Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூலை 24 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
முருகானந்தன் தவம்
இலங்கை வரலாற்றில் 1983 ஜூலை 23ஆம் திகதி தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட நாள்.
இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் சிங்களவர்களுடன் தமிழர்கள் இணைந்து வாழ்ந்த பகுதிகள் எங்கும் ஓடிய தமிழர்களின் குருதியும் பறிக்கப்பட்ட உயிர்களும் கொளுந்து விட்டெறிந்த தமிழர் சொத்துக்களும், இதயங்களை உறைய வைத்த கொடூர தாக்குதல்களும் உயிருடன் கொளுத்தப்பட்டவர்களின் கதறலும், காடைக் கும்பல்களால் கூட்டாக வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட தமிழ் பெண்களின் அபயக் குரல்களும் இலங்கை தலைநகர் வீதிகளை நிறைத்த அந்த நாளை எப்படி மறக்க முடியும்?
வருடத்தின் 12 மாதங்களில் ‘கறுப்பு ஜூலை’யாக தமிழர் குருதி குடித்த மாதமாகத் தமிழர் மனங்களில் ஆழமாகவும் ஆறாத ரணமாகவும் பதிந்துவிட்ட அந்த தமிழினப் படுகொலை நடந்து ஜூலை 23ஆம் திகதியுடன் 42 ஆண்டுகள் ஆகிவிட்டன.
வாகனங்களில் சென்ற தமிழர்களை வழிமறித்து உயிரோடு எரித்துக் கொன்று நடனமாடிய சம்பவங்கள், வாக்காளர் பட்டியலை வைத்துத் தமிழர்களை அடையாளம் கண்டு வீடுகளிலிருந்து இழுத்தெறிந்து வெட்டித் துண்டாடிய காட்சிகள், பெற்றோருக்கு முன்பாக மகள்களும் கணவர்களுக்கு முன்பாக மனைவிகளும் சகோதரர்களுக்கு முன்பாக சகோதரிகளும் சிங்களக் கும்பல்களினால் நிர்வாணமாக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்ட,
வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரங்களும் கடைகளில் தமிழனின் கறி கிடைக்கும் என பலகையில் எழுதி வைத்து எக்காளமிட்ட கோரங்களும் இன்று நினைத்தாலும் உடல் நடுங்க வைத்து விடும். தமிழ் மக்களுக்கு எதிராக 1956, 1958, 1977, 1981 ஆகிய ஆண்டுகளில் பேரினவாதிகளினதும், பேரின ஆட்சியாளர்களினதும் ஆசிர் வாதத்துடன் முன்னெடுக்கப்பட்ட இனக் கலவர வன்முறைச் சம்பவங்களின் போக்கில், அடுத்த கட்டமாகவே, 1983 கறுப்பு ஜூலை இனக்கலவர படுகொலைகள்
அரங்கேற்றப்பட்டன.
1983 ஜூலை 23, 24, 25, 26 ஆகிய தினங்களில் திட்டமிட்டு தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ‘ஜூலைக் கலவரம்’ எனப்படும் தமிழினப்படுகொலை இலங்கைத் தமிழர்களின் மனங்களில் ஆறாத ரணமாக, தீராத வலியாகக் கனன்று கொண்டிருக்கின்றது.
இந்த ஜூலைக் கலவரம் நடந்தேறி 42 வருடங்கள் கடந்து விட்டாலும் அது தமிழரின் மனத்தோடு ஆழமாகப் பதிந்து விட்டது. ஒவ்வொரு வருடமும் வரும்போதும் ஜூலை என்றதுமே தமிழரின் மனங்களில் 83இன் தமிழர்களின் இரத்தக் கறைபடிந்த கறுப்பு ஜூலை நினைவிற்கு வந்து கலங்க வைப்பதைத் தவிர்க்க முடியாது.
ஜனநாயகத்தின் அடிப்படையில், இனங்களுக்கிடையில் வேறுபாட்டை நோக்காத நேர்மையான சிங்களவர்களின் மனசாட்சிகளை இருளாக்கிய அந்த ‘ஜூலைக் கலவரம்’ எனப்படும் தமிழினப்படுகொலையே 30 வருட யுத்தத்துக்கு வழிகோலி இலட்சக்கணக்கான உயிர்களைப் பலியெடுத்ததுடன், உடைமைகளை அழித்து இலட்சக்கணக்கான தமிழர்களை அகதிகளாக்கி, சிங்களவர், தமிழர்களை இன்றுவரை பரம எதிரிகளாகவும் இணக்கப்பாட்டுக்கு வர முடியாதவர்களாகவும் வைத்திருக்கின்றது.
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக தலைநகர் கொழும்பில் வாழ்ந்த தமிழர்களுக்கு எதிராக இந்த தமிழினப்படுகொலை அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டது.
தமிழ் மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் பல சூறையாடப்பட்டு, கொழும்பு நகரின் அனைத்து தெருக்களிலும் இயங்கிய தமிழ் வர்த்தகர்களின் வியாபார நிலையங்கள், தமிழர்களின் வீடுகள் மற்றும் வாழ்விடங்கள், வாகனங்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டன .
வீதியில் சென்றோர், வீடுகளில் இருந்தோர், வயோதிபர், பெண்கள், சிறுவர்கள், நடுத்தர வயதினர் என பாகுபாடின்றி ஆயிரக்கணக்கானோர் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டனர்.
தீயிட்டு எரிக்கப்பட்டனர். தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட சிங்களக் காடைக்கூட்டத்துக்கு சட்ட ரீதியான முகமூடியையும் இராணுவ, பொலிஸ் ஒத்துழைப்பையும் வழங்கும் பொருட்டு அவசரக்கால சட்டம் பயன்படுத்தப்பட்டது.
அது மட்டுமன்றி, கொலை செய்யப்பட்டவர்களை மரண அல்லது நீதி விசாரணை இல்லாமல் தகனம் செய்ய பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அதிகாரத்தை வழங்கும் சட்டங்கள் அமுல் செய்யப்பட்டன.
தமிழினப் படுகொலைகளைத் தலைநகரில் ஆரம்பிப்பதற்கென முன்கூட்டியே தயார் செய்யப்பட்டது. இதற்காகவே யாழ்., திருநெல்வேலியில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் கொழும்பு கனத்தையில் தகனம் செய்யப்படுமென அரசு அறிவித்தது. அது சிங்களக் காடையர்கள் தமிழினப் படுகொலைக்காக அணிதிரள விடுக்கப்பட்ட அரசின் ஒரு உத்தியோகபூர்வ அழைப்பாகவே இருந்தது.
ஜூலை 23ஆம் திகதியில் இருந்து காடையர் கும்பல்களும் அவர்களுடன் இணைந்து தமிழினப் படுகொலைகளில் ஈடுபட்ட பொலிஸாரும் இராணுவமும் ஒன்றரை நாட்கள் சுதந்திரமாகத் தமிழர்களைத் தேடித் தேடிக் கொல்லவும் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்யவும், தமிழர் சொத்துக்களை அடியோடு அழிக்கவும் இடமளித்ததன் பின்னர், ஜூலை 25ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கே ஜனாதிபதி கொழும்பில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
ஏனைய மாவட்டங்களுக்கும் செல்லுபடியான விதத்தில் அன்று மாலை 6 மணிக்கே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது .
முதலில் கொழும்பிலும் பின்னர் மேல் மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம், சிங்களக் காடையர்கள் மாகாணங்களுக்குள் ஊடுருவி தமது படுகொலைகளை முன்னெடுக்க வழங்கப்பட்ட ஒரு அரச ஆணையாகவே இருந்தது.
ஜூலை 26ஆம் திகதி கண்டி, நுவரேலியா, திருகோணமலை, குருநாகல், இரத்தினபுரி, பலாங்கொடை முதலான பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக தமது காடைத்தனங்களை அரங்கேற்றினர். திருகோணமலை சந்தை தரைமட்டமாக்கப்பட்டது.
சிங்களவர்களின் அரக்கத்தனம் முதலில் கொழும்பை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டாலும், அதன் பின்னர். ஏனைய நகரங்கள், மத்திய மலைநாட்டுப் பகுதியில் என தொடர்ந்து ஏழு நாட்களாக அரங்கேற்றப்பட்டன.
அது மட்டுமன்றி, கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழர்கள் பொலிஸார், சிறைக் காவலர்களின் ஒத்துழைப்புடன் சிங்களக் கைதிகள் , காடையர்களினால் கண்கள் தோண்டப்பட்டும் கொடூர சித்திரவதைகள் செய்யப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த தமிழினப்படுகொலையால் தலைநகரில் உள்ள பாடசாலைகள், கோவில்கள் தமிழ் அகதிகளால் நிரம்பி வழிந்தன. ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கப்பலேற்றி ‘’உங்கள் நாட்டுக்கு செல்லுங்கள்’’ என கூறி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில், பெரும்பாலான தமிழர்கள் நாட்டை விட்டும் வெளியேறினர்.
ஜூலை 23இல் ஆரம்பித்த தமிழினப்படுகொலை மாதத்தின் இறுதி வரை நீண்டு சென்றது. 83 கலவரம் என்ற பெயரில் நடந்த தமிழினப் படுகொலையில் 3,000 பேர் வரையானோர் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும், பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழர்களின் வாழ்விடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன எனவும், கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன எனவும் தரவுகள் கூறுகின்றன.
தமிழர்களை அழிக்க வெறியோடு ஒரு கூட்டம் விரட்டினாலும், அதே சிங்கள இனத்தைச் சார்ந்த மனிதாபிமானம் உள்ளவர்களினால் துணிவோடு பல தமிழர்கள் காப்பாற்றப்பட்டமையும் பல சிங்களக் குடும்பங்கள் தமது வீடுகளில் தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவியமையும் இன்றும் தமிழர்களால் நன்றியுடன் நோக்கப்படுகின்றது.
இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், இராணுவத்தினர் உயிரிழந்தமைக்கும் அளிக்கப்பட்ட முக்கியத்துவம், பொதுமக்கள் பாதிக்கப்பட்ட சமபவங்களுக்கு அளிக்கப்படவில்லை. அந்த சம்பவங்கள் பற்றிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தன.
அதனால் ஊடகங்களின் ஊடாக உண்மை நிலைமையை உடனுக்குடன் அறிய முடியா சூழல் ஏற்பட்டிருந்தத்து. அப்போது கொழும்பில் இருந்த வெளிநாட்டு செய்தியாளர்கள் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டார்கள்.
அவர்கள் தங்களுடைய ஹோட்டல் அறைகளில் இருந்து வெளியில் வருவதற்கும் சில நாட்கள் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்ட வெளிநாட்டுச் செய்தியாளர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர் .
இந்த 1983 ஜூலை கலவரம் என்ற பெயரில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழினப்படுகொலையே பல வரலாறுகளை எழுதியது. பல வரலாறுகளை மாற்றியது. தமிழர்களின் ஆயுதப் போராட்டம் விடுதலைப்புலிகள் தலைமையில் தீவிரம் அடைவதற்கு ஜூலைக் கலவரம் பிரதான காரணமாக அமைந்தது.
தமிழர்கள், பெரும்பான்மையினமான சிங்களவர்கள் மேல், சிங்கள ஆட்சியாளர்கள் மேல் நம்பிக்கையிழந்தனர். இந்த நாட்டிலே சிங்களவர்-தமிழர்கள் ஒன்றாக இணைந்து வாழ முடியாது என்கின்ற நிலைமையை ஜூலைக் கலவரம் ஏற்படுத்தியது. அந்த நிலைதான் இன்றுவரை தொடர்கின்றது.
கறுப்பு ஜூலையின் பின்னர் தேசிய பிரச்சினை என்பது இலங்கை அரசியலில் ஏனைய விடயங்களை விட பிரதான பிரச்சினையாகப் பார்க்கப்பட்டது. 42 வருடங்களுக்கு முன்னர் அப்போதைய அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்காதது போலவே இலங்கையின் தேசியப் பிரச்சினையாக மாறிய தமிழ்மக்களின் பிரச்சினைக்கும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. கிடைக்கும் வாய்ப்புக்களும் இல்லை.
41 minute ago
48 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
48 minute ago
56 minute ago