Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 நவம்பர் 06 , மு.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இதுவரை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், அவற்றின் ஆதரவாளர்கள், தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்களின் எண்ணிக்கை, இம்முறை 2,500க்கும் அதிகம் எனத் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு, அரசியல் கட்சிகளும் அவற்றின் ஆதரவாளர்களும் தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பாகத் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, அடிக்கடி ஊடகங்கள் மூலம், எச்சரிக்கை விடுத்தும் வருகிறார்.
அந்த எச்சரிக்கைகள் வீண் போகவில்லை என்றும் கூறலாம். ஏனெனில், இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களோடு, இம்முறை நடைபெறவுள்ள தேர்தலை ஒப்பீட்டுப் பார்க்கையில், இதுவரையில் குறைவான சட்ட விரோதச் செயல்களே இடம்பெற்றுள்ளன.
வன்முறைச் சம்பவங்கள் இல்லை என்று கூறுமளவுக்குச் சம்பவங்கள் குறைவாகவே இடம்பெற்றுள்ளன. ஓரீர் இடங்களில் மட்டும், மிரட்டல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஓரிடத்தில் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஆனால், தேர்தல் இன்னமும் முடிவடையாததால், இதுவே வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல் என்று சான்றிதழ் வழங்க எவரும் அவசரப்படத் தேவையில்லை. இலங்கையின் அரசியல் கட்சிகள், அவ்வளவு நாகரிகமாக நடந்து கொள்ளும் என்று கருதவும் முடியாது.
இந்த அமைதி நிலைக்கு, தேர்தல் ஆணைக்குழு மட்டும் தான் காரணம் எனக் கூற முடியாது. வழமையாக, ஆளும் கட்சியே தேர்தல்களின் போது, வன்முறைகளில் கூடுதலாக ஈடுபடும்.
கடந்த பொதுத் தேர்தலின் போது, இரத்தினபுரி மாவட்டத்தில், வேட்பாளர்களில் ஒருவரான பிரேமலால் ஜயசேகர, கொலையொன்றையே செய்துவிட்டிருந்தார். பின்னர், கைது செய்யப்பட்டார். அவர், விளக்க மறியலில் இருக்கும் போதே, தேர்தல் முடிவுகள் வெளியாகின; மக்கள் அவருக்கும் வாக்களித்து இருந்தனர். அவர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.
ஆனால், இம்முறை ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, வன்முறைகளைத் தூண்டவில்லை. பதவியில் இருந்த கடந்த நான்கு ஆண்டுகளிலும் அக்கட்சி, அதற்கு முந்திய ஆளும் கட்சி, தமது ஆட்சிக் காலத்தில் செய்ததைப் போல், மக்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் சண்டித்தனம் காட்டவில்லை. பாதுகாப்புக்குப் பொறுப்பான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வன்முறைகளை தூண்டவோ, ஆதரிக்கவோ இல்லை.
ஐ.தே.க வன்முறை அறியாத, சாதுவான கட்சி என்பது அதன் அர்த்தம் அல்ல.
அதன் கடந்த கால வரலாறானது, அதாவது ஜே.ஆர் ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாஸ ஆகியோரது ஆட்சிக் காலங்கள், மிக மோசமான வன்முறையாளர்களின் ஆட்சிக் காலங்களாகவே இருந்தன.
அதற்கு முன்னர் மக்கள், ‘கள்ள வோட்டு’ப் போடுவதையே அறிந்து இருந்தனர். ஆனால், ஜே.ஆரின் காலத்தில், மக்கள் முதன்முதலாகக் ‘காடையர் வோட்டு’ப் போடுவதையும் கண்டனர். அவரது ஆட்சிக் காலத்தில், அதாவது, 1981ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற, முதலாவது யாழ். மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலும் 1982ஆம் ஆண்டு நடைபெற்ற, நாட்டின் முதலாவது சர்வஜன வாக்கெடுப்பும் மிகவும் பயங்கரமான வாக்கெடுப்புகளாகவே இலங்கை வரலாற்றில் இடம்பிடித்துள்ளன.
அந்த யாழ். மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலின் போதே, ஆசியாவிலேயே மிகவும் சிறந்த நூலகங்களில் ஒன்றாகக் கருதப்பட்டு வந்த யாழ்ப்பாண நூலகம், காடையர்களால் எரிக்கப்பட்டது. ஆறு வாக்குப் பெட்டிகள் காணாமல் போயின.
முதலாவது சர்வஜன வாக்கெடுப்பின் போது, காடையர்கள் வாக்குச் சாவடிகளை ஆக்கிரமித்து, வாக்குப் பெட்டிகளில் கட்டுக்கட்டாக வாக்குச் சீட்டுகளைத் திணித்ததாக, அக்காலத்தில் ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன.
ஆனால், ரணசிங்க பிரேமதாஸவின் மறைவுக்குப் பின்னர் ஐ.தே.க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணிகளின் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட கட்சியாகவேயன்றி, வன்முறையில் ஈடுபடும் கட்சியாகக் காணப்படவில்லை. ஆளும் கட்சியாக இருந்த, கடந்த நான்கு ஆண்டுகளிலும்கூட, அக்கட்சி அந்த அவப்பெயரைப் பெற்றுக் கொள்ளவில்லை.
ஆயினும், வன்செயல்கள் இடம்பெறாவிட்டாலும், தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டுத்தான் வருகின்றன. அல்லது, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளரின் கட்டளைகளும் வழிகாட்டல்களும் தெளிவாகவே, தொடரந்தும் மீறப்பட்டு வருகின்றன. அதேவேளை, இவற்றுக்கு எதிராகத் தேர்தல் ஆணைக்குழுவும் உரிய நடவடிக்கை எடுக்கிறதா என்ற சந்தேகமும் எழுகிறது.
உதாரணமாக, “ஒரு வேட்பாளருக்கு ஆதரவாகச் செயற்படுவதற்காகப் ‘போலி’ வேட்பாளர்களை நிறுத்தக் கூடாது” என்று கூறிய தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, அவ்வாறு ‘போலி’ வேட்பாளர்களாகக் களத்தில் இருப்போரைத் தாம் அம்பலப்படுத்தப்போவதாகச் சில வாரங்களுக்கு முன்னர், எச்சரிக்கை செய்தார். அதன் பின்னர், ஒரு நாள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தேசப்பிரிய, “ஒரு மாவட்டத்தில் தேர்தல் முகவர்களை நியமிப்பதற்காக, ஆறு வேட்பாளர்களின் சார்பில் அனுப்பப்பட்ட விண்ணப்பப் பத்திரங்கள், ஒரே விலாசத்திலிருந்து வந்திருந்தன. மேலும், நான்கு வேட்பாளர்களின் சார்பில் அனுப்பப்பட்ட விண்ணப்பப் பத்திரங்கள், ஒரே கடித உறைக்குள் வந்திருந்தன” எனவும் தெரிவித்தார்.
குறிப்பிட்டதொரு வேட்பாளருக்கு உதவியாக, ஏழு ‘போலி’ வேட்பாளர்களும் மற்றொரு வேட்பாளருக்கு ஆதரவாக, ஆறு ‘போலி’ வேட்பாளர்களுமாக 13 ‘டம்மி’ வேட்பாளர்கள் இருப்பதாக அவர் திங்கட்கிழமை (04) தெரிவித்தார். ஆனால், இவ்வளவு தெளிவான ஆதாரங்கள் இருந்தும் அவர் அந்தப் போலி வேட்பாளர்களை அம்பலப்படுத்தவில்லை.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் கூற்றொன்றை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் விளம்பரமொன்றுக்காக பாவிக்கப்பட்டு இருந்தது. இதைப்பற்றிக் குறிப்பிட்ட தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர், “அது பிழை; இது தொடர்பாக இராணுவத் தளபதி, தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்” என்றும் கூறினார்.
ஆனால், இராணுவத் தளபதியோ, “இது தாம் முன்னர் ஒரு நாள் வெளியிட்ட கருத்தாகும். இதை ஒரு வேட்பாளர் பாவித்திருப்பதையிட்டு, நான் பொறுப்பை ஏற்க முடியாது” என்று கையை விரித்துவிட்டார்.
இராணுவத் தளபதியை அரசியலுக்குள் இழுத்தமைக்காக, எவரும் தண்டிக்கப்படவோ, குறைந்தபட்சம் எச்சரிக்கப்படவோ இல்லை. இதற்குத் தேர்தல் ஆணைக்குழுவைக் குறைகூறவும் முடியாது; ஏனெனில், இவ்வாறான குற்றங்களைப் புரிவோரைத் தண்டிக்கும் சட்டம் இலங்கையில் இருப்பதாகத் தெரியவில்லை.
ஐ.தே.கவின் பிரதித் தலைவரும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ, அண்மையில் பிரசாரக் கூட்டமொன்றுக்காக ஹெலிகொப்டரில் குருநாகலுக்குச் சென்ற போது, அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால், அவரது ஹெலிகொப்டர் தரையிறங்க முடியாமல்த் திரும்பி வந்தது. இந்த மின்துண்டிப்பைப் பற்றிக் கூறிப்பிட்ட தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர், “இது மிகவும் கீழ்த்தரமான செயல்” எனக் கூறினார். ஆனால், அது தொடர்பாகவும் தேர்தல் ஆணைக்குழுவோ, அவரது உத்தரவில் மற்றுமோர் அதிகாரியோ, நிறுவனமோ நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.
சட்டப்படி உயர் அரச அதிகாரிகள், அரசியலில் ஈடுபட முடியாது. ஆனால், அரச மருத்துவர் சங்கத்தின் தலைவர் டொக்டர் அநுருத்த பாதெனிய, கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட வைபவத்தில் கலந்து கொண்டார். பாதெனிய, மஹிந்தவின் ஆதரவாளர் என்றே கருதப்படுகிறது.
அவர், மேற்படி வைபவத்தில் கலந்து கொண்டமை தொடர்பாக, ஊடகங்களில் பலர் கருத்துத் தெரிவிக்கவே, சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் வைபவத்திலும் பாதெனிய கலந்து கொண்டார். இதைப் பற்றிக் குறிப்பிட்ட மஹிந்த தேசப்பிரிய, “ஒரு குற்றத்தை, மற்றொரு குற்றத்தால் சமநிலைப்படுத்த முடியாது” என்றார்.
இந்த விடயத்தை, அரச சேவைகள் ஆணைக்குழுவுக்குத் தாம் தெரிவித்தாகவும் பாதெனியவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தாம் கூறியதாகவும் தேசப்பிரிய கூறினார். ஆனால், அரச சேவைகள் ஆணைக்குழு, அதைக் கருத்தில் கொண்டதாக எவ்வித தகவலும் இல்லை.
தேர்தலுக்காகச் சமயத்தைப் பாவிக்க வேண்டாம் எனத் தேர்தல் ஆணைக்குழு கூறுகிறது. ஆனால், அரசியல்வாதிகள் ஆசி பெறுவதற்காக, விகாரைகளுக்குச் செல்கிறார்கள். அப்போது அவர்களும் பிக்குகளும் அங்கு அரசியல் கருத்துகளை வெளியிடுகிறார்கள். அவை, அநேகமாகப் பக்கச்சார்பாகவே இருக்கின்றன. ஆனால், இவைகள் குறித்து, நடவடிக்கை எடுப்பது ஒரு புறமிருக்க, இவற்றைக் குற்றமாகவாவது எவரும் கருதுவதில்லை.
அண்மையில், ஒரு பள்ளிவாசலின் நிர்வாகிகள், தாம் கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தனர். அதுவும் வெறும் செய்தியாகியதே ஒழிய, விவகாரமாகவில்லை.
பல தேர்தல் சட்டங்கள், செயலுருவம் பெறுகின்றமை உண்மை தான். அதனால் தான், தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அமைதியாக நடைபெறுகின்றன. ஆனால், சில சட்டங்கள் எவ்விதப் பிரச்சினையுமின்றி மீறப்படுகின்றன. சில சட்டங்களுக்கு, நடைமுறையில் சாத்தியமே இல்லை.
தேர்தலும் ஊடகங்களும்
“நவம்பர் நான்காம் திகதி முதல், ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் வரை, அரசியல் சார்ந்த எந்த விடயத்தையும் வெளியிடக் கூடாது; அவ்வாறு வெளியிடுவதாயின் அவற்றைத் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து, அனுமதி பெற வேண்டும்” என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.ரி.என் நிறுவனத்துக்கு, சனிக்கிழமை (02) உத்தரவிட்டார். ஆனால், மறுநாளே அவர் தமது அந்த உத்தரவை வாபஸ் பெற்றார்.
ஐ.ரி.என் நிறுவனத்தின் அதிகாரிகளுடன், அவர் நடத்திய கலந்துரையாடல் ஒன்றை அடுத்தே, தமது உத்தரவை அவர் வாபஸ் பெற்றார் என்று, சில செய்திகள் தெரிவித்த அதேவேளை, அவரது செயலுக்கு எதிரான விமர்சனங்களின் காரணமாகவே, அவர் அதை வாபஸ் பெற்றார் என, வேறு பல செய்திகள் கூறுகின்றன. காரணம் எதுவாயினும், இந்தத் தடை விவகாரம், ஊடக சுதந்திரம், ஊடக ஒழுக்க நெறிகள், ஊடக சமநிலை என்றால் என்ன என்பதைப் போன்ற பல விடயங்களைப் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.
முன்னாள் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரத்ன பண்டார, அந்தத் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியின் போது, தெரிவித்த ஒரு கருத்து, பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்குப் பாதகமாக அமைந்தது என்ற அடிப்படையிலேயே, இந்தத் தடை விதிக்கப்பட்டது.
இதைத் தனி ஒரு சம்பவமாகக் கருத்திற் கொள்வதாக இருந்தால், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் நடவடிக்கை சரியானதே. ஆனால், அதற்கு முன்னர் முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, முன்னாள் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் ஆகியோர் தெரிவித்த கருத்தொன்றை மறுக்கும் வகையிலேயே, ஐ.ரி.என். தொலைக்காட்சியில், நவரத்ன பண்டார கருத்துத் தெரிவித்து இருந்தார். ராஜபக்ஷவினதும் கம்லத்தினதும் கருத்து, சஜித் பிரேமதாஸவுக்குப் பாதகமாக அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இரண்டு கருத்துகளும், ஊடகங்கள் மூலமாகவே தெரிவித்து இருந்த நிலையில், முதல் கருத்தைத் தெரிவித்தமைக்காக எவரும் தண்டிக்கப்படாமல், அதற்குப் பதிலளிக்க இடமளித்தமைக்காக ஓர் ஊடக நிறுவனம் தண்டிக்கப்பட்டமை, எவ்வாறு சரியாகும் என்பதைத் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் விளக்கவில்லை.
தேர்தல் பிரசாரத்தில், சமநிலையைப் பேணுவதே, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் நோக்கமாக இருக்கலாம். ஆனால், ஏறத்தாழ ஊடகங்கள் அனைத்துமே, அரசியல்மயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஓர் ஊடகம், சமநிலையைப் பேணவில்லை என்பதற்காக, அதைத் தண்டிப்பதானது, பொதுவாகக் களத்தில் சமநிலையைப் பாதுகாக்க உதவாது.
வெறுப்புப் பேச்சு, அவதூறு, பிழையான செய்திகள் போன்றவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. ஆனால், ஊடகத்துறையே அரசியல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஓர் ஊடகத்தை மட்டும் தண்டிப்பது நியாயமாகுமா, பயனுள்ளதா என்ற கேள்விகள் எழுகின்றன.
பல அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் போது, பல கட்சிகளின் கருத்துகளை வெளியிட, சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி இடமளிக்கிறது. ஆனால், நேர்காணல்களின் போது, சமநிலையை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், நேர்காணலுக்கு வருபவர், அவரது கட்சியின் நிலைப்பாட்டை மட்டுமே தெரிவிப்பார். இன்று பல ஊடகங்கள், சமநிலையைப் பேணுவதாகக் கூறிக் கொண்டு, தாம் விரும்பாத அரசியல் கட்சிகளுக்குப் பாதகமான செய்திகளை வெளியிடப் பல உத்திகளைக் கையாளுகின்றன. சிலவேளை, தாம் விரும்பாத அரசியல்வாதிகளின் கூட்டங்களையும் செய்திகளில் சேர்த்துக் கொள்வதாகக் கூறிக் கொண்டு, அக்கூட்டங்களில் அந்த அரசியல்வாதிகளுக்கே பாதகமாக இடம்பெறும் சம்பவங்கள், கருத்துகளைப் பிரித்து எடுத்து, அவற்றைப் பிரசுரிக்கின்றன; ஒளி-ஒலிபரப்புகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க முடிவு செய்த போது, அதற்கும் தமது 13 கோரிக்கைகளுக்கும் தொடர்பு இல்லை என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியும், கோட்டாவை ஆதரிக்கும் சில சிங்கள ஊடகங்கள், சிங்கள மக்கள் வெறுக்கும் அந்த 13 கோரிக்கைகளையும் பட்டியல் போட்டுக் காட்டியே, கூட்டமைப்பின் முடிவைப் பற்றிய செய்தியை வெளியிட்டன.
அதன் நோக்கமே, இனவாதத்தைத் தூண்டி, அரசியல் இலாபமடைவதே. ஆனால், அதுவும் சமநிலை என்ற பெயரிலேயே நடைபெறுகிறது. இவற்றைச் சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது. ஊடகத்துறை ஒழுக்க நெறிகளை அறிந்து செயற்பட வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago