2025 மே 01, வியாழக்கிழமை

தேர்தல் பகிஷ்கரிப்பு; அரசியலும் அடிப்படைகளும்

Editorial   / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களின் தெரிவுகளில் பகிஷ்கரிப்பும் ஒன்று. இது தமிழ் மக்களுக்குப் புதிதல்ல. ஆனால், தேர்தல் பகிஷ்கரிப்பு வெறுமனே ஒரு தப்பித்தலோ, அல்லது இயலாமையின் விளைவாகவோ இருக்க முடியாது.   

தேர்தல்களில் பங்குபற்றாமையும் யாருக்கும் வாக்களிக்க மறுப்பதும் மிகவும் ஜனநாயகமான அரசியல் நடவடிக்கைகள். ஆனால், அவற்றை எவ்வாறு முன்னெடுப்பது என்பதே, அவற்றின் ஜனநாயகத் தன்மையைத் தீர்மானிக்கின்றது.   

மிரட்டல் மூலமும் குழப்ப நிலைகளைத் தோற்றுவிப்பதன் மூலமும் வாக்களிக்கும் வாய்ப்பை மக்களுக்கு மறுத்து மேற்கொள்ளப்படுகிற எந்தப் பகிஷ்கரிப்பும் தனது ஜனநாயக இலக்கை இழந்துவிடுவதோடு, தனது நோக்கத்தில் கூட, முடிவில் ஏமாற்றமடையலாம் என்பதையே இலங்கையின் பகிஷ்கரிப்பு அனுபவங்கள் உணர்த்துகின்றன.  

தேர்தல் பகிஷ்கரிப்பு என்பது, முதலாளித்துவ ஜனநாயகம் என்கிற அரசியல் மோசடிக்கும் ஜனநாயகத் திரிப்புக்கும் எதிரான, ஜனநாயகப் போராட்டத்தின் அதியுயர்ந்த தந்திரோபாயங்களுள் ஒன்று.  

இதை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்துவதற்கு, மக்கள் மத்தியில் கணிசமான அளவு அரசியல் வேலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு வலிமையான முற்போக்கான, ஜனநாயக வெகுஜன இயக்கமோ, புரட்சிகர அரசியல் கட்சியோ இல்லாமல், தேர்தல் பகிஷ்கரிப்பு பயனளிக்காது.   

தேர்தல் பகிஷ்கரிப்பு என்ற கட்டத்தை அணுகுவதற்கு முன்னர், செய்யக் கூடிய அரசியல் பணிகளும் நம்முன் உள்ளன. இவற்றின் வெற்றி, தேர்தலில் வாக்களித்தல் என்பது, எவரையாவது ஒரு பதவியில் அமர்த்துவது பற்றியதோ, எந்த ஓர் அரசியற் கட்சியை நாடாளுமன்ற அதிகாரத்தில் அமர்த்துவது பற்றியதோ மட்டுமல்ல.   

வாக்களித்தல் என்பது, ஓர் அரசியல் கூற்றுமாகும். எவருக்கும் வாக்களிப்பதும் மட்டுமன்றி, எவருக்குமே வாக்களிக்காமல் விடுவதும் தேர்தலில் பங்கு பற்றாமற் போவதும் வாக்குச் சீட்டைப் பழுது செய்வதும் கூட, அரசியல் கூற்றுகள்தான். 

உணர்வு பூர்வமாகப் பழுதாக்கப்பட்ட வாக்குச் சீட்டு, தெளிவில்லாமல் வழங்கப்பட்ட வாக்குச் சீட்டை விட, வலிய ஒரு அரசியல் பிரகடனமாகலாம்.   

தேர்தலில் வாக்களிக்கத் தவறுவதற்கும் திட்டமிட்டே வாக்களிக்காமல் ஒதுங்குவதற்கும் இடையே எதுவித ஒற்றுமையும் இல்லை. முன்னையது மௌனம்; மற்றையது அரசியல் முழக்கம். ஓர் அரசியல் கூற்று என்ற வகையில், வாக்குச் சீட்டை எவ்வாறு பயன்படுத்துவது என்பது, எழுந்தமானமான முறையில் செயற்படுத்த முடியாதது.  

 மக்களை அரசியற்படுத்துவதும் வெகுசன அரசியலில் ஈடுபடுத்துவதும் அதனுடன் தொடர்பானவை. அதன் மூலமே, தேர்தல் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்காத விதமாக அளிக்கப்படும் வாக்குக்கள் வீணாகின்றன என்ற சிந்தனைப் போக்கை முறியடிக்க முடியும்.  

தேர்தல் பகிஷ்கரிப்புக்கும் செய்யப்படவேண்டிய பொதுசன அரசியல் வேலை, ஒரு தேர்தலுக்குச் செய்யவேண்டிய அரசியல் வேலையை விடக் குறைவானதல்ல. குறிப்பிட்ட ஓர் அரசியல் கட்சிமீது, மக்களுக்கு உள்ள பகைமையைக் காட்ட இன்னோர் அரசியல் கட்சிக்கு வாக்களிக்கிற பழக்கத்தை எளிதாக மாற்றிவிட முடியாது.   

யாருக்காவது வாக்களிக்கா விட்டால், தமது வாக்குரிமை விரயமாகிறது என்று பலர் எண்ணுகிறார்கள். தமது நிலைப்பாட்டை அடையாளப்படுத்த இயலாத எவருக்கும் அளிக்கும் வாக்கு, அதைவிடப் பெரிய விரயம் என்பதை, மக்களுக்கு விளக்க வேண்டியுள்ளது.   

அதேவேளை, தேர்தல் பகிஷ்கரிப்புக்கான பிரசாரம் சரிவரச் செய்யப்படாதபோதும், அதற்கு மக்கள் தயாராக இல்லாத போதும், தேர்தல் பகிஷ்கரிப்பு முயற்சி தோல்வியடையலாம். அப்போது எதிர்பார்த்ததிற்கு மாறான விளைவுகளே ஏற்படும்.   

எனவே, தேர்தல் பகிஷ்கரிப்பு தன்னளவிலேயே ஓர் இலக்கு அல்ல; அது, அதை அடுத்து வரவேண்டிவற்றுக்கான ஒரு திருப்புமுனையைத் தெளிவாக அடையாளம் காட்டுகிற ஒரு முக்கிய அரசியல் நிகழ்வு. எனவே, அதன் முக்கியமும் வரையறையும் சரியான பிரசாரத்துடன் மக்கள் ஜனநாயக அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கான அரசியல் வேலைகள் செய்யப்பட வேண்டும். 

மக்கள் ஜனநாயக அதிகாரத்துக்கான ஆயத்தம் இல்லாமல், மக்கள் ஒரு வலிய போராட்ட சக்தியாக அணிதிரட்டப்பட்டு வலுப்படுத்தப்படாமல், தெளிவான அரசியல் திட்டமின்றி நடத்தப்படும் தேர்தல் பகிஷ்கரிப்பு, தன் சத்தத்தை விரைவிலேயே இழந்து விடுகிறது. அதன் விளைவாகத் தேர்தல் பகிஷ்கரிப்பை, அரசியல் மீது மக்கள் நம்பிக்கை இழந்ததாகக் காட்டி, அதிகார வர்க்கத்தின் சார்பில் ஆயுதப்படைகள் அரச அதிகாரத்தைக் கைப்பற்ற இடமுண்டு. இது பற்றிய எச்சரிக்கை உணர்வும் அவசியம்.  

அந்த வகையில், பகிஷ்கரிப்பு எந்தவோர் அரசியல் போராட்டமும் போல, அதற்குரிய தர்க்க ரீதியான அடிப்படையில் நிகழ்த்தப்படுவது அவசியமாகிறது. அதற்குரிய வெகுஜன அரசியல் மயப்படுத்தலை வேண்டுகிறது. அதனோடு ஒட்டிய பிற வெகுசன அரசியல் போராட்ட முறைகளின் வளர்ச்சியையும் வேண்டி நிற்கிறது.   

தேர்தல் பகிஷ்கரிப்பு, ஒரு வலிய அரசியல் ஆயுதமாகலாம். குறிப்பிட்ட ஒரு குழலில், அது மக்களை அரசியல் மயப்படுத்தவும் அணி திரட்டவும் மிகவும் பயன்படலாம். ஆனால், அது தன்னளவிலேயே சமூக மாற்றத்துக்கான கருவியல்ல. எந்த ஆயுதமும் போல, அதுவும் யாருக்காக, யாரால், எப்படி, எப்போது பிரயோகிக்கப்படுகிறது என்பதிலேயே தன் வலிமையைக் கொண்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .