Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஐயூப்
பிரதமர் ஹரிணி அமரசூரிய ‘சுப்ரிம் சட்’ செயற்கைக் கோள் தொடர்பாக கடந்த 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து எதிர்க் கட்சிகளுக்கு, குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு அரசாங்கத்தைத் தாக்கக் கிடைத்த அரியதோர் ஆயுதமாக மாறியுள்ளது.
இந்த செயற்கைக் கோளுடன் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித்த ராஜபக்ஷவின் பெயர் அடிக்கடி தொடர்புபடுத்டதப்பட்டு வந்தது. இந்த செயற்கைக் கொள் திட்டமானது ராஜபக்ஷ குடும்பத்தின் மற்றொரு ஊழல் என அக்கால எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களில் ஒருவரான அமைச்சர் வசந்த சமரசிங்க அவ்வாறு குற்றஞ்சாட்டி வந்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் அரச பணம் பல கோடி ரூபாய் விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும் உண்மையிலேயே அவ்வானதோர் செயற்கைக் கோள் விண்ணுக்கு அனுப்பப்படவில்லை என்றும் அவர் கடந்த ஒரு தசாப்த காலமாகக் கூறி வருகிறார்.
ஆயினும், தாமே அந்த செயற்கைக் கோள் திட்டத்தின் பிரதம விஞ்ஞானி என்றும் அது வெற்றிகரமான திட்டமொன்று என்றும் ரோஹித்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த செயற்கைக் கோள் திட்டத்தைப் பற்றிய உண்மையான நிலைமை என்ன என்று பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் பாராளுமன்றத்தில் வாய்மூல கேள்வியொன்றைக் கேட்டிருந்தார்.
அதற்கு கடந்த 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் பதிலளித்த பிரதமர் இந்த விடயம் தொடர்பாகத் தாம் இலங்கை முதலீட்டுச் சபையிடம் தகவல்களைக் கேட்டதாகவும் அதன் படி முதலீட்டுச் சபை தம்மிடம் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளதாகவும் கூறினார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை விவரித்த அவர், இது அரசாங்கம் சம்பந்தப்படாத தனியார் நிறுவனமொன்றின் திட்டமொன்று என்றும் அந்நிறுவனம் அது தொடர்பாக முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டுள்ளதாகவும் இதற்கு அரச நிதி செலவழிக்கப்படவில்லை என்றும் இத்திட்டத்தின் மூலம் இலங்கை பல பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அன்றே இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் வசந்த சமரசிங்க முதலீட்டுச் சபை பிரதமருக்குப் பிழையான தகவல்களை வழங்கியிருப்பதாகவும் ‘சுப்ரிம் சட்’ நிறுவனம் பில்லியன் கணக்கில் வருமானத்தைத் தேடியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கருத்து பிழையானது என்றும் அந்நிறுவனம் 342 மில்லியன் ரூபா மட்டுமே வருமானமாக அடைந்துள்ளதாகவும் அதுவும் நிறுவனத்தின் ஏனைய திட்டங்களாலேயே அவ்வருமானத்தைப் பெற்றுள்ளது என்றும் செயற்கைக் கோள் திட்டத்தால் அல்ல என்றும் தெரிவித்தார்.
ஆயினும், திருடர்கள் என்ற பெயரைப் பெற்றுள்ள ராஜபக்ஷக்கள் இப்போது பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை தமக்கு எதிராக இதுவரை தெரிவிக்கப்பட்டு வந்த சகல குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கப் பயன்படுத்த முயல்வதாகத் தெரிகிறது.
இந்த அறிக்கை முன்வைக்கப்பட்ட முறையைப் பற்றி அரசாங்கத்துக்கு ஆதரவான பலர் சந்தேகப்படுகிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க இத்தருணத்தில் இந்தக் கேள்வியைப் பிரதமரிடம் ஏன் கேட்க வேண்டும்? என்பது அவர்கள் எழுப்பும் முதலாவது கேள்வியாகும்.
அதேவேளை, பிரதமர் இந்த விடயத்தைப் பற்றி முதலீட்டுச் சபையிடம் அறிக்கையொன்றைக் கேட்டபோது, அதனைத் தயாரித்த அதிகாரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவியனால் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.
ஆயினும், பிரதமர் இந்த அறிக்கையைத் தீவிரமாக ஆராயாமல் சமர்ப்பித்தமையிட்டு மக்கள் விடுதலை முன்னணியினதும் தேசிய மக்கள் சக்தியினதும் பல உறுப்பினர்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். அந்த அறிக்கையை முன்கூட்டியே பரிசீலிக்காமல் அவர் அதனை பாராளுமன்றத்தில் வாசித்துள்ளார் போலும்.
இந்த விடயம் தொடர்பாக இதற்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் கூறிய விடயங்களைப் பிரதமர் அறிந்திருக்கவில்லையா? என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. தெரிந்திருந்தால் அவர் இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் வாசிக்கு முன் அதனைப் பரிசீலித்து இருக்க வேண்டும். பரிசீலித்து இருந்தால், அதனை வாசிப்பதன் மூலம் தமது கட்சி எதிர்நோக்கும் அசௌகரியத்தை அவர் உணர்ந்திருக்க வேண்டும்.
இந்த அறிக்கை மூலம் பொதுஜன முன்னணி பல விடயங்களைச் சாதிக்க முற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.ஒரு புறம் தமக்கு எதிராக
13 ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டிலிருந்து தமது பெயரைத் தூய்மைப்படுத்திக்கொள்வது முதலாவது நோக்கமாகும்.
அடுத்ததாக மக்கள் விடுதலை முன்னணியினரிடம் தேசிய மக்கள் சக்தியினரும் பொய்யர்கள் என்று பிரசாரம் செய்வது மற்றொரு நோக்கமாகும். மூன்றாவதாக ஆளும் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவது மற்றொரு நோக்கமாகும்.
சிலவேளை, இந்த அத்தனை விடயங்களையும் திட்டமிட்டே சானக்க எம்.பி. இந்தக் கேள்வியைப் பிரதமரிடம் கேட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கலாம். தாம் கேள்வியைக் கேட்டபோது, பிரதமர் நிச்சயமாக அது தொடர்பாக முதலீட்டுச் சபையிடம் தகவல்களைக் கேட்பார்.
அப்போது கோட்டாபயவினால் நியமிக்கப்பட்ட அதிகாரி மூலம் இவ்வாறானதோர் அறிக்கையைத் தயாரிக்கலாம் என்று முன்கூட்டியே திட்டமிட்டும் இருக்கலாம்.
எவ்வாறாயினும், பிரதமர் சமர்ப்பித்த அறிக்கையால் 13 ஆண்டுகளாக மக்கள் விடுதலை முன்னணி ராஜபக்ஷ குடும்பத்தின் மீது சுமத்தி வந்த குற்றச்சாட்டொன்று பொய்யாகிவிட்டதாகப் பொதுஜன முன்னணி உள்ளிட்ட ஏனைய கட்சிகள் கூறுகின்றன. அதனை அமைச்சர் சமரசிங்க மறுத்தாலும் உண்மை என்னவென்று அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக மக்களுக்கு விளக்க வேண்டும்.
இப்போது, இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்தி மக்கள் விடுதலை முன்னணிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையே உள்ள பிளவே ஹரிணியின் அறிக்கையை வசந்த சமரசிங்க மறுத்ததன் மூலம் தெரிகிறது என்றதோர் கருத்தைப் பரப்ப எதிர்க்கட்சியினர் முயல்கின்றனர்.
இந்த நிலையில், ஹரிணி பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால்
54 எம்.பிக்கள் தேசிய மக்கள் சக்தியிலிருந்து விலகத் தயாராக இருக்கிறார்கள் என்றும் எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் ஹரிணியை விலக்கும் திட்டம் ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை.
இதற்கு முன்னர் பிரதமர் பல்கலைக்கழக மானிய குழுவின் தவிசாளராக பரிந்துரைத்தவரை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அப்பதவிக்கு நியமிக்காத போதும் திசைக்காட்டியும் ஜே.வி.பியும் மோத ஆரம்பித்து விட்டது என்றனர்.
மேல் மாகாணத்தில் மேலதிக வகுப்புக்களைத் தடை செய்யப் பிரதமர் எடுத்த முடிவு தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவின் தலையீட்டில் நீக்கப்பட்ட போதும், அரசாங்கத்துக்குள் மோதல் என்று எதிர்க்கட்சியினர் கூறினர்.
மக்கள் விடுதலை முன்னணியினதும் தேசிய மக்கள் சக்தியினதும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தைக் கட்சியின் வங்கிக் கணக்கிலிட்டு அதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் பெற்றுக்கொள்கிறார்கள்.
இதனை எதிர்த்து தேசிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் கட்சியிலிருந்த விலகப்போவதாகவும் தேசிய மக்கள் சக்தி பிளவுபடப் போவதாகவும் சில வாரங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சியினர் கூறினர். பின்னர் அவர்களே அதனை மறந்து விட்டனர்.
தேசிய மக்கள் சக்தியானது நாட்டில் ஏனைய அரசியல் கூட்டணிகளைப் போன்றதொன்றல்ல. அதிலிருந்து உறுப்பினர்கள் தனித் தனியாக விலகிச் செல்லலாம். ஆனால், அதன் அமைப்பைப் பொறுத்தவரை அது பிளவுபடுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகும்.
மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஏனைய அமைப்புக்கள் என்ற ரீதியில் (திசைக்காட்டியும் ஜே.வி.பியுமாக) அது பிளவுபடுவதாக இருந்தால் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் விடுதலை முன்னணியல்லாத அமைப்புக்கள் ஒன்று
சேர வேண்டும்.
அதற்கான வாய்ப்பும் மிகவும் அரிதாகும்.தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பானது மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட 21 அமைப்புகளின் கூட்டாகும். அவற்றில் சில அமைப்புக்கள் மக்கள் விடுதலை முன்னணியின் கீழ் அம்முன்னணியால் உருவாக்கப்பட்டு அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்புக்களாகும். ஏனையவை எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத மிகச் சிறிய அமைப்புக்களாகும்.
அவை ஒன்று சேர்ந்து மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்து சென்றாலும் அவற்றால் அரசியல் ரீதியாக எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது.
அவற்றின் பலம் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் ஆகியவற்றில் காணக்கூடியதாக இருந்தது.
தேசிய மக்கள் சக்தி 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் மூன்று வீத வாக்குகளை மட்டுமே பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி தனியாகப் போட்டியிட்டு இருந்தாலும் அத் தேர்தலில் அதுவே நடந்து இருக்கும்.
எனவே பிரிந்து சென்று இச்சிறிய அமைப்புக்களால் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. எதிர்க்கட்சிகளின் கூற்றுக்களைத் தவிர அவ்வாறான பிளவுக்கான தெளிவான அறிகுறிகளும் தெரியவில்லை. ஆயினும், ‘சுபரிம் சட்’ அறிக்கை அவர்களது தலையில் விழுந்த இடியென்பதையும் ஏற்கத்தான் வேண்டும்.
33 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago