Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசிய அரசியல் பரப்பின் மேல் மட்டத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர், பரபரப்புக்களைத் தாண்டிய பதற்றமான சூழ்நிலையொன்றை தமிழ் மக்கள் பேரவையின் வருகை பதிவு செய்திருக்கின்றது. இந்தப் பதற்றமான சூழ்நிலைக்குள் தமிழ் மக்கள் பேரவையும், அதன் ஆதரவுத்தளமும் எதிர்த்தளமும் கடந்த சில நாட்களாக அல்லாடிக் கொண்டிருக்கின்றன.
ஆனால், சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் பேரவையின் வருகையும், அதனை முன்னிறுத்தி எழுந்துள்ள 'பதற்றமும்' தாக்கம் செலுத்தியிருப்பது மாதிரியான தோற்றப்பாட்டினை இன்னமும் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
புதிய அமைப்பொன்றின் வருகை பதிவு செய்யப்பட்டு பத்து நாட்கள் மாத்திரமே கடந்துள்ள நிலையில், இவ்வாறான நிலைப்பாட்டுக்கு இந்தப் பத்தியாளர் நகர்வது எவ்வாறு சரியாக இருக்க முடியும்? என்கிற கேள்வி எழலாம். அது, இயல்பானதும் கூட. ஆனால், கடந்த காலக் காட்சிகளை தற்போதையை நிகழ்வு மாற்றங்களும் மீளப்பதிவு செய்கின்ற போது, சில முடிவுகளுக்கு வருவது தவிர்க்க முடியாததாகும்.
21ஆவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெரும் போர் வெற்றிகளை பெற்று வந்த தமிழீழ விடுதலைப் புலிகள், தொடர்ச்சியான ஆயுதப் போராட்டத்தின் களைப்பு மற்றும் உலக அரசியல்- இராஜதந்திர ஒழுங்கின் போக்கில் சில தீர்மானங்களை எடுக்க வேண்டி வந்தது. அதன்போக்கில் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், தம்முடைய 'டம்மி'யாக ஒரு தரப்பினை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
அதுவும், தேர்தல் வாக்கு ஜனநாயகம்(‚) சார்ந்த அமைப்பாக அது தோற்றம்பெற வேண்டும் என்கிற நிலை காணப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோற்றமும், அதன் அடுத்த கட்டப் பயணமும் அவ்வாறாகத்தான் ஆரம்பித்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் தம்முடைய போராட்டங்களை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்திய காலத்தில் நிராகரித்த பல தரப்பினரை (அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள்) ஒருங்கிணைத்தே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தோற்றுவித்தனர். அது, அப்போது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனையும், மீறி விடுதலைப் புலிகள் மீதான விசுவாசமும், நம்பிக்கையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வருகையை சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் பெருமெடுப்பில் கொண்டு சேர்ந்தது. அதன், பலனை தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்குதளத்திலிருந்து அகற்றப்பட்டதன் பின்னரான இன்றைய காலத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறுவடை செய்து வருகின்றது.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்;குப் பின்னரான கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலான காலத்தில் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் புதிய அணிகளின் அல்லது சிவில் சமூக அமைப்புக்களின் வருகை சாதாரண தமிழ் மக்களிடம் அவ்வளவு கவனம் பெறவில்லை. அவை, அரசியல்- ஊடக மேல்மட்ட உரையாடல்களோடு முடிந்து போயிருக்கின்றன.
தமிழ்த் தேசிய அரசியல் தளம் அடிமட்டத்திலிருந்து மீளக்கட்டியமைக்கப்பட வேண்டும் என்கிற நிலைப்பாடு, தொடர்ச்சியாக பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றது. ஆனால், அப்படியான நிலையொன்றை தோற்றுவிப்பது தொடர்பிலான செயற்றிட்டங்களின் போது, அவை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதில்லை. அப்படியானதொரு நிலையை தமிழ் மக்கள் பேரவையும் மீளப்பதிவு செய்திருக்கின்றது.
தமிழ்த் தேசிய அரசியலும், விடுதலைப் போராட்ட நகர்வும் பெண்களின் அபரிமிதமான அடிமட்டப் பங்களிப்போடுதான் ஒவ்வொரு கால கட்டங்களிலும் அடுத்த கட்டத்துக்கு பயணித்திருக்கின்றது. முடிவுகளை ஆண்கள் எடுத்தாலும் (அப்படித்தான் இதுவரையும் நடந்திருக்கின்றது. அது சரியானதும் அல்ல), அதனை செயற்படுத்தும் தருணங்களில் பெண்களின் உறுதிப்பாடு பெரும் வீச்சம் பெற்றிருந்தது.
அப்படிப்பட்ட நிலையில், தமிழ் அரசியல் சிவில் சமூக வெளியில் தன்னுடைய வருகையை பதிவு செய்திருக்கின்ற தமிழ் மக்கள் பேரவை, பெண்களின் பங்களிப்பு தொடர்பிலான நிலைப்பாட்டிலும் கோட்டை விட்டிருக்கின்றது. பெண்கள் இன்னமும் உள்வாங்கப்படாமைக்கான சமாளிப்புக்கள், மற்றும் வியாக்கியானங்களை தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள் எவ்வளவுதான் முன்வைத்தாலும், அவர்களின் உறுதிப்பாடு கேள்விக்குரியதாகவே இருக்கின்றது.
தமிழ்த் தேசிய அரசியல் மற்றும் சிவில் சமூகப் பரப்பினை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முனையும் அனைத்துத் தரப்புக்களுக்கும், இளைஞர்கள் தொடர்பிலான பெரும்பயம் எப்போதுமே இருந்து வந்திருக்கின்றது. தமிழ் அரசியல் கட்சிகளிடமிருந்து விடுதலைப் போராட்டங்களை 1970களில் இளைஞர்கள் எடுத்துக் கொண்டதன் பின்னரான நகர்வும், அதன்வெளிப்பாடுகளும் சாதக- பாதகத் தன்மைகள் கொண்டவைதான். ஆனால், விடுதலை தொடர்பிலான உறுதிப்பாடு என்றைக்கும் தகர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. இன்னமும், அதுதான் நீட்சி பெற்றிருக்கின்றது.
அப்படியான நிலையில், இளைஞர்களின் பங்களிப்பினை உறுதி செய்வது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை போதிய கவனம் செலுத்தவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வீ.மணிவண்ணன், தமிழ் சிவில் சமூக அமையத்தின் குருபரன் குமாரவடிவேல் உள்ளிட்ட சில இளையோர் தமிழ் மக்கள் பேரவைக்குள் இருந்தாலும், புதிய முகங்கள் யாரும் உள்வாங்கப்படவில்லை.
இது, கடந்த கால அமைப்புக்களையே மீளவும் புதிய பெயர்களோடு கட்டமைத்திருக்கின்றது. இந்தக் காட்சி இளையோரிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக பெரும்பாலும் சலிப்பினைத் தோற்றுவித்திருக்கின்றது.
அதுபோல, தொடர்ச்சியாக தமிழ்த் தேசியப் பரப்பு வெளிப்படுத்திவரும் யாழ். மேலாதிக்க மனநிலை மாத்திரமே, தமிழ் மக்கள் பேரவையிலும் பிரதிபலிப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. தமிழ்த் தேசிய அரசியல் யாழ்ப்பாணத்துக்குள் முடக்கப்பட்டு, வடக்கு- கிழக்கின் ஏனைய பிரதேசங்கள் தேர்தல் கால வாக்கு அறுவடைகளுக்காக மாத்திரமே கையாளப்படுவது மாதிரியான நிலை இது.
அதாவது, தமிழ்த் தேசியக் கோஷங்களை முன்வைக்கும் சில கட்சிகள் யாழ்ப்பாணத்துக்குள் மாத்திரம் தம்மை சுருக்கிக் கொள்வது மாதிரியானது. இது, பரந்துபட்ட அளவில் நம்பிக்கையைப் பெறுவதையும் தடுத்திருக்கின்றது.
தமிழ் மக்களிடம், தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று அபரிமிதமான நம்பிக்கையைப் பெற்ற தரப்பொன்று அதன் பின்னர் உருவாகவில்லை. அப்படிப்பட்ட நிலையில், ஊடக பரபரப்புக்களும், அரசியல் ஆதரவு- எதிர்நிலை வாதங்களும் மக்களிடம் அபிமானத்தையும் நம்பிக்கையையும் அவ்வளவுக்கு ஏற்படுத்தாது. நம்பிக்கையை ஏற்படுத்தாத எவையும் வெற்றிகரமாக பக்கம் நகர முடியாதவை.
'நிலமட்டத் தமிழ் மக்களைக் கட்சித் தலைமைத்துவங்களுடன் இணைத்து திடமான ஒரு அரசியல் பலத்தை கட்டியமைப்பதும், இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்மொழிவதுமே தமிழ் மக்கள் பேரவையின் இலக்கு.' என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். ஆனால், நிலமட்டங்களிலிருந்து தமிழ் மக்களை உள்வாங்குவது தொடர்பிலான செயற்பாடும் அதன் நகர்வும் எவ்வாறு அமையப்போகின்றது என்பதாக உறுதிப்பாடுகளை தமிழ் மக்கள் பேரவை வெளிப்படுத்தவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளாக இருந்தாலும், தமிழ் சிவில் சமூக அமையம் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களாக இருந்தாலும் சாதாரண தமிழ் மக்களிடமிருந்து அதன் அடுத்த கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வந்திருக்கின்றன. ஆனால், அதனை அவர்கள் நடைமுறையில் கடைப்பிடித்து வந்திருக்கின்றார்களா என்றால், இல்லை.
அப்படியான நிலையில், இந்தத் தரப்புக்களே பெரும்பாலும் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பேரவை நிலமட்டத்திலிருந்து மக்களை ஒருங்கிணைப்பது, செயற்றிட்டங்களுக்குள் உள்வாங்குவது தொடர்பிலான கருத்துக்களை வெளிப்படுத்தியிருப்பதை அவ்வளவு நம்பிக்கைகளோடு வரவேற்க முடியாது. அதற்கான, ஆரம்ப கட்டங்கள், அதாவது, செயற்குழு உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தெரிவும், நகர்வுமே சூன்யத்தினை பதிவு செய்திருக்கின்றது.
தமிழ்த் தேசிய அரசியலும்- சிவில் சமூக வெளியும் தற்போது குறைநிரப்பு தரப்புக்களினாலேயே பிரதியிடப்பட்டிருக்கின்றன. அப்படியான நிலையில், குறைநிரப்பும் தரப்புக்கள் தம்மை உண்மையான அர்ப்பணிப்போடு மீளவும் சரியாக வடிவமைத்து மக்களோடு பயணிக்காமல் விட்டால், அந்த வெளி இன்னும் சில காலத்துக்கு கானல்வெளியாக மாத்திரமே இருக்கும். ஆனால், இன்னொரு விடயத்தை அல்லது இயங்கியல்வாதத்தை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது. அது, மக்களை நம்பிக்கை கொள்ள வைக்கும் வகையிலானதாக இருக்கும்.
அதாவது, தமிழ்த் தேசிய அரசியல்- சிவில் சமூக வெளியில் தற்போதுள்ள வெற்றிடத்தை நிரப்ப முயலும் தோல்விகரமான அல்லது முழுமையற்ற தரப்புக்கள் 'முயற்சித்து' அடிபட்டுவிழும்போது, எல்லா அனுபவங்களையும் உள்வாங்கிய வெற்றிகரமாக தரப்பொன்று முன்னோக்கி வரும். அது, அந்த வெளியை ஆரோக்கியமான நிலையில் ஈடு செய்யும். ஆனால், அந்தத் தருணம் எப்போது என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago