2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

தோற்றுப் போனது ஹர்த்தால்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 27 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிரான  நிலைப்பாடுகள்  காணப்பட்டாலும் காலம், சூழல் அறிந்து சில முடிவுகளை எடுக்க வேண்டும்  என்பதை தமிழரசுக் கட்சியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவருடைய சகாக்களும் நிச்சயம் புரிந்து கொண்டிருப்பார்கள்.

ஹர்த்தால் என்கிற கடையடைப்பு அகிம்சைப் போராட்டங்களின் இறுதி வடிவமாகவே கருதப்படுகிறது. கடுமையான பொது எதிர்ப்பாக இருக்கின்ற ஹர்த்தாலை விடவும் தமது எதிர்ப்பை வேறு எப்படிக் காண்பிப்பது என்கிற நிலையில்தான் ஹர்த்தால் கையில் எடுக்கப்படுவது வழமை.

குசராத்தியைதாய்மொழியாகக் கொண்ட காந்தி, பிரித்தானிய அரசுக்கு எதிராக அதிகம் ஹர்த்தாலை பயன்படுத்தியிருக்கிறார். அதிலிருந்துதான் இந்த ஹர்த்தால் தமிழ் உள்ளிட்ட தெற்காசிய மொழிகளிலும் பரவியதாக பதிவுகள் குறிப்பிடுகின்றன.

இவ்வகையான வேலைநிறுத்தம் பங்களாதேசம், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பரவலாக கடைபிடிக்கப்பட்டு வரும் போராட்ட  உத்திகளில் ஒன்று என்ற வகையில்  நமது நாட்டில் கடந்த  காலங்களில்  அடிக்கடி  நடைபெற்ற ஒன்றாக இருந்திருக்கிறது.

இலங்கையில் ஆயுத யுத்தம் நடைபெற்ற காலங்களில் விடுதலைப் புலிகளால் இந்த ஹர்த்தால் அடிக்கடி அறிவிக்கப்படுவது வழமை. அவ்வேளைகளில், கடைப்பிடிக்கப்பட்ட ஹர்ததாலுக்கும் இப்போதைய நிலைக்கும் நிறையவும் வித்தியாசம் இருக்கிறது.

அன்றைய காலங்களில் கடுமையான அழுத்தம் உடைய அச்சத்துடனேயே  நடைபெற்றிருந்தது.  இருந்தாலும், மக்களால்  ஏதோ ஒருவகையில் உரிமை சார்ந்த பிரச்சனைகள் மீதான எதிர்பார்ப்பில் உணர்வு பூர்வமாகவே அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. 

ஆயுத யுத்த மௌனிப்புக்குப்  பின்பு ஹர்த்தால்  தமது தேவைகளை  நிவர்த்தி செய்து கொண்டே  பொது மக்கள் ஆதரவு கொடுத்தார்கள். 
ஹர்த்தால் வெறுமனே தமிழ் மக்களின் போராட்ட வடிவமாக மாத்திரம் இருக்கவில்லை. அது ஒரு பொதுவான விடயமே.

அதற்கான அழைப்பு விடுப்பவர்கள் முடிவில் வெற்றி என அறிவித்தாலும் நடைபெற்றது, அனைவரும் அறிந்த விடயம் அது இருப்பதால் யாரும் 
சீர் தூக்கிப் பார்ப்பதில்லை.

2022ஆம் ஆண்டு மே மாத ஆரம்பத்தில் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த ‘அரகலய’ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சுகாதாரம், போக்குவரத்து, ரயில், மின்சாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகள் உட்பட 2000க்கும் மேற்பட்ட குழுக்கள் அடங்கிய சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து ஒரு பொது அடைப்பு என்கிற ஹர்த்தாலை நடத்தின.

அரசு, அரசினுடைய இயந்திரத்தை இயக்க முயன்றிருந்தாலும் அரசின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றே சொல்லாம்.நாட்டின் ஜனாதிபதியாக இருந்த கோட்டபாய ராஜபக்‌ஷ மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று அந்தக் ஹர்த்தால் நடத்தப்பட்டு இருந்தது. 

‘அரகலய’ போராட்டத்தின்  பலனாக அரசாங்கம்,  ஜனாதிபதி கோட்டபாய  பதவி விலகல், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி இவ்வாறு பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.
2022இல் நடைபெற்ற ஹர்த்தாலானது 1953ஆம் ஆண்டில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட முழு ஹர்த்தாலுக்கு பின்னர் நடைபெற்ற நாடு தழுவிய ஹர்த்தாலாக பார்க்கப்பட்டது, 

1953ஆம் ஆண்டு ஹர்த்தால் காரணமாக  அப்போதைய  பிரதமர் டட்லி  சேனநாயக்க   பதவி விலகியிருந்தார்.  இவ்வாறு பெரும்  முடிவுகளுக்கு  இலங்கையில் மாத்திரமல்ல,  உலகின் வேறு  நாடுகளிலும் ஹர்த்தால்கள்  காரணமாக இருந்திருக்கின்றன.

வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில், யுத்த மௌனிப்புக்குப் பின்னர் 
2015, 2017, 2018  என ஹர்த்தால்கள் தமிழ்ப் பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. இவை தமிழ் மக்களின் அடிப்படை உரிமை பிரச்சினை, அடக்குமுறைகளுக்கு எதிராக நடத்தப்பட்டிருக்கின்றன.

2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கிழக்கில் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் ஏற்பாட்டில் ஒன்று நடைபெற்றது. இந்தக் ஹர்த்தாலானது ஐக்கிய  நாடுகள் சபையின்  மனித உரிமை சபையின்  கூட்டத்தொடரை  இலக்காகக் கொண்டு  சர்வதேசத்தின்  நேரடித்தலையீட்டினைக் கோரியும், பொறுப்புக் கூறல் விடயத்தில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கூடாது எனகோரியும் ஹர்த்தாலுடன், கவனயீர்ப்பு பேரணியும் நடத்தப்பட்டு இருந்தது.

அதேபோன்று, 2020ஆம் ஆண்டுச் செப்டெம்பரிலும் இந்திய இராணுவத்திற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இலங்கை அரசாங்கம் நீதிமன்றத்தின் ஊடாகத் தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

2023 ஒக்டோபர் மாதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (புளோட்), தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியன இணைந்து ஒற்றுமையாக ஒரு அறிவிப்பை விடுத்திருந்தன.

அது இவ்வாறுதான் இருந்தது “நாட்டில் தமிழ் பேசும் மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் அநீதிகளையும், நீதி மறுக்கப்படுவதையும் உலகத்தின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு வரும் நோக்குடனும், எமது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அவற்றில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதைக் கண்டித்தும் மயிலத்தமடு - மாதவணை மேய்ச்சல் தரையை ஆக்கிரமித்து இருப்போரை வெளியேற்றக் கோரியும், எமது தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் எனப்படும் ஒரு பொது முடக்கத்திற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகளாகிய நாம் ஒன்றிணைந்து அழைப்பு விடுக்கின்றோம்”.

இந்தக் ஹர்த்தால் வெற்றிகரமாக நடைபெற்றது என்று சொல்லாம். வடக்கு, கிழக்கை தளமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு வழங்கியிருந்தன.

அதேநேரத்தில், தமிழ் மக்கள் அரசியல் போராட்டம், அகிம்சை, ஹர்த்தால், கடையடைப்பு, பகிஷ்கரிப்பு என்று வன்முறை சாராததாகவே தமிழ் மக்களது போராட்டங்கள் இருந்தது.

அவற்றின் பலனின்மையால் மிதவாத தலைமை இளைஞர்களிடம் கைமாறியபோது, 
ஆயுதப் போராட்டமாக மாறியது மட்டுமல்லாமல், நாட்டில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டது.

அது 2009 மே 18 முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது. அதன் பின்னர்த் தமிழ் மக்களின் அரசில் வழிநடத்தல் அரசியல் தலைவர்களிடம் கைமாறியது.

ஆயுதப்போராட்டம் நடைபெற்ற காலங்களிலும் ஹர்த்தால்கள் நடைபெற்றிருந்தாலும், முன்னர் நடந்தது போல வட கிழக்கில் 
மீண்டும் ஹர்த்தால் கடையடைப்பு, பகிஸ்கரிப்புகள் ஆரம்பித்தன. 
அவற்றினால் பலனேதுமில்லை என அரச தரப்புகள் கூறிக் கொண்டாலும், நடைபெற்றது என்னவோ உண்மையானதே.

இதற்கிடையில் தான் கடந்த 18ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியின் அறிவிப்பாக வெளிவந்த ஹர்த்தால் தொடர்பாக நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது. இந்தக் ஹர்த்தாலானது எழுந்தமானமாக, எந்தவொரு ஆராய்வும் இன்றி, திட்டமிடப்படாத வகையில் எடுக்கப்பட்டது என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

முதலில் ஒகஸ்ட் 15ஆம் திகதி என அறிவிக்கப்பட்டது. பின் அன்றைய தினம் மடு மாதா திருத்தலத்தின் வருடாந்த திருவிழா என வெளிப்படுத்தப்பட்டதும் பின்னர் 18ஆம் திகதியாக மாற்றப்பட்டது. எவ்வாறாக இருந்தாலும், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் பொருத்தமற்றதாக ஆகிப்போனது.

முல்லைத்தீவில் நடைபெற்ற சம்பவமானது திடீரென நடைபெற்ற ஒன்றல்ல. வழமையான செயற்பாட்டின் எதிரொலியே. ஆனாலும், பாதுகாப்புத் தரப்பும், அரசாங்கமும் உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கியிருந்தன. அது ஒருவகையில் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், அதிகப்படியான இராணுவப் பிரசன்னம் இவ்வாறான நிலைமைகளை தோற்றுவிக்கும் என்பது தான் யதார்த்தம்.

எது எப்படி சொல்லப்பட்டாலும், வடக்கில் கிழக்கில் ஹர்த்தால் தோற்றுப் போனது. பிசுபிசுத்து போனது, வெற்றி பெறவில்லை  என்பதே நிலைமை. 

இந்த நிலைமை எதனால்  ஏற்பட்டது. இதனை எவ்வாறு சீர் செய்வது எவ்வாறு  என்பது பற்றி இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆராய்ந்தாக வேண்டும் என்பது போல, தமிழ் மக்களும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

ஒற்றுமையாக ஒருமித்த முடிவுடன் தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டிய விடயத்தில் எதேச்சதிகாரம் ஒன்றுக்கும் பிரயோசனம் அற்றது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

ஆனால், இந்தத் தடவை நடைபெற்ற ஹர்த்தால் பிசுபிசுப்புடன் 
முடிந்திருந்தாலும் வெளி உலகிற்கும் அரசாங்கத்திற்கும் ஒரு செய்தி கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

இது நாட்டுக்கு நல்ல சகுனம் அல்ல என்றெல்லாம் கருத்து வெளியிட முனையும் தமிழ் அரசியல் தரப்பினர் ஹர்த்தால் தோற்றுப் 
போனது என்பதை முதலில் 
ஏற்றுக்கொள்ள வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X