2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தமிழ்ச் சமூகம் மேலும் பல ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல விடலாமா?

எஸ்.கருணாகரன்   / 2017 செப்டெம்பர் 12 , மு.ப. 04:11 - 1     - {{hitsCtrl.values.hits}}

“தமிழ் மக்கள், நீண்ட காலமாக சமஷ்டிக் கோரிக்கைக்கு ஆணை வழங்கி வந்துள்ளார்கள். ஆனால், பெரும்பான்மைச் சிங்கள மக்கள், ஒற்றை ஆட்சிக்கே ஆதரவளித்து வந்திருக்கிறார்கள். ஆகவே, இவ்விரண்டு தரப்புகளும் எவ்வாறு ஒன்றிணையும்?”  

“வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் தரப்பினருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தைகளில் எந்தவிதமான முடிவுகளும் எட்டப்படவில்லை”.  

“புதிய அரசமைப்பின் இடைக்கால வரைபுக்கே, இரண்டரை ஆண்டுகள் சென்று விட்டன. தீர்வை எட்டுவதற்கு ஆகக்குறைந்தது மூன்று வருடங்களாவது தேவை. அதற்குள் தற்போதுள்ள தேசிய அரசாங்கம் ஆட்சியிலிருக்குமா?”  

“சர்வதேச சமூகம், புதிய அரசமைப்பு உருவாக்குவதற்கு அழுத்தங்களைக் கொடுக்கும் என்று நாம் நம்பவில்லை. இந்த அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வீழ்வதற்கு விட்டுவிடாதீர்கள் என்றே கூறுகிறார்கள். தங்களுடைய நலனை முன்னிறுத்தியே செயற்படுகிறார்கள்”  

“சிங்கள அரசியல்வாதிகள் புதிய அரசமைப்புத் தொடர்பில் வேறுவகையில் சிந்திக்கிறார்கள். அதிகாரம் பகரப்படப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் ஆலோசனையை முன்வைக்கிறார்கள். தொகுதி முறையிலான தேர்தல் முறையைக் கொண்டுவரவும், அதனூடாக 1977 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்தது போன்று சிங்கள வாக்கு வங்கியை மையப்படுத்தியதான சூழலை உருவாக்க விரும்புகிறார்கள். ஆகவே, நாங்கள் மௌனமாக இருந்து விடமுடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் புதிய அரசமைப்புத் தொடர்பான கலந்துரையாடல்கள் அவசியம். இதுவே தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யதற்கு உதவும்” என்று கூறியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன். கடந்த 05.09.2017 அன்று தமிழ் மக்கள் பேரவை, யாழ்ப்பாணத்தில் நடத்திய ‘புதிய அரசமைப்புத் தொடர்பான தெளிவுபடுத்தல்’ கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இப்படிக் கூறினார்.  

சித்தார்த்தன் கூறியவை கவனத்துக்குரியவையே. ஆனால், இவை ஒன்றும் புதியவை அல்ல; முதலில், தமிழ் மக்களுடைய அரசியல் கோரிக்கை ஒன்றாகவும் சிங்கள மக்களுடைய நிலைப்பாடு வேறொன்றாகவும் இருப்பதாகக் குறிப்பிடுவதைப் பார்க்கலாம்.  
தமிழ்த்தரப்பு பிரதானமாக இரண்டு வகையான அரசியல் நிலைப்பாட்டுடன் கடந்த காலத்தில் செயற்பட்டுள்ளது. ஒன்று, தமிழீழம் என்ற தனியரசை நோக்கியது. ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலம், இந்த இலக்கை அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.   

மற்றையது, சமஸ்டியை நோக்கியது. இது ஆயுதம் தாங்கிய போராட்டத்தின்போதும், நடந்த பேச்சுகளின்போதும் ஆயுதமற்ற அரசியல் போராட்டங்கள், பேச்சுவார்த்தைகளின்போதும் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.   

ஆகவே, இரண்டுக்காகவும் தமிழ்த்தரப்பு, போராட்டங்களை நடத்தியுள்ளது. ஆனால், இந்த இரண்டு நிலைப்பாடுகளும் வெவ்வேறானவை. என்றாலும் இவை பற்றிச் சிங்களத்தரப்பினால் சிங்கள மக்களின் மனதில் பதிய வைக்கப்பட்டிருப்பது இரண்டும் பிரிவினையையே கோருகின்றன என்றவிதமாகவே ஆகும்.  

இதனால் ஒட்டுமொத்தமாகவே தமிழர்களின் அரசியல் கோரிக்கையை சிங்கள மக்கள் எதிர்நிலையிலேயே பார்க்கும் நிலை உண்டாகியிருக்கிறது. இதுவரையான, அத்தனை தமிழ்த்தலைவர்களும் பிரிவினையையே தங்கள் மனதில் வைத்துக்கொண்டு செயற்படுகின்றனர் என்பதே சிங்கள மக்களின் எண்ணமாக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் பிரபாகரனும் செல்வநாயகமும் சம்மந்தனும் அமிர்தலிங்கமும் பத்மநாபாவும் விக்கினேஸ்வரனும் வரதராஜப்பெருமாளும் பாலகுமாரனும் அவர்களைப் பொறுத்தவரையில் ஒன்றுதான். மிக நுணுக்கமாக அரசியலை ஆராய்கின்றவர்களைத் தவிர்த்து, பெரும்பான்மையினரின் மனப்பதிவு இதுதான்.  

இந்தத் தவறு தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இதைத் திருத்தம் செய்யாமல் பேணுவதற்கே சிங்களக் கட்சிகள் விரும்புகின்றன. இனவாத அரசியலுக்கும் தீர்வை வழங்காமல் இழுத்தடிப்பதற்கும் இது உதவும் என்பது அவற்றின் நம்பிக்கையும் அனுபவமுமாகும். ஆனால், இந்தப் பலவீனத்தை, தவறை, அறியாமையை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்த்தரப்புக்குண்டு. ‘எதுவும் மாறாது; மாற்ற முடியாதது’ என்பது இயங்கியல் விதிக்கு மாறானது.   

ஆகவே, ‘சிங்களத்தரப்பு ஒரு போதுமே ஒற்றையாட்சிக்கு அப்பால் சிந்திக்காது. தமிழ் மக்களுக்குரிய உரிமைகளையும் தீர்வையும் வழங்குவதற்கு சிங்களவர்கள் ஒருபோதுமே இணங்கமாட்டார்கள்’ என்று பிடிவாதமாக நாம் தொடர்ந்தும் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? அப்படியென்றால், மாற்று வழியென்ன? தமிழ் மக்கள் தரப்பில் அரசியல் தீர்வைப் பற்றிப் பேசுவோரும் இதற்கான பதிலை முன்வைப்பது அவசியம்.  

அடுத்து, “வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பாக, தமிழ் - முஸ்லிம் தரப்புகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்படவில்லை” என்பதைப்பற்றியது. இந்தப் பேச்சுகள் எப்போது நடந்தன? எங்கே நடந்தன? யார் யார் இதில் கலந்து கொண்டனர்? அல்லது எந்தெந்தத் தரப்புகள் இதில் கலந்து கொண்டன? இந்தப் பேச்சுகளின்போது என்ன விடயங்கள் பேசப்பட்டன? எந்த அடிப்படையில் இதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை என்று கூறப்பட்டது? அப்படித் தெரிவித்தது யார்? என்ற கேள்விகளுக்கான பதில்கள் தேவை.  

ஏனென்றால், வடக்கு, கிழக்கு இணைப்பை முஸ்லிம் தரப்பு சம்மதிக்கவில்லை என்ற பொது அபிப்பிராயம் பகிரங்கமாக உண்டு. கிழக்கிலுள்ள தமிழர்களில் ஒரு தொகுதியினரும் வடக்குடன் கிழக்கு இணைந்திருப்பதை விரும்பவில்லை என்பதை அவர்களுடைய அரசியல் நடவடிக்கைகளும் வெளிப்பாடுகளும் கூறுகின்றன.   

ஆனால், வடக்கு, கிழக்கை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த்தரப்பு முஸ்லிம்களிடம் முன்வைப்பதாக இருந்தால் அதற்கு முன்னோட்டமாக தமிழ்த்தரப்பு முஸ்லிம்களுக்குப் புரிந்துணர்வு நடவடிக்கைகள் பலவற்றைச் செய்ய வேண்டும். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை உரிய மதிப்போடு வடக்கில் மீள்குடியேற்றம் செய்விப்பதுடன், கிழக்கில் உண்டாகியிருக்கும் அரசியல் முரண்பாடுகளையும் சமூக இடைவெளியையும் குறைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும்.   

இது ஒரு பெரிய விவாதத்துக்குரிய விடயமாக இன்று மாறியுள்ளது என்பதையும் இந்தப் பத்தி கவனத்தில் கொண்டுேட, இந்தக் கருத்தை முன்வைக்கிறது. ஆகவே, வடக்கு, கிழக்கு இணைப்பைப் பற்றிச் சிந்திப்பதாக இருந்தால், அதற்கு இரண்டு சமூகங்களோடும் இணைந்து கடுமையாக வேலை செய்ய வேண்டும். அர்ப்பணிப்புணர்வோடு செயற்பட வேண்டும். தனியே, இரண்டு தரப்பு அரசியல்வாதிகளும் ஒரு தேநீரோடு பேசி முடிவு காணும் விடயமாக இது இப்போதில்லை.  

மூன்றாவதாக, “புதிய அரசமைப்பின் இடைக்கால வரைபுக்கே இரண்டரை ஆண்டுகள் சென்று விட்டன. தீர்வை எட்டுவதற்கு ஆகக்குறைந்தது மூன்று வருடங்களாவது தேவை. அதற்குள் தற்போதுள்ள தேசிய அரசாங்கம் ஆட்சியிலிருக்குமா?” என்பதைப்பற்றியது. புதிய அரசமைப்பின் இடைக்கால வரைபு இன்னும் நாடாளுமன்றுக்கே சமர்பிக்கப்படவில்லை. அதைப்பற்றிய பேச்சுகளே அங்குமிங்குமாக நடந்து கொண்டிருக்கின்றன.   

அதற்கிடையில் அடுத்த மாதம் வரவு செலவுத்திட்டம் வேறு வரப்போகிறது. தற்போதைய நிலவரப்படி வரவு செலவுத்திட்டத்தை முன்னிட்டே இந்த இடைக்கால வரைபுக்கு இடமளிப்பதைப் பற்றி அரசாங்கம் சிந்திக்கக் கூடிய நிலையுண்டு. எனவே, சித்தார்த்தன் கூறுவதைப்போல, தீர்வை எட்டுவது என்பது இந்த அணுகுமுறையில் இப்போதைக்கு நடக்கும் என்று நம்ப முடியாது என்பது நியாயமே.   

அடுத்ததாக, “சர்வதேச சமூகம், புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு அழுத்தங்களைக் கொடுக்கும் என்று நாம் நம்பவில்லை. இந்த அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வீழ்வதற்கு விட்டுவிடாதீர்கள் என்றே கூறுகிறார்கள். தங்களுடைய நலனை முன்னிறுத்தியே செயற்படுகிறார்கள்” என்பதைப் பற்றியது.   

இதையே தமிழர்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டும். ‘அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்டது’ என்பார்கள். அதைப்போல வெளியாரை நம்பிக் கோட்டை விடுவதாகவே தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் இருந்துள்ளன. இப்போதும் தமிழர்களில் ஒரு தொகுதியினர் வெளியாரையே நம்பிக்கொண்டிருக்கின்றனர்.  

 ஆனால், உண்மை நிலைமை சித்தார்த்தன் கூறியிருப்பதைப்போன்று, தமிழர்களுக்கு ஆதரவாக, எத்தகைய வலிமையான அழுத்தங்களையும் இலங்கை அரசுக்குக் கொடுப்பதற்கு சர்வதேச சமூகம் தயாரில்லை என்பது வெளிப்படையான உண்மையாகும். இனியும் நாம் கற்பனைக் குதிரைகளை ஓட்டிக்கொண்டிருக்க முடியாது. இந்தச் சர்வதேச சமூகம் என்ன சொல்கிறது என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.   

“எப்படியாவது இந்த ஆட்சி விழுந்து விடாமல் காப்பாற்றுங்கள்” என்று கேட்கிறது வெளியுலகம். ஏனென்றால், அவர்களுடைய நலனே அவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது. அதற்காகவே அவர்கள் இப்போது மட்டுமல்ல; எப்போதுமே செயற்படுகிறார்கள். இனியும் அப்படித்தான் செயற்படும். இறுதியாக, அரசமைப்பு, அதிகாரப் பகர்வு போன்றவற்றில் சிங்களத் தரப்பின் கரிசனைகளைக் குறிப்பிட்டிருக்கும் சித்தார்த்தன், தமிழ்த்தரப்பு இந்தச் சந்தர்ப்பத்தில் மிக அவதானமாவும் கூடிய வேகத்தோடும் விவேகத்தோடும் செயற்பட வேண்டும் என்று கேட்டிருக்கிறார். நிச்சயமாக இது வரவேற்கப்பட வேண்டியது மட்டுமல்ல, உடனடியாகவே கவனத்தில் கொள்ளப்பட்டுச் செயற்படுத்தப்பட வேண்டியதாகும்.   

காலம் அளித்திருக்கும் பெரு வாய்ப்பு இந்தச் சந்தர்ப்பம். இதை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்குள் கட்சி அரசியல், தனி நபர் நலன்கள், குழுவாதம், அதிதீவிர நிலைப்பாடு போன்றவற்றுக்கு இடமளித்தால் தமிழ்ச் சமூகம் மேலும் பல ஆண்டுகள் பின்னோக்கி விடும்; மேலும் துயருக்குள் சிக்கி விடும். ஆகவே தன்னைத் திறந்து செயற்பட வேண்டும்.    


  Comments - 1

  • விஜய் Wednesday, 13 September 2017 04:23 AM

    புதிய நிலைமைகளை - மாறிப்போயுள்ள நிலைமைகளை கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது. 2009இன்பின்னரான நிலை. தமிழர்களின்இருப்புக்கு சுயநிர்ணயம் ஒன்றே வழி போலவேதெரிகிறது. ஆனால்இன்றைய தென்னிலங்கைச்சூழலில்அதற்கான சாத்தியமில்லை. இதுவே மையப்பிரச்சினை. விஜய்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X