2025 மே 15, வியாழக்கிழமை

தமிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிப்பதா மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை?

Thipaan   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 'சமஸ்கிருதம் படிக்கத் தாராளமான வாய்ப்புகளை பல்கலைக்கழகங்களும் பாடசாலைகளும் ஏற்படுத்தித் தர வேண்டும்' என்று புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது, 'சமஸ்கிருதத் திணிப்பு' என்று தமிழகத்தில் எதிர்ப்பு சுவாலையை எதிர்க்கட்சிகள் அனைத்தும் தூக்கிப் பிடித்துள்ளன. முதலில் திராவிடர் கழகம் சார்பில் இது பற்றிக் கருத்தரங்கம் போடப்பட்டது. பின்னர் அக்கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் பங்கேற்றது. இதேபோல் மற்ற எதிர்கட்சிகளும் பங்கேற்றன. இறுதியில் 'தமிழைப் புறக்கணித்து சமஸ்கிருதத்தை திணிப்பதை தமிழக அரசு அனுமதிக்காது' என்று தமிழக சட்டமன்றத்திலேயே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் பிரகடனம் செய்திருக்கிறார்கள்.

ஏன் இந்தத் திடீர் போராட்டம்? ஆர்பாட்டம் தமிழகத்தில் ஏற்பட்டது. அரசியல் சட்டப்படி கல்வி என்பது இந்தியாவில் மாநில அரசுகளின் பட்டியலில் இருந்தது. அதாவது கல்வி தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மாநிலங்கள் வசமே கொடுக்கப்பட்டிருந்தது. 1976 இல் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு, அமுலில் இருந்த நேரத்தில் 42 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி மாநில அரசுகளின் அதிகாரத்திற்குட்பட்ட கல்வி மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பொதுவான பட்டியலுக்குச் சென்று விட்டது. இந்த மாற்றத்திற்குப் பிறகு கல்வியில் மத்திய அரசும் சட்டம் இயற்றலாம் என்ற நிலை உருவானது.

'ஒரே நாடு ஒரே வரி' என்ற நோக்கத்தை முன் வைத்து, பொருள்கள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் இப்போது எப்படி நிறைவேற்றப்பட்டிருக்கிறதோ, அப்படியே 'இந்தியா முழுவதும் ஒரே கல்வி' என்ற நோக்கத்தின் அடிப்படையில்தான் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை வகுக்க முயற்சித்தது. அதற்காக மத்திய அமைச்சரவைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. அந்தக் குழுவில் அவரையும் சேர்த்து ஐந்து உறுப்பினர்கள் என்றாலும், அந்த ஐந்து பேரில் நால்வர் கல்வியாளர்கள் அல்ல என்பதுதான், இப்போது ஏற்பட்டுள்ள முக்கியமான புதிய கல்விக் கொள்கை சர்ச்சை.

இதற்கு முன்பும் கல்வி கொள்கை வகுக்க குழுக்கள் இந்தியாவில் அமைக்கப்பட்டன. பிரதமராக இருந்த இந்திரா காந்தி, 1968 இல் பள்ளிக் கல்விக் கொள்கை வகுக்க டி.எஸ். கொத்தாரி தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்.  17 உறுப்பினர்கள் கொண்ட அந்தக் குழுதான் முதல் கல்விக் குழு. பிறகு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது ஒரு கல்விக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரையின்படிதான் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், மதிய உணவுத் திட்டம், அனைவருக்கும் கல்வி போன்ற திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. அந்த வரிசையில் பொருளாதார மயமாக்கலுக்குப் பிறகு 1992 இல் பிரதமராக இருந்த நரசிம்மராவ் இந்தக் கல்விக் கொள்கையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தார். 1998 வாக்கில் பிரதமராக இருந்த வாஜ்பாய்  கல்வி அமைச்சர்கள் மாநாட்டைக் கூட்டி, அந்த மாநாட்டில் சரஸ்வதி வந்தனா, சமஸ்கிருத ஸ்லோகங்கள் எழுப்பப்பட்டன. இதைக் கண்டித்து மாநிலக் கட்சிகள் அப்போதே சர்ச்சையைக் கிளப்பின. இந்தச் சூழலில்தான் இப்போது பிரதமராக இருக்கும் நரேந்திரமோடி காலத்தில் புதிய கல்விக் கொள்கையை பரிந்துரை செய்திருக்கிறது டி.எஸ்.ஆர் சுப்பிரமணியன் குழு.

இந்தக் குழுவின் முக்கிய பரிந்துரைகளில் 'சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்', 'அகில இந்தியக் கல்விப் பணி', 'ஆசிரியர் பதவிகளுக்கு அகில இந்தியத் தேர்வு', 'ஐந்தாம் வகுப்புக்கு மேல் வகுப்பிறக்கப்படும் மாணவர்களை வகுப்பேற்றம் செய்யக்கூடாது', 'கல்வி உரிமைச் சட்டப்படி சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்', 'உலகில் உள்ள முக்கியமான 200 பல்கலைக்கழகங்கள் இந்தியக் கல்வித்துறையில் நுழைய அனுமதிக்க வேண்டும்' போன்றவை மாநிலங்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் மீண்டும் இந்திப் போராட்டம் போல் ஒரு மாபெரும் போராட்டம் வெடிக்கும் என்றே திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் மட்டுமின்றி, மற்ற எதிர்க்கட்சிகளும் குரல் கொடுக்கும் நிலை உருவாகியிருக்கிறது.

அதே நேரத்தில் 'ஆசிரியர்கள் நியமனம் தரமானதாக இருக்க வேண்டும்', 'மேல்படிப்பிற்கு அகில இந்திய நுழைவுப் பரீட்சை நடத்த வேண்டும்', 'துணை வேந்தர்கள் நியமனத்தில் அரசியல் தலையீடு தடுக்கப்பட வேண்டும்', 'மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும்' என்பன போன்ற பரிந்துரைகள் ஒட்டுமொத்த கல்வித்துறையையும் ஊக்குவிக்கும் விதத்தில் இருக்கிறது என்ற குரலும் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக எழுகின்றது.

அதேநேரத்தில் ஐந்தாம் வகுப்பு வரை வகுப்பேற்றம் செய்யலாம். அதன் பிறகு வகுப்பிறக்கப்படும்; மாணவருக்கு இரு வாய்ப்புகள் கொடுத்து அவரை தேர்ச்சி பெற வைக்க முயற்சிக்கலாம். அதிலும் அவர் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவரை மேற்கொண்டு படிக்க வைக்காமல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ள பரிந்துரை தமிழகத்தில் ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது கொண்டு வந்த 'குலக்கல்வித் திட்டத்திற்கு ஒப்பானது' என்று கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 சுருக்கமாகத் தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆசிரியர்கள் நியமன அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து பறிப்பது, தமிழைப் பின்னுக்குத் தள்ளி சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது, குலக்கல்வித் திட்டத்தை புகுத்துவது போன்ற பரிந்துரைகள் பற்றித்தான் எதிர்க்கருத்துக்கள் மாநிலத்தில் எழுப்பப்படுகிறன. ஆகவேதான் நடந்து கொண்டிருக்கும் சட்டமன்றத்தில் 'மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க கோரிக்கையை முன்வைத்தது. அப்படியொரு தீர்மானத்தை ஆளும் அ.தி.மு.க அரசு கொண்டு வரவில்லை என்றாலும், புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அரசு மாநில அரசின் கருத்தை கேட்டிருக்கிறது. தமிழகத்தில் சமஸ்கிருதம், இந்தியை திணிக்க அரசு அனுமதிக்காது என்று சட்டமன்றத்தில் தமிழக அரசின் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

நேற்றைக்கு தமிழகத்தின் எதிர்ப்பாக இருந்த புதிய கல்விக் கொள்கை, இன்றைக்கு பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்பாக மாறியிருக்கிறது. புதிய கல்விக்  கொள்கை குறித்து 11.08.2016 அன்று இந்திய நாடாளுமன்ற மேலவையில் நடைபெற்ற புதிய கல்விக் கொள்கை மீதான விவாதத்தில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீத்தாராம் எச்சூரி, 'புதிய கல்விக் கொள்கை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கருத்துகளைப் பிரதிபலிக்கிறது' என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

அ.தி.மு.கவின் சார்பில் பேசிய ராஜ்ய சபை உறுப்பினர் எஸ். ஆர். பாலசுப்பிரமணியம், 'அகில இந்தியக் கல்விப் பணி என்று கொண்டு வருவது மாநிலத்தின் உரிமைகளைப் பறிப்பதாகும்' என்று புகார் கூறியிருக்கிறார். திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேசிய டேரிக் ஒபரெயின், 'புதிய கல்விக் கொள்கை இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பாதிக்கக் கூடாது. மாநில அரசுகளின் கருத்தை அறியாமல் இதை நிறைவேற்றக் கூடாது' என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இப்படிப் புதிய கல்விக் கொள்கை தொடர்பான விவாதத்தில் பேசிய எதிர்கட்சிகள் அனைத்துமே 'புதிய கல்விக் கொள்கை காவிக் கொள்கை' என்றும்,  'புதிய கல்விக் கொள்கை இந்திய மதசார்பற்ற தன்மைக்கு விடப்பட்ட சவால்' என்றும் தங்கள் கருத்துக்களை வலுவாக எடுத்து வைத்துள்ளன.

இது போன்றதொரு எதிர்ப்பை மத்திய அரசு எதிர்பார்த்ததோ இல்லையோ, இப்படியொரு எதிர்ப்பு நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் இருந்து கிளம்புவதற்குக் காரணமாக இருந்தது தமிழகம்தான். புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் கிளம்பிய உடனடி எதிர்ப்புத்தான் இன்றைக்கு இந்திய நாடாளுமன்ற மேலவையில் புதிய கல்விக் கொள்கை பற்றிய ஒரு விவாதத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

மற்ற மாநிலங்களுக்கும் 'உரிமை பறிபோவது' குறித்த உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. கடும் எதிர்ப்பை உணர்ந்த மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், 'புதிய கல்விக் கொள்கை மத்திய அரசின் வரைவு அல்ல; மத்திய அமைச்சரவையின் வரைவும் அல்ல; டி.எஸ்.ஆர் சுப்பிரமணியம் குழுவின் பரிந்துரை. அவ்வளவுதான்‚ இந்தப் பரிந்துரை பற்றி அமைச்சரவை பரிசீலிக்கும் முன்பு இந்த அவையில் விவாதித்துக் கருத்துக்களையே கேட்டிருக்கிறோம்' என்று கூறி, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு நெருப்பில் தற்போதைக்கு நீரை ஊற்றியிருக்கிறார்.

ஆனால், தமிழகத்தில் 1938 களிலும், 1965 களிலும் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் போல் இந்தக் கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கும் என்று அரசியல் கட்சிகள் எச்சரித்திருப்பது, மொழி அடிப்படையில் தமிழக மக்கள் மத்தியில் மீண்டுமொரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இது போராட்டமாக மாறுமா என்பது  மத்திய அரசு அமுல்படுத்த விரும்பும் புதிய கல்விக் கொள்கையில் எந்த அளவிற்கு 'சமஸ்கிருத திணிப்பில்' தீவிரம் காட்டப் போகிறது என்பதைப் பொறுத்துத்தான் இருக்கிறது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .