2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தமிழக ஆளுநர்களும் சர்ச்சைகளும்

எம். காசிநாதன்   / 2017 செப்டெம்பர் 04 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாநில ஆளுநர்களின் நடவடிக்கை சர்ச்சைக்குள்ளாவது, தமிழகத்துக்குப் புதிதல்ல. தி.மு.க அரசாங்கத்தை, 1975இல் “டிஸ்மிஸ்” செய்த ஆளுநர் கே.கே. ஷா மீது சர்ச்சை எழுந்தது.   

1990களில் ஆளுநராக இருந்த சென்னாரெட்டி, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மீது, வழக்குப் பதிவு செய்ய அனுமதி கொடுத்த சர்ச்சை வெடித்தது.   

2001இல், தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்த ஜெயலலிதாவை, முதலமைச்சராக நியமித்த ஆளுநர் பாத்திமா பீவியின் நடவடிக்கைகள் சர்ச்சையை கிளப்பின.   

இப்போது, பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசகர் ராவ், “19க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவை விலக்கிக் கொண்டும், பெரும்பான்மையை நிரூபிக்க மறுக்கிறார்” என்ற சர்ச்சை, சென்னையிலிருந்து புறப்பட்டு, குடியரசுத் தலைவர் இருக்கும் டெல்லி வரை சென்று விட்டது.  

“ஆட்டுக்கு தாடி போல், நாட்டுக்கு ஆளுநர் தேவையா” என்ற கோஷமும், தமிழகத்தில்தான் ஒலித்தது. “ஆளுநர் சென்னாரெட்டியைத் திரும்பப் பெற வேண்டும்” என்றத் தீர்மானமும், தமிழகச் சட்டமன்றத்தில்தான் நிறைவேற்றப்பட்டது.  

“முதலமைச்சராக, ஜெயலலிதாவை நியமித்த கவர்னர் பாத்திமா பீவியின் நடவடிக்கை தவறு” என்று கூறி, ஒரு முதலமைச்சர் பதவி விலகும் நிலைக்கு, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததும், தமிழக அரசியலில்தான் அரங்கேறியது.   

அப்படிப்பட்ட வரிசையில், இப்போது ஆளுநராக இருக்கும் வித்யாசகர் ராவ் மீது, அனல் பறக்கும் குற்றச்சாட்டுகள், அரசியல் கட்சிகளால் முன் வைக்கப்படுகின்றன.  

“பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும்” என்பது எதிர்கட்சிகளின் வாதம். இதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமே தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் 
எம்.பிக்கள் சந்தித்து முறையிட்டு விட்டார்கள்.   

ஆனால் ஆளுந​ேரா, “அ.தி.மு.கவுக்குள் நடப்பது உள்கட்சி பிரச்சினை. நான் தலையிடுவதற்கோ, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவதற்கோ வாய்ப்பு இல்லை” என்று, தன்னைச் சந்தித்த கம்யூனிஸ்ட்,  விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புகளின் தலைவர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.   

“19 சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு, ஆதரவை வாபஸ் வாங்கியது, உள்கட்சி விவகாரமா?” என்பதுதான், இப்போது விவாதிக்கப்பட வேண்டிய விடயம்.  

ஓர் அமைச்சரவை, சட்டமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான், இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத் தத்துவம். இதன் அடிப்படையில்தான், சட்டமன்றத்தில், தனிப் பெரும்பான்மை உள்ளவரை, முதலமைச்சராக நியமிக்கிறார் ஆளுநர். அந்த முதல்வருக்கு ஆதரவளித்த சட்டமன்ற உறுப்பினர்கள், திடீரென்று ஒரு நாள், “முதல்வரின் மீது நம்பிக்கை இல்லை” என்று சொல்வார்கள் என்றால், அது, அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லை என்றுதான் அர்த்தம்.  

ஏனென்றால், முதலமைச்சரையும் அமைச்சரவையையும், இந்திய அரசியல் சட்டம் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கவில்லை. முதலமைச்சர் தலைமையில், ஆளுநருக்கு ஆலோசனை வழங்கவே, இந்திய அரசியல் சட்டம், அமைச்சரவையை உருவாக்கி வைத்துள்ளது. ஆகவே, எந்த ஒரு நேரத்திலும்,  அமைச்சரவைக்குச் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இருக்க வேண்டும் என்பதுதான், அரசியல் சட்ட மரபு. அதுதான் ஆட்சி அமைப்பிலுள்ள இலக்கணம்.  

இந்தப் பெரும்பான்மையை எப்படி நிரூபிப்பது? இதற்குப் பல்வேறு காலகட்டங்களில் தீர்ப்புகள் வெளிவந்திருக்கின்றன. அதில் மிக முக்கியமான உச்சநீதிமன்ற தீர்ப்பு, எஸ்.ஆர் பொம்மை வழக்குத் தீர்ப்பு.   

கர்நாட மாநில முதலமைச்சராக இருந்த எஸ்.ஆர் பொம்மையின் ஆட்சி, கலைக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க, அரசியல் சட்டத் தீர்ப்பை அளித்தது.   

அதன் தாற்பரியம் என்னவென்றால், “ஓர் ஆட்சிக்குப் பெரும்பான்மை இருக்கிறதா என்பதை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றமே தவிர, ஆளுநர் மாளிகை அல்ல” என்று, தெளிவாகக் கூறியிருக்கிறது. அதற்கு முன்பு வரை, ஒரு முதலமைச்சர், பெரும்பான்மையை இழந்து விட்டாரா என்பதை, ஆளுநர்கள் தங்கள் விருப்பப்படி நிர்ணயித்து வந்தார்கள்.   

எம்.எல்.ஏக்கள் சிலர், ஆதரவை வாபஸ் பெற்றதும், முதலமைச்சராக இருந்த கல்யாண்சிங்கை, பதவி நீக்கிய ஆளுநர் ரமேஷ் பண்டாரி, உத்தரப் பிரதேசத்தில் இருந்தார். அந்த ஆளுநரின் செயற்பாடு, முதன் முதலாக இந்திய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது என்பது வரலாறு.   

இப்படி, ஆளுநர்களின் தன்னிச்சையான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவே, இந்திய உச்சநீதிமன்றம் விரும்பியது. அதன் அடிப்படையில் வெளிவந்த “எஸ்.ஆர். பொம்மை” வழக்குத் தீர்ப்பு, இன்றைக்கு அரசியல் சட்டத்தின் 356ஆவது பிரிவின் கீழான, “மாநில அரசாங்கங்களைக் கலைக்கும் அதிகாரம்”,  அரசியல் சட்டத்திலுள்ள 163,  164இல் உள்ள, முதலமைச்சரை நியமிக்கும் அதிகாரம் போன்றவற்றில், கவர்னர்களின் கைகளைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது.   

மாநில அரசாங்கங்களைக் கலைக்கும் நிகழ்ச்சிகளை, “பொம்மை வழக்குக்கு முன்”, “பொம்மை வழக்குக்குப் பின்” என்று, பிரித்துப் பார்த்தாலே, மாநில அரசாங்கங்களைக் கலைக்கும் மத்திய அரசாங்கத்தின் அதிகாரம், எந்த அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகும்.  

எஸ்.ஆர் பொம்மை வழக்கைப் பின்பற்றி, உத்தரகண்ட் மாநிலத்திலும் அருணாசலப் பிரதேசத்திலும் ஆட்சிக் கலைப்பு விவகாரங்களிலும், முதலமைச்சர் நியமன விவகாரங்களிலும் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.   

குறிப்பாக, அருணாசலப் பிரதேச வழக்கில், “சட்டமன்றக் கட்சிக்குள் நடக்கும் நிகழ்வுகளில், ஆளுநர் தலையிடக்கூடாது. அது அந்தக் கட்சியின் உள்கட்சி விடயம்” என்று தீர்ப்பளித்தது. அதைத்தான், இப்போது தமிழக விடயத்தில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால், அருணாசலப் பிரதேச வழக்கின் தன்மையும், தமிழக விவகாரமும் தனித்தனி குணநலன்கள் கொண்டவை என்பதுதான், இங்கே குறிப்பிடத்தக்க விடயம்.  

அருணாசலப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத்தைக் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க, முதலமைச்சர் தயாராக இருந்தார். அதற்காகச் சட்டமன்றத்தைக் கூட்டுவதற்கான ஆளுநரின் உத்தரவுக்கு, முதலமைச்சர் பரிந்துரை செய்தார்.   

ஆனால், திடீரென்று முதலமைச்சர் கூட்டவிருந்த திகதிக்கு முன்பாகவே, சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டார். இப்படிச் சட்டமன்றத்தை முன்கூட்டி நடத்துவதற்கு முதலமைச்சர் பரிந்துரை இல்லாமல், ஆளுநர் உத்தரவிட்டு விட்டார் என்றும், அமைச்சரவையின் பரிந்துரை இன்றிச் சட்டமன்றத்தைக் கூட்டும் அதிகாரத்தை,  ஆளுநருக்கு, இந்திய அரசியல் சட்டம் வழங்கவில்லை என்றும், உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.   

அப்படிக் கூறிய போதுதான், “ஆளுங்கட்சியின் உட்கட்சிக்குள் நடக்கும் விவகாரத்தில், ஆளுநர் மூக்கை நுழைக்க வேண்டியதில்லை” என்று, ஆளுநரைக் கண்டித்தது உச்சநீதிமன்றம்.  

ஆனால், தமிழகத்திலுள்ள நிலைமை, வேறு என்பதுதான், அரசியல் சட்ட நிபுணர்களின் கருத்து. இங்கு, உட்கட்சிக்குள் பிரச்சினை இருந்தாலும், முதலமைச்சருக்கான ஆதரவை, வாபஸ் பெற்று ஆளுநரிடம், 19 சட்டமன்ற உறுப்பினர்கள் கடிதம் கொடுத்து விட்டார்கள்.   

அதனால், அமைச்சரவையின் பெரும்பான்மை பறி போயிருக்கிறது. ஆளுநரால் நியமிக்கப்பட்ட முதலமைச்சருக்குப் பெரும்பான்மை பறி போயிருக்கும் நிலையில், சட்டமன்றத்தைக் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவதுதான், ஆளுநரின் கடமை என்கிறார்கள் அரசியல் சட்ட நிபுணர்கள்.   

“எஸ்.ஆர் பொம்மை வழக்குத் தெளிவாக இருக்கிறது. அதைக் கடைப்பிடித்து, உத்தரவு பிறப்பிக்க வேண்டுமே தவிர, தமிழக நிலைவரத்துடன் சம்பந்தம் இல்லாத அருணாசலப் பிரதேச வழக்கைச் சுட்டிக்காட்டி, உள்கட்சிப் பிரச்சினை என்று ஆளுநர் ஒதுங்கி நிற்கக் கூடாது. குறிப்பாக, இதே போன்ற சூழ்நிலையில், அண்டை மாநிலமான கர்நாடகாவில், அங்கு இருந்த பா.ஜ.க முதலமைச்சர் எடியூரப்பாவை, பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார். ஆந்திர மாநிலத்தில் நடிகர் என்.டி. ராமாராவுக்கு எதிரான, ஒருநிலை வந்தபோது, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மத்தியில் பா.ஜ.க அரசாங்கம் அமைந்த பிறகு, உத்தரகாண்ட் மாநிலத்தில், இதே போன்றதொரு சூழலில், சட்டமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்திப் பெரும்பான்மையை நிரூபிக்க இந்திய உச்சநீதிமன்றமே உத்தரவிட்டது” என்று மூத்த அரசியல் சட்ட வழக்கறிஞர் ஒருவர் கூறினார்.  

ஆகவே, தமிழகத்திலுள்ள முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அரசாங்கம், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தே தீர வேண்டும் என்பது, அரசியல் கட்சிகளின் கருத்தாக இருக்கிறது. அதற்கான அழுத்தத்தை, ஆளுநரா வித்யாசாகர் ராவுக்கும், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும் அரசியல் கட்சிகள் கொடுத்து வருகின்றன.   

“ஆளுநர் இப்படி அமைதியாக இருப்பது சரியல்ல” என்ற எண்ணம், மெல்ல மெல்லப் பொதுமக்கள் கருத்தாக உருவாகி வருகிறது.   

ஆகவே, அரசியல் சட்டத்தின் படியாக, கடமையை ஆற்ற வேண்டிய நெருக்கடி, தமிழக ஆளுநர் வித்யாசகர் ராவுக்கு நிச்சயம் வரும். அதன் விளைவாக, முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அரசாங்கம் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உருவாகும்.   

அதை உணர்ந்துதான், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ‘குட்கா’வை சட்டமன்றத்தில் காட்டியதற்காக 21 தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமைக்குழுவின் மூலம் நோட்டீஸும், தினகரன் அணியின் 19 எம்.எல்.ஏக்களுக்குக் கட்சித் தாவல் சட்டப்படி நோட்டீஸும் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார்.   

இந்த, 40 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகும் நேரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்கும் நிலை உருவாகும். அதுவரை, “பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்” என்று உத்தரவிட வேண்டிய பந்து, தமிழக ராஜ்பவனிலேயே இருக்கும், என்றே எதிர்பார்க்கப்படுகிறது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X