Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
R.Tharaniya / 2025 மே 06 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
இன்று வாக்களிப்பு தினம். அரசியல் கட்சிகளுக்கு மட்டுமன்றி, மக்களுக்கும் இன்னுமொரு வரலாற்று முக்கியத்துவமிக்க நாளாகும். எனவே, சரியான கட்சிக்கு, வேட்பாளருக்கு வாக்களிப்பதுடன், தேர்தல் நாளிலும் அதன் பின்னரும் ஒவ்வொரு பிரதேசத்திலும் சகஜ நிலையையும் அமைதியையும் உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு எல்லோருக்கும் உள்ளது.
“உள்ளூராட்சி தேர்தல் தானே”, “ஒரு புள்ளடிதானே” என்று சர்வசாதாரணமாக கருதாமல், அந்த புள்ளடியின் பெறுமதி, அதன் நீண்டகால விளைவுகள் பற்றிச் சிந்திக்க வேண்டும். பொருத்தமான வேட்பாளருக்கு, சரியாக வாக்களிப்பதுடன், யார் வென்றாலும் யார் தோற்றாலும் ஒவ்வொரு பிரதேசத்திலும் அமைதியை பேணுவதும் மக்களின் பொறுப்பு என்பதை மறந்து விடக் கூடாது.
உலகில் இன்னும் எங்கோ ஒரு மூலையில் மக்கள் வாக்குரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். இலங்கையிலும் வாக்குரிமைக்குப் பின்னாலும் பல போராட்டங் கதைகள் உள்ளன.
ஆனால், நமது தலைமுறைக்கு அது தானாகவே கிடைத்து விட்ட காரணத்தால், வாக்குரிமையின் தாற்பரியம் உணராதவர்களாக நாம்
நடந்து கொள்ளக் கூடாது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அளிக்கப்படாத வாக்குகளின் எண்ணிக்கை
59 இலட்சத்திற்கும் அதிகமாகும். இந்த வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிவுகளின் கட்டமைப்பு கூட மாறியிருக்கலாம்.
அதேபோல், அளிக்கப்பட்ட வாக்குகளில் 667,240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. இந்த வாக்குகள் செல்லுபடியானவையாக இருந்திருந்தால் சில மாவட்டங்களின் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி அமைந்திருக்கலாம்.
எனவே, ‘இது சிறிய தேர்தல்தானே’ என்று நினைத்து வாக்களிக்காமல் விட வேண்டாம். அரசியல் பிரதிநிதிகளைப் புடம் போடுவதற்கான ஆரம்பப் பள்ளிக்கூடமாக உள்ளூராட்சி சபைகளே இருக்கின்றது.
ஆகவே, இன்றைய தினம் கட்டாயமாக வாக்களியுங்கள். இயலாமையில் உள்ள முதியவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள் வாக்களிப்பது சிரமமானதுதான். நடக்க முடியாதவர்கள் சென்று வாக்களிக்கக் கூடிய வசதி அநேக வாக்களிப்பு நிலையங்களில் செய்யப்பட்டிருப்பதும் இல்லை.
மிக முக்கியமாக, ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கக் கணிசமான சிங்கள வாக்காளர்கள் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வந்தது போல, பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் உள்ள நமது சிறுபான்மை இளைஞர்கள், அவர்களது குடும்பங்கள் விடுமுறையில் நாட்டுக்கு வருவது கிடையாது.
இலட்சக்கணக்கான இலங்கை வாக்காளர்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். வேறு பல நாடுகள் மேற்கொண்டுள்ளதைப் போல, இவர்கள் அங்கிருக்கும் தூதரகங்களிலோ வேறு மையங்களிலோ வாக்களிப்பதற்கான ஏற்பாட்டை இலங்கையில் ஆட்சி செய்த எந்த அரசாங்கமும் மேற்கொள்ளவில்லை.
இதேவேளை. இன்னும் பல இலட்சக்கணக்கான இலங்கையர் வெளிநாடுகளில் புகலிடம் கோரிக் கொண்டு இருக்கின்றனர். அல்லது குடியுரிமை பெற்றிருக்கின்றனர். ஒரு பிரதேசத்தில் பிறந்து வேறு பிரதேசத்தில் திருமணம் முடித்த அல்லது வாழ்கின்ற வாக்காளர்களின் பெயர்களையே பிறந்த பிரதேசத்திலுள்ள வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கி விடுகின்ற நடைமுறை காணப்படுகின்றது.
ஆனால், வெளிநாடுகளில் குடியுரிமை பெற்ற கணிசமானோரின் பெயர்கள் பல்வேறு காரணங்களுக்காக வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்படாமல்
இருப்பதாகத் தெரிகின்றது.
இதற்கு மேலதிகமாக, மத்திய கிழக்கில் இருபது வருடங்களாகத் தொழில்நிமித்தம் தங்கியுள்ள, எந்தத் தேர்தலும் வாக்களிக்காத ஆட்களும் உள்ளனர். இதுவெல்லாம் நமது நாட்டின் வாக்களிப்பு வீதத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன.
எது எவ்வாறிருப்பினும், உடல் ரீதியாக இயலுமான அனைவரும் வாக்களிப்பது தொடர்பான பொறுப்பை இன்றைய தினம் மிகச் சரியாக நிறைவேற்ற வேண்டும்.
நமக்கு, நமது சமூகத்திற்கு, குறிப்பிட்ட பிரதேசத்திற்கு உண்மையிலேயே கடந்த காலங்களில் நல்ல பல சேவைகளைச் செய்த அல்லது எதிர்காலத்தில் செய்யும் என நம்பக்கூடிய கட்சிக்கு வேட்பாளருக்கு சரியான முறையில் வாக்களிக்க வேண்டும்.
வாக்களிப்பு நிலையத்திற்கு ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடனும் வாக்காளர் அட்டையுடனும் செல்ல வேண்டும்.
தேர்தல்கள் திணைக்களத்தால் குறிப்பிடப்பட்ட ஆள் அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
அதைவிடுத்து, அலுவலக அடையாள அட்டையையோ அல்லது தே.அ.அட்டைக்கு விண்ணப்பித்த பிரதியையோ கொண்டு வர வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தங்களுக்கு அங்குத் தரப்படும் வாக்குச் சீட்டில் மேலிருந்து கீழாகக் கட்சிகளின் பெயர்களும், சின்னங்களும் இருக்கும்.
அதற்கு எதிரே வாக்களிப்பதற்கான இடம் (கூடு) ஒன்றும் தரப்பட்டிருக்கும் அதில் புள்ளடி (X) இட வேண்டும்.
இந்த வாக்குச் சீட்டில் உங்களது வட்டாரத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பெயர் இருக்காது. அவர்களுக்கு விரும்பு இலக்கங்களும் இல்லை என்பதை நினைவிற் கொள்ளவும்.
எனவே, நீங்கள் ஒரு கட்சியின் அல்லது சுயேச்சைக் குழுவின் சின்னத்திற்கு எதிரே புள்ளடியிட்டால் மட்டும் போதுமானது. அது அந்தக் கட்சியில் உங்களது வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு புள்ளடியிட்டதாகக் கருதப்படும். இந்த விபரத்தை உங்கள் பிரதேசத்தில் உள்ள முதியவர்களுக்கும் பாமர மக்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்.
தேர்தல் இன்று முடிவடைந்து விடும். நாளைய தினத்திற்குள் எல்லாக் ‘கூத்துக்களும்’ முடிவுக்கு வந்து விடும். அதன் பிறகு பொதுமக்கள் சகஜமான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும். வழக்கமான வேலைகளைத் தொடங்க வேண்டியிருக்கும்.
எனவே, வாக்களிப்பு தினமான இன்றும், அடுத்து வரும் தினங்களிலும் முரண்பாடுகளைத் தவிர்த்துக் கொள்வது எல்லோரதும் பொறுப்பாகும்.
வாக்குகளை எண்ணும் பணிகள் அந்தந்த வட்டாரங்களிலேயே இடம்பெறுகின்றன. நாளை விடிவதற்கு இடையில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளின் பெறுபேறுகள் வெளியாகி விடும்.
ஒவ்வொரு சபையின் இறுதி முடிவையும் மாவட்ட செயலகங்கள் தேர்தல்கள் திணைக்களத்திற்கு அறிவித்த பிறகு உத்தியோகப்பூர்வமாக உள்ளூராட்சி சபைகளின் முடிவுகள், ஆசன ஒதுக்கீடு வெளியாகும்.
முடிவுகள் விரைவாக வெளியாகலாம் என்றாலும், ஒவ்வொரு ஊரிலும் பல வாக்கு எண்ணும் நிலையங்கள் காணப்படுவதால் போலியான முடிவுகள், கட்டுக்கதைகள் வெளியாவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன. இது முரண்பாடுகளுக்கு இட்டுச் செல்வதைத் தடுக்க வேண்டும்.
கடந்த காலங்களில் அரசியலால் நாம் எவ்வளவு பெற்றோம் என்பதை விட, அரசியல் சண்டைகளால் எதனையெல்லாம் இழந்தோம் என்பதை இத்தருணத்தில் நினைவிற் கொண்டு செயற்படுவது அனைவரதும் பொறுப்பாகும்.
ஒவ்வொருவருக்கும் தமக்கு விரும்பிய கட்சியை, வேட்பாளரை ஆதரிக்கும் உரிமை உள்ளது. ஆனால், அதற்காக தமக்கிடையே சண்டையிடுவது முட்டாள்தனம் ஆகும்.
கடந்த காலங்களில் தேர்தல் தொடர்பான வாக்குவாதங்களால் பல குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன. பல மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
பலர் ஊனமுற்றிருக்கின்றார்கள். ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதிக்காக களத்தில் நின்று போராடியவர்கள் எந்த அரசியல்வாதியாலும் கவனிக்கப்படாமல் படுக்கையில் கிடக்கின்றார்கள்.
வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதி அல்லது தோல்வியுற்ற அரசியல்வாதி இந்த இழப்புக்களை ஒரு நாளும் பொறுப்பெடுத்ததும் இல்லை. இனிமேல் பொறுப்பெடுக்கப் போவதும் இல்லை.
பாதிக்கப்பட்ட முன்னாள் அரசியல் செயற்பாட்டாளர்களைக் கேட்டால் அந்த உண்மையைச் சொல்வார்கள்.ஆளும் கட்சியாக இருந்தாலும், முஸ்லிம் அல்லது தமிழ்க் கட்சியாக இருந்தாலும், இதுதான் அரசியல் யதார்த்தம் என்பதைத் இள இரத்தங்கள்’ விளங்கிக் கொள்ள வேண்டும். ஆக, எதனையும் அளவோடு செய்ய வேண்டும்.
மிக முக்கியமாக, சிங்கள மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்கின்ற பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்களும் தமிழர்களும் மிகவும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு அரசியல்வாதிக்காக நமது சகவாழ்வை எந்த தருணத்திலும் கெடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
இன்று பிரதேச சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுபவர், நாளை மாகாண சபை உறுப்பினராக, எம்.பியாக மேலே போய்விடுவார். ஆனால் மக்களாகிய நீங்கள் நிம்மதியிழந்து தவிக்க வேண்டுமா என்பதை சிந்திக்க வேண்டும்.
மிக முக்கியமாக மக்கள் தேர்தலையும் தாண்டிச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். யார் வென்றாலும், யார் தோற்றாலும், யார் ஆட்சியமைத்தாலும் அளவுக்கு அதிகமாக இலகுவாகக் கடந்து செல்ல வேண்டும். அளவுக்கு அதிகமாக கொண்டாடத் தேவையுமில்லை. அளவு தெரியாமல் யாரையும் வம்புக்கு இழுக்க வேண்டியதுமில்லை.
அதேநேரம், தேர்தல் கால அமைதி விடயத்தில் பொலிஸாருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கும் பாரிய பொறுப்பிருக்கின்றது. வழக்கமாக ஆளும் தரப்பிற்கு ஆதரவாகவே
பெரும்பாலும் அரச இயந்திரம் செயற்படுவதுண்டு. அதுபோல இந்த ஆட்சியிலும் சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினர் நடந்து கொள்ளாமல் இருப்பதையும், நடுநிலைத்தன்மையையும் உறுதிப்படுத்த வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago