2025 மே 14, புதன்கிழமை

நெடுவாசல் போராட்டம் செங்கோட்டைக்கு விடுக்கும் செய்தி

Administrator   / 2017 மார்ச் 06 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் புதிய அரசியல் காற்று வீசத் தொடங்கியிருக்கிறது. தமிழர்களின் பண்பாட்டுச் சின்னமான ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை மீட்க ‘இளைஞர்கள்’ போராடினார்கள். அதற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து விட்டு விலகி நின்றன.  

இந்த முறை தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டத்திலிருக்கும் நெடுவாசல் கிராமத்தில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தை எதிர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இங்கேயும் அரசியல் கட்சிகள் சென்று ஆதரவு தெரிவித்து விட்டு விலகி நிற்கிறார்கள்.   

1967 களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போர், தமிழ் மொழிக்கான போராட்டங்களில் மாணவர்கள் அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து போராடினார்கள்.  

 

அந்தப் போராட்டங்களுக்கு அப்போது அரசியல் கட்சிகள் தலைமை தாங்கின. ஆனால், இன்றைக்கு ‘ஜல்லிக்கட்டு’ ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டம் உள்ளிட்ட தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு மாணவர்களும் கிராமப் பொதுமக்களும் தலைமை தாங்கிப் போராடுகிறார்கள். அரசியல் கட்சிகள் துணைக்குச் செல்கின்றன.  

தமிழகத்தைப் பொறுத்தவரை ‘ஜல்லிக்கட்டு’ போராட்டமும் ‘நெடுவாசல் போராட்டமும்’ ஏதோ திடீரென்று ஏற்பட்டவை அல்ல. மாநில அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்கம் ஆகியவற்றின் பல தோல்விகளால் ஏற்பட்ட ஒர் எழுச்சி என்றே பார்க்கத் தோன்றுகிறது.   

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து, மத்திய அரசாங்கம் எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக மீனவர்கள் கருதுகிறார்கள்.   

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கிறோம் என்று உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு விட்டு, திடீரென்று மத்திய அரசாங்கம் வாபஸ் வாங்கியதை தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாக விவசாயிகள் நினைக்கிறார்கள்.   

வர்தா புயல் நிவாரணம், வறட்சி நிவாரணம் அதற்கு முன்பு தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் போன்ற எதற்கும் இதுவரை மாநில அரசாங்கம் கோரிய நிதியை மத்திய அரசாங்கம் ஒதுக்காமல் இருப்பது ‘மாநில நலன்’ புறக்கணிக்கப்படுகிறது என்ற உணர்வை மக்கள் பெற்றுள்ளார்கள்.   

மருத்துவத் தேர்வுக்கு ‘நீட்’ தேர்வு கட்டாயம் எழுத வேண்டும் என்ற சட்டத்திலிருந்து தமிழக மாணவர்களுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசாங்கம் நிறைவேற்றிக் கொடுக்கவில்லை என்பது மாணவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.   

இப்படிப் பல பிரச்சினைகளிலும் மத்தியில் தற்போதுள்ள பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம், முன்பு இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமும் ஒரே பார்வையுடனேயே செயல்படுகின்றன என்ற எண்ணம் தமிழகத்தின் சந்து பொந்தில் உள்ள மக்கள் மத்தியில் எல்லாம் பரவி விட்டது.  

இப்படியொரு எண்ணவோட்டம் அனைவர் மனதிலும் குடி கொண்டு விட்ட நிலையில், இந்தக் கால இளைஞர்கள், மாணவர்களின் எண்ணவோட்டங்களுக்கு ஏற்றார்போல் செயல்படுவதற்கோ அல்லது அது போன்ற உணர்வுகள் வெளிப்படும் போது, அதைச் சமாளிப்பதற்கோ தமிழகத்தில் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், பக்தவத்சலம், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ‘தலைமை’ இப்போது இல்லை.   

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், அந்த ஆளுமை மிக்க தலைவர்கள் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இல்லை. அ.தி.மு.கவுக்கும் இல்லை.

ஏன் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் இல்லை. பா.ஜ.கவுக்கும் இல்லை. இப்படியொரு அனுபவம் பெற்ற அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் தலைமை தமிழகத்தில் இப்போதுள்ள மாநில கட்சிகளுக்கும் இல்லை; தேசிய கட்சிகளுக்கும் இல்லை என்பதன் வெளிப்பாடே தமிழகத்தில் இன்றைக்கு ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றத்தின் பின்னணியாகும்.  

அரசியல் கட்சிகளுக்குப் பதிலாக மாணவர்களும் இளைஞர்களும் கிராம மக்களும் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி நடத்தும் ‘புதிய அரசியல் காற்று’ தமிழகத்தில் வீசத் தொடங்கியுள்ளதற்கு ‘அரசியல் கட்சிகளின் தலைமை’ வலுவாக இல்லாததே காரணம் என்றால் அது நூற்றுக்கு நூறு சதவீதம் பொருத்தமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.   

இந்தப் புதிய அரசியல், தேர்தல்களில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக மாறக்கூடும். ஏன், தற்போது தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் பயணத்தில் கூட மிகப்பெரிய அதிரடி மாற்றங்களைச் செய்யக் கூடும்.

ஆனால், மாணவர்கள், இளைஞர்களின் எண்ணவோட்டத்துக்கு ஏற்றார் போல் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளத் தமிழகத்தில் எந்த மாநிலக் கட்சியும் முன் வரவில்லை என்பது தமிழக அரசியலின் மிகப்பெரிய சாபக்கேடு என்றே சொல்ல வேண்டும்.  

 

அதனால் இன்றைக்கு உள்ள அரசியல் கட்சிகள் மீது மாணவர்களுக்கு ‘நம்பிக்கை பற்றாக்குறை’ ஏற்பட்டிருக்கிறது. அதனால், கலைஞர் கருணாநிதி தலைமை, இயக்கம் இல்லாமலும் ஜெயலலிதாவின் தலைமை அ.தி.மு.கவுக்கு அறவே இல்லை என்ற சூழ்நிலையிலும் மாணவர் அமைப்புகளும் இளைஞர் அமைப்புகளும் ஏற்றம் பெற்று மக்கள் பிரச்சினைகளைக் கையிலெடுத்துள்ளன.  

அந்த வரிசையில், முதலில் சென்னையில் ‘ஜல்லிக்கட்டு’ போராட்டத்தில் தொடங்கிய இந்தப் புதிய அரசியல், இப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசலில் தொடருகிறது. ஆனால், இரண்டுமே மத்திய அரசாங்கத்தை எதிர்த்து என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.  

மாநிலத்தில் அ.தி.மு.க ஆட்சி இருந்தாலும் இந்த இரு போராட்டங்களுமே முக்கியமாக மத்திய அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமாகவே அமைந்துள்ளன. ‘நெடுவாசல்’ முடிந்த பிறகு, இதே மாதிரி எழுச்சி தமிழகத்தின் வேறு ஒரு பகுதியில் ஏதாவது ஒரு பிரச்சினைக்காகத் தொடங்கலாம்.   

இப்படித் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இப்படியொரு ‘இளைஞர்கள் போராட்டம்’ தொடங்கும் என்றால், பிறகு அரசியல் கட்சிகளின் மீதான மதிப்பு மக்கள் மத்தியில் அரைக்காசுக்கு பிரயோஜனம் இல்லை என்ற நிலைக்கு வந்து விடும் ஆபத்து இருக்கிறது.   

அந்த ஆபத்தைத் தவிர்க்க வேண்டும் என்றால், இப்போதே முக்கியமான கட்சிகளாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பரஸ்பரம் தங்களுக்குள் உள்ள சண்டை சச்சரவுகளை மறந்து விட்டு ‘ஆக்கபூர்வமான பணிகளில்’ ஈடுபட வேண்டும். இளைஞர்களின் எண்ணவோட்டத்துக்குத் தகுந்தாற் போல் தங்கள் கட்சிகளின் செயல்பாட்டை மாற்றியமைக்க வேண்டும்.   

திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி 68 வருடங்கள் ஆகி விட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி 45 வருடமாகி விட்டது. இந்த இரு கட்சிகளும் 2017 மற்றும் 2017க்குப் பிறகு என்ற அளவில் தங்கள் செயல் திட்டங்களை வகுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.   

நேர்மையான அரசியல், ஊழலற்ற அரசாங்கம் இயற்கை வளங்களைக் காப்பதில் அக்கறை, பொது வாழ்வில் தூய்மை போன்ற இளைஞர்கள் விரும்பும் கோட்பாடுகளை நோக்கி நகர்வதே இந்த இரு கட்சிகளும் தங்களை ஒரு ‘தமிழக சக்திகளாக’ தக்க வைத்துக் கொள்ள கிடைத்துள்ள இறுதி வாய்ப்பாக இருக்கும் என்றே தோன்றுகிறது.  

திராவிட இயக்கம் என்பதை இந்த இரு இயக்கங்களும் அடுத்த 50 ஆண்டுகளுக்காவது சுமந்து செல்ல வேண்டும் என்றால் இந்தக் கால நடப்புகளுக்கு ஏற்றவாறு தங்கள் கட்சிகளில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியே தீர வேண்டும்.  

அதேபோல், தேசிய கட்சிகளாக இருக்கும் காங்கிரஸும் பாரதீய ஜனதா கட்சியும் மத்தியில் ஆட்சி அமைக்கும் வல்லமை படைத்த கட்சிகளாக இருக்கிறார்கள். இந்த இரு கட்சிகளும் தமிழகத்தில் வெற்றி பெற முடியவில்லை என்பதை மனதில் வைத்துக் கொண்டு தமிழகத்தின் கோரிக்கைகளை அந்த இரு கட்சிகளுமே ஆட்சியில் இருக்கும்போது, புறக்கணிக்கின்றன என்ற எண்ணம் இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.   

மாநில மக்கள் தேச பக்தியில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. ஆனால், அவர்கள் போராட்டத்தை ‘தேச விரோதிகளின் போராட்டம்’ என்ற ரீதியில் சித்தரிக்க முயலுவதோ அல்லது அந்த அடிப்படையில் அந்தப் போராட்டங்களை அணுகுவதோ தேசிய கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற எந்த வகையிலும் உதவாது.  

 ‘திராவிட சக்திகளுக்கு’ மாற்றாக ‘தேசிய சக்திகள்’ தமிழகத்தில் வர வேண்டும் என்றால், முதலில் தமிழக மக்களின் நலனில் அந்தக் கட்சிகள் அக்கறை செலுத்த வேண்டும். அப்படியொரு அணுகுமுறையை உருவாக்கிக் கொள்ள வேண்டிய கட்டத்தில் இந்த இரு தேசியக் கட்சிகளுமே இருக்கின்றன.  

ஆகவே, தமிழக அரசியலில் உருவாகியுள்ள ‘புதிய அரசியல் காற்று’ இந்த நான்கு கட்சிகளையும் புரட்டிப் போட்டு விட்டுப் போய்விடாமல் இருக்க வேண்டும் என்றால், தமிழகத்தில் உள்ள மாநில கட்சிகளான தி.மு.கவும் அ.தி.மு.கவும் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய நான்கு கட்சிகளும் இப்போதைக்கு இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோரிடம் புதிய நம்பிக்கையைப் பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.   

இதனை வெளிப்படுத்தும் விதத்தில்தான் ‘ஜல்லிக்கட்டு’, ‘நெடுவாசல்’ போராட்டங்கள் எல்லாம் இருக்கின்றன. உதயமாகியிருக்கும் புதிய அரசியல் காற்று, தனது வீச்சின் வேகத்தில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட நான்கு கட்சிகளையும் ஒதுக்கி வைத்து விட்டு புதியதொரு திசையை நோக்கிச் சென்று விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய பொறுப்பு, தமிழக அரசாங்கத்துக்கு மட்டுமல்ல, மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க அரசாங்கத்துக்கும் இருக்கிறது என்பதே ‘நெடுவாசலில்’ இருந்து செயின்ட் ஜோர்ஜ் கோட்டைக்கும் டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கும் விடுக்கின்ற செய்தியாக அமைந்திருக்கிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X