Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 நவம்பர் 09 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தாக்கப்பட்டார். அக்கருத்தரங்கை நடத்தியது 'தி இந்து' ஆங்கிலப் பத்திரிகையின் 'Hindu Center for Politics and Public Policy' என்ற அமைப்பு. இதில் இந்து பத்திரிகையின் தலைவர் என்.ராம் கலந்து கொண்டார். ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பின் தலைவர் சந்திரகாசனும் பங்கேற்றார்.
இக்கூட்டம் தொடங்கும் முன்பிலிருந்தே சென்னை மாநகரப் பொலிஸுக்குப் பதற்றம்தான். முதலில் 'மே 16 இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்' இக்கூட்டத்துக்கு எதிராகப் போராடப் போகிறார்கள் என்ற பேச்சு எழுந்தது. அதையொட்டி அந்த இயக்கத்தின் சார்பில் கூட்டம் நடைபெறும் பகுதியில் கண்டனப் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டன. அதே மாதிரி சீமான் நடத்தும் 'நாம் தமிழர் இயக்கம்' சார்பில் போராட்டம் நடக்கப் போகிறது என்று தகவல் பரவியது. இப்படி பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பாக எம்.கே.நாராயணன் பங்கேற்கும் இக்கூட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடக்கப் போகும் என்ற எச்சரிக்கையால் மாநகர பொலிஸ் சற்றுக் கெடுபிடியாகவே இருந்தது.
இக்கூட்டத்தில் பங்கேற்க நினைப்போர் முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும். அப்படிப் பதிவு செய்து விட்டு அமர்ந்திருந்த சிலரைக் கூட 'தமிழ் அமைப்பினர்' என்று அடையாளம் கண்டு சென்னை மாநகரப் பொலிஸ் வெளியேற்றியது. கூட்ட நுழைவாயிலில் நின்று பொலிஸ் அனைவரையும் சோதனையிட்டு, அவரது பெயர் தங்களுக்கு வந்துள்ள 'எச்சரிக்கைப் பட்டியலில்' இருக்கிறதா என்று பார்த்த பிறகே உள்ளே அனுப்பினார்கள்.
இவ்வளவு கெடுபிடிகளுக்குப் பிறகு கூட்டம் தொடங்கியது. அதில் முன்னாள் உயர் பொலிஸ் அதிகாரிகள், குறிப்பாக முன்னாள் டி.ஜி.பி. அலெக்ஸாண்டர் போன்றவர்கள் எல்லாம் பங்கேற்றார்கள். அவர்கள் பார்வையாளராகவே அங்கே வந்திருந்தார்கள். இக்கூட்டத்தில் பேசிய எம்.கே. நாராயணன், 'நாடு திரும்ப விரும்பும் இலங்கைத் தமிழ் அகதிகளின் வாழ்வாதரத்துக்கு நிதியுதவி அளித்து, அவர்கள் நாடு திரும்ப மத்திய அரசு ஏற்பாடு செய்யலாம்' என்ற ரீதியில் பேசினார். ஈழத் தமிழர்கள் மறுவாழ்வு அமைப்பின் அமைப்பாளர் சந்திரகாசன் பேசும் போது, '30 வருடங்களாக தாயகத்தை விட்டு வந்து இங்கே இருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் தங்கள் சொந்த மண்ணுக்குத் திரும்பிச் செல்ல உதவி செய்ய வேண்டும். ஏனென்றால், இங்குள்ள அகதிகளில் பெரும்பாலானோர் தங்கள் தாயகம் திரும்பி அங்குள்ள தங்கள் நிலங்களை மீட்க வேண்டும் என்று கருதுகிறார்கள்' என்றார். இந்து பத்திரிகை ராம் பேசும் போது, 'இலங்கையில் நிலைமை முற்றிலும் மாறி விடவில்லை என்றாலும் குறிப்பிடத்தக்க அளவில் மாறியிருக்கிறது. தங்கள் தாயகத்துக்குத் திரும்ப இங்குள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இதுதான் பாதுகாப்பான நேரம். புதிய அரசு இலங்கையில் அமைந்துள்ள இந்த நிலையில் தாயகம் திரும்புவதற்கு உகந்த சூழ்நிலை நிலவுகிறது' என்று பேசினார். இப்படி அனைத்துப் பேச்சாளர்களுமே 'இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தாயகம் திரும்புவதைப் பற்றி விரிவாகப் பேசினார்கள்.
இந்த உரை முடிந்து அரங்கில் பங்கேற்றவர்கள் அனைவரும் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் இந்து ராம், எம்.கே. நாராயணன் ஆகியோரும் அருகருகே நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த உரையாடல் முடிந்து அப்படியே நகர்ந்து வெளியில் வரலாம் என்று இறங்கிக் கொண்டிருந்த போதுதான் எம்.கே. நாராயணன் தாக்கப்பட்டார். அவரைத் தாக்கியவரின் பெயர் பிரபாகரன். இலங்கைத் தமிழ் அகதி என்று இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிப் பகுதியைச் சேர்ந்த இவர் வேறு ஒரு பெயரில் தன் பெயரைப் பதிவு செய்து கொண்டு கூட்டத்துக்கு வந்திருந்தார் என்று பொலிஸ் விசாரணையில் இப்போது தெரிய வந்துள்ளது. இது திட்டமிட்ட தாக்குதல் என்ற பேச்சு எழுந்தாலும், இவர், சினிமாவில் கதை எழுதுவதற்காக கோயம்பேட்டில் தங்கியிருந்தார் என்றும் இன்னொரு தகவல் வெளியாகியிருக்கிறது. முதலில் இவர் 'நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவர்' என்றார்கள். பின்னர் 'மே 16 இயக்கத்தைச் சேர்ந்தவர்' என்றார்கள். ஆனால், இரு இயக்கங்கள் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள மற்றைய தமிழ் அமைப்புகள் அனைத்துமே இந்தப் பிரபாகரனுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறிவிட்டன. பிரகடனமே செய்து விட்டன. இந்தச் சம்பவத்துக்குப் பின்னர்தான் இப்படியொரு பிரபாகரன் இருக்கிறார் என்றே தெரியும் என்றும், 'எங்களுக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை' என்றும் அந்த இயக்கங்கள் எல்லாம் தெரிவித்திருந்தாலும், அவர், விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் தலைவர்களுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டவர் என்று செய்தி கசிந்துள்ளது.
தமிழகத்தில் இப்படி அடுத்தடுத்து சில தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இதற்கு முன்பு 'சீமானுடன் வாக்கு வாதம் செய்தார்' என்று காரணம் காட்டி தென் மாவட்டத்தில் ஒருவர் தாக்கப்பட்டார்.
மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மஹாலை மையமாக வைத்து எழுந்த சர்ச்சை. அது பற்றி சீமானிடம் தொலைபேசியில் கேட்க, அப்போது நடைபெற்ற உரையாடலின் உச்சத்தில் இரு தரப்பும் வார்த்தைப் பிரயோகம் செய்து கொள்ள அப்படியொரு அடிதடி இறங்கியது. இது ஒரு புறமிருக்க, தனியரசு எம்.எல்.ஏ.வின் ஆட்களுக்கும், பார்க்கிங் பண்ணுவோருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையில் கோயம்புத்தூரில் அடிதடி ஆரம்பித்து, அங்கு நின்ற கார்களைச் சேதப்படுத்தப்படும் அளவுக்கு வன்முறையாக மாறி விட்டது.
இப்படி ஜாதி மற்றும் இனம் போன்றவற்றின் அடிப்படையிலான வன்முறைகள் திடீரென்று அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தமிழகத்தில் தலை தூக்குகின்றன. அதன் இன்னொரு முகம்தான், இலங்கைத் தமிழ் அகதிகள் எதிர்காலம் குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் ஏற்பட்ட தாக்குதல். ஆனால், இந்தத் தாக்குதலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று அனைத்துத் தமிழ் அமைப்புகளும் மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருப்பதால், இலங்கைத் தமிழர் பிரச்சினையும் மீண்டும் இங்கே சூடுபிடிக்கிறது. அதற்கு எம்.கே. நாராயணன் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் முன்னோடியாக இருக்கிறது.
இது ஒரு புறமிருக்க, தமிழ்செல்வன் மற்றும் புற்று நோயால் இறந்த, புலிகளின் மகளிர் அரசியல் பிரிவு தலைவர் தமிழினி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வில், வைகோ, அ.தி.மு.கவைச் சேர்ந்த புலமைப் பித்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
அக்கூட்டத்தில் பேசிய வைகோ, 'முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட தமிழ் இனத்தைக் கருவறுக்கின்ற படுகொலைகளுக்கு இந்திய அரசுதான் காரணம். அதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் பங்கேற்ற தி.மு.க., பா.ம.க. கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. முதலமைச்சர் பொறுப்பில் இருந்த கருணாநிதி முழுக்க முழுக்க காரணம்' என்றார் அதிரடியாக.
கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து மக்கள் நலக் கூட்டணி அமைத்துள்ளார் வைகோ. அந்தக் கூட்டணியின் சார்பில் குறைந்த பட்ச செயற்றிட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அத்திட்டத்தில் தனி ஈழம், கச்சத்தீவு மீட்பு, விடுதலைப் புலிகள் ஆதரவு போன்ற முக்கிய கோஷங்களைக் கைவிட்டுள்ள வைகோ, அந்தச் செயற்றிட்டம் வெளியிடப்பட்ட அதே நாளில் நடைபெற்ற இன்னொரு விழாவில் இப்படிப் பேசியிருக்கிறார்.
அதேபோல் அக்கூட்டத்தில் பேசிய புலமைப்பித்தன், 'தமிழ்நாடு நினைத்திருந்தால் எல்லாம் செய்திருக்க முடியும் என்கிறார்கள். ஒன்றரை இலட்சம் பேர் கொல்லப்படுகிற போது சிலர் வேடிக்கை பார்த்தார்கள். மறைந்த எம்.ஜி.ஆர். மட்டும் அன்று முதல்வராக இருந்திருந்தால் ஓர் உயிர் கூடப் போயிருக்காது.
பதவியும் பணமும் கொள்கை கோட்பாடுகளைக் கொன்றொழிக்கும் கருவிகள். ஒரு மனிதன் ஐந்து முறை முதலமைச்சராகி, பதவி சுகத்தைப் பெறாமல் போயிருந்தால் ஒன்றரைலட்சம் பேர் மாண்டிருக்க மாட்டார்கள்' என்று தி.மு.கவை மறைமுகமாக அட்டாக் செய்தார்.
எம்.கே. நாராயணன் மீது தாக்குதல், தி.மு.க. மீது வைகோவும் புலமைப்பித்தனும் தாக்குல் என்று சட்டமன்றத் தேர்தல் வரும் நேரத்தில் மீண்டும் இலங்கை தமிழர் பிரச்சினை தமிழகத்தில் சூடுபிடிக்கிறது. ஆனால், தி.மு.க.வும் அதிமுகவும் இன்னும் இப்பிரச்சினையை அவ்வளவு மும்முரமாகக் கையில் எடுக்கவில்லை.
மத்தியில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சி மீது தி.மு.க.வோ அல்லது அதிமுகவோ கடும் குற்றச்சாட்டுகளை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சொல்லும் போதுதான் மீண்டும் தேர்தலில் 'இலங்கைத் தமிழர் பிரச்சினை' மையப் பிரசாரமாக அமைய வாய்ப்பிருக்கிறது.
ஆனால், அப்பிரச்சினை மையப் பிரச்சினையாக மாறும் என்ற உள்நோக்கத்தில் இதுபோன்ற தாக்குதல் நடக்கிறதோ என்ற சந்தேகமும் எழத்தான் செய்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எம்.கே. நாராயணன் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் தமிழக அரசியலில் புதிய கோணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது இனி வரும் காலங்களில் எவ்வளவு தீவிரமாக பரவப் போகிறது என்பதை வைத்தே தமிழக சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் 'இலங்கைத் தமிழர் பிரச்சினையின்' ஆதிக்கம் புலப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025