Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Thipaan / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆட்டுக்குத் தாடி எப்படித் தேவையில்லையோ, அது போல் நாட்டுக்கு கவர்னர் பதவி தேவையில்லை என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி, முதன் முதலில் தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சியை ஏற்படுத்திய அண்ணாவின் முழக்கம். அப்படியொரு மாநிலத்தில் இப்போது முதல் முறையாக பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் ஒருவர் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். செப்டெம்பர் இரண்டாம் திகதி மஹாராஷ்டிர மாநிலத்தில் கவர்னராக இருக்கும் வித்யாசாகர் ராவ் தமிழக கவர்னராக பொறுப்பேற்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவரை வரவேற்றிருக்கிறார்.
ஏற்கெனவே பதவியிலிருந்த ஆளுநர் ரோசைய்யாவின் பதவிக்காலம் ஓகஸ்ட் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்ததையொட்டி, இப்போது புதிய கவர்னர் நியமிக்கப்பட்டிருந்தாலும், இவர் மஹாராஷ்டிர மாநிலத்துடன் தமிழகத்தையும் சேர்த்துக் கவனிப்பார் என்றுதான் குடியரசுத் தலைவரின் உத்தரவு கூறுகிறது. 'தமிழக மக்களின் அன்பையும், பாசத்தையும் என்னுடன் எடுத்துச் செல்கிறேன்' என்று உருக்கமாக அறிக்கை விட்டு விடை பெற்றுள்ளார் ஏற்கெனவே ஆளுனராக இருந்த ரோசைய்யா.
தமிழகத்தைப் பொறுத்தமட்டில் ரோசைய்யா காங்கிரஸ்காரர். சென்ற முறை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்த போது கவர்னராக நியமிக்கப்பட்டவர். புதிதாக பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு அமைந்த பிறகு மாற்றப்படாத வெகு சில ஆளுனர்களில் ரோசைய்யாவும் ஒருவர். காங்கிரஸ்காரராக இருந்தாலும் மத்திய அரசாங்கம் ரோசைய்யா பதவிக்காலம் முடியும் வரை தமிழகத்தில் கவர்னராக இருக்க அனுமதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கவர்னர்களுக்கும் மாநில அரசாங்கத்துக்கும் தமிழகத்தைப் பொறுத்த மட்டில் எப்போதும் சுமூகமாக இருந்தது என்று கூற முடியாது.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழக கவர்னராக சென்னாரெட்டி இருந்தபோது, அவருக்கும் அப்போது முதலமைச்சர் பதவி வகித்த ஜெயலலிதாவிற்கும் மோதல் வெடித்தது. இதனால் 'கவர்னர் சென்னாரெட்டியை திரும்பப் பெற வேண்டும்' என்று சட்டமன்றத்திலேயே தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவே அப்போது பேசினார். 'அரசாங்கத்தின் நிர்வாகத்தில் முட்டுக்கட்டை போடுகிறார்' என்ற குற்றச்சாட்டினை முன்வைத்து கொண்டுவரப்பட்ட அந்தத் தீர்மானம் தமிழக சட்டமன்ற வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. சென்னா ரெட்டியும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரோசைய்யாவைப் பொறுத்தமட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேணி வந்தார். அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் எப்போது அவரைச் சந்திக்க விரும்பினாலும் அதற்கு நேரம் ஒதுக்கி அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார். அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பது அவரது அதிகாரத்துக்குட்பட்டது இல்லை என்றாலும் மனுக்களைப் பெற்றுக் கொண்டார் என்றே கூற வேண்டும்.
இரு கட்டங்களில் மட்டும் ஆளுனர் ரோசைய்யா மீது விமர்சனங்கள் எழுந்தன. முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பின் போது அ.தி.மு.கவினர் நடத்திய போராட்டங்களை கண்டு கொள்ளாமல் இருந்தார் என்ற விமர்சனம். இது எதிர்க்கட்சிகள் செய்த பிரசாரம். பிறகு அரவாக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தேர்தல்களை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்த பிறகு, அதை மீண்டும் நடத்துவது குறித்து ரோசைய்யாவே தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். அதுபற்றி கலந்து ஆலோசித்த தேர்தல் ஆணையம் 'இந்தக் கடிதத்தை கவர்னர் எழுதியிருக்கக்கூடாது' என்று விமர்சித்தது. தேர்தல் ஆணையம் விமர்சித்த கவர்னர் என்ற பெயரை ரோசைய்யா எடுத்தது தமிழகத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் ஏற்பட்ட சறுக்கல். மற்றப்படி அரசாங்கத்துடன் ஒத்துழைத்தார். அரசாங்கத்தின் நிர்வாகத்தில் வீண் முட்டுக்கட்டைகள் போடாமல் செயல்பட்டார் என்று மாநிலத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளே மானதாரப் பேசுகிறார்கள்.
அவருக்குப் பதில் பொறுப்பேற்றுள்ள கவர்னர் வித்யாசகர் ராவ் ஜனசங்கத்திலிருந்து வந்தவர். அதில் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அவரது அமைச்சரவையில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராகப் பணியாற்றியவர். ஆந்திராவிலிருந்து பிரிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனச்சாட்சி என்று கூறப்பட்ட மறைந்த முரசொலி மாறன் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்தபோது, அவரின் கீழ் பணியாற்றியவர். பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்கள் கழித்து அக்கட்சியைச் சார்ந்த ஒருவர் தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளது கவனிக்கப்பட வேண்டிய அரசியல் யுக்தி என்றே கருதப்படுகிறது. இப்போது தமிழகத்தை கூடுதல் பொறுப்பாகத்தான் இவர் கவனிக்க குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதனால் இவரே முழு நேர கவர்னராக தமிழகத்துக்கு நியமிக்கப்படுவாரா அல்லது வேறு புதிய கவர்னர் யாரும் வருவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏனென்றால் கவர்னர் ரோசைய்யாவின் பதவிக் காலம் நிறைவு பெறுவது பற்றிய அறிவிப்பு அவர் பதவிக்காலம் முடியும் நாளில்தான் வெளிவந்தது. இதற்கிடையில் குஜராத் மாநில முதல்வராக இருந்து ஓய்வு பெற்றுள்ள ஆனந்திபென் பட்டீல் நியமிக்கப்படுவார் என்று செய்திகள் அடிபட்டன. பிறகு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர் சங்கரமூர்த்தி தமிழக கவர்னராக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இருவருமே இல்லாமல் இப்போதைக்கு பொறுப்புக் கவர்னர் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கவர்னர் நியமனத்தில் மத்திய அரசாங்கம் மாநில முதலமைச்சரை கலந்து ஆலோசிக்க வேண்டும். அதில் முதலமைச்சர் ஜெயலலிதா எப்போதும் தீர்க்கமாக இருப்பார். அதற்கு சில உதாரணங்கள் நடைபெற்றுள்ளன.
1991-1996 ஆம் ஆண்டு முதல் முறையாக ஜெயலலிதா முதலமைச்சரான போது கவர்னராக பீஷ்மன் நாராயன்சிங் இருந்தார். அவரை மாற்றி விட்டு சென்னாரெட்டியை நியமிக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்தது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.சவான். தன்னை ஆலோசிக்காமல் கவர்னரை நியமிக்கிறீர்கள் என்று அவரிடம் அப்போதே ஜெயலலிதா புகார் செய்திருக்கிறார். அதேபோல் 2001-2006 இல் இரண்டாவது முறையாக ஜெயலலிதா முதலமைச்சரானார். முதலில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாத்திமா பீவி கவர்னராக இருந்தார். அவர் விலகிய பிறகு தமிழக கவர்னராக ராம்மோகன் ராவ் வந்தார். அவருக்குப் பதில் சுர்ஜித் சிங் பர்னாலாவை நியமிக்க மத்திய அரசாங்கம் முடிவு எடுத்து, அவரை தமிழக கவர்னராகவும் நியமித்தது.
அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பட்டீலிடம் இது குறித்து புகார் செய்தார் ஜெயலலிதா. முதலமைச்சருக்கும் உள்துறை அமைச்சருக்கும் இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களே வெளியிடப்பட்டு அப்போது பெரும் சர்ச்சை எழுந்தது. கவர்னர் நியமனத்தில் முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தும் வகையில் அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என்றே தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் இப்போது இருக்கின்ற முதலமைச்சர் ஜெயலலிதா. இந்த சூழ்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரை பெறாமல் அல்லது அவரிடம் ஆக்கபூர்வமாக ஆலோசனை நடத்தாமல் புதிய கவர்னரை மத்திய அரசு நியமிக்காது என்றே தெரிகிறது. அதற்காகவே இப்போது புதிய கவர்னரை நியமிப்பதற்குப் பதில் தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக வித்யாசகர் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியல் ரீதியாகத் தமிழகத்தில் மாற்று அரசியலைக் கொடுக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி விரும்புகிறது. அதற்கு முதலில் 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மூன்றாவது அணியை உருவாக்கியது. அந்த அணிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர்கள் தவறி விட்டார்கள். அதனால் 2016 சட்டமன்றத் தேர்தலில் உருப்படியான ஒரு மாற்று அணியை பா.ஜ.கவினால் அமைக்க முடியாமல் போய் விட்டது.
ஆனால் வருகின்ற 2019 நாடாளுமன்றத் தேர்தல் பா.ஜ.கவிற்கு மிகவும் முக்கியமான தேர்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிக முக்கியமாகத் தேவைப்படும். 39 தொகுதிகளிலும் வெற்றி பெற பா.ஜ.கவிற்கு தனிப்பட்ட பலம் இல்லை என்றாலும், அந்த வெற்றியைப் பெற அ.தி.மு.க அல்லது தி.மு.க தேவை என்ற நோக்கில்தான் பா.ஜ.கவின் அரசியல் வியூகம் இருக்கும். பிரதமர் நரேந்திரமோடியின் அப்படியொரு வியூகத்துக்கு முதலில் தமிழகத்தில் பா.ஜ.கவிற்கும், மத்திய அரசாங்கத்துக்கும் விசுவாசியாக இருக்கும் கவர்னர் தேவை. அதை மனதில் வைத்துத்தான் இப்போது கூடுதல் பொறுப்பாக தமிழக கவர்னராக வந்திருக்கும் வித்யாசாகர் ராவே முழு நேர கவர்னராக மாறுவாரா அல்லது புதிய முழு நேரக் கவர்னர் நியமிக்கப்படுவாரா என்பது தெரியவரும். ஆகவே கவர்னர் நியமனத்தில் மத்தியில் ஆட்சி செலுத்தும் மோடியின் வியூகம் விரைவில் வெளிப்படும் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago