேண்டும்’ என்பதும் ‘நிலையான ஆட்சி அமைக்க அனைத்து வழிமுறைகளை

யும் கையாண்டு விட்டுக் கடைசிக் கட்டமாகத்தான் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்ய வேண்டும்’ என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது.  

இந்த வழியை விட்டு, மீண்டும் ஓ. பன்னீர்செல்வத்தைப் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டால், அரசியல் சட்ட ரீதியாகத் தவறான முன்னுதாரணத்தை உருவாக்குகிறார் தமிழக ஆளுநர் என்று அர்த்தம்.   

ஆகவே, ஆளுநர் முன்பு இருக்கும் ‘பந்தை’ எந்தப் பக்கம் நோக்கி விளையாடப் போகிறார் என்பதில்தான் தமிழகத்தில் நிலையான ஆட்சி அமையுமா? குடியரசுத் தலைவர் ஆட்சி வருமா என்பது தெரிய வரும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X