2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக புதிய அணி?

Administrator   / 2017 மே 01 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக புதிய அணி உருவாகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் உருவாகும் அந்த அணியில், இப்போது காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கொங்கு ஈஸ்வரன் தலைமையிலான கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட ‘மதச்சார்பின்மை’ பேசும் கட்சிகள் எல்லாம், ஓரணியில் ஒன்று சேர்ந்திருக்கின்றன.   

விவசாயிகளுக்கான போராட்டம் என்ற அளவில் 25.4.2017 அன்று நடைபெற்ற முழு அடைப்பை நோக்கினாலும், இது ஒரு மாற்று அரசியல் அணி என்பதில் சந்தேகமில்லை.  

பத்து வருடங்களுக்குப் பிறகு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்ந்து ஒரு முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.   

பொதுவாக, கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தமிழகத்தில் பெருமளவில் வாக்கு வங்கி படைத்தவை இல்லை. என்றாலும் ஆட்சிக்கு வர விரும்பும் கட்சிக்கு ஓர் அந்தஸ்தை மக்கள் மத்தியில் அளிப்பதற்கு கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பெருமளவில் கை கொடுக்கும்.   

அந்த, ‘இமேஜூக்காக’ கம்யூனிஸ்ட் இயக்கங்களை தங்கள் அணியில் வைத்துக் கொள்ளத் திராவிட முன்னேற்றக் கழகமும் அ.தி.மு.கவும் முனைவது கடந்த காலங்களில் நடைபெற்றுள்ள வரலாறு.   

இன்றைக்கு தமிழகத்தில் அ.தி.மு.க இரண்டாகப் பிளவுபட்டு நிற்கின்ற நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் மட்டுமே அர்த்தமுள்ள கூட்டணி அமைய முடியும் என்பதை கம்யூனிஸ்ட் இயக்கங்கள் எண்ணுகின்றன.  

அதனால்தான், பல்வேறு தி.மு.கவின் அழைப்புகளைப் புறந்தள்ளிய கம்யூனிஸ்ட் இயக்கங்கள், விவசாயிகள் என்ற பிரச்சினைக்காக ஒன்றிணைந்திருக்கின்றன.   

“மத்தியில் உள்ளது மதவாத அரசு” என்ற கருத்தை ஆணித்தரமாக, கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்வைக்கின்றன. அந்தக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளும் எண்ணத்தில், கொள்கை ரீதியாக பா.ஜ.கவைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.   

அந்தக் கட்சியைப் பொறுத்தவரை, அ.தி.மு.கவுக்குள் நடக்கும் குழப்பங்களுக்கு எல்லாம் பா.ஜ.கதான் காரணம் என்று தீர்மானமாக நம்புகிறது.   

ஓ.பன்னீர்செல்வமாக இருந்தாலும் சரி, எடப்பாடி பழனிச்சாமியாக இருந்தாலும் சரி, தங்கள் முதலமைச்சர் பதவியில் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் விருப்பத்தின்படியே நடக்கிறார்கள் என்று எண்ணுகிறது.   

அதனால்தான், “பிரதமர் உத்தரவின் பேரில், தன் காரில் உள்ள சைரனை கழற்றுகிறேன்” என்று அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை கூட்டங்களிலும் பேட்டிகளிலும் விமர்சிக்கிறார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்.   

அதுமட்டுமின்றி ஆட்சிக்குள் நடக்கும் குழப்பத்துக்கும் பா.ஜ.கவே காரணம் என்று பட்டி தொட்டிகள் எல்லாம் மக்கள் மத்தியில் கருத்துருவாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருப்பதும் இதற்கு இன்னொரு காரணம்.  

இந்நிலையில் குடியரசுத் தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் ஹிந்தியில் பேசலாம். விமான டிக்கெட் மற்றும் ரயில் டிக்கெட்டுகளில் ஹிந்தியில் தகவல் இருக்கலாம் போன்ற மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ‘ஹிந்தித் திணிப்பு’ என்று தி.மு.க கருதுகிறது.   

ஆகவே, ‘ஹிந்தித் திணிப்பு’ என்ற முழக்கத்தை முன் வைத்து, தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு எதிராக உள்ள எண்ணவோட்டத்தை தங்களுக்கு வாக்குகளாகவும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிரான அணி ஒன்றை உருவாக்க முடியும் என்றால், அது தமிழகத்தில் தி.மு.க தலைமையினால்தான் முடியும் என்பதையும் வெளிப்படுத்தும் விதத்தில், 28.4.2017 அன்று நடைபெற்ற தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது.   

அந்தக் கூட்டத்தில் போடப்பட்டுள்ள தீர்மானங்களில், சட்டமன்ற வரலாற்றில் வைர விழாக் கண்ட கலைஞர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிப்பது முதல் தீர்மானம் என்றாலும், பா.ஜ.கவின் தமிழ் மொழி புறக்கணிப்பு, ஹிந்தி மொழி திணிப்பு உள்ளிட்ட விடயங்களையும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் எடுத்துச் செல்ல மாவட்டந்தோறும் கருத்தரங்குகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும் என்ற தீர்மானம் மிக முக்கியமானது.  

1938, 1965 ஆகிய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்களுக்குப் பிறகு 2017 இல் இப்போதுதான் ‘ஹிந்தித் திணிப்பு’ பற்றி, தொடர் கருத்தரங்குகளைத் தமிழகம் காணப்போகிறது. அதுவும் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அந்தக் கருத்தரங்குகள் மாவட்ட ரீதியாக பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது.   

இன்றைக்கு புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், தஞ்சாவூர், நாகபட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மீத்தேன் திட்டம், இராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் கைது மற்றும் அவர்கள் மீதான இலங்கை இராணுவத்தின் தாக்குதல், மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வு கட்டாயம், காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசாங்கம் தமிழகத்துக்கு நியாயம் செய்யவில்லை என்ற எண்ணம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது.   

அந்த இளைஞர்களின் ஆதரவைத் திரட்டுவதற்கும், பா.ஜ.கவுக்கு எதிராக தி.மு.க மட்டுமே அணி உருவாக்க முடியும் என்ற இரண்டு நோக்கங்களின் அடிப்படையிலேயே ஹிந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கருத்தரங்கம் நடத்தப்படுவது போல் தெரிகிறது.   

வெறும் ஹிந்தித் திணிப்பு என்று மட்டும் கருத்தரங்கை நடத்தாமல், மத்திய அரசாங்கம் தமிழ் மொழியைப் புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டையும் இணைத்து அந்தக் கருத்தரங்குகளை நடத்துவது போன்ற தீர்மானத்தின் வாசகங்கள் இருக்கின்றன.   

ஆகவே, ‘ஹிந்தித் திணிப்பு’, ‘தமிழ் புறக்கணிப்பு’ என்று இரு முழக்கங்களுடன் ‘மதசார்பின்மை’ என்ற நோக்கத்தையும் சேர்த்துக் கொண்டு, பா.ஜ.கவுக்கு எதிராக களத்தைத் தயார் செய்ய, திராவிட முன்னேற்றக் கழகம் முடிவு செய்து விட்டது.  

இந்த அதிரடி முடிவுகளுக்கு பின்னணி இல்லாமல் இல்லை. அ.தி.மு.கவில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடக்கும் காட்சிகளில் பா.ஜ.க கை இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, தி.மு.கவும் நம்புகிறது. கரூர் அன்புநாதன் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை திடீர்சோதனை தொடங்கி இன்றைக்கு டி.டி.வி. தினகரன் கைதுவரை அ.தி.மு.கவுக்குள் ஓர் அணியை முதலில் முடிப்போம். பிறகு அடுத்த அணியை பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்த்துக் கொள்வோம்” என்ற முன்னணி வியூகத்துடனும், “முதலில் அ.தி.மு.கவை பலவீனப்படுத்தி விட்டு பிறகு தி.மு.கவுக்கு எதிராக நடவடிக்கைகளை தொடங்கலாம்” என்ற பின்னணி வியூகத்துடனும் பா.ஜ.க செயல்படுவதாக தி.மு.க திடமாக நம்புகிறது.   

இது ஒரு புறமிருக்க, கிராமங்களில் பா.ஜ.கவின் கொள்கை பிரசாரம் தமிழகத்தில் படு வேகமாக நடக்கிறது என்ற கள நிலைவரம் மாவட்ட செயலாளர்கள் மூலம் தி.மு.க தலைமைக்கு கிடைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக 
“தி.மு.கவும், அ.தி.மு.கவும் ஒன்று” என்று பிரசாரம் செய்யப்படுகிறது என்று அக்கட்சி கருதுகிறது.   

இந்த சூழ்நிலைகளை மனதில் வைத்து  “தி.மு.கவும் அ.திமு.கவும் ஒன்று” என்று பா.ஜ.கவினர் செய்யும் பிரசாரத்தை முறிடிக்கவும் மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கவும் மக்களிடம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்று தி.மு.க. தீர்மானமாக எண்ணுகிறது.  

இந்தக் கருத்தரங்குகள் நிச்சயம் தமிழகத்தில் ஏற்கெனவே பா.ஜ.கவுக்கு உள்ள எதிர்ப்புணர்வை மேலும் அதிகமாக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதை முன்கூட்டியே உணர்ந்துதான் அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்கும் “நிதி அயோக்” கூட்டத்தில் தமிழின் பெருமைகள் பற்றி பிரதமர் நரேந்திரமோடி பேசினார். உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஹிந்தித் திணிப்பு என்ற குற்றச்சாட்டுக்கு ஒரு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது.  

 அதில், “ஹிந்தி தெரிந்த அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் ஹிந்தியில் பேசலாம் என்று வேண்டுகோள் மட்டுமே விடப்பட்டுள்ளது. ஹிந்தியில்தான் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று யாரையும் நிர்ப்பந்திக்கவில்லை. இது நிர்ப்பந்த உத்தரவு அல்ல” என்று உள்துறை அமைச்சகம் விளக்கமளித்தது. 

இராமநாதபுரம் கீழடி பகுதியில் நடக்கும் அகழ்வாராய்ச்சி தடுத்து நிறுத்தப்படுகிறது என்று பா.ஜ.கவுக்கு எதிராக ஒரு பிரசாரம் நடக்கிறது. “இல்லை. அந்த அகழ்வாராய்ச்சி தொடரும்” என்று கூறுவதற்காகவே இரு மத்திய அமைச்சர்கள் கீழடிக்கு வந்து அந்த இடங்களைப் பார்வையிட்டு விட்டு பேட்டியளித்துள்ளார்கள்.  

ஆனால், தி.மு.க, அ.திமு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே இன்றைக்கு “பா.ஜ.க. எதிர்ப்புணர்வை” தமிழக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் தீவிரமாக இருக்கிறார்கள். தி.மு.க வெளிப்படையாகச் செய்கிறது.   

அ.தி.மு.கவில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உள்ள அணியோ திரைமறைவில் செய்கிறது. ஓ. பன்னீர்செல்வம் அணியைப் பொறுத்தமட்டில் “பா.ஜ.கவுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடித்து” அ.தி.மு.கவுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியில் நாம் பலம் இழந்து விடக்கூடாது என்பதில் கவனமாக காய் நகர்த்துகிறது.  

 ஆனால், பா.ஜ.கவுக்கு எதிராக நடக்கும் பிரசாரம் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால் தமிழகத்தில் ஆதரவு கிட்டாது என்று உருவாக்கப்பட்ட வியூகம் போல் இனி வரும் காலங்களில் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தாலோ அல்லது பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவித்தாலோ அந்த அணிக்கு தமிழகத்தில் வாக்கு கிடைக்காது என்ற சூழ்நிலை உருவாக்கப்படுகிறது.   

இதில் முக்கிய கட்சிகள் மட்டுமல்ல - தமிழகத்தில் இருக்கின்ற சிறிய கட்சிகள் பெரும்பாலானவை இந்த பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. விவசாயிகளின் முழு அடைப்புப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி, பா.ஜ.கவுக்கு எதிரான களம் தி.மு.க தலைமையில் அமைக்கப்பட்டு விட்டது என்பதை உணர்த்துகிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X