Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Thipaan / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெய்வீகன்
ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜயம், வழமை போன்று சம்பிரதாயபூர்மான சலசலப்புக்களை ஏற்படுத்திவிட்டு அடங்கியிருக்கிறது. சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அனைத்தும், ஒப்புக்கு ஓங்கி ஒலித்துவிட்டு மௌனித்து விட்டார்கள்.
யாழ்ப்பாணத்துக்கு வந்த பான் கீ மூன், நூலகக் கட்டடத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைச் சந்தித்துப் பேசினார். பிறகு முதலமைச்சர் குழுவினரையும் சந்தித்தார்.
இந்த இரு பகுதியினரையும் தமிழர் தரப்பாக முன்வைத்து நடைபெற்று முடிந்த சந்திப்பினையும் இவர்களது எதிர்கால சந்திப்புக்கள் குறித்தும் ஆராய்வதே இந்தப் பத்தியின் நோக்கமாகும்.
எந்த ஒரு வெளிநாட்டு அதிகாரியும் விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஒரு நாட்டுக்கு செல்கின்றபோது, அந்த நாட்டின் சார்பில், அந்த அதிகாரியின் பின்புலம் சார்ந்து இயங்கும் அமைப்புக்கள் அல்லது தூதரகங்கள் மிகவும் வேகமான முன் ஆயத்தங்களில் ஈடுபடும். தங்களது வழக்கமான நடவடிக்கைகளிலும் பார்க்க மேலதிக பணிகளை மேற்கொண்டு வரப்போகும் அதிகாரிக்கு முன்கூட்டியே அவரது விஜயம் சார்ந்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும்.
அவரும் தனது விஜயத்தின்போது சந்திக்கப்போகும் தரப்பினரின் முக்கியத்துவம் கருதி, அந்த அறிக்கைகளை வடிகட்டி தேவையானவற்றை மிகத்தரமாகப் பேசக்கூடிய வகையில் எடுத்துக்கொள்வார். இவ்வாறு அவர் பேசுவதற்கு தீர்மானித்துக் கொள்ளும் விடயங்கள், அக்காலப் பகுதியின் அரசியல் - இராணுவ - இராஜதந்திர விவகாரங்களை மையப்படுத்தியதாக அமையும். அத்துடன் அந்த நாட்டின் உள்விவகாரங்கள் மற்றும் பல்வேறு புறக்காரணிகளும் அந்த வடிகட்டிய பேசுபொருளில் செல்வாக்கு செலுத்தியிருக்கும்.
இப்படியான தயார்படுத்தலோடு வருகின்ற இந்த வெளிநாட்டு அதிகாரிகள், அநேகமாக எந்தச் சிக்கலுமின்றி தாங்கள் சந்திக்கும் தரப்போடு சரளமாகப் பேசிவிட்டு சென்றுவிடுவார்கள்.
ஆனால், இவ்வாறு பேசவருகின்ற தரப்புக்களை தமது தேவைகளுக்கு ஏற்றவாறு திசைதிருப்பும் வகையில் மாற்றிக்கொள்ளுவதும் அவர்களின் வடிகட்டிய பேசுபொருளின் பாதையை மாற்றி எமக்குத் தேவையான விடயங்களை நோக்கி அவர்களை அழைத்துச் செல்வதிலும்தான் அநேக தருணங்களில் இந்த அதிகாரிகளைச் சந்திக்கும் மறுதரப்பின் வெற்றி தங்கியிருக்கும்.
முக்கியமாக, விடுதலைப் புலிகளின் காலத்தில் சமாதானப் பேச்சுக்காலத்தில் இடம்பெற்ற பேச்சுக்களை எடுத்துப் பார்த்தால், இந்த விவகாரங்களைச் சற்று ஆழமாக புரிந்துகொள்ள முடியும்.
விடுதலைப் புலிகளின் சகல முடிவுகளையும் விரல்நுனியில் வைத்துப் பேசுவதற்கு முன்னிறுத்தப்பட்டவர் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் ஆவார். அதேபோல, அவருக்கு ஈடு இணையாக விடுதலைப் புலிகளின் சார்பில் வன்னிக்கு வரும் வெளிநாட்டுத் தரப்புக்களை சந்தித்தவர் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன்.
வெளிநாட்டுத் தரப்புக்களுடன் இவர்கள் நடத்திய சந்திப்புக்கள் மற்றும் அதில் பேசப்பட்ட விடயங்கள் குறித்துப் பார்த்தோமானால்;, அவற்றில் உச்ச தயார்படுத்தல்கள் காணப்படும். சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கும்போது விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டையும் பேச்சுக்களின் தொடக்கப் புள்ளியை எவ்வாறு தயார்படுத்துவது என்பதனை கலந்தாலோசிப்பதற்கு இலண்டனிலிருந்த அன்டன் பாலசிங்கம், மிகுந்த சிரமங்களின் மத்தியில் வன்னிக்கு வந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நேரடியாகப் பேசவேண்டியிருந்தது.
விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் குறித்து அதன் ஆரம்பகாலம் முதல் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த அனுபவஸ்தர் என்ற அடிப்படையில் அன்டன் பாலசிங்கம், நன்கு தெரிந்துகொண்டிருந்தாலும், தன்னுடன் பேசவரப் போகின்ற இலங்கையின் அரசாங்கத் தரப்பினர், தன்னைவிட அரசியல் மற்றும் இராஜதந்திர ஞானத்தில் குறைந்த அனுபமே கொண்டவர்களாக இருந்தாலும்கூட, மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் அமைதிப் பேச்சுக்கள் குறித்து தான் சார்ந்த அமைப்பின் தலைவரை நேரில் சந்தித்து, அந்தப் பேச்சுக்களுக்கான உரிய தயார் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவர் விரும்பினார்.
இவ்வாறு நடைபெற்ற ஒவ்வொரு சுற்றுப்பேச்சுக்களையும் உற்று அவதானித்தால் ஒரு விடயத்தை அறிந்துகொள்ளலாம். அதாவது, ஆரம்பக் கட்டங்களில் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளையும் போகப்போக அரசியல் பிரச்சினைகளையும் பேச்சு மேசைக்கு எடுத்துச்சென்ற விடுதலைப் புலிகளின் பேச்சுக்குழு, அடுத்தடுத்த கட்டங்களில் எதிர்த்தரப்பை தமது வழியை நோக்கி இழுத்துக் கொள்ளும் வகையில் உபாயங்கள் நிறைந்த வியூகங்களைக் கையாண்டது.
இதைத்தான் பேசவரப் போகிறார்கள் என்று முன்கூட்டியே தெரிந்து கொண்ட, அந்த விடயங்களின் ஊடாக நுழைந்து எதிர்தரப்பினர் எதிர்பாராத திசையில் அவர்களை அழைத்துச் சென்று ஒரு முடிவை எடுக்கும் புள்ளியை நோக்கி அழுத்தம் கொடுத்தார்கள். சர்வதேச மட்டத்தில் இடம்பெறும் ஒரு பேச்சுவார்த்தையின்போது இந்த விவகாரம் மிகவும் முக்கியமானது என்ற புரிதலின் வெளிப்பாட்டை இது காண்பித்தது.
மேலே குறிப்பிட்டதுபோல, ஒவ்வொரு சந்திப்புக்களுக்கும் வருகின்ற வெளிநாட்டு தூதுவர்கள், தங்களின் விஜயத்தின்போது இதைத்தான் எதிர்தரப்பினர் பேசுவார்கள். ஆகவே, அதற்கு இப்படியான பதில்களை தாங்கள் வழங்கலாம் என்று ஏற்கெனவே ஒரு பரந்த மாதிரி கேள்வி - பதில் கொத்துக்களுடன்தான் இந்த சந்திப்புக்கள் நடைபெறும்.
இலண்டனிலும் வன்னியிலும் விடுதலைப் புலிகளைச் சந்திப்பதற்குச் சென்ற நோர்வே மற்றும் ஏனைய தரப்பினர்களுக்கு ஒவ்வொரு தடவையும் அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் காய்கள் நகர்த்தப்பட்டன. அவர்கள் பேசுவதற்கு எதிர்பார்த்து வந்த விடயங்களுக்கு முற்றிலும் மாறான, அதேநேரம் அந்த பேசுபொருளுடன் தொடர்புடைய விவகாரங்களின் வௌ;வேறான முனைகளில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.
விடுதலைப் புலிகளின் பேச்சுக் குழுவை எவ்வாறாவது தங்களது நிபந்தனைகளுக்கு உட்படுத்துவதற்கும் தங்களது தீர்மானங்களுக்குத் தலையாட்ட வைப்பதற்கும், தாங்கள் கொண்டுவந்த ஆவணங்களில் கையொப்பம் வாங்கிச் செல்வதற்கும் இந்தத் தரப்புக்கள் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டன.
ஆனால், இவை எல்லாவற்றையும் மக்கள் தரப்பிலிருந்து சிந்தித்து, ஒரு போராட்ட இயக்கத்தின் தலைமையின் பக்குவத்தின் ஊடாக முடிவெடுத்து, அதேவேளை இந்த அரசாங்கத் தரப்பினரை வேறு வழியில் தங்களை நோக்கி திருப்புவதற்கான அசுரத்தனமாக பேச்சுப்போர் எனும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருந்தார்கள் விடுதலைப் புலிகள்.
பேசப்பட்ட விடயங்களிலும் பார்க்க, அந்தப் பேச்சுக்களின் கட்டமைப்பு எனப்படுவது வரலாற்றில் தமிழர் தரப்புக்கு ஓர் உயரிய பாடத்தையும் அனுபவத்தையும் கற்பித்திருக்கிறது.
இதன் பின்னணியில், கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பான் கீ மூனின் சந்திப்பினை எடுத்துப் பார்த்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் முதலமைச்சர் குழுவினர் தரப்பின் கரிசனைகளை பான் கீ மூன் செவிமடுத்தார். சந்திப்பில் பேசப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்த விடயங்களையும் பான் கீ மூன் கூறிய விடயங்களையும் வைத்து பார்த்தால், இதைத்தான் கடந்த ஏழு வருடங்களாக தமிழர் தரப்பு வெளிநாடுகளுக்கு சொல்லி வருகிறது.
காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல்போனோர் விவகாரம், நல்லிணக்கப் பொறிமுறை என்று தங்களது வழமையான வாய்பாடுகளை தமிழர் தரப்பினர் எடுத்துக் கூறியுள்ளனர்.
இவை அனைத்துமே கொழும்பிலுள்ள ஐ.நா தூதரகத்துக்கு அத்துப்படியாக தெரிந்த ஒரு விடயம். இவ்வளவு காலமாக இந்தத் தூதரகம் குறைந்தது ஐம்பது தடவைகளாவது இப்படியான அறிக்கைகளையும் ஆவணங்களையும் தனது தலைமையகத்துக்கு அனுப்பியிருக்கும். பான் கீ மூனின் விஜயத்தை ஒட்டி இந்தத் தூதரகம் மேற்கொண்ட தயார்படுத்தல்களும் இதைத்தான் செய்திருக்கும். தமிழ்த் தலைவர்களைச் சந்திக்கும்போது, அவர்கள் இப்படியான கோரிக்கைகளைத்தான் முன்வைப்பார்கள் என்று கூறி அதற்கான பதில்களையும்கூட பான் கீ மூனிடம் தயார் செய்து வழங்கியிருக்கும். அதைத்தான் அவரும் யாழ். நூலகத்தில் தன்னைச் சந்தித்தவர்களிடம் சொல்லியிருக்கிறார்.
தற்போது இந்தச் சந்திப்பின் பலாபலன் என்ன? இப்போது தமிழ் மக்களுக்குத் தேவையானதெல்லாம், அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழி என்ன என்பதேயாகும்? அதற்கான உபாயங்கள் என்ன? பெரும்பான்மைத் தரப்பிடம் பேசித் தீர்ப்பதற்கான வியூகங்கள் என்ன? இதுதான் இன்றைய தேவை.
அரசாங்கத்தின் தொடர்ச்சியான நழுவல் போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தாங்கள் முழுயான நாடாளுமன்ற பகிஷ்கரிப்பையோ அல்லது உண்ணாநிலை போராட்டம் ஒன்றிலோ இறங்கப்போவதாக அறிவித்திருக்க வேண்டும். அல்லது அதற்குச் சமமான இறுக்கமான முடிவை தெரிவித்திருக்க வேண்டும்.
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் துரிதமாக நிறைவேற்றப்படாத இந்த நிலைமாறு காலகட்டத்தில், தமிழர் தரப்பு சர்வதேசத்துடன் உடனுக்குடன் தொடர்பு கொள்வதற்கு அரசாங்கம் அல்லாத ஒரு தரப்பை அல்லது ஓர் அதிகாரியை நியமித்து, அவருடன் அவ்வப்போது தொடர்பு கொள்வதற்கு ஓர் ஏற்பாடு செய்து தருமாறு கேட்டிருக்க வேண்டும்.
அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் ஊடாக நழுவல் - தழுவல் போக்குகளைக் கடைப்பிடிக்காமல் இறுக்கமான ஒரு முடிவை இம்முறை எடுத்திருக்க வேண்டும். அதற்கு பான் கீ மூன் போன்றவரின் சந்திப்பு பெறுமதி உடையது என்பது தமிழர் தரப்புக்கு தெரியாதது அல்ல‚ ஆனால், தமிழர் தரப்பு செய்தது என்ன?
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago